கண்ணாடி போட்ட சிலைகளை இப்படித்தான் செதுக்குவோம்! - விளக்குகிறார் சிற்பி கார்த்திகேயன்

பணத்தைத் தாண்டி கலை என்ற ஒன்றும் இதில் இருக்கிறது. நமக்கு பின் வருபவர்களுக்கு நம்முடைய சிலைகள் மாதிரியாக இருக்கவேண்டும். அந்த அளவிற்கு நேரம் செலவிட்டு கலை நுணுக்களுடன் சிலை இருக்கவேண்டும்.

Update:2024-07-02 00:00 IST
Click the Play button to listen to article

எத்தனை கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் நம்மை அதிலிருந்து சிறிதுநேரம் விடுபட செய்வதில் கலைக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. குறிப்பாக, எங்காவது உயிரோட்டமுள்ள ஓவியம் அல்லது சிலைகளை காணும்போது நம்மையும் அறியாமல் சில நொடிகள் நமது கண்கள் அதையே உற்றுப்பார்க்கும். அப்படி நம்மை மெய்மறந்து ரசிக்கச்செய்யும் சிலைகளை வடிவமைப்பது குறித்தும், சிலை செதுக்கும் கலையை எப்படி கற்றுக்கொள்ளலாம்? யாரெல்லாம் கற்றுக்கொள்ளலாம்? என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் சிற்பி கார்த்திகேயன்.

இப்போதுள்ள நடிகர் நடிகைகளுக்கு சிலை செய்திருக்கிறீர்களா?

விஜய் சேதுபதி போன்றோருக்கு சிலை செய்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு அன்பின் வெளிப்பாடுதான். தலைவர்கள், ஏதேனும் ஒரு துறையில் சாதித்தவர்கள் மட்டும் என்றில்லாமல் ஒரு குடும்பத்தை நல்வழிப்படுத்தும் ஒவ்வொரு பெற்றோருமே சிலைவைத்து வழிபட தகுதியுடையவர்கள்தான்.

இறந்துபோன பெற்றோருக்கு சிலை செய்வது சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருக்கிறது. அதுபோன்ற சிலைகளை செய்ததுண்டா?

அதுபோல் நிறைய செய்திருக்கிறோம். பிள்ளைகளை வளர்த்துவிட்டு திருமணத்தை பார்க்கமுடியாமல் இறந்துபோன அப்பாவுக்கோ அல்லது அம்மாவுக்கோ சிலை வைக்கும்போது அவரே அங்கு முன்னிருந்து திருமணத்தை நடத்தி வைப்பதுபோன்ற ஆத்ம திருப்தி அவர்களுக்கு கிடைக்கும். அது நல்ல விஷயம்தான்.


நடிகர் விஜய் சேதுபதி போன்றோருக்கு சிலை செய்திருக்கிறேன் - சிற்பி கார்த்திகேயன் 

சிலை செய்துகொடுத்தவர்கள் அதை பார்த்து சந்தோஷப்படுவதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்ட தருணங்கள் உண்டா?

நிறையமுறை நடந்திருக்கிறது. பலமுறை இறந்தவர்களின் உருவங்களை செதுக்கும்போது அவர்களுடைய உறவினர்கள் அங்கேயே விழுந்து அழுதிருக்கின்றனர். இந்த தொழிலை செய்வதற்கு நிறையப் பொறுமை வேண்டும். பல தொழில்களில் இதுவும் ஒன்று என நினைக்காமல், இறைவனால் அல்லது இயற்கையால் படைக்கப்பட்ட உருவத்தை மீண்டும் எடுத்துவரும் ஒரு துறையாகப் பார்க்கவேண்டும். ஒரு அம்மா சிலையை பார்த்துவிட்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேச்சே இல்லாமல் நின்றுவிட்டார். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. சிலர் சிலையை பார்த்துவிட்டு அழும்போது நாங்கள் எதுவும் பேசாமல் அப்படியே நிற்போம். சிலர் சிலை வடித்து கொடுத்து 5 வருடங்கள் ஆகியும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு இன்றளவும் பரிசுகளை கொண்டுவந்து கொடுக்கின்றனர்.

காந்தி, பெரியார் போன்ற சிலைகளில் கண்ணாடி போட்டதுபோல் எப்படி செதுக்குகிறீர்கள்?

கண்ணாடி போட்டபடியே சிலையை செதுக்கமாட்டோம். முதலில் முகத்தை செதுக்கிவிட்டு, அதன்பிறகு கண்ணாடியை மாட்டுவோம். நமது முக அளவிற்கு ஏற்ற கண்ணாடி என்றால் கடைகளிலேயே கிடைக்கும். அதுவே பெரிய சைஸ் சிலை என்றால், முகத்திற்கு ஏற்றபடி கண்ணாடி செய்ய, காப்பர் கம்பிகளை வைத்து ஸ்கேல் பார்த்து அதை க்ராஃப் செய்து அதற்கேற்றபடி வளைத்து வெல்டு வைத்து, க்ரேனிங் எல்லாம் செய்துதான் கண்ணாடியை தனியாக மாட்டுவோம். கலைஞர் சிலை என்றால் ஃப்ரேமை வெண்கலத்திலேயே செய்து அதற்கு க்ளாஸ் பொருத்துவோம். அதுவே காந்தி, அம்பேத்கர் சிலைகளில் க்ளாஸ் மாட்டமாட்டோம். அப்படியே விட்டுவிடுவோம்.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உருவத்தை சிலையாக வடிப்பதில் இருக்கும் நுட்பங்கள் குறித்து கூறியபோது

பொறுமை என்ற வார்த்தையை கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

சிலை செதுக்குவதற்கு என்று மட்டுமில்லாமல் எல்லாத் துறைகளிலும் பொறுமை மிகமிக அவசியம். ஓவியர், ஓட்டுநர், போஸ்டர் ஒட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் அந்த தொழிலை செய்வதற்கு பொறுமை வேண்டும். நிறையப்பேருக்கு அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டினால் பிடிக்காது. சிலை வடிப்பை பொருத்தவரை சிலை செய்வதைவிட, அதை ஆர்டர் கொடுத்தவர்கள் அதில் கரெக்‌ஷன்ஸ் சொல்லும்போதுதான் பொறுமை தேவைப்படும். சிலருக்கு கரெக்‌ஷன் சொல்லத் தெரியாமல் ‘இது என் அப்பா போன்றே இல்லை’ என்று ஒரேயடியாய் சொல்லிவிடுவார்கள். இதனால் நேரம் செலவழித்து சிலை செய்தவர் சோர்ந்துவிடுவார். அதனால்தான் நான் சிலை வடித்தபிறகு ஆர்டர் கொடுத்தவர்களை அமைதியாக உட்கார சொல்லி, கொஞ்ச நேரம் சிலையை பார்க்கச் சொல்வேன். அவர்களுக்கு ஏதோ தவறாக தெரிவதால்தான் குறை சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அவர்கள் கேட்கும் கரெக்‌ஷெனை செய்துகொடுப்பேன். எங்களுடைய தொழிலை பொருத்தவரை கடைசியாக கஸ்டமர் சிலையை பார்க்கும்போதுதான் மிகமிக பொறுமை தேவைப்படும்.

இதுவரை 44,000 சிலைகள் செய்திருப்பதாகக் கூறினீர்கள். அதில் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு செய்த சிலை எது?

நிறைய சிலைகள் செய்தாலும் சில சிலைகள் மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக, மேடுபள்ளங்கள் இல்லாமல் மொழுமொழுவென இருக்கும் முகத்தை வைத்து சிலை செய்வது மிகவும் கஷ்டம். அதனால்தான் கலை கல்லூரிகளில்கூட 60 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் பெரும்பாலும் மாடலாக வைத்து சிலை செய்வார்கள். என்னை பொருத்தவரை எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முகத்தை செய்வது எனக்கு கடினமாக இருக்கும். எம்.ஜி.ஆர் முகத்தை செய்யும்போது சற்று தவறினாலும் ரவிச்சந்திரன் அல்லது ஜெய்சங்கர் முகம்போன்று மாறிவிடும். தமிழ்நாட்டின் நிறைய இடங்களில் வைத்திருக்கும் எம்.ஜி.ஆர் சிலைகளை பார்க்கும்போது ஒருசில இடங்களில்தான் சிலை நன்றாக இருக்கும். அதேபோலத்தான் மு.க. ஸ்டாலின் முகமும். இந்த இருவரின் முகத்தையும் நன்றாக செய்துவிட்டாலே சிலை வடிப்பை நன்றாக கற்றுக்கொண்டார்கள் என அர்த்தம்.


சிற்பி கார்த்திகேயன் வடித்த சிலைகளில் சில...

சிலை செய்து அது சரியாக வராததால் பிரச்சினைகளை சந்தித்ததுண்டா?

அப்படி இதுவரை நடந்ததில்லை. ஆனால் சிலர் சிலை வடிக்க ஆர்டர் கொடுத்துவிட்டு அதை வாங்க வரமாட்டார்கள். பெரும்பாலும் சித்தர்கள் சிலைகளை செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டு அதை வாங்காமல் விட்டுவிடுவார்கள். சில நேரங்களில் நமக்கு இருக்கும் பிரச்சினைகளால் சிலை வடிக்க சில நாட்கள் தாமதமாகும். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே சீக்கிரத்தில் செய்துவிடலாம்.

உங்களுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

எங்களுடைய குறிக்கோளே நல்ல நல்ல சிலைகளை செய்யவேண்டும். பணம் அவசியம்தான் என்றாலும் பணத்திற்காக மட்டும் சிலை செய்யக்கூடாது. பணத்தைத் தாண்டி கலை என்ற ஒன்றும் இதில் இருக்கிறது. நமக்கு பின் வருபவர்களுக்கு நம்முடைய சிலைகள், மாதிரியாக இருக்கவேண்டும். அந்த அளவிற்கு நேரம் செலவிட்டு கலை நுணுக்கங்களுடன் சிலை இருக்கவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் செய்த சிலைகளை இன்றும் நாம் வியந்து பார்க்கிறோம் என்றால் அதற்கான கால, நேரத்தை அவர்கள் செலவிட்டிருக்கின்றனர். என்னுடைய பெரிய குறிக்கோளே நிறையப்பேருக்கு இந்த தொழிலை கற்றுக்கொடுக்கவேண்டும். இலவசமாக கற்றுக்கொடுப்பதால் என்னவோ அதற்கான மதிப்பை பலர் கொடுப்பதில்லை. விருப்பமும் பொறுமையும் முயற்சியும் உழைப்பும் இருப்பவர்கள் தாராளமாக சிலைவடிக்க கற்றுக்கொள்ளலாம். 

Tags:    

மேலும் செய்திகள்