குடும்பம், குழந்தைகளை கவனித்துக்கொண்டே ஏதேனும் ஒரு சிறுதொழிலில் பெண்கள் சாதிக்கலாம் - தொழிலதிபர் மாலதி

நான் ஒரு ஹவுஸ்ஃபைவாக இருந்து கேட்டரிங் பிசினஸில் இறங்கினேன். ஒவ்வொரு முயற்சியையும் கஷ்டத்தையும் நானாகத்தான் கடந்து கொண்டிருக்கிறேன். எல்லாரும் பிசினஸ் என்றாலே கடினம் என்று நினைப்பார்கள். ஆனால் இது அவ்வளவு கடினமல்ல; சுலபம்தான்

Update: 2024-09-23 18:30 GMT
Click the Play button to listen to article

சொந்த வீட்டிலிருப்பவர்களாலேயே பல பெண்கள் மதிக்கப்படுவதில்லை. அதற்கு காரணம், தங்களுடைய அடிப்படை தேவைகளுக்குக்கூட பிறரை சார்ந்திருப்பதுதான். குறிப்பாக, கணவரால் பல பெண்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறார்கள். அதுபோன்ற பெண்களுக்கு கட்டாயம் தன்னுடைய தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதற்காவது சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் என்ன தொழில் செய்வது? எப்படி செய்வது? என்பதுபோன்ற பல குழப்பங்களும் கேள்விகளும் இருக்கும். குடும்பம் மற்றும் குழந்தைகளை பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை இருக்கும் பெண்கள்கூட ஏதேனும் ஒரு சிறுதொழில் தொடங்கி சாதிக்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலபதிபர் மாலதி கருணாகரன். கேட்டரிங் பிசினஸ் ஆரம்பித்து, ஈவென்ட் மேனேஜ்மென்ட், ஏற்றுமதி என பலதரப்பட்ட பிசினஸ்களை உலகளவில் வெற்றிகரமாக செய்துவரும் இவர் தன்னுடைய வெற்றிக்கான சூட்சுமத்தை நம்முடன் பகிர்கிறார்.

பிசினஸில் உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார்?

என்னுடைய அப்பா. எங்களுடைய சிறிய வயதில் எங்களை வளர்க்க அப்பா மிகவும் கஷ்டப்பட்டார். அப்பாவை பெரும்பாலும் பார்க்கவே மாட்டோம். பல்வேறு பிசினஸ் மற்றும் வேலைநிமித்தமாக ஓடிக்கொண்டே இருப்பார். ஆனால் அம்மாவுக்கு நாங்கள் நன்றாக படிக்கவேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். ஆரம்பத்தில் நாங்கள் ஒரு சாதாரண மெட்ரிக் பள்ளியில்தான் படித்தோம். அந்த சமயத்தில் நாங்கள் வசித்துவந்த பகுதியில் ஒரு சிபிஎஸ்சி பள்ளியை திறந்தார்கள். அம்மாவுக்கு அந்த பள்ளியில் எப்படியாவது எங்களை சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. வீட்டில் பண கஷ்டம் இருந்தபோதும் ஒருவழியாக மூன்று பேரையுமே அந்த பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அந்த சிலபஸ் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. மேலும் அம்மா 6ஆம் வகுப்பு, அப்பா 5ஆம் வகுப்புதான் படித்திருந்த காரணத்தால் அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. ஆனால் எங்களுடைய பள்ளியில் ஆங்கிலம்தான் பேசவேண்டும். அப்படியிருந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாக அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு திருமணம் செய்துவைத்தார்கள். 


பெண்கள் ஏதேனும் ஒரு சிறுதொழில் தொடங்கி சாதிக்கலாம் - மாலதி

ஆனால் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே எதை பார்த்தாலும் அதை பிசினஸ் கோணத்தில் யோசித்துதான் அப்பா பேசுவார். திருமணமாகி சென்றபிறகும் என்னுடைய மனதில் எப்படியாவது பிசினஸ் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக, 0 செலவில் எப்படி பிசினஸ் செய்வது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதுதான் என்னை ஒரு தொழிலதிபராக உருவாக்கியிருக்கிறது. 

இல்லத்தரசியாக இருக்கும் பலர் எப்படியாவது ஒரு சமுதாயத்தில் சாதித்துக்காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இப்போது நிறையப்பெண்கள் நம்முடைய வாழ்க்கை இவ்வளவுதானா என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாசிட்டிவாக நினைக்கவேண்டும். நான் எப்போதும் நெகட்டிவாக யோசிக்கவேமாட்டேன். நிறையப்பேர் எனக்கு குடும்ப பின்னணி பலம் இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் இன்று நான் பயன்படுத்தும் கார் முதற்கொண்டு என்னிடம் இருக்கும் அனைத்துமே என்னுடைய பணத்தில் வாங்கியதுதான். கூகுளில் தேடினாலே நிறைய பிசினஸ் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். யாரும் வீட்டில் முடங்கி இருக்கவேண்டுமென்ற அவசியமே இல்லை. ஆயிரங்களில்தான் சம்பாதிக்க முடியும் என்றில்லாமல் லட்சங்களில்கூட வருமானம் ஈட்ட வழிகள் இருக்கின்றன. எனக்கும் என் அப்பாவை போன்றே பலதரப்பட்ட தொழில் செய்யவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. முதலில் கேட்டரிங் பிசினஸ் தொடங்கியிருந்தாலும், இப்போது ஏற்றுமதி பிசினஸையும் அதில் சேர்த்திருக்கிறேன். அடுத்து ஃபிரான்ச்சைஸ் எடுத்து என்னுடைய வாழ்க்கை முடிவதற்குள் குறைந்தது 10 ஃபிரான்ச்சைஸ் இருக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறேன். வெளியே செல்லமுடியாதவர்களுக்கு வீட்டிலிருந்தே செய்ய எக்கச்சக்கமான வேலைகள் இருக்கின்றன. கணவன் மற்றும் குடும்பத்தையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களுக்குள்ளிருக்கும் திறமையை தேடி கண்டுபிடித்து அது சம்பந்தப்பட்ட தொழிலில் இறங்கினால் கட்டாயம் வெற்றிகிட்டும். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு Buyback பிசினஸ் செய்தால் வீட்டிற்கு வந்தே தயாரிக்கும் பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதனால் வருமானம் வீடுதேடி வரும்.


கேட்டரிங் பிசினஸில் போட்டியாளர்களை சமாளிக்க சற்று குறைந்த பட்ஜெட்டை பின்பற்றலாம் - மாலதி

உங்களுடைய போட்டியாளர்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

இப்போது கேட்டரிங் பிசினஸ் நிறையப்பேர் செய்கிறார்கள். ஆனால் என்னிடம் ஒரு தனித்துவம் இருப்பதால்தான் ஆயிரக்கணக்கானோர் என்னை தேடிவருகிறார்கள். கேட்டரிங் தவிர ஈவென்ட்டுகளும் செய்வதால் அதில், போட்டோகிராபி, டெகொரேஷன் என்றால் அதற்கான தொகையை மட்டும்தான் வாங்குவோம். இதன் காரணமாக அவர்களுக்கு குறைந்த செலவே ஆகுமென்பதால் எங்களிடம் வருகிறார்கள். போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்க, முடிந்தவரை பட்ஜெட்டை குறைத்துக்கொள்வதுடன், நிகழ்ச்சியை மிகவும் நேர்த்தியாக செய்துகொடுப்போம்.

பிசினஸில் யாரை ரோல் மாடலாக வைத்திருக்கிறீர்கள்?

எனக்கு அப்படி யாரும் இல்லை. நான் பிரபலமாக இருக்கவேண்டும், என்னை பிறர் முன்னுதாரணமாக பார்க்கவேண்டும் என்றுதான் என் பள்ளியில் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். அதையேதான் நானும் யோசிப்பேன். என்னுடைய அப்பா பலதரப்பட்ட பிசினஸை எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுத்தார். அதன்பிறகு நான் ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும், என்னை மற்றவர்கள் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஏனென்றால் நான் ஒரு ஹவுஸ்ஃபைவாக இருந்து கேட்டரிங் பிசினஸில் இறங்கினேன். ஒவ்வொரு முயற்சியையும் கஷ்டத்தையும் நானாகத்தான் கடந்து கொண்டிருக்கிறேன். எல்லாரும் பிசினஸ் என்றாலே கடினம் என்று நினைப்பார்கள். ஆனால் இது அவ்வளவு கடினமல்ல; சுலபம்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.


மல்டி டாஸ்கிங்கில் பெண்கள் ஜெயிக்கும் வழிகள்

இதுவரை நீங்கள் செய்த ஈவென்டுகளில் மறக்கமுடியாதது எது?

அதிகபட்சமாக 400, 500 பேர் இருக்கும் நிகழ்ச்சிகளைத்தான் நான் ஆர்டர் எடுத்திருக்கிறேன். ஆனால் எங்களுக்கு தெரிந்த ஒரு அங்கிள் 3,500 பேர்கொண்ட ஒரு திருமண ஈவென்ட் ஆர்டரை எங்களுக்கு கொடுத்தார்கள். அதில் நான்-வெஜ் மற்றும் வெஜ் என இரண்டுமே இருந்தன. வருகிற ஒருவர்கூட முகம் சுளிக்கக்கூடாது என்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைய யோசித்தோம். மேலும் அந்த அங்கிளுக்கு ஒரே மகன் என்பதால் அந்த திருமணம் அவர்களுக்கு ஒரு கனவுபோல் இருந்தது. அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் எங்களுக்கு ஒருவித பயமும்கூட. ஒருவழியாக திருமணம், ரிசப்ஷன் எல்லாமே முடிந்துவிட்டது. ஊரிலிருந்து வந்திருந்த அவருடைய உறவினர்கள் அனைவரும் அது ஒரு திருமணமா அல்லது திருவிழாவா என கேட்டு பாராட்டினர். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்தபிறகு அந்த அங்கிள் மண்டபத்திற்கு வெளியே வந்துநின்று அழுதுகொண்டிருந்தார். ஏதோ பிரச்சினை ஆகிவிட்டது என்று நினைத்து நானும் என் கணவரும் பயந்துபோய் நின்றோம். அப்போதுதான் அவர் எங்களை கைகாட்டி கூப்பிட்டு கண்கலங்கி நன்றி சொன்னார். அவர்மூலமாக 10க்கும் மேற்பட்ட ஈவன்ட்டுகள் எங்களுக்கு கிடைத்தன. இது எங்களுடைய பயணத்தில் மறக்கமுடியாதது.

குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் எதுவுமே செய்யமுடியாது என நினைக்கும் நிறைய குடும்ப தலைவிகள் மனதுக்குள் சமுதாயத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

நானும் முதலில் என்ன செய்வதென்றே தெரியாமல்தான் வீட்டிற்குள்ளேயே இருந்தேன். எல்லாருக்குமே வாழ்க்கையில் சிரமமான சூழ்நிலை ஒன்று வரத்தான் செய்யும். வீட்டுவேலையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளாமல் நெகட்டிவாக பேசியவர்கள் முன்பாக எதையாவது சாதித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிரமப்பட்டால் கண்டிப்பாக பெரிய வாழ்க்கை கிடைக்கும். முடியவில்லையே என்று நினைக்காமல் நிச்சயம் முடியும் என்று நினைத்து செய்தால் கண்டிப்பாக முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்