தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை! புயல்... மழை... ஒரு ஸ்மால் "ரீவைண்ட்"

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே, சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இருந்தபோதிலும் அடுத்த நாளே இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை.

Update:2024-10-22 00:00 IST
Click the Play button to listen to article

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதன் தீவிரத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்ட தொடங்கியுள்ளது. இந்த தீவிரமான மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சாலைகளில் நீர்தேக்கம், பேருந்துக்குள் மழை, போக்குவரத்துக்கு இடையூறு என இந்த சமயத்தில் நிகழும் சகலமும் தற்போது தமிழகத்தில் நிகழ தொடங்கியுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் தலைநகர் சென்னையில் வெள்ளம் வந்துவிடுமோ, நம் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும், பீதியும் இங்கு வசிக்கும் மக்களுக்கு வருவது வழக்கம். ஆனால், இந்த முறை வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே, சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இருந்தபோதிலும் அடுத்த நாளே இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தாலும், சிலர் விமர்சனமும் வைத்து வருகின்றனர். இப்பொழுதுதானே மழை சீசன் தொடங்கியுள்ளது. போகபோகத்தான் சென்னையின் உண்மை நிலை தெரியும் என்று  கூறி வருகின்றனர். இந்தநிலையில், தமிழக வரலாற்றில் பதிவான மோசமான புயல், மழை குறித்தும், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தோம் என்பது குறித்தும் ஒரு சிறிய பின்னோக்கிய பயணத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

வரலாற்றில் மறக்க முடியாத மழையும், புயலும்

தமிழக வரலாற்றில் நம்மால் என்றுமே மறக்க முடியாத பல மோசமான சம்பவங்கள் நம் கண் முன்னே அவ்வப்போவது வந்து போவது உண்டு. அப்படியான நிகழ்வுகளில் எப்போதும் நம் நினைவுகளை விட்டு அகலாமல் இருப்பது அரியலூர் ரயில் விபத்துதான். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற மிகப்பெரிய கோர விபத்து என்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். 67 ஆண்டுகளை கடந்த பிறகும் இந்த சம்பவத்தை நினைவில் வைத்து இன்றும் பேசுகிறோம் என்றால், அந்த நிகழ்வு நம் மனங்களில் ஏற்படுத்திச் சென்ற தடங்கள் அப்படியானதாக இருப்பதால்தான். 1956-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அரியலூர் மருதையாற்றுப் பாலத்தில் நிகழ்ந்த இந்த ரயில் விபத்தில் சுமார் 250 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அந்த பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த பருவமழைதான். விடாமல் பெய்த மழையால் திருச்சியில் இருந்து 35 மைல் தூரத்தில் அரியலூருக்கும், கல்லகம் என்ற ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள மருதையாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓட, அதனை சுற்றி ஒரு மைல் தூரத்திற்கு வெள்ளம் சூழ்ந்திருந்தது. அந்த சமயம் ஆற்றை பார்த்தவர்களுக்கு, ரத்த ஆறு போல பயங்கரமாக காட்சி அளித்ததாம். இந்த ஆற்றின் மீதுதான் ரயில்வே பாலமும் இருந்திருக்கிறது. கரைபுரண்டு ஓடிய இந்த வெள்ளத்தால் ரயில் பாலத்தை சுற்றிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்திற்கு மேலே தண்ணீர் ஓடியதால் அந்த அரிப்பு வெளியில் தெரியாமல் இருந்துள்ளது.


1956-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அரியலூர் மருதையாற்றுப் பாலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து

இந்தசூழலில் அதே 23-ஆம் தேதி, சென்னையில் இருந்து பல ரயில்கள் அந்த மருதையாற்று பாலம் வழியாகத்தான் சென்றுள்ளன. குறிப்பாக விபத்து நடந்த ரயிலுக்கு முன்பாகத்தான், மருதையற்று பாலத்தை கடந்து திருவனந்தபுரம், நெல்லையை நோக்கி 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றிருந்தன. ஆனால், காலதேவன் போட்டு வைத்த கணக்கில் மாட்டிக்கொண்டது என்னவோ சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த "தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்" ரயில்தான். சுமார் 800 பயணிகளை சுமந்தபடி 13 பெட்டிகளுடன் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த ரயில் விருத்தாசலத்தை அடைந்ததும், அதில் இருந்த கடைசி பெட்டி கழற்றப்பட்டு சேலம் செல்லும் இணைப்பு ரயிலில் மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது. பிறகு, விடிய விடிய கொட்டிய மழையில் நனைந்தபடி புறப்பட்ட அந்த நீராவி என்ஜின் ரயில் மேற்கொண்டு 12 பெட்டிகளுடன் புறப்பட்டதுதான் தாமதமோ என்னவோ… சிறிது தூரத்திலேயே அரியலூர் - கல்லாகம் இடையேயான மருதையாற்று பாலத்தை எட்டியதும்.. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி எஞ்சினோடு சேர்த்து முதல் ஏழு பெட்டிகள் அப்படியே நீருக்குள் மூழ்கின. அந்த வெள்ள நீருக்குள் பல உயிர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. ஒரு காட்டாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட இந்த விபத்து இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ரயில் விபத்தாக இன்றுவரை பார்க்கப்படுகிறது.


1964, டிசம்பர் 23-ஆம் தேதி தனுஷ்கோடியை தாக்கிய புயலை நேரில் கண்ட ஜெமினி - சாவித்திரி தம்பதி 

அதேபோன்றுதான் விமானசேவைகள் பெரிதாக மேம்படாத அந்த காலத்தில், சுதந்திரத்திற்கு முன்பாகட்டும் அல்லது பின்பாகட்டும் பிழைப்புக்காக நாடுவிட்டு நாடு செல்லும் பல தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இணைப்பு பாலமாகவும், பிரதான துறைமுகமாகவும் விளங்கியது தனுஷ்கோடி. பல வழிகளிலும் வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கிய இந்த தனுஷ்கோடி, 1964, டிசம்பர் 23-ஆம் தேதி, இருந்த தடம் தெரியாமல் மறைந்துபோனது. காரணம், அந்த பருவமழை சமயத்தில் உருவான புயல் சின்னம் ஏற்படுத்திய தாக்கம்தான். 1964-ம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி, தெற்கு அந்தமானில் உருவான புயல் வலுவிழந்து இலங்கையை நோக்கி வந்தது மட்டுமின்றி டிசம்பர் 22-ம் தேதி இலங்கையில் உள்ள தமிழர் வாழ்ந்த பகுதிகளை சூறையாடிய கையோடு, தனது அகோர பசிக்கு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவில் மிகப்பெரிய ஆழிப்பேரலையை ஏற்படுத்தி தனுஷ்கோடியையும் விழுங்கியது. இந்த பேரழிவில் மனித உயிர்கள் மட்டுமல்ல கால்நடைகள், துறைமுகக் கட்டிடங்கள், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் என ஒன்றையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் மண்ணோடு மண்ணாக கொண்டு சென்றது. இப்படி ஒரே இரவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் இனி மனிதர்களே வாழ தகுதியில்லாத நகரமாக மாறிப்போன தனுஷ்கோடியில் இன்றும் மிச்சம் இருப்பது சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கும் ஒருசில கட்டிடங்கள்தான். இதில் முக்கியமான நிகழ்வு என்னவென்றால் இந்த ஆழிப்பேரலை நிகழ்வை நேரில் கண்டவர்களில் முக்கியமானவர்கள் மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் - நடிகையர் திலகம் சாவித்திரி தம்பதிதான். 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மிக முக்கிய துறைமுக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியைத் துடைத்தெறிந்த அந்த ஆழிப்பேரலையின் ஆவேசத்தையும், நடுங்க வைத்த அந்த இரவைப் பற்றியும் அப்போதைய தங்களது பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர்.

தமிழகம் சந்தித்த மோசமான புயல்கள்


1966-ஆம் ஆண்டு புயலில் மெரினா கடற்கரையில் தரைதட்டிய லைபீரியாவின் சரக்கு கப்பல் 

1960-கள் தொடங்கி பல புயல்கள் தமிழகத்தை தாக்கியிருந்தாலும், அந்த புயல்களுக்கு பெயர் வைக்கும் நிகழ்வுகள் என்பது 2 ஆயிரத்திற்கு பிறகுதான் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்பாக பெயர் வைக்கப்படாத புயல்கள் தங்கள் கோரப்பசிக்கு எத்தனையோ உயிர்களை காவு வாங்கி சென்றுள்ளன. அப்படி 1966-ஆம் ஆண்டு உருவான புயல் ஒன்று நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து சென்னையில் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது. இதனால் சென்னை துறைமுகத்தில் இருந்த ஆறு கப்பல்கள் சேதம் அடைந்ததுடன், அதில் லைபீரியா கொடியுடன் வந்திருந்த ஸ்டமாட்டிஸ் என்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் மெரினா கடற்கரையில் தரை தட்டி மண்ணுக்குள் புதைத்தது. இந்த கப்பலை மீட்க பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்காமல் கிரேக்க அதிகாரிகள் அதனை அங்கேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் 1990 வரை அதாவது சுமார் 40 ஆண்டுகள் அதன் நினைவை தாங்கியபடி மெரினா கடற்கரையிலே நின்று கொண்டிருந்த அந்த கப்பல், அங்கு வரும் மக்கள் பலருக்கும் வியப்பான ஒன்றாகவே இருந்துள்ளது. இதன்பிறகு 1977 மற்றும் 1985-ஆம் ஆண்டுகளில் உருவான புயல்களும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக, 1977-ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் நாகப்பட்டினம் மாவட்டத்தை தாக்கியது. இதனால் திருச்சி மற்றும் தஞ்சாவூர் வட்டாரங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதுடன், நாகை ரயில் நிலையமும் மிகவும் மோசமாக சேதம் அடைந்தது. இதன்பிறகு வந்த புயல்கள் பெரும்பாலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி ஆந்திர பகுதிகளில் கரையை கடந்துள்ளன.


புயல்களால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் எடுத்துக்காட்டு புகைப்படம்

இருப்பினும் 2005-ஆம் ஆண்டுக்கு பிறகு உருவான புயல்களுக்குத்தான் மத்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பெயர் வைக்க ஆரம்பித்தனர். அப்படி 2005-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை சமயத்தில் மட்டும் பியார், பாஸ், ஃபர்னூஸ் என்ற மூன்று புயல்கள் உருவாகி பயிர் சேதம், வீடுகளுக்குள் வெள்ளம் என தமிழகமே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அளவுக்கு பலவிதமான இழப்புகளை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு ‘நிஷா’ புயல், 2010-ஆம் ஆண்டு ‘ஜல்’ புயல், 2011-ஆம் ஆண்டு தானே புயல், 2012-ஆம் ஆண்டு ‘நீலம்’ புயல், 2013-ஆம் ஆண்டில் ‘மடி’ புயல், 2016-ஆம் ஆண்டு ‘வர்தா’ புயல், 2017 ‘ஒக்கி’, 2018 ‘கஜா’ புயல், 2020 ‘நிவர்’, ‘புரேவி’ புயல், 2022-ஆம் ஆண்டு ‘மாண்டஸ்’ புயல், 2023 ‘மிக்ஜாம்’ புயல் என வரிசையாக பல புயல்கள் தமிழ்நாட்டை சேதப்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர்களையும், கோடிக்கணக்கான அளவில் இழப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இதில் குறிப்பாக, தானே புயல் கடலூர் மாவட்டத்தையும், கஜா புயல் டெல்டா பகுதியையும், வர்தா புயல் சென்னையையும், ஒக்கி புயல் கன்னியாகுமரியையும் புரட்டிப்போட்ட நிகழ்வுகளையெல்லாம் வரலாறு என்றுமே மறக்காது. இதனால்தான் இப்போது மழை என்றாலே அதை பார்த்து எல்லோரும் பயந்து நடுங்கும் நிகழ்வுகள் என்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏற்பட்ட வெள்ளமும், ஊடகங்கள் அதனை விவரித்த விதமுமே இதற்கு மிக முக்கிய காரணம்.

2015-க்கு பிறகு தொடரும் பீதி

இப்போதெல்லாம் ஒவ்வொரு பருவமழை காலத்தின்போதும் சென்னையில் லேசாக மழை பெய்ய ஆரம்பித்தாலே, எல்லோர் மனதிலும் சட்டென எழக்கூடிய ஒரு பீதி, ‘அய்யோ… 2015-ல் ஏற்பட்ட வெள்ளம் மாதிரி இந்த முறையும் ஆகிவிடுமா? என்ற கேள்விதான். மக்கள் மனதில் இருக்கும் இந்த ஒரு சிறு பயத்தை ஒருசில மீடியாக்களும் தூபம் போட்டு விவாதம் என்ற பெயரில் தீயிட்டு எரியச் செய்துகொண்டே இருக்கின்றன. காரணம், 2015 இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பெருவெள்ளம் காட்டிச்சென்ற கோரமுகம் அப்படி. இதுதவிர இந்த வெள்ள பாதிப்பிற்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த மறைந்த செல்வி. ஜெயலலிதாவும் அவரது ஆட்சியும் மிக முக்கிய காரணம் என்ற விமர்சனங்களும் இன்றுவரை எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒருபுறம் இப்படியென்றால் இனி சென்னையில் ஒவ்வொரு மழையையும் இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். காரணம் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும் அதே வேளையில், சென்னையின் கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஏரிகள், குளங்கள் இருந்த இடத்தில் இன்று உயர உயரமான கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. ஆக்கிரமிப்புகளால் மழை தண்ணீர் செல்வதற்கான பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன. இவற்றை சரி செய்து ஒழுங்குபடுத்தினால் மட்டுமே இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் எளிதாக எதிர்கொண்டு செல்ல முடியும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


சென்னையில் பெருமழைக்கு அஞ்சி மேம்பாலங்களில் நிறுத்திவைக்கப்பட்ட கார்கள்

கடந்த ஆண்டு, 2015 போல் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக மழை, வெள்ளம் இருந்தபோதும் காலதேவன் கொடுத்த இடைவெளிகளால் ஓரளவு சென்னை காப்பாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட முன்பாகவே தொடங்கிவிட்டது. அதன் எதிரொலிதான் கடந்த 15-ஆம் தேதி அன்று தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை. ஒருநாள் மழைக்கே ரெட் அலர்ட், பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலங்கள் விடுமுறை, வீடுகளுக்குள் தண்ணீர், போக்குவரத்தில் சிக்கல் என பல நிகழ்வுகள் சென்னையில் நடந்துள்ளன. கனமழை எச்சரிக்கையால், சென்னைவாசிகள், தங்கள் உடமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கார்களை மேம்பாலங்களில் நிறுத்திவைத்தனர். தாழ்வான பகுதிகளை சேர்ந்த மக்கள், தாங்களாகவே இடம் மாறுவது, தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிவைப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். அதேநேரம் தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் முனைப்போடு களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கினர். காரணம் 2015 ஏற்படுத்திய மழை பாதிப்பு, ஒவ்வொரு ஆண்டையும் கவனமாக கையாள வேண்டும் என்ற தெளிவை ஏற்படுத்திச் சென்றதால்தான். இச்சூழலில்தான், சென்னையில் ஒரே நாளில் சில இடங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டியபோதும், சாலைகளில் தேங்கிய வெள்ளநீர் 24 மணி நேரத்தில் அகற்றப்பட்டு இயல்புநிலை திரும்பியது. இயல்புநிலை திரும்பியபோதும், வடகிழக்கு பருவமழை இனிதான் தீவிரமடையும் என்ற எண்ணம், சென்னை மக்களை இன்னும் அச்சத்தில் வைத்துள்ளதை மறுக்கமுடியாது. 

Tags:    

மேலும் செய்திகள்