முப்படை பெண் வீராங்கனைகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

நாட்டை பாதுகாக்கும் பெண் முப்படை வீராங்கனைகளுக்கு நேற்று (05.11.2023) இன்ப செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Update: 2023-11-06 12:30 GMT

ஆயுதப்படைகளில் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் விடுப்பில் சலுகைகள் வழங்கி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

உரிமையிலும் திறமையிலும் பணியிலும் ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்பதை பெண்கள் ஒவ்வொரு முறையும் நிருபித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் பணிபுரியும் அனைத்து துறைகளிலும் பெண்களும் தலை தூக்கி வருகின்றனர். குறிப்பாக நம் தேசத்தை காக்கும் முப்படைகளிலும் பெண்கள் தங்களின் பெரும் பங்கை ஆற்றி வருகின்றனர்.

இப்படி தாயகத்திற்கு பணிபுரியும் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆயுதபடையில் பணிபுரியும் பெண்கள், பெண் மாலுமிகள் மற்றும் பெண் விமானப்படை வீராங்கனை அனைவருக்கும் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை தத்தெடுப்பு ஆகியவை தொடர்பாக விடுப்பு அளிக்கப்படவுள்ள முன்மொழிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விடுப்பானது முப்படையிலிருக்கும் அனைத்து பெண் அதிகாரிகளுக்கும், வெவ்வேறு பதவியில் இருக்கும் பெண்களுக்கும் எந்த ஒரு வேறுபாடின்றி சமமாக அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் கூறுகையில், “இந்த அறிவிப்பானது ராணுவத்தில் பெண்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துவதோடு தொழில்முறை மற்றும் குடும்ப வாழ்க்கையை சிறந்த முறையில் சமநிலைப்படுத்துவதற்கும் உதவும்” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பெண்களின் பங்கானது அதிகரித்துள்ளது என்றும் இந்த விடுப்பு அறிவிப்பானது இன்னும் பல பெண்களை ராணுவத்தில் ஈடுபடுத்தும் என்றும் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படி பெண்களுக்கு ஊக்கமளிக்கும் விஷயங்களை கொண்டு வருவதன் மூலம் பெண் வீராங்கனைகள் அதிகரிப்பதோடு நமது நாட்டின் நிலம், கடல் மற்றும் வான் எல்லைகளை பாதுகாப்பதில் பெண்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்தி முதலியவை ஆயுதப்படைகளுக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


விடுப்பு தகவல்கள்:

இந்த அறிக்கையில் முப்படைகளில் பணிபுரியும் பெண் அலுவலர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பும், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ஊதியம் இல்லாமல் ஒரு மாத விடுப்பு நீட்டிக்கப்பட்டும், கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஏற்பட்டால் 30 நாட்கள் விடுப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால், பெண் அதிகாரிகள் 180 நாட்கள் விடுமுறைக்கு தகுதியுடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நிரந்தர கமிஷன் பெண் அதிகாரிகளுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறையாக 360 நாட்கள் நாட்களும், குறுகிய சேவை கமிஷன் பெண்களுக்கு 180 நாட்கள் விடுமுறை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்