மயிலாப்பூர் மாடவீதியில் களைகட்டிய கோலத் திருவிழா! ஆண்கள், பெண்கள் என இருபாலரும் போட்டி!

வீட்டு வாசல்களில் கோலம் போடும் பெண்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு இடங்களில் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டாலும் சென்னை மயிலாப்பூரில் நடத்தப்படும் கோலப்போட்டிக்கு இவ்வளவு சிறப்பு ஏன்? தெரிந்துகொள்ளலாம்.

Update:2025-01-21 00:00 IST
Click the Play button to listen to article

மார்கழி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. மற்ற ஊர்களைவிட சென்னையில் மார்கழி மாதம் என்றாலே களைகட்டும். காரணம் மாதம் முழுக்க, கோவில்களிலும் நாடக சபாக்களிலும் அரங்கேற்றப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள்தான். அவற்றில் முக்கியமான ஒன்று மார்கழி கோலம். மார்கழி மாதம் முடிந்தும் சென்னையின் முக்கிய இடங்களில் கோலம் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகே பல தசாப்தங்களாக நடத்தப்படும் கோலம் விழாவில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பங்கேற்பது தனி சிறப்பு. நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டு சுழி கோலம், சிக்கு கோலம், புள்ளி கோலம் மற்றும் ரங்கோலி என விதவிதமாக கோலங்களை வரைந்து அசத்துவதுண்டு. தினசரி வீட்டில் கோலம் போடுபவர்கள், திருவிழா நாட்களில் மட்டும் கோலம் போடுபவர்கள் மற்றும் புதிதாக கோலம் போட முயற்சிப்பவர்கள் என அனைவருமே உற்சாகத்துடன் இந்த போட்டியில் கலந்துகொண்டு, பரிசுகளை வெல்வதுண்டு. இந்த ஆண்டும் மயிலாப்பூரில் கோலம் திருவிழா நடைபெற்றது. கோலம் திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் பகிர்ந்த சில சுவாரஸ்யங்கள் மற்றும் கோலம் வீடியோ ராணி நேயர்களுக்காக...

யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்

மயிலாப்பூர் வடக்கு மாட வீதி கோல திருவிழா என்றாலே விசேஷம்தான். தெரு முழுக்க பெருக்கி சுத்தம் செய்யப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டு கோலம் போட இடங்கள் ஒதுக்கப்படும். இந்த விழாவின்போது போக்குவரத்துகூட தடம் மாற்றப்படும். இந்த போட்டியில் பங்கேற்க சிறுவயதினர் முதல் முதியவர்கள்வரை யார் வேண்டுமானாலும் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.


கோலம் திருவிழாவில் பலரின் கவனத்தையும் ஈர்த்த இளைஞரின் பெண் ரங்கோலி

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டை பொருத்தவரை இந்துக்களின் வீட்டு வாசல், நுழைவாயில் மற்றும் முற்றங்களில் அரிசி மாவை வைத்து கோலங்கள் வரைவது பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. திருமணமான பெண்கள் 4 அடிக்கு 4 என்ற கணக்கில் கோலம் போடுவதுண்டு. இப்படி வீட்டு வாசல்களில் கோலம் போடும் பெண்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு இடங்களில் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டாலும் சென்னை மயிலாப்பூரில் நடத்தப்படும் கோலப்போட்டிக்கு இவ்வளவு சிறப்பு ஏன்? தெரிந்துகொள்ளலாம்.

பாரம்பரியம் மிக்க மயிலாப்பூர்

சென்னையின் பழமையான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் மயிலாப்பூரின் பாரம்பரியம் மற்றும் பெருமையை போற்றும்விதமாக கடந்த 20 ஆண்டுகளாக மயிலாப்பூர் திருவிழா என்பது நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பாரம்பரிய இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதுண்டு. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நாட்டுப்புற கலைகள், கோலப்போட்டி மற்றும் உணவு - கைத்திறன் பயிற்சிகள் மற்றும் பழைய பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவையும் இடம்பெற்றன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவதுதான் கோல திருவிழா.


மயிலாப்பூர் வடக்கு மாடவீதியை அலங்கரித்த விதவிதமான கோலங்கள்

போட்டியாளர்களின் அனுபவம்

கோலத் திருவிழாவில் பங்கேற்ற ஆண் பெண் என இருபாலரும் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கின்றனர். அண்ணா நகரைச் சேர்ந்த புவனா சந்துரு நம்முடன் பேசுகையில், “மயிலாப்பூரில் கோல திருவிழா நடப்பதாக கேள்விப்பட்டு முதன்முறையாக இங்கு கோலம்போட வந்திருக்கிறேன். சிக்கு கோலம் போடுவதை யோகா என்றே சொல்லலாம். ஏனென்றால் மனமும் சிந்தையும் ஒன்றிணைந்து போட்டால்தான் அந்த கோலம் பார்க்கவும் அழகாக இருக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். கோலத்தை ஆண், பெண், சிறுவர்கள் என யார் வேண்டுமானாலும் போடலாம்” என்று கூறினார்.

திருவான்மியூரைச் சேர்ந்த பாரதி பூபாலன் தனது அனுபவத்தை பகிர்கிறார். “நான் 4 ஆண்டுகளாக இங்கு வந்துகொண்டிருக்கிறேன். ஒருமுறை பரிசு வாங்கியிருக்கிறேன். இந்த போட்டியில் கலந்துகொண்டாலே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.


போட்டியில் ஆண் - பெண் இருபாலரும் கலந்துகொண்டு கோலமிட்ட காட்சி

பெண்ணின் ஓவியத்தையே கோலமாக போட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் பேசுகையில், “நாங்கள் மயிலாப்பூர் கோவிலுக்கு வருவது வழக்கம். அப்படி 2 ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்கு வந்தபோது இங்கு என்ன கூட்டமாக இருக்கிறது என்று பார்க்கவந்தோம். அப்போதுதான் கோலப்போட்டி நடப்பது தெரியவந்தது. அங்கேயே வெள்ளை கோலமாவை எடுத்து கோலம் போட்டு போட்டியில் பங்கேற்றோம். அப்போதிருந்து தொடர்ந்து 3வது ஆண்டாக போட்டியில் கலந்துகொண்டு வருகிறோம். நாங்கள் ஏதாவது ஒரு தீமை வைத்து கோலம் போடுகிறோம்” என்கின்றனர் மகிழ்ச்சியுடன்.

பெருங்குடியைச் சேர்ந்த விஜய கீதா, “ஆண்டுதோறும் மயிலாப்பூர் கோல திருவிழா என்றால் வேறு எந்த போட்டிகளுக்கும் போகாமல் இங்குதான் வருவோம். மயிலாப்பூர் கோலப்போட்டியில் வெற்றிபெற்றால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இங்கு நடத்தப்படும் போட்டியில் பெரும்பாலும் சிக்கு கோலத்திற்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் நாங்களும் சிக்கு கோலம்தான் போடுவோம்” என்று சொல்கிறார்.


வருடந்தோறும் கோலப்போட்டியில் பங்கேற்கும் பெண்

உள்ளூரைச் சேர்ந்த மற்றொரு பெண் பேசுகையில், “நான் சிறுவயதிலிருந்தே கோலம் போட்டு வருகிறேன். 40 புள்ளி, 50 புள்ளி கோலங்கள்கூட போட்டிருக்கிறேன். ஆனால் போட்டியின்போது புள்ளி வைப்பதற்கெல்லாம் நேரம் இருக்காது என்பதால் ரங்கோலிதான் போடுகிறேன். இந்த போட்டிக்காக பயிற்சியெல்லாம் பெறவேண்டியதில்லை. அங்கு சென்று நின்றாலே கோலம் தானாக வரும். இப்போது நிறைய வீடுகளில் கோலம் போடுவதே இல்லை” என்கிறார்.

வருடந்தோறும் போட்டியில் பங்கேற்கும் ரமா ரமணி என்பவர் தனது அனுபவத்தை கூறுகையில், “2016லிருந்து இங்கு கோலப்போட்டியில் நான் பங்கேற்று வருகிறேன். இதுவரை ஒரு வருடம்கூட விடாமல் பரிசு பெற்றுவிடுவேன். புள்ளிக்கோலம், படிக் கோலம், புள்ளி வைத்து கம்பிக்கோலம், ரங்கோலி என வித்தியாசமான கோலங்களை போட்டிருக்கிறேன். கோலம் போட எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு வேடிக்கை பார்க்க வருபவர்கள்கூட கோலம் போடுவார்கள். கோலம் தவிர, தாயக்கட்டம், பல்லாங்குழி, கரகாட்டம், பரதநாட்டியம் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும்” என்று கூறுகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்