அம்பானி வீட்டுல நடந்தது கல்யாண முன்வைபவம்தான்... ஜூலை மாதம்தான் திருமணமே!
குஜராத்தின் ஜாம்நகர்ல கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து 3-ம் தேதி வரைக்கும் நடந்த விழாவை பார்த்த பலரும் முகேஷ் அம்பானியோட கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கு கல்யாணம்தான் நடந்துமுடிந்துவிட்டதோ என நினைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா நடந்தது கல்யாணம் இல்லை. திருமண வைபவத்தின் முன்நிகழ்வுதானாம். திருமணம், வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ளதா கூறப்படுது.
இது வெறும் டிரெய்லர் தாம்மா.. இனிமேதான் மெயின் பிக்சரேங்குற டயலாக் அம்பானி வீட்டு திருமண விழாவுக்கு பக்காவ பொருந்தும். ஏன்னா, குஜராத்தின் ஜாம்நகர்ல கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து 3-ம் தேதி வரைக்கும் நடந்த விழாவை பார்த்த பலரும் முகேஷ் அம்பானியோட கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கு கல்யாணம்தான் நடந்துமுடிந்துவிட்டதோ என நினைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா நடந்தது கல்யாணம் இல்லை. திருமண வைபவத்தின் முன்நிகழ்வுதானாம். திருமணம், வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ளதா கூறப்படுது. அப்படின்னா கல்யாணத்துக்கு இன்னும் முழுசா 4 மாதங்கள் இருக்கு. இந்த திருமண முன்வைபவம் என்ற நிகழ்வு கல்யாணத்துக்கு 4 மாதங்களுக்கு முன்பே, அதுவும் இவ்ளோ பிரம்மாண்டமா உலகத்துல எந்த குடும்பத்துலயுமே நடந்துருக்காதுன்னு அடிச்சு சொல்லலாம். பிரம்மாண்டத்துக்கே பிரம்மாண்டம் காட்டி மிரட்டிட்டாரு அம்பானி. இந்த விழாவுக்கு, சுமார் 1,250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. திருமண முன்வைபவ விழா நடந்தது என்னமோ 3 நாட்கள்தான் என்றாலும், இதுதொடர்பான வீடியோக்களும், தகவல்களும் நாள்தோறும் வெளியாகி இன்னும் நிகழ்ச்சி நடைபெறுதோ என்கிற அதிர்வ உண்டாக்கிக்கிட்டே இருக்கு. அம்பானி வீட்டு திருமண முன்வைபவத்துல இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் யாரெல்லாம் விருந்தினர்கள் கலந்துக்கிட்டாங்க? என்னென்ன வாகனங்களில் வந்தாங்க? எங்க தங்குனாங்க? சாப்பாடு எப்படி? பாட்டு, நடனம்னு நடந்த கலைநிகழ்ச்சிகள் பற்றியெல்லாம் விரிவா பாக்கலாம் வாங்க.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் நிச்சயதார்த்தம்
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி தம்பதிக்கு 3 பசங்க. 2 மகன்கள், ஒரு மகள். இதுல முதலில் பிறந்த ஆகாஷ் அம்பானியும், இஷா அம்பானியும் ட்வின்ஸ். இவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்காங்க. கடைசி மகனான ஆனந்த் அம்பானியின் திருமண முன்வைபவம்தான், அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜாம்நகர்ல இப்ப நடந்து முடிஞ்சிருக்கு.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண முன்வைபவ விழாவில் முகேஷ் அம்பானி குடும்பம்
பணம் பணத்தோடதான் சேரும் என்று சொல்வதற்கு ஏற்றால்போல முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகள் ராதிகா மெர்ச்சண்டும், பயங்கர வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவங்க. அவங்களோட குடும்பமும் மிகப்பெரிய பிசினஸ் குடும்பம். ஆனந்த் அம்பானி(28), ராதிகா மெர்ச்சண்ட்(29) நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜனவரிியல் நடைபெற்ற நிலையில்தான் தற்போது திருமண ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் உலகையே திரும்பி பார்க்க வெச்சிருக்கு.
திருமண முன்வைபவ கொண்டாட்டம்
சாதாரணமாக திருமண முன்வைபம் என்பது வழக்கமான இந்திய குடும்பங்களில், திருமணத்திற்கு முதல்நாளோ அல்லது சில நாட்களுக்கு முன்போ வசதிக்கு ஏற்ப நடக்கும். ஆனால் ஆனந்த் அம்பானியின் திருமணம் என்பது, முகேஷ் அம்பானி வீட்டின் இறுதி திருமணம் என்பதால், அதனை எவ்வளவுக்கு எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த முடியுமோ அப்படி நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனராம். அதன் ஆரம்பம்தான் இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டமாம். ஜூலை 12-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்நிலையில், அந்த நிகழ்வு பிரம்மாண்டத்திற்கே சவால் விடும் அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்குமா? அல்லது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. திருமணத்திற்கு யாரெல்லாம் அழைக்கப்படலாம் என்பது தெரியவில்லை. ஆனால், திருமணம் தொடர்பான கொண்டாட்டங்களில் உலகம் முழுவதிலுமிருந்து தங்களுக்கு தெரிந்த அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்கு முகேஷ் அம்பானி முக்கியத்துவம் கொடுத்துள்ளார். எனவேதான், ஒருவேளை திருமணத்தில் பங்கேற்க முடியாமல் போக வாய்ப்பிருந்தாலும், திருமண முன்வைபத்திலாவது அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று திட்டமிட்டே இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், இவாங்கா ட்ரம்ப்
ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பங்கேற்ற உலக பிரபலங்கள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களும், இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா, கவுதம் அதானி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களும் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் பங்கேற்பு
நடிகர் அமிதாப்பச்சன், மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஷ்வர்யா, மகள் ஸ்வேதா என குடும்பத்தினர் அனைவருடனும், நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் மகள் ஜஸ்வர்யாவுடனும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். அதேபோன்று ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், ராம் சரண், நடிகைகள் கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், அலியா பட், ஜான்வி கபூர் என ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஜாம்நகரில் குவிந்தது.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களும், பிராவோ உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் என ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். மஹாராஷ்ட்ரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் அரசியல் தலைவர்களும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
குடும்பத்துடன் விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மற்றும் அதிதாப்பச்சன்
விழாவில் பங்கேற்றவர்களை அழைத்துவர விமானங்கள், சொகுசு கார்கள் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய சொகுசு பேருந்துகள் என அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
உலகின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகள்
விழாவில் முகேஷ் அம்பானி - நீத்தா அம்பானி இணைந்து ஆடிய நடனம், நீத்தா அம்பானி தனியாக ஆடிய அழகிய நடனம், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் ரொமேன்டிக் நடனம், பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் ஒரே மேடையில் ஆடிய நடனம், தோனி, இவாங்கா ட்ரம்பின் தாண்டியா நடனம், ரூ.75 கோடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி என உலகம் எங்கும் சமூக வலைதளங்கள் முழுவதும் அம்பானி இல்ல திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள்தான் நிறைந்துள்ளன. வெளிநாட்டு ஊடகங்களிலும்கூட அம்பானி இல்ல திருமண வைபவ நிகழ்ச்சிகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் உலகின் கவனத்தை ஈர்த்த இசை, நடன நிகழ்ச்சிகள்
கொண்டாட்டத்தில் இடம்பெற்ற ஜப்பான், தாய், மெக்சிக்கன், பார்சி உணவுகள்
மகனின் திருமண சாப்பாட்டை ஊரே மெச்சும் அளவிற்கு செய்ய வேண்டும் என்று முகேஷ் அம்பானி திட்டமிட்டாராம். அதன்படி கொண்டாட்டத்தில் காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் இந்தியா மட்டுமன்றி தாய்லாந்து, மெக்சிகோ, ஜப்பான் என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டுள்ளன. உணவுக்காக மட்டும் சுமார் ரூ.150 கோடி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் உணவை சமைக்க உலகப்புகழ் பெற்ற சமையல் கலைஞர்கள் இந்தியா வரவழைக்கப்பட்டு தடபுடல் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டனவாம்.
கொண்டாடத்தின் ஒருபகுதியாக குஜராத்தின் ஜாம்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் 51 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் முகேஷ் அம்பானி, நீத்தா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் என அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உணவு பரிமாறியுள்ளனர்.