இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் படித்த இளைஞர்கள்!
நம் மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.
நம் மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த இயற்கை விவசாயத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டியதில் பெரும்பாலான பங்கு நமது எதிர்கால சந்ததியினருக்கு உண்டு. அதற்கேற்ப இயற்கை விவசாயத்தை கடைபிடிப்பது விவசாயிகள் மட்டுமின்றி இளைய தலைமுறைக்கும் இது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் பலனாகத்தான் இன்று தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றிவரும் இளைஞர்களும் ஒரு கட்டத்திற்கு பிறகு தங்களது துறையில் உள்ள பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக அவ்வேலையை துறந்து தங்களது பாரம்பரிய விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்று மாடித்தோட்டம் தொடங்கி, இயற்கை விவசாயம்வரை களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். அந்த வகையில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிய தம்பதிகளான அர்ச்சனா மற்றும் ஸ்டாலின் இருவரும் இயற்கை விவசாயத்தில் இறங்கி சாதித்து வருகின்றனர். இயற்கை விவசாயம், அது ஏற்படுத்தும் நன்மைகள், அதில் கிடைக்கும் வருவாய் போன்ற பல விஷயங்கள் குறித்து அர்ச்சனாவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் முதல் பகுதியை ஏற்கனவே பார்த்த நிலையில், தற்போது அர்ச்சனா ஸ்டாலின் பகிர்ந்துகொண்ட தகவல்களின் இரண்டாம் பகுதியை இந்த கட்டுரையில் காணலாம்.
இயற்கை விவசாயத்திற்காக சென்னைக்கு அருகில் நிலம் தேர்வு செய்தது ஏன்? அப்போது சுற்றி இருந்தவர்கள் சொன்னது என்ன?
இயற்கை விவசாயம் செய்யலாம் என்று ஆரம்பிக்கும்போது சொந்தமாக நிலம் இல்லை. எங்களது வீட்டு பக்கமும் ஊரில் இருந்த நிலத்தை விற்றுத்தான் சென்னைக்கு வந்து குடியேறினோம். முழுக்க முழுக்க சென்னையிலேயே படித்து வளர்ந்ததால் இங்கேயே இயற்கை விவசாயம் செய்ய திட்டமிட்டோம். அதன்படி குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு, திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் இடத்திற்கு அருகிலேயே வெங்கல் என்ற ஊரில் 2 ஏக்கர் நிலப்பரப்பிலான இடத்தினை குத்தகைக்கு எடுத்தோம். கிட்டத்தட்ட 30 இடங்கள் பார்த்த பிறகுதான் அந்த இடத்தை தேர்வு செய்தோம். அந்த இடத்தை விவசாயத்திற்காக குத்தகைக்கு கேட்ட போது அங்கு இருந்தவர்கள் யாரும் நம்பவில்லை. இதை நாங்கள் ஒரு சவாலாகத்தான் எடுத்து செய்தோம். முதன்முதலில் தர்பூசணிதான் விதைத்தோம். அப்போது நிறைய காகம், எலி, பாம்பு எல்லாமே வரும். பல சிரமங்களை சந்தித்தோம்.
மாடித்தோட்டம் அமைத்து விளைவிக்கப்பட்ட கத்தரிக்காய்
பின் அறிவியலில் நான் படித்த ஃபுட் செயின் அதாவது உணவு சங்கிலி எப்படி என்பதை புரிந்து கொண்டேன். ஒரு நாலு பழத்தை காகம் சாப்பிடுவதனாலேயே மொத்த பழத்தையும் கெமிக்கலாக மாற்றுகிறார்கள் என்று தோன்றியது. இதுதான் எங்களின் முதல் அனுபவம். இதன் பிறகு சுற்றியிருந்தவர்கள் கூறிய வார்த்தைகள் மட்டும் இல்லாமல், நாங்கள் இயற்கை மருந்துகளை பயன்படுத்த சொன்னால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அந்த பாட்டில் மருந்தை வாங்கி ஊற்றுங்கள் என்று எங்களது தோட்டத்தில் பணியாற்றியவர்களே நம்பிக்கை இல்லாமல் பேசுவார்கள். பிறகு இயற்கை முறையில் நாங்கள் விளைவித்தவற்றை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் எங்களை பாராட்டியதை பார்த்து, அங்கு வேலை பார்த்த ஒவ்வொருவராக மாற ஆரம்பித்தார்கள். இப்படி நிறைய நிகழ்வுகள் இருக்கின்றன. குறிப்பாக எங்களிடம் வேலை பார்த்தவர்களிடம் நம்பிக்கையை வர வைப்பதற்காகவே நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது.
இயற்கை விவசாய தோட்டத்தை உருவாக்கும் போது தண்ணீர் மிகவும் அவசியமானது. அதற்கான முழு கட்டமைப்புகளை எப்படி கொண்டு வந்தீர்கள்?
நாங்கள் விருதுநகரில் தங்கி மாடி தோட்டம் மேற்கொண்டு பராமரித்து வந்த சமயத்திலேயே, அப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரி நீர் மேலாண்மை பணிகளை செய்து வந்தோம். இதனால் இங்கு விவசாய பணியில் ஈடுபடும்போது பாதுகாப்பாகவும், முறையாகவும் தண்ணீரை பயன்படுத்தும் பக்குவம் எங்களுக்குள்ளாகவே இருந்தது. அதோடு விருதுநகரை ஒப்பிடும்போது நாங்கள் விவசாயம் மேற்கொண்டு வரும் திருவள்ளுவர் மாவட்டத்தில் அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சினை இல்லை. இருந்தும் சில சமயம் அரசு உதவியுடன் பண்ணை குட்டை அமைத்து முறையாக தண்ணீர் பாய்ச்சுவது அல்லது நீர் இருப்பிற்கு ஏற்ற விவசாயத்தை மேற்கொள்வது போன்ற பல யுக்திகளை பின்பற்றிதான் விவசாயம் செய்து வருகிறோம். இதில் குறிப்பாக எல்லா விவசாயிகளுக்குமே நான் சொல்ல விரும்புவது, மோனோகிராப்பிங் சாகுபடி முறையை பின்பற்ற வேண்டாம் என்பது தான். காரணம் நாம் வெறும் கரும்பையோ, நெல்லையோ அல்லது வேறு விவசாயத்தையோ தொடர்ந்து ஒரே மாதிரியாக நம் நிலத்தில் செய்து வந்தால் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க நேரிடலாம். முடிந்த வரை கலவையான பல விவசாய முயற்சிகளை நம் நிலத்தில் மேற்கொள்வதே பொருளாதார ரீதியாக நல்லது. ஒருபக்கம் கீரை, இன்னொரு பக்கம் பூசணி என பலதரப்பட்ட விவசாய முயற்சிகளை ஒரே நிலத்தில் மேற்கொள்ளும்போது நிச்சயம் தொடர்ந்து நமக்கு வருமானம் வரும்.
தன் சொந்த நிலத்தில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட கனி, காய்களுடன் அர்ச்சனா ஸ்டாலின்
தொடர்ந்து ஐடி துறையிலேயே நீங்கள் பயணித்திருந்தால் லட்சக்கணக்கில் கூட சம்பளம் வாங்கி இருக்கலாம்... அப்படி இருக்கும்போது அதற்கு ஈடான வருமானமும், மகிழ்ச்சியும் உங்களுக்கு இந்த விவசாயத்தில் கிடைக்கிறதா?
வருமானம், கூட குறைச்சல் இருந்தாலும் மன நிம்மதியும், வேலை திருப்தியும் இங்கு அதிகமாகவே கிடைக்கிறது. அதிலும் எங்களுடைய பண்ணையில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் இதை நம்பித்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது ஒரு மன நிறைவு கிடைக்கிறது. ஐடி துறையில் தொடர்ந்து பணி புரிந்திருந்தால் இன்னும் அதிகம் சம்பளம் கிடைத்திருக்குமே என சிந்தித்தால், அடுத்த கட்டத்திற்கு எங்களின் விவசாய தொழிலை கொண்டு செல்ல முடியாது. அதற்காக நாங்கள் சமூக சேவை செய்வதில்லை. எங்களுக்கான வருமானத்தை எடுத்துக்கொண்டுதான் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்கிறோம். நிச்சயம் இந்த பண்ணை மேலும் விரிவடைந்து அதிக நபர்களை பணி அமர்த்தி அவர்களது வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் என நான் நம்புகிறேன்.
முதலில் நீங்கள், பிறகு கணவர், பின்பு உங்கள் குடும்பம் என ஒவ்வொருவராக நம்பிக்கையளித்து இன்று ஒரு ஸ்தாபனமாக உங்களது விவசாய பண்ணை மாறி இருக்கிறது. இது எப்படி சத்தியமானது? இந்த நிலையை அடைய நீங்கள் பட்ட சிரமங்கள் என்னென்ன?
எங்கள் குடும்பத்திலேயே முதன் முதலில் தொழில் தொடங்கியது நாங்கள் தான். சொல்ல போனால் போதிய முன் அனுபவமோ, தொடர்புகளோ எதுவுமே இல்லாமல் தான் இந்த தொழிலை துவங்கினோம். துவக்கத்தில் நானே ஒவ்வொரு இடமாக பயணம் செய்து பல புது புது நபர்களை சந்தித்து, எங்களது விசிட்டிங் கார்ட் கொடுத்துதான் தொடர்புகளை வளர்த்துக் கொண்டோம். இது தவிர சரியான ஆட்களை பணி அமர்த்துவதிலும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதிலும் பல சிக்கல் இருந்தது. எங்கேயுமே ஒரு குழுவை உருவாக்கி முறையாக ஒழுங்குபடுத்தி தொழில் துவங்குவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அதே சிரமத்தையும், சவால்களையும்தான் நாங்களும் சந்தித்தோம். இது தவிர தினசரி சவால்களும் உள்ளன. ஒருமுறை எங்களது பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு மொத்தமாக விவசாயம் அழிந்தது.
வீட்டிலேயே உருவாக்கப்பட்ட அர்ச்சனாவின் இயற்கை விவசாய தோட்டம்
இப்படி பல சவால்களை சந்தித்துதான் இன்றும் நாங்கள் இந்த தொழிலை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எங்களுடைய குறிக்கோளும், எதற்காக இந்த பண்ணையை துவங்கினோம் என்ற சிந்தனையுமே இவற்றை எல்லாம் கடந்து எங்களை அடுத்தகட்டத்திற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக இதற்கு முழுக்க முழுக்க உறுதுணையாக இருப்பது என்னுடைய அம்மாவும், மாமனார், மாமியரும்தான். இவர்கள் தவிர இந்த தொழிலில் ஏற்கனவே முன் அனுபவம் பெற்றவர்களும் எங்களது ஆர்வத்தை புரிந்து கொண்டு அறிவுரை கூறி வழி நடத்துகிறார்கள். எப்போதுமே நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், கேட்டு தெரிந்துக் கொள்வதில் தவறில்லை. அவ்வாறாகத்தான் அனுபவத்தோடு கேட்டு தெரிந்துக்கொண்டு நாங்களும் பயணித்து வருகிறோம்.
இன்று உங்கள் நிறுவனத்தில் பல இளைஞர்களும் பணி புரிகிறார்கள், இயற்கை விவசாய தொழிலுக்கு இளைஞர்கள் விரும்பி வருவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
வெற்றிகரமான தொழில் முனைவோராக அர்ச்சனா ஸ்டாலின்
மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாகவே விவசாயம் என்றாலே வயதானவர்கள் செய்யக்கூடிய தொழில் என்கிற சிந்தனையே இன்றைய தலைமுறையினரிடையே இருக்கிறது. அதனை உடைத்து இளைஞர்களும் எங்களுடன் இணைந்து பணியாற்றுவது பெருமையான நிகழ்வுதான். அவர்களும் இதை பெருமையாகத்தான் நினைக்கிறார்கள். சொந்த ஊரைவிட்டு பல கிலோமீட்டர் தூரம் பயணித்து ஒரு இயந்திரம் போல் பணியாற்றுவதை விட சொந்த நிலத்தில் பணியாற்றுவதை ஒரு அங்கீகாரமாக நினைக்கிறார்கள். இது தவிர பள்ளி மாணவர்களிடத்திலும் இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம். இன்றைய தலைமுறையினர் மண்ணை தொட்டாலே அசிங்கம் என நினைத்து வரும் சூழலில் அந்த மண்தான் நமக்கு உணவு வழங்கி வருகிறது என்பதை நாங்கள் உணர்த்தி வருகிறோம்.