இதுதான் எனது மகிழ்ச்சிக்கு காரணம்!- சமூக சேவகர் உமா ராணி நெகிழ்ச்சி!

உணவு சமைத்து தினம் தினம் 100 முதல் 150 பேருக்கு இலவசமாகக் கொடுத்துவருகிறார். இவரது இந்த சேவையை ஏராளமான மக்கள் பாராட்டி வருகின்றனர். யார் இந்த உமா ராணி? இவரது பின்னணி என்ன? என்பது குறித்து அவருடனான ஓர் உரையாடல் பின்வருமாறு...

Update:2023-11-07 00:00 IST
Click the Play button to listen to article

பசி என்பது மிகவும் கொடுமையான ஒன்று. நமது சமூகத்தில் வறுமையின் பெயரால் பசியால் தினம் தினம் வாடுபவர்களின் எண்ணிக்கை என்பது ஏராளம். ‘பசியைப் போக்குவதே ஜீவகாருண்யமாகும்’ என்ற வள்ளலாரின் வாசகத்திற்கு ஏற்ப பிறரின் பசியை போக்குவது என்பது உலகிலேயே மிகவும் உன்னதமான சேவைகளுள் ஒன்றாகும். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த உமா ராணி என்ற பெண் தனி ஒரு ஆளாக நின்று தவமொழி அறக்கட்டளை என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அதே இடத்தில் உணவு சமைத்து தினம் தினம் 100 முதல் 150 பேருக்கு இலவசமாகக் கொடுத்துவருகிறார். இவரது இந்த சேவையை ஏராளமான மக்கள் பாராட்டி வருகின்றனர். யார் இந்த உமா ராணி? இவரது பின்னணி என்ன? என்பது குறித்து அவருடனான ஓர் உரையாடல் பின்வருமாறு...

யார் இந்த உமா ராணி?

நான் யாராக இருந்தால் என்ன? நாம் என்ன செயல் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். நான் யார், நான் என்ன பின்னணியைச் சேர்ந்தவள் என்பது எதுவுமே முக்கியமில்லை. உமா ராணி என்பவள் ஒரு ஸீரோதான். என்னிடம் அறிவு சார்ந்த நுணுக்கங்கள் என்று கூட எதுவும் கிடையாது. ஆனால் நான் எப்போதெல்லாம் என்னை ஒரு ஸீரோவாக உணருகிறேனோ அப்போதெல்லாம் கடவுள் என் கூடவே இருக்கிறார். மேலும் அவர் என்னுடையத் தரத்தை உயர்த்திக் காட்டுகிறார்.


உமா ராணியின் தவமொழி பவுண்டேஷன் அறக்கட்டளை

 பிறரை மகிழ்வித்து வாழவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் வலியையும் வேதனையையும் ஒவ்வொரு விதத்தில் எடுத்துக்கொள்வர். அதைப் போலத்தான் நானும். எனக்கு ஏற்பட்ட வலி யாருக்கும் ஏற்படக்கூடாது என்று நினைத்தேன். அதுபோல, எனக்கு கிடைக்கின்ற ஒன்று, உடன் இருக்கும் அனைவருக்குமே கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் கடவுள் எனக்கு கொடுத்த இயல்பான குணங்களுள் ஒன்றாகும். என்னுடைய மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உறவுகள் என்றெல்லாம் பெரிதாக யாரும் எனக்கு இல்லை என்ற காரணத்தினால்தான் நான் பிறரை மகிழ்வித்து வாழவைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

நீங்கள் உங்கள் வாழ்வில் உணவுக்காக கஷ்டப்பட்ட காலங்கள் ஏதும் இருக்கிறதா?

நிச்சயமாக வாய்ப்புகளுக்காகவும், கனவுகளுக்காகவும் சொந்த ஊரை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்து இன்று ஏராளமானோர் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். அதைப்போலத்தான் எனக்கும் ஒரு சூழல் ஏற்பட்டது. நானும் அந்த கஷ்டமான சூழல்கலை எல்லாம் கடந்து வந்தேன். அதனால்தான் இன்று, இங்கு என்னைப்போன்ற பலருக்கு உணவளித்து வருகிறேன்.


இலவச உணவை பரிமாறும் உமா ராணி

தவமொழி அறக்கட்டளைக்கான தொடக்கம் எவ்வாறு அமைந்தது? அதன் நோக்கம் என்ன?

தவமொழி அறக்கட்டளை என்பது அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றும் ஒரு அறக்கட்டளையாகத்தான் நான் நிறுவினேன். என் கொள்கை மற்றும் நம்பிக்கை எல்லாம் ஒன்றுதான். ‘தனிநபர் மாற்றம்தான் ஒரு சமூகத்திற்கான மாற்றமாகும்’. அதாவது நான் மாறினால் என்னுடைய குடும்பம் மாறும். அடுத்து என்னுடைய சுற்றத்தார் மற்றும் உறவினர்கள் அனைவருமே மாறுவர். பிறகு என்னுடைய சமூகம் தானாகவே மாறும் என்பதை நான் முழுவதுமாக நம்புகிறேன்.

உங்களின் பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சிக்காக நீங்கள் என்னென்ன செய்து வருகிறீர்கள்?

பொதுவாக எல்லோருக்குமே பைக் ஓட்டுவது, பூங்கா செல்வது போன்ற தனித்தனி பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில்தான் அதிக ஆர்வம் இருக்கும். அதுபோல, அதிகமாக சமைத்து பிறருக்கு வழங்குவதிலும், அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பதும்தான் எனக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. மேலும் இதுபோன்ற விஷயங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். மற்ற நேரங்களில் இங்கு இருக்கும் வயதான முதியவர்களோடு இணைந்து நடனம் ஆடுவேன். அதுவும்கூட எனக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்குதான்.


இலவச உணவுகளை பேக் செய்யும் உமா ராணி

சமூகப்பணியில் ஈடுபட்டு வரும் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன?

பெண்கள் ஒவ்வொரு நாளுமே வெவ்வேறு மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்வது வழக்கம்தான். ஆனால் சமூகப்பணி செய்யும் என்னைப் போன்ற பெண்களுக்கு அது கொஞ்சம் கூடுதலாகதான் இருக்கும். அதாவது முதலில் குடும்பத்தினரிடம் இருந்தும் சில சிக்கல்கள் ஏற்படும். அதனை சமாளிக்க வேண்டும். இரண்டாவது சுற்றியுள்ள மக்களும் இந்த சேவையை வணீக ரீதியில்தான் பார்க்கின்றனர். அவர்களின் அந்த பார்வையை மாற்றவோ அல்லது அவர்களை எதிர்த்து வாதாடவோ நான் விரும்புவதில்லை. மேலும் சிலர் அவர்களது எதிர்பார்ப்பை என்மீது திணிப்பதும் உண்டு. இன்னும் சில நேரங்களில் தனி ஒரு பெண்ணாக நான் இதனை நடத்தி வருவதால், பலவிதமான ரூபங்களில் எனக்கு பிரச்சினைகள் வரும். அதாவது இரவு நேரங்களில் கதவைத் தட்டி உணவு கேட்பது, மது அருந்திவிட்டு வந்து கலாட்டாவில் ஈடுபடுவது போன்ற இழிவான செயல்களை செய்பவர்களும் உண்டு. அந்த சமயங்களில் மிகவும் தைரியமாகவும், துணிச்சலோடும் எதிர்கொண்டு சமாளித்திருக்கிறேன்.

நீங்கள் செய்துவரும் இந்த சேவைக்கு உங்கள் உடன் இருக்கும் நண்பர்களின் கருத்து என்னவாக இருக்கிறது?

உண்மையை சொல்லவேண்டுமென்றால் அவர்கள் என்னுடைய இந்த நிலையைக் கண்டு வருத்தப்பட்டனர். அதிகம் நண்பர்களோடு உரையாடி பழகும் ஒரு நபராக நான் இருந்ததே இல்லை. என்னுடைய கல்வி கற்கும் பருவத்தில்தான் கடைசியாக அவர்களையெல்லாம் சந்தித்தேன். அதன்பிறகு நான் அவர்களோடு எந்த தொடர்பிலும் இருந்ததில்லை. ஆனால் என்னுடைய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவிய பிறகு, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வாட்ஸ் ஆப் குரூப் கிரியேட் செய்து நாங்கள் அனைவரும் ஒன்றாக தொடர்பில் இணைந்தோம்.


உணவு பரிமாறும் முன்பு பூஜை

ஏராளமான குறுஞ்செய்திகள் அங்கு பகிரப்பட்டது. அதில் என்னுடைய உடை மற்றும் நான் செய்யும் சேவையைக் கண்டு, ‘ஏன் உனக்கு இந்த நிலை?’ போன்ற மாதிரியான கேள்விகள்தான் அதிகம் வந்திருந்தது. நான் பேசிப் புரியவைக்கத்தபிறகு அவர்களுக்கு என்மீது இருந்த பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அதுவும் ஒரு வகையான அன்புதான்.

இல்லத்தில் உள்ளவர்களை எவ்வாறு அன்போடு அரவணைத்து கவனித்துக்கொண்டு வருகிறீர்கள்?

நீங்கள் சொல்லும் இந்த குணங்கள் எனக்கு இயலபாகவே இருக்கிறதாக நான் கருதுகிறேன். அதுபோலவே குழந்தை வளர்ப்பு எல்லாருடைய வீட்டிலுமே இருக்கின்ற ஒன்று. இங்கு இருக்கும் அனைவருமே என்னுடைய குழந்தைகள் போலத்தான். ஒரு தாயால் எப்படி தனது பிள்ளைகளை பாதுக்காக்காமல் இருக்க முடியும்? சிறிய வித்தியாசம் என்னவென்றால் நான் பெற்றெடுத்த குழந்தைகள் மட்டும் எனக்கு குழந்தைகள் இல்லை. அனைவருமே எனது கண்களுக்கு குழந்தைகளாகத்தான் தெரிகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்