15 நாட்களில் தமிழகத்தை சுற்றி வந்த துணிச்சல் பெண்!
தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட ராஜேந்திரன்-விஜயலட்சுமி தம்பதியின் மகளான ஜானவி (26), பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
பெண்கள் எல்லாத் துறைகளிலுமே ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளைப் புரிந்து, தங்களுக்குரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுக்கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட ராஜேந்திரன்-விஜயலட்சுமி தம்பதியின் மகளான ஜானவி (26), பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பதினைந்தே நாட்களில் தமிழகத்தை சுற்றி வலம் வந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது குறித்த விரிவான பதிவு பின்வருமாறு..
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சுற்றிவந்து சாதனை
தனி ஒரு பெண்ணாக தமிழ்நாடு முழுக்க வெறும் பதினைந்தே நாட்களில் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார் பைக்கர் ஜானவி. கடந்த மே 21ம் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்ட இவர், முதலில் ஆந்திராவின் காளஹஸ்தி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தன்னுடைய பஞ்சபூத தலங்களுக்கு செல்லும் பயணத்தை தொடங்கினார். அடுத்தக் கட்டமாக காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் என தமிழகத்தின் இன்னும் சில மிக முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பைக்கர் ஜானவி கோயில் மற்றும் சர்ச் முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம்
தொடர்ந்து தனுஷ்கோடி, கன்னியாகுமரி, கொடைக்கானல், கோத்தகிரி போன்ற பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு சென்ற பிறகு புதுச்சேரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி பாதையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் வலம் வந்து முடித்தார். மேலும் இவர் 3,698 கி.மீ. தூரத்தை வெறும் பதினைந்தே நாட்களில் சுற்றி வந்துள்ளார். இந்தப் பயணத்திற்காக பெட்ரோல், தங்குமிடம், உணவு உட்பட அதிகபட்சமாக 20,000 ரூபாய் செலவு செய்துள்ளார்.
தமிழகத்தை வலம் வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும்?
பொதுவாகவே நம்முடைய செயலோ அல்லது சாதனையோ எந்த ஒரு காரணமும் இன்றி துவங்கப்படுவதில்லை. அந்தவகையில் பைக்கர் ஜானவியின் இந்த சாதனைக்கு காரணமாக இருப்பது அவரது தந்தைதான். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பைக் ஓட்டுவதில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஜானவிக்கு பைக்கை முதன்முதலில் ஓட்டக் கற்றுக் கொடுத்ததே அவரது தந்தைதானாம். பைக் ஓட்டுவதை நன்றாகக் கற்றுத்தேர்ந்த பின்னர் ஒவ்வொரு இடமாக தனியாகவே பயணம் செய்து வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் ஜானவியின் தந்தை உடல்நலக் குறைவால் காலமானார். தந்தையின் இழப்பானது, ஜானவியை பெரியளவில் வாட்டியது. இந்நிலையில் இறந்த ஜானவியின் தந்தைக்கு ஒரு ஆசை இருந்திருக்கிறது. அது என்னவென்றால் தனது மகளை அழைத்துக்கொண்டு, தமிழகத்தில் உள்ள சில முக்கியமான கோயில்களை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்பதுதானாம். அதற்காக ஜானவி மிகவும் துணிச்சலுடன் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தார். தந்தை தம்மோடு இருப்பதாகவே கருதிக்கொண்டு அவரது இருசக்கர வாகனமான “சிடி 100” என்ற வாகனத்தில் இந்த பயணத்தை தொடங்கி, வெற்றிகரமாக தமிழகம் முழுவதையும் சுற்றி வலம் வந்து முடித்தார்.
தந்தையுடன் பைக்கர் ஜானவி
ஜானவியோடு நடத்திய உரையாடல்
ஜானவி ஒரு பைக் ரைடராக அவரது அனுபவத்தையும், அவரது தந்தை குறித்தும் பேசியது பின்வருமாறு...
ஒரு பைக்கராக எந்தெந்த இடங்களுக்கெல்லாம் நீங்கள் பயணம் செய்து இருக்கிறீர்கள்?
பெங்களூரில் நானும் என்னுடைய பைக்கர் நண்பர்களும் கூட்டமாக அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு பின் இடங்களை சுற்றிப்பார்ப்பது வழக்கம். மகாபலிபுரம், ஊட்டி, தனுஷ்கோடி போன்ற இடங்களுக்கெல்லாம் நாங்கள் சென்றிருக்கிறோம். நான் பல இடங்களுக்கு தனியாகவும் கூட பயணம் செய்துள்ளேன். ஹிமாச்சலம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மட்டுமன்றி நேபாளம் போன்ற இடங்களுக்கும் தனியாக பயணம் செய்தது எனக்கு நல்லதொரு அனுபவத்தைக் கொடுத்தது.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அழகான தருணம்
ஒரு பைக்கராக உங்களுக்கு எதிர்கால கனவுகள் ஏதேனும் இருக்கிறதா?
ஆம்! எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்னவென்றால் நமது இந்தியாவில் இருந்து மற்ற நாட்டிற்கு பைக் மூலமாகவே பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்டநாள் ஆசையாக இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக பெங்களூரில் இருந்து லண்டன் வரை சாலை வழியாக செல்ல வேண்டும் என்ற திட்டமும் இருக்கிறது.
நீங்கள் இதுவரையில் பயணித்த இடங்களிலேயே உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம் என்றால் அது எது?
என்னுடைய மனதுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் நெருக்கமான இடம் என்றால் அது உத்தரகாண்ட் தான். ஏனென்றால் அங்கு அதிகளவிலான கோயில்களும் அது சார்ந்த வழிபாட்டு தலங்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இயற்கையாகவும் சரி, தெய்வீக ரீதியாகவும் சரி, அது ஒரு நல்ல இடம் மற்றும் எனக்கு மிகவும் பிடித்தமான இடமும் கூட. அடுத்ததாக நமது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரி, தனுஷ்கோடி போன்ற இடங்கள் சிறப்பான இடங்களாகும்.
சுற்றுப்பயணங்களின் போது வித்தியாசமான இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
தமிழ்நாட்டை சுற்றி வந்த இந்த பயணத்தின் போது நீங்கள் சந்தித்த சிறந்த மனிதர்கள் என்று யாராவது இருக்கிறார்களா?
நிச்சயமாக இருக்கிறார்கள். நாகப்பட்டினம் அருகே நான் பயணம் செய்துகொண்டிருந்தபோது என்னை சிலர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர ஆரம்பித்தனர். நான் தொடர்ந்து என்னுடைய வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு ஒரு சின்ன கடை முன்பாக நிறுத்திவிட்டு ஜூஸ் குடித்தேன். அப்பொழுது அந்தக்கடையின் உரிமையாளர் அக்காவும், நானும் பேச்சை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் எனக்கு ஒன்று புரியவந்தது. இங்கு ஏராளமான பெண்கள் தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக இரவு நேரங்களிலும் கூட மிகவும் தைரியமாக கடைகளை நடத்தி வருகிறார்கள் என்று.
பயணத்தின் காலமான 15 நாட்களில் என்னென்ன மாதிரியான விஷயங்கள் உங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது?
நான் என்னுடைய பயணத்தை மே மாதத்தில் தொடங்கிய பொழுது வெயில் கடுமையாக இருந்தது, இருந்தாலும் கூட தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு ஜாக்கெட்டை அணிந்துகொண்டே வண்டியை ஓட்டியது கடினமாக இருந்தது. அடுத்ததாக கூகுள் மேப், நான் முழுவதுமாகவே கூகுள் மேப்பை நம்பிதான் எனது பயணத்தை துவங்கினேன். சில சமையங்களில் அது காட்டும் வழியானது தவறாகதான் இருக்கும். எனவே சரியான பாதையை கேட்டறிந்து செல்வதும் கூட சில நேரங்களில் சவாலாக இருந்தது.
பைக்கில் அமர்ந்தபடி ஜானவி எடுத்துக்கொண்ட புகைப்படம்
உங்களுடைய வாழ்வில் தந்தை எவ்வளவு முக்கியமானவராக இருந்தார்?
என்னால் நம்பவே முடியவில்லை, இப்பொழுதும் கூட என்னுடைய தந்தை என்னோடு இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அவர் என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான ஒருவர். நான் இப்பொழுதும் முழுமையாக நம்புகிறேன் அவர் என்னுடன் தான் இருக்கிறார் என்று. எனக்கு முதன்முதலாக இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்ததே எனது தந்தைதான், அடுத்ததாக நான் பைக் ரைடில் ஈடுபட ஆசைப்படுகிறேன் என்று கூறியபோதும் எனது தந்தை என்னுடைய விருப்பத்தை மதித்தார். எனக்கு அவர் எல்லாவிதத்திலும் மிகவும் உறுதுணையாக இருந்தார்.