மழை பாதிப்புகளை தவிர்க்க இதை பின்பற்றுங்கள் - வானிலை முன்னறிவிப்பாளர் ரமணன்

மனிதனின் வாழ்க்கையை கணித்தாலும் இயற்கையின் செயல்களை கணிக்க முடிவதில்லை.

Update:2023-12-26 00:00 IST
Click the Play button to listen to article

மனிதனின் வாழ்க்கையை கணித்தாலும் இயற்கையின் செயல்களை கணிக்க முடிவதில்லை. இயற்கையில் ஒன்றான மழை. மழையாக பெய்யும் வரைதான் மகிழ்ச்சி. அதுவே அது பேய் மழையாக பெய்தால் பெரும் பாதிப்பு. சில ஆண்டுகளுக்கு முன்புவரை மழை பெய்தால் மண்மனம் குளிர்ந்ததோ இல்லையோ மாணவர்களின் மனம் குளிர்ந்ததற்கு காரணம் அந்த ஒற்றை மனிதர்தான். அவர் வேறு யாரும் அல்ல 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட், ஒரு கட்டத்தில் மாணவர்களால் கடவுள் என்றே அழைக்கப்பட்ட ஒரே மனிதர் வானிலை முன்னறிவிப்பாளர் ரமணனாக மட்டும்தான் இருக்க முடியும். அவர் தற்போதைய மழை பாதிப்பு குறித்து வழங்கிய சிறு பேட்டியை இங்கு கட்டுரையாக காணலாம்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக அதிக அளவு மழை பதிவாகி வெள்ளம் புரண்டோடும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில், வரும் ஆண்டில் வானிலை எப்படி காணப்படும்?

பொதுவாகவே வானிலை நிலையை 10 நாட்களுக்கு முன்னர்தான் கணிக்க முடியும். 5 நாட்களுக்கு முன்னர் விமர்சிக்க முடியும். ஆனால், கடும் வானிலை நிலை எப்போது வேண்டுமானாலும் ஏற்பட்டு வறட்சி, புயல், வெள்ளம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

முன்பெல்லாம் 10, 15 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் பேரிடரானது தற்போது 5, 6 வருடங்களில் வெவ்வேறு பெயர்களில் வருகின்றது. இது குறித்து உங்கள் கருத்தென்ன?

தற்போது மக்களிடையே விழிப்புணர்வானது அதிகரித்துவிட்டது. காலநிலை ஆர்வலர்களும் அதிகரித்துவிட்டனர். முன்பெல்லாம் வானிலை அறிக்கையில் அறிவித்தாலும் கூட மக்கள் அது குறித்து யோசிக்க மாட்டார்கள். ஆனால், இன்றைய சூழலில் புயல் உருவானால், அதற்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது? அது எங்கு உருவாகியுள்ளது? எங்கு கடக்கிறது? என்று பல்வேறு விதமான தகவல்களை ஆராய்ந்து பார்க்கின்றனர். சிலர் புயலின் பெயர் குறித்து ஆராய்ச்சியும் செய்கின்றனர்.

புயலின் பெயர்கள் எதன் அடிப்படையில் வைக்கப்படுகின்றன?


ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் உறுப்பு நாடுகள் பட்டியல்

புயல் ஏற்பட்ட ஆண்டுகளை சொன்னால் மக்களுக்கு நினைவில் இருக்காது என்பதாலேயே புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கம் தொடங்கியது. இதை முதன்முதலில் அமெரிக்கர்கள்தான் தொடங்கினார்கள். குறிப்பாக புயலுக்கு பெண்கள் பெயர்களை வைத்தார்கள். 70களில் பெண்கள் இயக்கத்தை சேர்ந்த பல பெண்கள் இதை வன்மையாக கண்டித்தார்கள். அதற்கு பின்னர் புயலுக்கு ஆண், பெண் என்று இருவரின் பெயர்களை மாறி மாறி வைத்தனர். குறிப்பாக வலுவான புயலாக இருந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தால் மீண்டும் அப்பெயரை பயன்படுத்தமாட்டார்கள். இந்தியாவில் இதுகுறித்து கருத்தில் கொள்ளவில்லை என்றாலும் உலக வானிலை கழகத்தால் புயலுக்கு கட்டாயம் பெயரை பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. அப்போது 2004 இல் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCAP) என்ற ஆணையத்தின் கீழ் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், மாலத்தீவுகள் என்று பல ஆசிய நாடுகள் உறுப்பினர்களாக இருந்து புயலின் பெயர் பட்டியலானது உருவாக்கப்பட்டது. தற்போது ஈரான், ஏமன், ஓமன் என்று பல நாடுகளும் இவ்வாணையத்தில் இணைந்துள்ளன. இப்படி ஒவ்வொரு நாடும் வழங்கிய பெயர்கள், நாட்டின் அகரவரிசைப்படி ஒவ்வொரு புயலுக்கும் வைக்கப்படுகிறது. அப்படி பார்க்கையில் வங்காளதேசம் முதல் நாடாகவும் ஏமன் நாடு பட்டியலின் இறுதி நாடாகவும் இருக்கிறது. இந்த பட்டியல் முடிந்தவுடன் மீண்டும் வங்காளதேசம் வழங்கும் பெயரில் இருந்து தொடங்கும். பல நாடுகள் அளித்த புயலின் பெயரை தெரிந்துகொள்ள வட இந்திய புயலின் பெயர் பட்டியல் என்று வலைத்தளத்தில் தேடினாலே புயல் வருவதற்கு முன்னரே புயலின் பெயரை தெரிந்து கொள்ளலாம்.

புயல் முன்னேற்பாடு நடவடிக்கை ஆலோசனைகள் வழங்கும் முறைகள் என்ன?

பிராந்திய சிறப்பு வானிலை மையம் (RSMC) என்று சொல்லக்கூடிய சிறப்பு வானிலை மையம் இருக்கிறது. இந்தியாவில் இது வானிலை தலைமையகமாக விளங்கும் புது டெல்லியில் அமைந்திருக்கிறது. அதேபோல ஜப்பான் நாட்டில் ஏற்படும் டைபூனின் டைபூன் குழு தலைமையகம் டோக்கியோவில் உள்ளது. தெற்கு இந்திய பெருங்கடலிலுள்ள மொசாம்பிக், மடகாஸ்கர், லா ரீயூனியன், மொரீஷியஸ் ஆகிய பகுதிகளுக்கு ஒரு தலைமையகம் உள்ளது. இந்த RSMC அமைப்பானது புயல் உருவாகும் சாத்தியக்கூறுகளை அறிந்தவுடன் உடனடியாக அண்டை நாடுகளுக்கு தகவல்களை தெரிவித்து விடும். இந்த தலைமையகத்திலிருந்து அந்நாட்டின் மற்ற வானிலை மையங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும். முன்பெல்லாம் 48 அல்லது 24 மணி நேரத்திற்கு முன்னர்தான் எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் இப்போது புயல் உருவான உடனே உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகிறது. அறிவிப்புகள், எச்சரிக்கைகள் இல்லாவிட்டாலும் RSMC இணையதளத்தில் புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

புயல் வலுபெறுவதற்கும், வலுபெறாமல் போவதற்குமான காரணங்கள் என்ன?


புயல் எப்படி உருவாகிறது என்பதை காட்டும் வரைபடம் 

வலுவாக ஏற்படும் புயலில்தான் கண் பகுதி இருக்கும். எல்லா புயலிலும் கண் பகுதி வராது. கண் பகுதியை ஒட்டி இருக்கும் பகுதி சுவர் முகில் பகுதியாகும். அப்பகுதியில்தான் வேகமானது மிக உயரமாக இருக்கும். அங்குதான் பெருங்காற்று வீசும், பெரும் மழை பெய்யும், காற்றின் வேகம் மணிக்கு 63 கிலோமீட்டருக்கு மேல் சென்றால் அது புயலாக அறிவிக்கப்படும். வெளியில் காணப்படும் சுழலும் மேகத் தொகுப்பு பகுதியிலும் மழை இருக்கும். புயல் உருவாக கடலின் வெப்பம் 26.5° சென்டிகிரேடுக்கு அதிகமாக இருக்கும். காற்று முறிவு குறைவாக இருக்கும். காற்று முறிவு என்பது மேலடுக்கில் ஒவ்வொரு திசையிலும் காற்று வீசிக் கொண்டே இருக்கும். எதிரெதிர் திசையில் காற்று வீசுவதால் செங்குத்தான அமைப்பு கிடைக்காமல் சரிந்துவிடும். அப்படியான முறிவு ஏற்படக்கூடாது. புயலானது நிலநடுக்கோடு மேற்பகுதியில்தான் உருவாகும். நிலநடுக்கோட்டில் பூமி நிலை சுழற்சி காரணமாக கோரியோலிஸ் என்ற விசை ஏற்படும். அது அங்கு இருக்காது. அது நிலநடுக்கோட்டிலன் 5° மேல் நகர நகரத்தான் அந்த விசை கிடைக்கும். அந்த விசை அதிகரிக்க அதிகரிக்க சுழற்சியாக வளரும். தரைமட்டத்தில் சராசரியாக 100 முதல் 1000 கிலோமீட்டர் நீளம் இருக்கும். மேலும் இந்த மொத்த அமைப்பே ஒரு நாளைக்கு சராசரியாக 300 கிலோமீட்டர் தூரம்தான் நகரும். சில சமயத்தில் அதைவிட குறைவான தூரத்தில் கூட நகரும். அப்படி பார்க்கையில் சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நகர்ந்து சென்றதை கூறலாம். அது எந்த அளவுக்கு பொறுமையாக நகர்ந்து செல்கிறதோ அந்த அளவுக்கு பாதிப்பானது அதிகமாக இருக்கும். இது திடப்பொருள் அல்ல. இது சுழற்சி முறையில் நகரும்போது கீழ் இருக்கும் நீராவியை எடுத்துக்கொண்டு மேகங்களாக மாறி மழையை தருகின்றது. மேலடுக்கில் வீசும் காற்றானதுதான் புயலை நகர்த்தும். சமீபத்தில் அந்தமான் கடற்பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் முதலில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரா கடற்கரையில் கரையை கடந்தது.

புயல் உருவாகியிருக்கிறது என்பதை வானிலை முன்னறிவிப்பாளரான நீங்கள்தான் முதலில் கண்டறிவீர்கள். இது தெரிந்தவுடன் நீங்கள் உங்களை எப்படி தயார் செய்து கொள்வீர்கள்?

புயல், மழை என்று எதுவாக இருந்தாலும் அலுவலகம்தான். அதுவும் மழை தாழ்வு மண்டலமாக மாறுகிறது என்றாலே அலுவலகத்திற்கு சென்றுவிட்டு புயல் கடந்தவுடன்தான் வீட்டுக்கு செல்வேன். புயல் குறித்த விவரங்களை செய்தியாளர்களுக்கு, ஊடகங்களுக்கு, அச்சு ஊடகங்களுக்கு, அரசு அலுவலகங்களுக்கு, ஆட்சியர்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிப்பதே முக்கிய பணியாக இருக்கும். அடுத்து புயல் எங்கு நகர்கிறது, காற்று எந்த அளவில் வீசுகிறது என்று வரும் வரைபடங்களை பகுப்பாய்வு செய்து மற்ற வானிலை அறிவிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு அறிக்கை தயாரிப்பதுண்டு. அறிக்கை என்பது தனி நபருடைய அறிக்கை அல்ல. அது ஒரு துறையின் கலந்துரையாடலுக்கு பிறகு அறிவிக்கப்படும் அறிக்கையாகும்.

எல் நினோ, லா நினா என்றால் என்ன?


எல் நினோ, லா நினாவின் பயணமும் அதனால் ஏற்படும் பாதிப்பும் 

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் இயல்பு நிலையை காட்டிலும் அதிக வெப்பநிலை உருவாகுவது. லா நினா என்பது இயல்பு மற்றும் இயல்பு நிலையை விட குறைவாக ஏற்படும் வெப்பநிலை ஆகும். எல் நினோவும், லா நினாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இதை வைத்தே இந்த வருடம் வறட்சியா அல்லது மழையா என்பதை கணித்திட முடியும். இந்தியாவை பொறுத்தவரை புள்ளியல் ரீதியாக பார்க்கையில் எல் நினோ காலக்கட்டத்தில் பெரும்பாலும் இயல்பு மற்றும் இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இயல்பு நிலை என்பது 19 விழுக்காடு அல்லது 19 விழுக்காட்டின் கீழ் இருந்தால் அது இயல்பு நிலை. அதுவே 19 விழுக்காடை தாண்டி 20 விழுக்காடுக்கு சென்றால் அது இயல்புக்கு எஞ்சிய நிலையாகும்.

சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயலில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. சென்னையில் இதே அளவில் மழை பதிவாகி இருந்தால் பாதி சென்னை மூழ்க்கியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மைதானா?


2023-ல் மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 

சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் ஒரு சில பகுதியில் 90 மற்றும் 85 சதவிகித மழை பெய்துள்ளது. ஆனால், அப்பகுதியில் அவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கு காரணம் தென்மேற்கு பருவ காலகட்டத்தில் இயல்பாகவே பல நாட்களில் 50, 40 சென்டிமீட்டர் மழை பெய்வது சாதாரண விஷயம். எனவே அது அங்கு பெரும் பாதிப்பாக இருக்காது. நாமும் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் அதிக பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால், 95% மழை பெய்திருந்தால் நிச்சயம் சென்னை பகுதியானது மூழ்கியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீர் வெளியேறுவதற்கான போதிய இடம் இங்கில்லை என்பதே பாதிப்பிற்கான காரணம். இதை தவிர்க்க, கட்டிய கட்டிடங்களை இடிக்க முடியாது. ஆனால், அதற்கு மாறாக பெரிய பெரிய கட்டிட குடியிருப்பில் ஒரு குளத்தை உருவாக்கலாம். மேலும் கழிவுநீரை சுத்திகரித்து அதை குளத்தில் விட்டுவிட வேண்டும். அப்போது நிலத்தடி நீரானது பாதுகாப்பாக இருக்கும். இப்படி கல்லூரி, அலுவலகம் என்று பல இடங்களில் செய்வதன் மூலம் மழை பெய்தால் தண்ணீரானது தங்காது. வெயில் காலங்களில் தண்ணீர் பிரச்சினையும் இருக்காது. இது தவிர கட்டிடங்கள் அமைக்கும்போது சிமெண்ட் பயன்படுத்தாமல் முடிந்தவரை நடைபாதை கல் (Paved Stone) போட்டு புல் வளர்ப்பது போன்றவற்றை செய்தால் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பை போல் கிராமங்களில் மீண்டும் பெருமளவில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

தென் மாவட்டம் மற்றும் கிராமங்களில் பெரிய ஊரணி, கால்வாய், குளம், ஏரி, குட்டை போன்றவை இருந்தால் நிச்சயம் பாதிப்பிருக்காது. ஆனால், கண்டிப்பாக பயிர் பாதிப்படையும். அதை எதுவும் செய்ய முடியாது. பயிர்களை இழந்தவர்கள் அதற்கான உரிய காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்வதே ஒரே வழி.

Tags:    

மேலும் செய்திகள்