உறவுகளில் சந்தேகம்! துப்பறிவாளர்களை தேடிச் செல்லும் மக்கள்! - டிடெக்டிவ் பிரசன்னா

நான் மட்டும் வசமாக மாட்டிக்கொண்டேன். உடனே நான் அவரிடம் போலீஸை கூப்பிடச்சொன்னேன். அந்த பெண் தவறு செய்திருக்கிறார் என்பதால் வீட்டிலிருப்பவர்கள் நிலைமையை சமாளித்து என்னை அனுப்பிவிட்டார்கள். ஆனாலும் அந்த நபர் நான் யார்? என்பதை தெரிந்துகொள்ள எங்களுடைய காரை பின்தொடர்ந்து வந்தார். ஒருவழியாக நிலைமையை சமாளித்துவிட்டோம். அதனால் நிறைய அனுபவமும் கிடைத்தது.

Update:2024-12-03 00:00 IST
Click the Play button to listen to article

காதலில் பிரச்சினை, கணவன் மனைவியிடையே பிரச்சினை என்றாலே அதற்கு சட்டத்தை மீறிய உறவுதான் காரணமாக இருக்கும் என்ற எண்ணம் பெரும்பாலும் நிறையப்பேருக்கு வரும். ஆனால் அதை கண்டுபிடிக்கவோ நிரூபிக்கவோ முடியாத காரணத்தால் வேறு வழியின்றி அந்த நபருடனே இருந்து மன உளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டிருப்பார்கள். இதுபோன்றவர்களுக்கு உதவுவதற்காகவே பல துப்பறிவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது மிகவும் கடினமான வேலை என்பதால் பெரும்பாலும் ஆண்களே இந்த தொழிலில் இருப்பார்கள். ஆனால் 17 வருடங்களுக்கு முன்பே பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதைகளால் ஈர்க்கப்பட்டு துப்பறிவாளராக தன்னை உருவாக்கிக்கொண்டு, தனக்கென ஒரு குழுவையே உருவாக்கி திறம்பட பல கடினமான கேஸ்களை முடித்து வைத்திருக்கிறார் துப்பறிவாளர் பிரசன்னா. துப்பறிவு துறையில் தான் சந்தித்த சவால்கள் குறித்தும், முடித்துவைத்த கேஸ்கள் குறித்தும் நம்முடன் உரையாடுகிறார்.

எப்படி உளவுத்துறைக்குள் வந்தீர்கள்?

எனக்கு போலீஸாக வேண்டும் என ரொம்ப ஆசை. பாட புத்தகங்களை படித்ததைவிட கதை புத்தகங்களைத்தான் அதிகம் படிப்பேன். குறிப்பாக ராஜேஷ்குமார் புத்தகங்களை நிறைய படிப்பேன். அதற்காக வீட்டில் நிறைய அடியும் வாங்குவேன். என்னுடைய ஹீரோ விவேக் ரூபலாதான். ஒருகட்டத்தில் திருமணம், குழந்தைகள் என செட்டிலாகிவிட்டேன். எல்லாருடைய வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் திருப்பங்கள் ஏற்படுவது போன்று என்னுடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் சில விஷயங்களை தெரிந்துகொள்ள நினைத்தபோது எனக்கு தெரிந்துகொள்ளவோ, உதவிசெய்யவோ யாருமில்லை. ஒருகட்டத்தில் நான் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு பிடித்த துறையையே ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது? என யோசித்தேன். அப்போது போலீஸ் ஆவதற்கான வாய்ப்புகளில்லை. அந்த சமயத்தில் ராஜேஷ்குமார் புத்தகத்தின் தாக்கத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். இதை நான் வீட்டில் சொன்னபோது நான் ஒரு பெண் என்பதாலும், இந்த வேலையில் பாதுகாப்பு இல்லையென்பதாலும் அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் அதன்பிறகு அவர்கள் என்னை புரிந்துகொண்டார்கள்.


எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதைகளால் ஈர்க்கப்பட்ட துப்பறிவாளர் பிரசன்னா

துப்பறிவாளராக பணியை தொடங்குவதற்கு முன்பு வீட்டிற்குள்ளேயே ஏதாவது முயற்சித்திருக்கிறீர்களா?

அதுபோல் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எதுவும் செய்ததில்லை. எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர். சிறுவயதில் அப்பா பாக்கெட்டில் வைத்த பணத்தை காணவில்லை என்றால் என்னைத்தான் கூப்பிட்டு கேட்பார்கள். அண்ணா எங்கு ஒளித்து வைத்திருந்தாலும் அதை நான் தேடி கண்டுபிடித்துவிடுவேன். அதேபோல், அம்மா ஏதாவது பொருளை வைத்த இடத்தை மறந்துவிட்டால் அதனை நான் கண்டுபிடித்து கொடுப்பேன். இப்படி சிறுவயதில் தொடங்கியதுதான் என்னுடைய துப்பறிவு பணி.

இன்று மக்கள் துப்பறிவாளர்களை தேடிவருவதற்கான காரணம் என்ன?

இரண்டு விஷயத்தை சொல்லலாம். ஒன்று ஆச்சர்யமாக இருக்கும், மற்றொன்று வலி நிறைந்ததாக இருக்கும். முன்பெல்லாம் ஒரு ஆணோ பெண்ணோ அல்லது கணவனோ மனைவியோ அல்லது அவர்களின் பெற்றோரோ, ‘முன்பு நன்றாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் இப்போது சந்தேகப்படும்படியாக ஏதோ நடக்கிறது’ என்று கூறிக்கொண்டு வருவார்கள். ஆனால் இப்போது திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்கள், தங்களுடன் உறவில் இருக்கும் நபர் வேறு ஒருவருடன் இருப்பதாக சந்தேகித்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக இப்படிப்பட்டவர்கள்தான் துப்பறிவாளர்களிடம் அதிகம் வருகிறார்கள். இதுபோக, பல வருடங்களாக காதலித்து வருபவர்கள் வீட்டில் அறிமுகப்படுத்த நினைத்திருக்கும் நேரத்தில் சமீபகாலமாக தனது காதலன் / காதலி சந்தேகிக்கும்படியாக நடந்துகொள்வதாகவும், நெருக்கம் குறைந்து நடத்தையில் மாற்றம் தெரிவதாகவும் எங்களிடம் வருகிறார்கள். இதுகுறித்து ஆராய்ந்து பார்க்கும்போது அவர்களுடைய நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது வேறு யாருடனோ எதிர்தரப்பினர் உறவில் இருப்பது தெரியவருகிறது.


திருமணத்தை மீறிய உறவால் இணைக்கு ஏற்படும் சந்தேகம்

சந்தேகப்பட்டு வருபவர்களுக்கு அது உண்மையிலேயே நடந்திருக்குமா? அல்லது சந்தேகப்பட்டது போலில்லாமல் இருக்குமா?

நிறையப்பேர் சந்தேகப்பட்டு வருகிறார்கள் என்பதைவிட, தான் சந்தேகிப்பதுபோன்று இருக்கக்கூடாது என்று நினைத்து வருவார்கள். ஆனால் அந்த நபரை குறித்து விசாரித்து பார்க்கும்போது அது உண்மையிலேயே இருக்கும். குறிப்பாக, சந்தேகித்ததைவிட அதிகமாகவே இருக்கும். உதாரணத்திற்கு, பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதாக கூறி வருவார்கள். அவர்களை ஆராய்ந்து பார்க்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் அவர்கள் பேசிக்கொண்டிருப்பது தெரியவரும். அதுபோக, ஆன்லைன் கேம்ஸ், அதற்காக வீட்டிலிருந்து பணம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு போதல் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நிறையவே நடக்கிறது. ஒவ்வொரு கேஸையும் முடித்துவைக்க வெவ்வேறு நேரம் எடுக்கும்.

நீங்களே எதிர்பாராமல் சீக்கிரத்தில் முடித்த கேஸ் குறித்து கூறுங்கள்!

ஒரு பெண் தனது கணவர்மீது சந்தேகமிருப்பதாகக் கூறி என்னிடம் வந்தார். ஒரு வாரம் அவரை பின் தொடர்ந்து பார்க்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். முதல்நாள் பின்தொடரும்போதே அந்த பெண்ணின் மீதுதான் தவறு என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது. கணவர் எங்கு போகிறார் என்ன செய்கிறார் என்று நாங்கள் பார்த்து அப்டேட் செய்துகொண்டே இருந்த நேரத்தில் அந்த பெண் அவர் வீட்டிற்கு வருவதற்குள் தான் வேறு நபரிடம் உறவில் இருப்பதற்காக எங்களை நாடியுள்ளார் என்பது எங்களுக்கு தெரியவந்தது. அந்த நாளே நானும் எங்களுடைய டீமும் புரிந்துகொண்டு அந்த பெண்ணை அழைத்து அவரிடம் இதுகுறித்து சொல்லிவிட்டோம்.


கேஸ் குறித்து விசாரிக்க சென்ற இடத்தில் மாட்டிக்கொண்ட துப்பறிவாளர் பிரசன்னா (உ.ம்)

கேஸ்களுக்காக பின்தொடர்ந்து சென்று அந்த நபரிடம் மாட்டி சங்கடத்திற்குள்ளான அனுபவங்கள் இருக்கிறதா?

17 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. நான் ஒரு ஏரியாவிற்கு சென்று தேவையான விவரங்களை சேகரித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண் பேசியதையெல்லாம் ரெக்கார்டும் பண்ணிவிட்டேன். அந்த பெண் தனது கணவருக்கு தெரியாமல் இன்னொரு நபரை திருமணம் செய்து குழந்தையும் பெற்றிருந்தார். அந்த குழந்தை யாருக்கு பிறந்தது? என்பதை கண்டுபிடிப்பதுதான் அந்த கேஸ். அந்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்திருந்த கணவர், வீட்டிற்குள் வந்துவிட்டார். அவர் என்னை பிடித்து நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என கேள்வி கேட்க ஆரம்பித்த உடனே என்னுடைய குழு அங்கிருந்து நழுவி காரில் ஏறிக்கொண்டனர். நான் மட்டும் வசமாக மாட்டிக்கொண்டேன். உடனே நான் அவரிடம் போலீஸை கூப்பிடச்சொன்னேன். அந்த பெண் தவறு செய்திருக்கிறார் என்பதால் வீட்டிலிருப்பவர்கள் நிலைமையை சமாளித்து என்னை அனுப்பிவிட்டார்கள். ஆனாலும் அந்த நபர் நான் யார்? என்பதை தெரிந்துகொள்ள எங்களுடைய காரை பின்தொடர்ந்து வந்தார். ஒருவழியாக நிலைமையை சமாளித்துவிட்டோம். அதனால் நிறைய அனுபவமும் கிடைத்தது.

நீங்கள் திட்டமிட்டபடி வொர்க் ஆகாமால் வேறு மாதிரி போன கேஸ்கள் இருக்கிறதா?

அதுபோல் நிறைய இருக்கின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் எங்களிடம் வெளிப்படையாக எதையும் சொல்லாமல், தங்களுடைய பர்சனல் விஷயங்களை மறைத்து, தனது நண்பர்களுடைய கேஸ் என்று அரைகுறையாக விளக்குவார்கள். அதுபோன்ற கேஸ்களை முடிக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண்ணுக்கு 5 லட்சம் கொடுத்ததாகவும், அவள் பணத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கு வராமல் நின்றுவிட்டதாகவும், அந்த பெண் கொடுத்த முகவரி பொய் என்றும், அதனால் அந்த பெண் எங்கு இருக்கிறார்கள் என கண்டுபிடிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டு வந்தார்கள்.


கேஸ் கொண்டுவருபவர்களே பொய் சொல்லி மறைப்பதால் விசாரணையில் ஏற்படும் தாமதங்கள் (உ.ம்)

இது பார்ப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. ஆனால், அந்த கேஸ் குறித்து ஆராய ஆராய, எங்களிடம் வந்த நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதும், அந்த சூழ்நிலையை தனக்கு சாதமாக்கிக்கொண்ட அந்த பெண் அவரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. அந்த பெண்ணை கண்டுபிடித்து பேசியபோது இந்த நபர் என்னென்னவெல்லாம் செய்தார் என்பதை அவர் சொல்ல, மீண்டும் கேஸ் கொண்டுவந்த நபரை அழைத்து இருவரையும் உட்கார வைத்து பேசி கேஸை ஒருவழியாக முடித்தோம். இதுபோன்று நிறைய கேஸ்களை பார்த்திருக்கிறோம்.

ஏதாவது கேஸ்களில் எது சரி எது தவறு என்று உள்ளுணர்வு உங்களுக்கு சொல்லியதுண்டா?

ஆரம்பத்தில் அனுபவம் இல்லாததால் அதுபற்றிய உள்ளுணர்வுகள் இருக்காது. ஆனால் இப்போது நிறைய கேஸ்களை கேட்கும்போதே உள்ளுணர்வு எது சரி தவறு என்று சொல்லிவிடும்.

எல்லா கேஸ்களையும் எடுத்துக்கொள்வீர்களா? அல்லது ஏதாவது பாலிசி வைத்திருக்கிறீர்களா?

எந்த கேஸையும் வேண்டாம் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் பல குழப்பங்களுடன் யாரிடம் செல்வது? எப்படி அணுகுவது? என்று தெரியாமல்தான் தயக்கத்துடன் எங்களிடம் வருவார்கள். எனவே அந்த நபரிடம் அவசியம் இந்த விசாரணை தேவையா? உட்கார்ந்து பேசினாலே பிரச்சினை முடிந்துவிடும், எப்படி செய்தால் விரைவில் பிரச்சினை முடியும் என தெளிவாக விளக்கி எடுத்துக்கூறுவேன். அதை கேட்டுக்கொண்டு போனவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஒரு கேஸ் வந்தாலே அவரிடம் காசு வாங்கிவிட வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை.

Tags:    

மேலும் செய்திகள்