இளையராஜா, பாரதிராஜா எல்லாம் சாப்பிடக்கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளனர் - தம்பி உடையான் இயக்குநர் ராஜா மகேஷ்

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருப்பதுபோல நம் வீட்டை அலங்கரிக்கும் ஓவியங்களுக்கும் சில சிறப்புகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தஞ்சை ஓவியங்கள்.

Update: 2024-10-14 18:30 GMT
Click the Play button to listen to article

ஓவியம் என்பது வரைதல் என்பதை தாண்டி, அழகியல் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான படைப்பாகும். வரைபவர் மற்றும் அவரின் கருத்தியல் சார்ந்த விஷயங்களின் வெளிப்பாடாகவும் இந்த ஓவியங்கள் இருக்கின்றன. குகை ஓவியம், எண்ணெய் ஓவியம், செயற்கை வண்ண ஓவியம், நீர் வண்ண ஓவியம், சுதை ஓவியம், மை ஓவியம், பூச்சு ஓவியம், கேலிச்சித்திரம், கண்ணாடி ஓவியம், மெழுகு ஓவியம், கரிக்கோல் ஓவியம் என 15 வகையான ஓவியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருப்பதுபோல நம் வீட்டை அலங்கரிக்கும் ஓவியங்களுக்கும் சில சிறப்புகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தஞ்சை ஓவியங்கள். அந்த வகையில், தஞ்சை ஓவியங்களை மிகவும் பிரசித்தமாக வரைந்து உலகம் முழுவதும் பிரபலப்படுத்திவரும் ஓவியர் ராஜா மகேஷின் ஓவியங்கள் மற்றும் அதில் உள்ள சிறப்புகள் என்னவென்று ராணி நேயர்களுக்கு அவர் அளித்த நேர்காணலின் தொடர்ச்சியை இங்கே காணலாம்.

ஓவியராக இருந்து சினிமாவுக்குள் வந்த உங்களுக்கு ஆர்ட் டைரக்டருக்கான வாய்ப்பு வந்து இருக்கும். ஏன் அந்த துறையில் நீங்கள் தொடர்ந்து பயணிக்கவில்லை?

நான் முதலில் ஆர்ட் டைரக்டராகத்தான் வேலை செய்தேன். கலை இயக்குநர் என்பது ஒரு சிறு துறைதான். ஆனால், அதை தாண்டி ஒரு ஓவியத்தில் எப்படி நான் நினைப்பதை மட்டும்தான் சொல்ல முடியுமோ அதேபோன்று நான் நினைப்பதை சொல்ல வேண்டிய ஒரு இடமாக இயக்குநர் துறையை பார்த்தேன். அதனால் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு முன்பே நான் தஞ்சையில் பெயர் சொன்னால் நன்கு அறியப்படும் அளவுக்கு ஒரு புகழ்பெற்ற ஓவியராக இருந்தேன். அதை விட்டுவிட்டு இயக்கத்தின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னை வந்தேன். என் கனவும் நிறைவேறியது. இன்று ஒரு இயக்குநராகவும் அறியப்படுகிறேன்.ஒரு ஓவியத்தில் எப்படி நான் நினைப்பதை மட்டும்தான் சொல்ல முடியுமோ அதேபோன்று, நான் நினைப்பதை சொல்ல வேண்டிய ஒரு இடமாக இயக்குநர் துறையை பார்த்தேன்.


திருமால் மற்றும் லட்சுமி தேவியின் உருவம் கொண்ட தஞ்சை ஓவியங்கள் 

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நன்றாக வளர்ந்து இருக்கிறது? உங்கள் காலத்தில் நீங்கள் வரைந்த ஓவியங்களுக்கும், இப்போது உள்ள ஓவியங்களுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

அன்றைய காலங்களில் எல்லாவிதமான ஓவியங்களும் நாமே வரைய வேண்டும். இன்று அப்படி அல்ல. தொழிநுட்ப வளர்ச்சியால் மிகவும் எளிதாக பிரிண்ட் எடுத்து ஒட்டிவிடுகிறார்கள். அதேமாதிரி ஓவியங்களுக்கு தேவையான நிறங்கள் என்று எடுத்துக்கொண்டால் கேம்லின் வெள்ளை நிறம் மட்டும்தான் வரும். தஞ்சை ஓவியங்களில் எல்லாம் பாரம்பரிய கலர்கள்தான் பயன்படுத்துவோம். அதற்காக முத்துவை பஸ்பம் ஆக்கி முத்து வெள்ளை என்ற நிறம் எடுப்பார்கள். பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். மருந்துக்கும் அதை பயன்படுத்துவார்கள். அதைத்தான் நாங்களும் வாங்கி கிருஷ்ணருக்கு பயன்படுத்துவோம். பிறகு கேம்லின் நிறுவனத்திலேயே பேசி இப்போது நிறைய கலர்கள் அதில் இருந்தே கிடைக்கிறது.

அன்னக்கிளி செல்வராஜுடன் தொடக்கத்தில் சினிமாவில் பயணித்து இருக்கிறீர்கள். அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி கூற முடியுமா? இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?

இன்றும் அவருடன் தொடர்பில் இருக்கிறேன். இன்னமும் பணியாற்றி கொண்டுதான் இருக்கிறார். அவர் தினமும் புத்ததகங்கள் படிப்பார். ஒரு 100 பக்கமாவது அவருக்கு புத்தகம் படித்துவிட வேண்டும். ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துவிட்டால் உடனே எனக்கு போன் செய்து பேசி விடுவார். சினிமாவில் எப்படி ஒரு காட்சியை பத்து விதமாக யோசித்து எடுப்பாரோ அப்படிதான் நிஜ வாழ்க்கையிலும். அவரை பார்க்கப்போகிறோம், பேட்டி எடுக்கப்போகிறோம் என்றால்... இவங்க எப்படி வருவாங்க? சாப்பிட்டாங்களா? இங்க இருந்து முடிச்சுட்டு எப்படி போவாங்க? இப்படியெல்லாம் யோசிக்க கூடிய நல்ல மனிதர். அதனால்தான் அவர் கதைகள் இன்றும் பேசப்படுகின்றன. அவர் படங்களில் பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அபரிமிதமாக இருக்கும். சின்னகவுண்டர் படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தால் கூட ஹீரோயின் மற்றும் மனோரம்மா வேடம்தான் மிக கனமானதாக இருக்கும். அவர்கள்தான் இன்றும் பேசப்படுகிறார்கள். அந்த அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய மனிதநேயம் மிக்க மனிதர். அவர், இளையராஜா, பாரதிராஜா எல்லோரும் நல்ல நண்பர்கள். இவர்கள் அனைவருமே மிகவும் போராடி சினிமாவுக்குள் வந்து சாதித்தவர்கள். சாப்பிடக்கூட காசு இல்லாமல் அவரும், கங்கை அமரனும் எழுதி வைத்திருக்கும் புத்தகத்தை கொண்டு எடைக்கு போட்டுவிட்டு அரிசி வாங்கி வந்து கஞ்சி வைத்து சாப்பிட்ட காலங்கள் எல்லாம் இருக்கிறது. அவர்களை மாதிரியான ஒரு அற்புதமான மனிதர்களை இன்று காண்பதெல்லாம் அரிதுதான்.


அன்னக்கிளி திரைப்பட காட்சி - இயக்குநர் அன்னக்கிளி செல்வராஜ் 

‘தம்பி உடையான்’ படத்தில் சாருஹாசனுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூற முடியுமா?

சாருஹாசன் அற்புதமான மனிதர். ‘தம்பி உடையான்’ படம் எடுப்பதற்கு முன்பாக ‘கிச்சா’ என்றொரு கதை எழுதி இருந்தேன். அந்த கதையில் ஹீரோ மற்றும் அவரின் அப்பா இருவருமே வழக்கறிஞர்கள். அரசாங்கத்தையே ஒரு வழக்கறிஞர் மாற்றியமைப்பது போன்ற ஒரு கதை. எனக்கு துக்ளக் படிக்கும் பழக்கம் இருப்பதால் அந்த கதையில் சோவை நடிக்க வைக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், அந்த சமயம் அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து இருந்தார். இருந்தாலும் தெரிந்த நண்பர் மூலமாக துக்ளக் அலுவலகம் சென்று சோவை சந்தித்து கதை கூறினேன். கதையை கேட்ட அவர், நான் இதில் நடிப்பேன் என்று எந்த நம்பிக்கையில் வந்தாய் என்று கேட்டார். உடனே நான் இந்த கதை உங்களுக்குத்தான் சரியாக இருக்கும். இதற்கு சரியான ஆள் வேறு யாரும் இல்லை என்று சொல்லவும். சரி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தருகிறேன். அதற்கு மேல் என்னால் முடியாது என்று சொன்னார். சொன்னபடி வந்து நடித்தார். ஆனால், பணப் பிரச்சினை காரணமாக அந்த படம் பாதியிலேயே நின்று போய்விட்டது. இதற்கு பிறகுதான் ‘தம்பி உடையான்’ படத்தின் கதையை தயாரித்தேன். சாருஹாசன் சாரை அவரது வீட்டில் சென்று சந்தித்து கூறினேன். நான் ஒரு ஓவியர் என்பதால் என்னை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்படித்தான் பாரதிராஜாவுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பெரிதாக சம்பளம் எல்லாம் வேண்டாம். உங்களால் என்ன தர முடியுமோ கொடுங்கள் நான் நடித்து தருகிறேன் என்று கூறி சுதந்திர போராட்ட தியாகியாக அந்த படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.


இயக்குநர் பாரதிராஜா & நடிகர் சாருஹாசனுக்கு என்னை ஓவியராக மிகவும் பிடிக்கும் - ராஜா மகேஷ்

தஞ்சை பெரிய கோயில், ஆவுடையார் கோயில் போன்ற இடங்களில் கட்டிடங்களில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் இன்றும் பராமரிக்கப்படுகிறதா?

இப்போது கொஞ்சம் பராமரிக்கிறார்கள். இதற்கு முன்பாக பராமரிப்பு என்பது அவ்வளவாக இல்லை. கடவுள் மறுப்பு கொள்கை என்ற ஒன்று தலைதூக்கிய காலகட்டத்தில் பராமரிப்பு என்பது இல்லாமல் இருந்தது. தமிழர்கள் என்றாலே தூங்கி எழும்போதே சூரியனை கடவுளாக நினைத்து வழிபடக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களிடம் கடவுளே இல்லை என்று சொன்னால் அவன் என்ன செய்வான்? அவனுக்கு ஒரே குழப்பமும், சந்தேகமும் வந்துவிட்டது. அவனின் அந்த சந்தேகம் தீரவே 50 வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு பிறகுதான் ஆமாம் கடவுள் இருக்கிறார்; இது நம் கோயில், நம் கடவுள், நம் மண்ணு; இதை அழுக்கு ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வந்தது. இருந்தும் நிறைய கோயில்களை பராமரிக்காமல் இடித்துவிட்டார்கள். கோயில் என்பது ஒரு அற்புதமான இடம். அந்த பெரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும். நாம் இம்மண்ணில் இல்லாவிட்டாலும் அது காலங்கள் கடந்தும் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் கோயிலே போதும். நமது மதமும், மக்களும் எவ்வளவு அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு.

கோயில்களில் இடம் பெற்றுள்ள சிற்பங்களில் காமம் தொடர்பான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். அது சமூக வலைதளங்களில் வைரலாகவும் செய்கிறது. இதை ஒரு ஓவியராக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இன்றைக்கு இருப்பவர்களுக்கு அனைத்துமே தெரிகிறது. ஆனால், அன்று வாழ்ந்த மக்கள் வாழ்க்கை குறித்த புரிதலே இல்லாமல்தான் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ராஜா சொல்வதுதான் வேதவாக்கு. வேலை செய்வது, தூங்குவது இதை தாண்டி வேறு ஒன்றும் தெரியாது. அப்படி இருக்கும் போது இதுபோன்ற விஷயங்களை எப்படி சொல்லி கொடுப்பது என்றுதான் அன்று இது போன்ற ஓவியங்களை கோவில்களில் இடம்பெறச் செய்தார்கள். இது மட்டுமே கோயில்களில் இடம்பெறவில்லை. இன்னும் வரலாற்று சிறப்புமிக்க எத்தனையோ விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதை வடித்த சிற்பிகளிடம் கேட்டால் தெரியும் கோயில்களில் இருக்கும் சிற்பங்கள், ஓவியங்களில் வாழ்க்கைக்கு தகுந்த பாடத்தை புகட்டும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்று.


காமம் மட்டுமல்ல வரலாற்று சிறப்புமிக்க எத்தனையோ விஷயங்கள் கோயில் சிற்பங்களில் உள்ளன - ராஜா மகேஷ்

கடவுள்களை தாண்டி வேறு என்ன மாதிரியான விஷயங்களை எல்லாம் தஞ்சை ஓவியங்களில் கொண்டு வருகிறீர்கள்?

ஓவியர் ரவிவர்மாதான் லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் என்று அவரது ஸ்டைலில் கடவுள் ஓவியங்களை வரைந்தார். அதுதவிர எல்லா மாநிலங்களிலும் உள்ள கலாச்சாரம் சார்ந்த பெண்களையும் வரைந்தார். அவரை பின்பற்றி நாங்களும் நிறைய வரைகிறோம். மக்கள் எப்படி விரும்பி கேட்கிறார்களோ அதற்கு தகுந்த மாதிரியும் வரைந்து கொடுக்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்