வித்தியாசமான டேஸ்டியான இறாலை சுவைக்க விருப்பமா? இப்படி ஒருமுறை செய்து பாருங்க!
அசைவ பிரியர்களால் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் இறாலும் முக்கியமான ஒன்று. இறாலை கொண்டு நம் விருப்பத்திற்கு ஏற்ப எத்தனை வகையான ரெசிபிக்களை வேண்டுமானாலும் செய்யலாம்.;
அசைவ பிரியர்களால் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் இறாலும் முக்கியமான ஒன்று. இறாலை கொண்டு நம் விருப்பத்திற்கு ஏற்ப எத்தனை வகையான ரெசிபிக்களை வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இறால் தொக்கு, இறால் மிளகு வறுவல், இறால் கிரேவி இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த இறால் ரெசிபிக்கள் ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், கிராமங்கள் என்று அவரவர் உணவு செய்முறைகளுக்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில், இன்று நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் நாம் காண இருப்பது கேரள ஸ்பெஷலான "இறால் கூன் உலர்த்தியது". அதென்ன கேள்விப்படாத ரெசிபியாக இருக்கிறதே என்று நம்மில் பலருக்கும் தோன்றலாம். ஆனால், சமைக்கும் போதே நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த ரெசிபியை ஹோட்டல் ஸ்டைலில் வீட்டில் எளிமையாக செய்து அசத்துவது எப்படி? என்பதை நமக்கு செய்து காட்டுகிறார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம்.
இறால் கூன் உலர்த்தியது செய்முறை
அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடானதும் தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகத்தை வெடிக்கவிட்டு மேலாக கொஞ்சம் இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் பொடி பொடியாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி அதனுடன் தேவைக்கு ஏற்ப மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியுடன் இறால் போட்டு வதக்குதல்
இதற்கு பிறகு, தக்காளி மற்றும் கழுவி வைக்கப்பட்டுள்ள இறாலை சேர்த்து 2 நிமிடம் கிளறிவிட்டு, மேற்கொண்டு சீரகத்தூள், உப்பு, கருவேப்பிலை, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
இறாலை வெகுநேரம் வேகவிட்டால் இறப்பர் போன்று ஆகிவிடும் என்பதால் சிறிதுநேரம் வதக்கினால் போதுமானது.
இப்போது மசாலாக்களின் பச்சை வாசனை போனதும் மேலாக காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் தூவி கிளறிவிட்டு, சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வீடே மணக்கும் கேரள ஸ்பெஷல் இறால் கூன் உலர்த்தியது ரெடி.
தயார் நிலையில் இறால் கூன் உலர்த்தியது
இதை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் சமைத்து சுவைத்து பாருங்கள். வெள்ளை சாதம், ரசம் சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இறால் கூன் உலர்த்தியது என்றால் என்ன?
இறாலில் கால்சியம், அயோடின், புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. இறால்களை எடுத்து நன்கு கழுவி, வெயிலில் உலர வைத்தால், அவை நன்கு உலர்ந்த பிறகு சுருங்கி கூனி போல மாறும். அதைத்தான் இறால் கூன் உலர்த்தியது என்று சொல்கிறார்கள்.