பாலியல் வன்கொடுமைகளை பெற்றோர்கள் நினைத்தால் தடுக்க முடியும் - வழக்கறிஞர் ஆஷா

ஆண்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த ஒரு துறையாக பார்க்கப்பட்ட சட்டத்துறையில் இன்று பெண்களும் அதிகம் கோலோச்சி வருகின்றனர்.

Update:2024-04-23 00:00 IST
Click the Play button to listen to article

ஆண்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த ஒரு துறையாக பார்க்கப்பட்ட சட்டத்துறையில் இன்று பெண்களும் அதிகம் கோலோச்சி வருகின்றனர். இதுதவிர எப்பேர்ப்பட்ட கடினமான வழக்குகளாக இருந்தாலும் அதனை திறம்பட எடுத்து நடத்தி வெற்றி காண்பதிலும் பெண் வழக்கறிஞர்களே இன்று முன்னிலை பெறுகின்றனர். அந்த வகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த பெண் வழக்கறிஞராக மட்டுமின்றி பல்வேறு சட்ட வழக்குகளில் அனுபவம் கொண்டு பணியாற்றிவரும் திருமதி. ஆஷா தன்னுடைய அனுபவங்களையும், சட்ட ரீதியாக சில பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும், தான் எடுத்து நடத்தி வெற்றி கண்ட மிகவும் கடினமான வழக்குகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்தேறுகிறது. இதுகுறித்து ஒரு வழக்கறிஞராக உங்களுடைய பார்வை எப்படி இருக்கிறது?

பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்றால், முதலில் அதுகுறித்த விழிப்புணர்வு பெற்றோர்களிடம் இருந்துதான் வர வேண்டும். ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்பி வைக்கும்போது யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லி அனுப்ப வேண்டும். அதிலும் நல்லது எது? கெட்டது எது? என்பதை அவர்கள் மனதில் பதியும்படி அவர்களால் மட்டுமே சொல்லிக்கொடுக்க முடியும். இன்றைக்கு இருக்கும் பிள்ளைகள் சோஷியலாக பழகுகிறேன் என்று ஆண், பெண் பாகுபாடின்றி நெருக்கமாக பழகுகின்றனர். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும். அப்படி பெண் பிள்ளைகள் தங்களது லிமிட்டை தாண்டி நண்பர்கள் என்ற போர்வையில் ஆண் பிள்ளைகளுடன் நெருக்கம் காட்டி பழகும் போதுதான் அதுவே வன்முறைக்கு வழிவகுக்கிறது. பெற்றோர்கள் அதனை கண்டித்து ஒழுங்குப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க முடியும்.


18 வயதுக்கு கீழானவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது குற்றவாளிகள் மீது போக்ஸோ சட்டம் பாயும்

சமூக வலைத்தளங்களில் போலியான ஐடி கிரியேட் செய்து நிறைய குற்றச்செயல்கள் நடக்கின்றன. இதனை எப்படி தடுப்பது? இதனை சட்ட ரீதியாக எப்படி அணுகுவது?

சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கு முதலில் நாம் அணுக வேண்டியது சைபர் கிரைம் துறையைத்தான். ஏனென்றால் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றங்களை அவர்கள் மூலமாக மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். முந்தைய காலங்களில் இதுபோன்று எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாமல் இருந்ததால் குற்றங்கள் குறைந்து இருந்தன. ஆனால், இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்கிறேன் என்ற பெயரில் சிறுவயதிலேயே சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ போன்றவைகளை போட அனுமதி அளிக்கின்றனர். அதுவே தவறான ஒரு அணுகுமுறைதான். குறிப்பிட்ட வயது வரை சமூக வலைதளங்களை பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. இன்று தகவல் தொழிநுட்பத்துறை நன்கு வளர்ச்சி பெற்றிருப்பது சந்தோசம் என்றாலும், அதனை நல்லவற்றிற்கு மட்டுமே எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை அந்தந்த குழந்தைகளின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூடவே இருந்து சொல்லிக்கொடுக்கும் பொழுது இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுத்து விடலாம்.

ஒருவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுப்பதே தவறான ஒரு செயல். அதனையும் மீறி பெண்களுக்கே தெரியாமல் அவர்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிரட்டும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனை சட்டரீதியாக எப்படி அணுகுவது?

காவல்துறையில்தான் முதல் புகாரை கொடுக்க வேண்டும். முதல் ரிப்போர்ட் பதிவு செய்யப்பட்ட பிறகுதான் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரும். அப்போது யார் தரப்பில் தவறு இருக்கிறது என்பதை ஆராய்ந்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படும். இந்த மாதிரியான வழக்குகள் இன்று குறைவாகத்தான் காணப்படுகின்றன. காரணம் பெரும்பாலானவர்கள் வெளியில் சொல்ல பயந்துகொண்டே சட்ட ரீதியாக அணுகுவதில்லை. அவர்களுக்குள்ளாகவே பேசி சமாதானமாக போய்விடுகிறார்கள். அப்படியே ஒரு சில வழக்குகள் வந்தாலும், போலீஸ் அளவிலேயே பேசி முடித்துக்கொள்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிற்கு சென்று வாழும் ஒரு பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும் என்றால் மீண்டும் இங்கு வந்து வாங்க முடியுமா?

வெளிநாட்டில் வாழும் பெண்ணிற்கு சொந்த ஊர் இங்குதான் இருக்கிறது. திருமணம் இங்குதான் நடைபெற்றிருக்கிறது என்றால் நிச்சயமாக விவாகரத்து இந்தியாவிற்கு வந்து வாங்க முடியும். வெளிநாட்டில் கணவர் வேலை பார்க்கிறார் என்றால் அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்கு கோர்ட் மூலமாக இங்கிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். நோட்டீஸ் அவரது கைக்கு கிடைத்துவிட்டது என்றால், எந்த நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததோ, அதே நீதிமன்றத்திற்கு நேரில் வந்து ஆஜராக வேண்டும். இதுதான் விதிமுறை எனும்போது கண்டிப்பாக விவாகரத்து பெருவதில் எந்த சிக்கலும் இருக்காது.


பெற்றோரின் விவாகரத்தால் மனநிலை பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆலோசனை

சைல்ட் கஸ்டடி பற்றி எங்களுக்கு கொஞ்சம் விளக்க முடியுமா?

விவாகரத்து பெற்ற பெற்றோர்களின் குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் போடப்படக்கூடிய பெட்டிஷன்தான் இந்த சைல்ட் கஸ்டடி. இந்த பெட்டிஷனை குழந்தை கணவரிடம் இருந்தால் மனைவியோ, மனைவியிடம் இருந்தால் கணவரோ போடுவார்கள். இந்த பெட்டிஷனை கோர்ட் விசாரிக்கும்போது கணவன் மனைவி இருவரில் யார் நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள். குழந்தைகள் யாரிடம் இருந்தால் நன்றாக வளர்வார்கள் என்பதை ஆராய்ந்துதான் முடிவு எடுப்பார்கள். இந்த மாதிரியான சமயத்தில் குழந்தைகளின் மனநிலை வெகுவாக பாதிக்கும். அந்த மாதிரியான சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு நீதிமன்றமே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நியமித்து ஆலோசனை வழங்கும்.

போக்ஸோ சட்டம் எந்தெந்த மாதிரியான வழக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது? 

18 வயதுக்கு கீழானவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது, அந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது போக்ஸோ சட்டம் பாயும். குறைந்தது 3 ஆண்டுகள் வரை தண்டை வழங்கப்படும். சில நேரங்களில் குற்ற செயலை பொறுத்து ஆயுள் தண்டனையாகவும் வழங்கப்படும்.


வழக்கறிஞர் தொழிலில் வெற்றிகரமாக பயணித்துவரும் திருமதி. ஆஷாவின் புகைப்படங்கள்

நீங்கள் எடுத்து நடத்திய வழக்குகளிலேயே சவாலான வழக்காக இருந்தது எது?

நான் எடுத்து நடத்திய ஒவ்வொரு வழக்கும் சவால் நிறைந்ததுதான். எவ்வளவு பெரிய சவாலான வழக்காக இருந்தாலும் அதனை ஒரு குழந்தை போன்றுதான் நினைத்து எடுத்து நடத்துவோம். கடைசி வரை எப்படியாவது ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்று போராடுவோம். காரணம் நம்மை நம்பி வந்தவர்களை ஏமாற்றி விடக்கூடாது. முடியாததையும், முடித்துக் காட்டுவதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அப்படிப்பட்ட நாங்கள் வழக்கு தோற்கப்போகிறது என்பது தெரிந்தாலும்கூட விடாமல் கடைசி நொடி வரை போராடுவோம். அப்படி நாங்களே எதிர்பார்க்காமல் ஜெயித்த வழக்குகளும் உண்டு. அப்படி நாங்கள் வழக்குகளில் இருந்து விடுவித்து கூட்டிவந்த எத்தனையோ நபர்கள் இன்று நல்ல முறையில் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை இன்று பார்க்கும்பொழுது எங்களது வழக்கறிஞர் பணியை நினைத்து பெருமைபட்டுக் கொள்கிறோம்.

குண்டாஸ் எந்தெந்த மாதிரியான வழக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது?

ஒருமுறை ஒரு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு பெயிலில் வந்து மீண்டும் மற்றொரு குற்றத்திற்காக சிறைக்கு வருவது. மறுபடியும் பெயில் வாங்குவது என்று ஒரு குற்றவாளி தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும்பொழுது அவன் மீது குண்டாஸ் சட்டம் பாயும்.

Tags:    

மேலும் செய்திகள்