பெண்கள் மட்டுமே நடத்தும் 'ராக்கிங் லேடீஸ் பேண்டு'

இசை மற்றும் சமூக அக்கறையின் வெளிப்பாடாக இருக்கும் இந்த பேண்ட் குழுவை உருவாக்கியவர் ரஞ்சிதா தேவி. யார் இந்த ரஞ்சிதா தேவி? “ராக்கிங் லேடீஸ் பேண்டு” மூலம் சமூக மாற்றமா? என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..

Update:2023-11-21 00:00 IST
Click the Play button to listen to article

இசை என்பது மனித வாழ்வோடு பிணைக்கப்பட்ட ஒன்றாகும். சந்தோஷம், சோகம், கோபம், அன்பு என நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் இசையானது ஊன்றுகோலாக இருந்து வருகிறது. இவ்வாறு இசையானது நம்மோடு இணைந்திருக்க இசை(பேண்டு) குழுக்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. அந்த வகையில் நமது சென்னையில் ஏராளமான பேண்டுகள், ஆண் மற்றும் பெண் இசைக் கலைஞர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பேண்டுகள் மட்டுமே முழுக்க முழுக்க பெண்களின் முயற்சியால் இயங்கி வருகின்றன. அவ்வாறு பெண்களின் முயற்சியால் நடத்தப்படும் பேண்ட்தான் “ராக்கிங் லேடீஸ் பேண்டு”. இசை மற்றும் சமூக அக்கறையின் வெளிப்பாடாக இருக்கும் இந்த பேண்ட் குழுவை உருவாக்கியவர் ரஞ்சிதா தேவி. யார் இந்த ரஞ்சிதா தேவி? “ராக்கிங் லேடீஸ் பேண்டு” மூலம் சமூக மாற்றமா? என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..

இசை பேண்டுகளின் வரலாறு

இசைக்குழுக்கள் என்பது 15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதன் வளர்ச்சி புதிய உச்சத்தை அடைந்தது, புல்லாங்குழல், சங்குகள் மற்றும் பெரிய ட்ரம்ஸ் போன்ற கருவிகளைக் கொண்ட ‘ஜானிசரி’ என்ற இசையும் பிரபலமடைந்தது. அதே நேரத்தில்தான் ஒவ்வொரு இசைக்குழுவில் இருக்கும் இசைக்கலைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.


மியூசிக் பேண்டுகளின் எழுச்சி

அதன்பிறகு 1838 ஆம் ஆண்டு பெர்லினில் ரஷ்ய பேரரசருக்காக, 200 ட்ரம்ஸ் வாசிப்பாளர்கள் மற்றும் 1000 காற்றுக் கருவி இசைக்கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு இசையமைத்தது. இது பேண்டு இசையின் வளர்ச்சியில் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. பின்பு காலப்போக்கில் இசையின் வளர்ச்சியாலும், அதன் மீது ஆர்வம் கொண்ட கலைஞர்களாலும் வளர்ச்சியும், ஏராளமான மாற்றங்களையும் அடைந்து  வருகிறது.

பேண்டு மூலம் உச்சம் தொட்ட தமிழ் இசையமைப்பாளர்கள்

நமது தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட சில உச்சம் தொட்ட இசையமைப்பாளர்களும் கூட ஒரு காலத்தில் பேண்ட் இசைக்குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். ராக் ஸ்டார் அனிருத், சந்தோஷ் நாராயணன், சித்தார்த் விபின், விஷால் சந்திர சேகர் உள்ளிட்ட பிரபல சினிமா இசையமைப்பாளர்களும், பேண்டு இசைக்குழுக்களில் பாடி தங்களுக்கு இருக்கும் தனித்திறனை வெளிப்படுத்தி சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

யார் இந்த ரஞ்சிதா தேவி?

மதுரையைச் சேர்ந்த ரஞ்சிதா தேவி (44) ஒரு சமூக சேவகி. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த இவர், கணவர் கண்ணனுடன் சென்னை கோயம்பேட்டில் தற்பொழுது வசித்து வருகிறார். இவர் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் எழுதிய நூல்களை படித்து அவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அப்துல் கலாம் கூறியபடியே மரக்கன்றுகள் வழங்க தொடங்கியுள்ளார், ரஞ்சிதா தேவி தனி ஒரு பெண்ணாக நின்று சமூக சேவை சார்ந்த அமைப்பு ஒன்றை சொந்தமாக இயக்கிவருவதோடு, ஆதரவற்றோர் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் என பலருக்கும் அவரால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.


ராக்கிங் லேடீஸ் பேண்டு

அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வாங்கித் தருவது, 30000 - க்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்குவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இவரின் இந்த சமூக அக்கறையைப் பாராட்டி இவருக்கு அஹத்தியனின் சிறந்த சமூக ஆர்வலருக்கான விருது, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் ‘கல்வி திலகம்’ விருது போன்ற இன்னும் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு சமூக அக்கறைக்கொண்ட ரஞ்சிதாவின் சேவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையாக தற்போது இவர் துவங்கி நடத்தி வருவதுதான் “ராக்கிங் லேடீஸ் பேண்ட்”. எந்த ஒரு வயது வரம்பும் இன்றி முழுக்க முழுக்க பெண்களின் கூட்டணியாலும், முயற்சியாலும் நடத்தப்பட்டு வருவதுதான் இந்த பேண்டின் சிறப்பு. இது நம்முடைய பெண்களுக்கான இசைத்துறையில் புதிய முயற்சி என்றும்கூட சொல்லலாம்.

‘ராக்கிங் லேடீஸ் பேண்ட்’ குறித்து ரஞ்சிதா தேவி கூறுவது...

‘ராக்கிங் லேடீஸ் பேண்ட்’ குறித்து அந்த பேண்டை உருவாக்கிய, சமூக சேவகி ரஞ்சிதா தேவியிடம் கேட்டபொழுது, புத்துணர்ச்சியோடு தன்னம்பிக்கை மிளிர பேசத் தொடங்கினார் “2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மதுரை விஷால்டி மாலில் எங்களின் லேடீஸ் பேண்ட் லாஞ்ச் செய்யப்பட்டது. இந்த ‘ராக்கிங் லேடீஸ் பேண்ட்’ அணியைப் பொறுத்தவரையில் தசாவதாரத்தில் வருவது போலவே 10 பேரைக் கொண்ட குழுவாக இருக்கின்றனர்.


சமூக சேவைகளுக்காக ரஞ்சிதா தேவி பெற்ற விருதுகள்

கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் பேண்ட் நிகழ்ச்சி நடத்துவதுதான் எங்களது நோக்கம். எங்களது குழுவைப் பொறுத்தவரையில் மூன்று பாடகர்கள், கிட்டார், வயலின் மற்றும் ட்ரம்ஸ் போன்ற இசைக்கருவி வாசிப்பாளர்கள், டிஜே என பன்முக திறமைகள் நிறைந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருக்கின்றனர், அதுபோக பிரபலங்களின் வரிசையில் பார்த்தால் பிரபல ஸ்டார் டி.ஜே.தீபிகா, தொலைக்காட்சி பிரபலம் ஆன்டிரியா உள்ளிட்ட பல பிரபலங்களும் எங்களோடு இணைந்து பேண்டின் வளர்ச்சிக்காக பங்களித்து வருகின்றனர். எங்களுடைய இந்த பேண்டின் முக்கிய நோக்கமே, கல்விக்காக கஷ்டப்படும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவுவதுதான் ஏனென்றால் இன்றும்கூட சில கிராமங்களில் ஏராளமான பிள்ளைகள் வசதியின்றி, கல்விக்காக ஏங்கிதான் நிற்கின்றனர். எனவே எங்களது இந்த முயற்சியானது, நாங்கள் நடத்தபோகும் ஒவ்வொரு கான்சர்ட்டிலுமே “பத்தில் ஒரு பங்கை தானம் செய்” என்பது போலதான், டிக்கெட் வாங்கும் ஒவ்வொரு நபரிடம் இருந்துமே பெறப்படும் தொகையானது ஏழை, எளிய மாணவர்களின் கல்விச் செலவுக்காக செலவிடப்படும் படி செய்வதுதான் எங்களது நோக்கம். இதுபோல பல சமூக சேவை சார்ந்த திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன.

வருமானம் குறித்து ரஞ்சிதாவிடம் கேட்டபோது, “வணிக ரீதியாக நாங்கள் இதனை நினைக்கவே இல்லை, இது முழுக்க முழுக்க எங்களுடைய பிள்ளைகளின் தனித்திறமைகளை வெளி உலகிற்கு அறிமுகம் செய்வதற்கான ஒரு மேடையாகத்தான் நான் பார்க்கிறேன். அதுமட்டுமில்லாமல் என்னதான் சென்னையில் ஆங்காங்கே பெண்களாக இணைந்து நடத்தும் பேண்டுகள் இருந்தாலும் கூட எங்களுடைய இந்த ராக்கிங் லேடீஸ் பேண்ட் வந்தபிறகுதான், அவை அனைத்தும் வெளியே தெரிய ஆரம்பித்தன”.


ராக்கிங் லேடீஸ் பேண்டின் இசை நிகழ்ச்சிகள்

ரஞ்சிதா சந்தித்த சவால்கள் குறித்து கேட்டபொழுது “பெண் என்றால் ஒரு கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை எல்லாம் உடைப்பதற்காகவும், பெண்களால் தனியாக நின்று சாதிக்க இயலும் என்பதை நிரூபித்து காட்டுவதற்காகவும்தான் இந்த பேண்டை துவங்கினேன். ஆனால் இந்த முயற்சியின் தொடக்கம் முதல் தற்போதுவரை ஏற்பட்ட சவால்களும் எதிர்ப்புகளும் ஏராளம். இது பெண்களுக்கான துறையே இல்லை என்று தாழ்த்தி பேசியவர்களும் உண்டு. “ஆண்கள் அளவிற்கு பெண்களால் இசை கருவிகளை வாசிக்க முடியாது” போன்ற பேச்சல்லாம் நான் நிறையவே கேட்டிருக்கிறேன். அவர்கள் இதுபோல பேசுவதையெல்லாம் கேட்கும்பொழுது எங்களுக்குள் இருக்கும் வேட்கை தான் அதிகமாகும். முன்னனி இசையமைப்பாளர் அனிருத், ஹாரிஸ், யுவன் சங்கர் ராஜா நடத்தும் கான்சர்ட்டுகளை போல நாமும் நடத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இப்பொழுது கடினமாக உழைத்து வருகிறோம். பிறகு ரஞ்சிதாவிடம் பேண்டின் மறக்க முடியாத தருணம் குறித்து கேட்டபொழுது “எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத தருணம் என்றால் அது நமது ‘தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்’, எங்களை அழைத்து திறனை வெளிக்காட்ட ஒரு மேடை அமைத்து தந்ததோடு பாராட்டு மழையிலும் நனையச் செய்தனர், அந்த தருணத்தை எங்களால் மறக்கவே முடியாது” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்