ஷாருக்கான் முதல் ரஜினிகாந்த் வரை எல்லோர் வீட்டிலும் என் கலை படைப்பு இருக்கிறது - மினியேச்சர் ஆர்டிஸ்ட் ஸ்ரீ ஹரி

பிறந்தநாள், திருமணம், குழந்தை பேறு, பாராட்டு விழா, காதலை வெளிப்படுத்தும் தருணம் என இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் இருக்கின்றன.

Update:2024-06-18 00:00 IST
Click the Play button to listen to article

பிறந்தநாள், திருமணம், குழந்தை பேறு, பாராட்டு விழா, காதலை வெளிப்படுத்தும் தருணம் என இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் நாம் தயாராகும்போது கண்டிப்பாக கையில் பரிசுப்பொருட்களுடன் செல்வது வழக்கமாக இருக்கும். அப்படி நாம் செல்வதற்கு முன்பாக என்ன மாதிரியான பரிசு பொருட்களை வாங்கிச் செல்வது என்பதில் எல்லோருக்கும் ஒரு குழப்பமான மனநிலை இருக்கும். ஒருவழியாக தேடி அலைந்து டெடி பியர், புதிய ஆடை, கீச்செயின், வால் கிளாக் என்று ஏதோ ஒன்றை பரிசாக வழங்குவோம். அப்படி இன்று நாம் எத்தனையோ பரிசுப்பொருட்களை வழங்கியிருந்தாலும் அத்தனையுமே நமது பரிசை பெற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா என்றால் நிச்சயம் தெரியாது. ஆனால், அதே நாம் பரிசளிக்க விரும்புபவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அவர்களையோ அல்லது அவர்களுக்கு பிடித்த தலைவர்களையோ, கடவுள்களையோ குட்டி மினியேச்சர் பொம்மையாக வழங்கும்போது அது அவர்களை நிச்சயம் சந்தோஷப்படுத்த வாய்ப்புள்ளது. அந்த வகையில், பார்வையாளர்களை அதிகம் கவரக்கூடிய மினியேச்சர் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் ஸ்ரீ ஹரி என்பவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலை இந்த தொகுப்பில் காணலாம்.

மினியேச்சர் பொம்மைகளை உருவாக்குவதற்கான ஐடியா எங்கிருந்து வந்தது? எப்படி ஆரம்பித்தீர்கள்?

சிறு வயதில் இருந்தே வரைவது தொடர்பான விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். பள்ளிகளில் படிக்கும் காலங்களில் ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தவறாது கலந்து கொள்வேன். அதே போன்று கல்லூரியில் கம்ப்யூட்டர் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து ஒருபுறம் படித்துக்கொண்டே மற்றொருபுறம் ஃப்ரீலான்ஸராக நிறைய வாடிக்கையாளர்களுக்கு வெப்சைட் டிசைனிங் உள்ளிட்டவற்றை செய்து கொண்டிருந்தேன். அப்படி என்னிடம் வந்த ஒரு கிளையன்ட் அதாவது வாடிக்கையாளர் மூலமாக கல்லிலேயே ஏதாவது ஒரு உருவத்தை உருவாக்கும் வாய்ப்பு வந்தது. அதனை முயற்சி செய்து பார்ப்போம் என்றுதான் தொடங்கினேன். பிறகு கல்லில் செய்வதை பரிசாக வழங்குவது சிரமமாக இருக்குமே என்று மரத்தில் செய்ய ஆரம்பித்தோம். நன்றாக வந்திருந்தது. அதனை சோஷியல் மீடியாக்களில் போட்டபோது அடுத்த நாளே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று புதிய முயற்சிகளை மேற்கொண்டு இன்று இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளோம். எங்களது இந்த படைப்புகள் 2014-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றன.


செராமிக் மெட்டீரியலில் உருவாக்கப்பட்டுள்ள பொம்மைகள் 

இந்த பொம்மைகளை உருவாக்க இன்ஞ்செஸ் எப்படி முடிவு செய்கிறீர்கள்? அதெற்கென்று ஏதும் அளவுகோல் இருக்கிறதா?

4 இன்ஞ்செஸ் என்ற அளவில் இருந்துதான் தொடங்குகிறோம். போக போக 5 இன்ஞ்செஸ், 6 இன்ஞ்செஸ் வரை செய்வோம். பொம்மைகளின் ஸைசிற்கு ஏற்ப மெட்டீரியலை முடிவு செய்வோம். செராமிக் பொம்மைகளாக இருந்தால் அதிகபட்சமாக ஒரு அடி வரை மட்டுமே செய்ய முடியும். அதற்குமேல் சென்றால் அந்த பொம்மைகளில் விரிசல் விழும். அப்படி ஒரு அடிக்கு மேலே சென்றால் பாலி டிசைன் மெட்டீரியல்ஸ் பயன்படுத்தி செய்வோம். அதற்காக முதலில் 3D-யில் மாடல் உருவாக்கி, பிறகு பிரிண்ட் எடுத்து பெயிண்ட் செய்வோம்.

ஒரு மினியேச்சரை உருவாக்க அதிகபட்சமாக எவ்வளவு நேரம் எடுக்கும்?

மெட்டீரியலை பொறுத்து மாறுபடும். சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றால் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் தேவைப்படும். அதுவும் 3D பிரிண்டாக இருந்தால் மட்டுமே இந்த நாட்கள் ஆகும். அதே செராமிக் ஹேண்ட்மேட் என்றால் குறைந்தது 5 வாரங்களாவது வேண்டும். செராமிக்கை பொறுத்தவரை, உருவாக்குவதற்கான நேரம் அதிகம் தேவைப்படும்.

மினியேச்சருக்கு பயன்படுத்தக்கூடிய கலர்ஸ் அதாவது நிறங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

செராமிக் மெட்டீரியலுக்கான கலரை நாங்களே தயாரிக்கிறோம். அதற்கென்று தனியாக ஏதும் கலர் வாங்கி நாங்கள் பயன்படுத்துவது இல்லை. 3D மெட்டீரியலுக்கு எல்லோரும் பயன்படுத்தக்கூடிய அக்ரலிக் பெயிண்ட் பயன்படுத்துகிறோம்.


வீடுகளை அலங்கரிக்கும் ஸ்ரீ ஹரியின் மினியேச்சர் பொம்மைகள் 

கம்ப்யூட்டர் இன்ஜினியராக தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றிவிட்டு, இந்த துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றினாலும், மினியேச்சர் உருவாக்குவதையும் ஒருபுறம் செய்து கொண்டுதான் இருந்தேன். ஒரு கட்டத்தில் இரண்டையும் கவனிக்க சிரமமாக இருந்ததால் வேலையை விட்டுவிட்டு முழுநேரம் இதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன் என்பது எனது பெற்றோருக்கு தெரியாது. நான் அளித்திருந்த நேர்காணலை பார்த்த பிறகுதான் ஏன் வேலையை விட்ட என்ற கேள்வி வந்தது. அது எல்லோருடைய பெற்றோருக்கும் இருக்கும் ஒரு பயம்தான். அதிலும் அப்பா ஏதும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னை மேலும் ஊக்கப்படுத்தினார். அம்மாவுக்கு மட்டும் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இதில் இருந்தும் வருமானம் வருகிறது என்றவுடன் சமாதானம் ஆகிவிட்டார். இப்பொழுது நிறைய ஆர்டர்கள் வந்தால் அவர்கள்தான் முன்னின்று பேக்கிங் செய்வது போன்ற உதவிகளை அலுவலகத்திற்கு வந்து செய்து கொடுக்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள் யாராவது உங்களிடம் நேரடியாக வந்து ஆர்டர்ஸ் கொடுத்து இருக்கிறார்களா?

நடிகை ஆர்த்தி நேரடியாக வந்திருக்கிறார். மற்றபடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுபவர்கள்தான் அதிகம். சில நாட்களுக்கு முன்பு கூட நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சார் எங்களை தொடர்புகொண்டு, அவரின் டீன்ஸ் படத்தில் எல்லா கதாபாத்திரங்களின் மினியேச்சரும் வேண்டும் என்று கேட்டிருந்தார். நாங்களும் அவை அனைத்தையும் செய்து கொடுத்தோம். நாங்கள் செய்த மினியேச்சர் ஷாருக்கான், சச்சின், சிவகார்த்திகேயன், குஷ்பூ, ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகளில் இருக்கிறது. ஒருசில நட்சத்திரங்கள் எங்களிடம் நேரிடையாக கேட்டு, நாங்களும் கொடுத்து இருக்கிறோம். சில நேரங்களில் அவர்களின் ரசிகர்கள் எங்களிடம் வாங்கி கொடுத்தும் இருக்கிறார்கள். இதுதவிர சூர்யா, விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களின் மினியேச்சர்களும் செய்துகொடுத்திருக்கிறோம்.


 மினியேச்சரில் உருவாக்கப்பட்டுள்ள காலை உணவுகள் மற்றும் காய்ந்த இலையில் ஒருவரின் உருவம் 

கீ-செயின்ஸும் செய்கிறீர்கள். என்ன மாதிரியான மெட்டீரியல்களில் செய்து கொடுக்கிறீர்கள்?

கீ-செயின்ஸ் மூன்று மெட்டீரியல்களில் இருக்கிறது. ஒன்னு பிராஸ், இரண்டு பிளாஸ்டிக், மூன்று ரப்பர். பிராஸில் பெயர் மற்றும் சிக்னேச்சர் கொண்டு கீ-செயின் செய்கிறோம். இதுதவிர மொத்த ஆர்டராக இருந்தால் அதாவது ஒரு 500 பீஸ் கேட்கிறார்கள் என்றால் சிலிகான் கொண்டும் கீ-செயின்ஸ் செய்து கொடுக்கிறோம்.

இதுபோன்ற தொழில்களுக்கு அரசு தரப்பில் இருந்து ஏதேனும் வங்கி கடன்கள் கிடைக்கிறதா?

தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக தமிழக அரசு சார்பில் முத்ரா லோன் வழங்கப்படுகிறது. தொழிலில் நாம் காட்டும் டர்ன் ஓவரை பார்த்து குறைந்தது மூன்று லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 10 லட்சம் வரை லோன் தருகிறார்கள். சரியான வழிகாட்டுதல்களுடன் ஒரு தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு பணம் பிரச்சினை இல்லை. பண உதவிகள் பெற இப்போது நிறைய வழிகள் உள்ளன.


செராமிக் மற்றும் 3டி பிரிண்டில் உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள் 

அரசியல் கட்சி தலைவர்களுக்கு மினியேச்சர் செய்து கொடுத்து இருக்கிறீர்களா? அவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டு?

நிறைய பேருக்கு செய்து கொடுத்து இருக்கிறோம். உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, சீமான், விஜயகாந்த், வைகோ போன்ற பல தலைவர்களுக்கு செய்து கொடுத்து இருக்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்