தங்கத்தேரில் "ஓணம்" வந்தல்லோ... களி ஆட்டம்! படகு போட்டி! என களைகட்டும் கடவுளின் தேசம்!

கேரளாவின் நகர்ப்புறங்களில் களறி, கும்மட்டிக்களி, புலிக்களி, கரடிக்களி ஆட்டங்களை செண்டை மேளம் மற்றும் நாதஸ்வரம் முழங்க இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆடி மகிழ்கின்றனர். ஓணம் பண்டிகை காலத்தில் அனைத்து நகரங்களும் வண்ண வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்படுவதுடன், ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகள், நடனங்கள் மற்றும் பிற கலாசாரா நிகழ்வுகள் போன்றவை கிட்டத்தட்ட ஒரு வாரம் அரங்கேற்றப்படும்.

Update: 2024-09-09 18:30 GMT
Click the Play button to listen to article

செப்டம்பர் மாதம் வந்தாலே கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிடும். சாதி, மத பேதமின்றி அங்கு அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியமிக்க பண்டிகையாக ஓணம் இருக்கிறது. உலகெங்கும் வாழும் மலையாளிகள் இப்பண்டிகையை தவறாது கொண்டாடுவர். ஆண்டுதோறும் கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் (ச்)சிங்கம் (ஆவணி) மாதத்துடைய ஹஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம்வரை மொத்தம் 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிவரை ஓணம் நாட்களாக அனுசரிக்கப்படுகின்றன. ஹஸ்தம், சித்திரா, சுவாதி, விசாகம், அனுஷம், திருக்கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் மற்றும் திருவோணம் என 10 நாட்களும் கேரளாவில் விசேஷம்தான். ஓணம் பண்டிகை நாட்களில் வீடுகளை வண்ணங்களால் அலங்கரித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி, எளியோருக்கு கொடைகளை அளித்து, பல்சுவை உணவுகளை சுவைத்து மகிழ்வர். ஓணம் பண்டிகையின் வரலாறு நம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் அந்நாளில் கேரளாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த விழாவானது வெவ்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அரசும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளையும், போட்டிகளையும் அறிவித்து வருகிறது.

மலையாளிகளின் திருவிழா

புராணம் தெரிந்தவர்களுக்கு பிரகலாதன் என்ற கதாபாத்திரமும் தெரிந்திருக்கும். அரக்க வம்சத்தில் பிறந்த இவருக்கு விஷ்ணுமேல் ஏற்பட்ட பக்தியால் நரசிம்மரின் ஆசிபெற்று, ஒரு நாட்டையும் ஆட்சி செய்கிறார். இவருடைய பேரன்தான் மகாபலி சக்ரவர்த்தி. இவருடைய பெயரால்தான் இன்று ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரள மண்ணை மகாபலி சக்ரவர்த்தி சிறப்பாக ஆட்சி செய்துவந்தாலும் அரக்க வம்சத்தின் குணம் இவருக்குள் இருந்ததால், தேவர்களை ஒடுக்குவதாக இவர்பேரில் திருமாலிடம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மகாபலியை அடக்கவேண்டி தேவர்கள் தொடர்ந்து தவமிருந்த சமயத்தில், தனது குருவான சுக்ராச்சாரியாரின் ஆசியுடன் நாட்டில் ராஜசூய யாகத்தை நடத்துகிறார் மகாபலி சக்ரவர்த்தி. இந்த யாகத்தில் யார் என்ன கேட்டாலும் அரசன் கொடுக்கவேண்டும். மக்கள் தங்களுக்கு வேண்டியதை கேட்டு பெற்றுச் சென்றுகொண்டிருந்த சமயத்தில் அங்கு சிறுவன் வாமனனாக உருவெடுத்த திருமால், மகாபலியிடம் யாசகம் கேட்டு நிற்கிறார். சிறுவன் என்ன கேட்டுவிட போகிறான் என நினைத்த மகாபலியும், உனக்கு என்ன வேண்டுமோ கேள்! என்று சொல்ல, வாமனனும் தனக்கு மூன்றடி மண் வேண்டும் என கேட்கிறார். மகாபலி சக்ரவர்த்தியும் அதற்கு உடன்பட்டு, கமண்டலத்திலிருந்த நீரால் தாரைவார்த்து கொடுக்கிறார். உடனே சிறுவன் விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியால் பூமியையும், அடுத்த அடியால் வானையும் அளந்துவிட்டு, அடுத்த அடி எங்கே வைப்பது என கேட்க, தனது தலையையே கொடுக்கிறார் மகாபலி சக்ரவர்த்தி.


ஓணம் நாட்களில் வீடுகளில் கட்டாயம் இடம்பெறும் அத்தப்பூ கோலம்

இருப்பினும் மகாபலியின் நல்ல உள்ளத்தை பார்த்த திருமால், அவரை பாதாள உலகிற்கு தலைவனாக அனுப்பிவிடுகிறார். தன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் தனது நாட்டு மக்கள்மீது தானும் அலாதி அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை அவர்களை பார்க்க அனுமதி அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார் மகாபலி சக்ரவர்த்தி. அதனை ஏற்றுக்கொண்ட திருமாலும் வரம் அருளுகிறார். இப்படி ஆண்டுதோறும் திருவோணத்திற்கு மகாபலி சக்ரவர்த்தி பாதாள உலகிலிருந்து தங்களது வீடுகளுக்கு வந்து செல்வதாக நம்பும் கேரள மக்கள், அவரை வரவேற்கும் வகையில் விழா எடுக்கின்றனர். ஆவணி திருவோண நட்சத்திர நாள்தான் விஷ்ணுவின் பிறந்தநாள் எனவும், வாமனன் அவதரித்த நாள் எனவும் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு எப்படி பொங்கல் அறுவடைப் பண்டிகையோ! அதுபோல, கேரளாவில் ஓணத்தை அறுவடை பண்டிகையாக கொண்டாடுகின்றனர். திருவோணத்திற்கு முன்புள்ள 9 நாட்களிலும் குறிப்பிட்ட நாட்களன்று ஒவ்வொரு கொண்டாட்டங்கள் இருக்கும். அதாவது சுவாதி நாளான மூன்றாம் நாளில் அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்வர். நான்காம் நாளான விசாகத்தில் அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்வர். ஐந்தாம் நாளான அனுஷம் நாளில்தான் பல்வேறு இடங்களில் படகுப்போட்டி நடைபெறும். அதன்பிறகு 10ஆம் நாளான திருவோணம் தினத்தன்று அனைத்துவிதமான கொண்டாட்டங்களுடனும் விழா நிறைவுபெறும்.


கேரளாவின் பாரம்பரிய நடனமான புலியாட்டம்

களைகட்டும் கொண்டாட்டங்கள்

ஓணம் பண்டிகைக்கான காரணம் ஒன்றாக இருந்தாலும் கேரளாவில் ஒவ்வொரு பகுதிகளுக்கேற்ப கொண்டாட்டங்களும் மாறுபடுகின்றன. வடக்கு மலபாரில் ஆதிவேடன் தெய்யம் வேடமிட்ட நபர், ஒவ்வொரு வீடாக சென்று ஓணம் பண்டிகை வருவதை அறிவிப்பார். அதுவே வட கேரளாவில் ஓணபோட்டன், குட்டி தெய்யம் மற்றும் ஓணத்தார் வேடமிட்டவர்கள் ஓணம் வருகையை அறிவிப்பர். அதுவே தெற்கு கேரளாவை பொருத்தவரை ஓணம் என்பது படையணி காலமாக அனுசரிக்கப்படுகிறது. படையணி என்பது இசை, ஆட்டம், பாட்டம், ஓவியங்கள் மற்றும் முகமூடிகள் அணிந்து விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதில் நீலம்பேரூர் படையணி மிகவும் பிரசித்தம். நீலப்பேரூரில் அமைந்திருக்கும் பள்ளி பகவதி கோயிலில் திருவோணத்திற்கு பிறகு வரும் பூரம் நாட்களில் 16 நாட்கள் இவ்விழா எடுக்கப்படும். அதேபோல் திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் போன்ற மாவட்டங்களின் கிராமப்பகுதிகளில் மிகவும் விமரிசையானது கும்மட்டிக்களி திருவிழா. சிவனின் பூதகன உருவங்கள்கொண்ட முகமூடிகளை அணிந்துகொண்டு ஆடும் நடனம்தான் கும்மட்டிக்களி ஆட்டம். இந்த ஆட்டம் ஆடுபவர்கள், பார்ப்படகபுல்லு என்றவகை புற்களைக்கொண்டு ஆடை தயாரித்து அணிந்துகொண்டு, முகமூடிகள் மற்றும் பளிச் வண்ணங்களை பூசிக்கொண்டு ஆடுவர். பாரம்பரியமான நடனமாக கருதப்படும் இந்த ஆட்டத்தை ஆண்கள்தான் ஆடவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது பெண்களும் இந்த ஆட்டத்தை ஆடத்தொடங்கியிருக்கின்றனர். மணிக்கணக்கில் ஆடவேண்டிய இந்த கும்மட்டிக்களி ஆட்டம் ஆடும் பெண்களை ‘கும்மட்டிக்களி கன்னிகள்’ என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் கேரளாவின் பிரசித்திபெற்ற நடனமான புலி ஆட்டம் மற்றும் கரடி ஆட்டம் போன்றவற்றையும் பெண்கள் ஆடக்கூடாது என்ற நிலைதான் இருந்தது. ஆனால் அந்த கட்டுப்பாட்டை உடைத்து இப்போது பெண்களும் ஆடிவருகின்றனர். 


இப்போது பெண்களும் பங்கேற்கும் கும்மட்டிக்களி ஆட்டம்

கேரளாவின் நகர்ப்புறங்களில் களறி, கும்மட்டிக்களி, புலிக்களி, கரடிக்களி ஆட்டங்களை செண்டை மேளம் மற்றும் நாதஸ்வரம் முழங்க இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆடி மகிழ்கின்றனர். ஓணம் பண்டிகை காலத்தில் அனைத்து நகரங்களும் வண்ண வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்படுவதுடன், ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகள், நடனங்கள் மற்றும் பிற கலாச்சாரா நிகழ்வுகள் போன்றவை கிட்டத்தட்ட ஒரு வாரம் அரங்கேற்றப்படும்.

ஆடை அலங்காரங்கள் மற்றும் படையல்!

மகிழ்ச்சி மற்றும் கலாசாரத்தை போற்றும் விழா ஓணம் என்பதால் அந்த நாளன்று கேரளாவின் பாரம்பரிய உடையான முண்டு அல்லது கசவு எனப்படும் வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்துகொண்டு வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு விழா எடுப்பர். ஓணத்தின் முதல் நாளன்று ஒரு பூ கொண்டும், இரண்டாம் நாளன்று இரண்டு பூக்களாலும், மூன்றாம் நாளன்று மூன்று பூக்களாலும் என முறையே 10ஆம் நாளன்று 10 பூக்கள்கொண்டு கோலமிட்டு மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்பர். ஓணம் என்றால் விருந்து இல்லாமலா? கசப்பு தவிர மற்ற ஐந்து சுவைகளிலும் 64 வகையான ‘ஓண சத்யா’ இந்த கொண்டாட்டத்தின் முக்கிய அம்சம். 


ஓண நாட்களில் பரிமாறப்படும் ‘ஓண சத்யா’

புது அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட அடை, அடை பிரதமன், அவியல், மட்டையரிசி சாதம், பரங்கிக்காய் குழம்பு, பருப்பு, பால் பாயசம், நெய், சாம்பார், ஓலன், காலன், மோர், ரசம், எரிசேரி, இடிச்சக்க உப்பேரி, இஞ்சிப்புளி, பச்சிடி, கிச்சிடி, தோரன், சர்க்கரப் புரட்டி, மிளகா அவியல், பப்படம், சீடை, காய் வறுத்தது, அச்சாரம் என பல வகைகள் இந்த சத்யாவில் இடம்பெறும். வீடுகள் மற்றும் கோயில்களில் தயார் செய்யப்படும் இந்த உணவுகள் முதலில் இறைவனுக்கு படைக்கப்பட்டு பின்பு பரிமாறப்படும். அதிலும் சிறப்பு என்னவென்றால் குரங்குகள், எறும்புகளுக்குக்கூட ஓண சத்யா பரிமாறப்படும். எர்ணாகுளத்திலிருக்கும் திருக்காட்கரை கோயில், குருவாயூர் கோயில் மற்றும் ஆரண்முலா வல்ல சத்யா ஆகியவை ஓண சத்யாவிற்கு கேரளாவில் மிகவும் புகழ்பெற்றவை.

வல்லம் காளி

ஓணத்தை முன்னிட்டு கேரளாவில் நடைபெறும் படகு போட்டிதான் வல்லம் காளி என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எப்படி பிரசித்தமோ அதுபோலத்தான் கேரளாவின் வல்லம் காளியும். பாரம்பரிய திருவிழாவான இந்தப் போட்டியானது அரசர்கள் காலத்தில் தங்களது ராணுவ வலிமையை காட்ட, வீரர்களை கடல் போர்களுக்கு பயிற்சியளிக்க நடத்தப்பட்ட போட்டியாக கூறப்படுகிறது. அதனால்தான் இன்றுவரை இந்த போட்டிக்கு போரில் பயன்படுத்தப்பட்ட சுண்டன் வல்லம்கள் என்று அழைக்கப்படும் பாம்பு படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.


கேரளாவின் பிரசித்திபெற்ற போட்டியான வல்லம் காளி என அழைக்கப்படும் படகுப்போட்டி

வல்லம் காளி என்பதை ஒரு விளையாட்டாக மட்டுமல்லாமல் தங்களது சமூகத்தின் கலாச்சார நிகழ்வாகவும் பார்க்கின்றனர் கேரள மக்கள். இப்படி பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி, இந்த போட்டியில் பங்கேற்பதால் தங்களது ஒற்றுமை மேம்படுவதாகவும் கருதுகின்றனர். ஆலப்புழாவிலிருக்கும் புன்னமடா ஏரியில் நடத்தப்படும் நேரு டிராபி படகு போட்டி, ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலுக்கு அருகிலிருக்கும் பம்பை ஆற்றில் நடத்தப்படும் பந்தயம், சம்பகுள பம்பை ஆற்று படகு போட்டி, ஆலப்புழாவிலுள்ள பாய்ப்பாட் ஆற்றில் நடக்கும் மூன்று நாள் தண்ணீர் திருவிழா மற்றும் குமரகத்திலிருக்கும் வேம்பநாடு ஏரியில் நடைபெறும் படகு பந்தயம் போன்றவை கேரளாவில் மிகவும் பிரசித்தமானவை. இந்த போட்டிகளில் சுண்டன் வல்லம் எனப்படும் பாம்பு படகுகளும், பள்ளியோடம் எனப்படும் பாரம்பரிய படகுகளும் இடம்பெறும்.

யாருக்கு லாட்டரி அதிர்ஷ்டம்?

கேரள சுற்றுலாத்துறையால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அதில் அரசு சார்பிலேயே படகுப் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, கேரள லாட்டரித்துறை சார்பில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதலே அம்மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


மாநில அரசால் நடத்தப்படும் ஓணம் சிறப்பு லாட்டரி குலுக்கல்

இதன் குலுக்கல் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.மொத்தம் 10 கட்டங்களாக நடைபெறும் இந்த லாட்டரி விற்பனையில் முதல் கட்டமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்தன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 500 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்றதுடன், மூன்றே நாட்களில் அனைத்து டிக்கெட்டுகளுமே விற்றுத்தீர்ந்தன. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி, இரண்டாம் பரிசு 20 பேருக்கு தலா ரூ. 1 கோடி, மூன்றாம் பரிசு 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓணம் கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைக்கட்ட, லாட்டரித்துறையின் கல்லாவும் நிரம்பி வழிவதால் அரசு மகிழ்ச்சியில் இருக்கிறது. குலுக்கல் நடைபெறுவதற்குள் லாட்டரி விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்