இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னவெல்லாம் புதுசா வந்துருக்கு? ஆஃபர்கள் என்ன? ஒரு டவுண்டப்...
எக்கச்சக்கமான சலுகைகள் அனைத்து பொருட்களுக்குமே ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷின் மெஷின் போன்ற பல வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஃபேஷன், வீடு மற்றும் கிச்சன் ஐட்டங்கள், கேட்ஜெட்ஸ், ஸ்மார்ட்போன்கள் என அனைத்துக்குமே அதிரடியான ஆஃபர்களை அறிவித்துவருகின்றன.
‘உங்கள் பண்டிகையை மேலும் சிறப்பாக்கிட...’ என ஆரம்பித்து எங்கு பார்த்தாலும் சலுகைகள், ஆஃபர்ஸ் மற்றும் தள்ளுபடி என வெவ்வேறு பெயர்களில் பண்டிகைகாலங்களில் சலுகைகள் அறிவிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, மற்ற பண்டிகைகளைவிட தீபாவளியை முன்னிட்டுதான் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஸ்வீட் ஸ்டால்ஸ், பட்டாசுக் கடைகள், கேட்ஜெட்ஸ், எலக்ட்ரிக் சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்துக்குமே ஆஃபர்கள் அறிவிக்கப்படும். ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என எங்கு திரும்பினாலும் ஆஃபர்களை பார்க்கும்போது ஒருபுறம் உற்சாகம் ஏற்பட்டாலும், எதை வாங்குவது? எதை விடுவது என்ற குழப்பமே அதிகம் இருக்கும். அதேபோல் சலுகைகளை தவிர்த்து ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு ஆடைகள், செல்போன்கள் மற்றும் வாகனங்கள் என புது ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதுபோன்ற சலுகைகள் ஒருபுறம் நல்லதாக பார்க்கப்பட்டாலும் மற்றொருபுறம் இதில் நிறையப்பேர் ஏமாந்துபோவதும் உண்டு. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் மார்கெட்டில் என்னென்ன புதிதாக வந்திருக்கிறது? தீபாவளி மட்டுமல்லாமல் பண்டிகை நேரங்களில் ஆஃபர்களில் பொருட்களை வாங்கும்போது எதையெல்லாம் கவனிக்கவேண்டும்? எப்படி மோசடிகள் நடக்கிறது? என்பது குறித்தெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு என்னென்ன ஆஃபர்ஸ்!
தீபாவாளி என்றாலே ஆஃபர்களுக்கு பஞ்சம் இருக்காதுதான். அதேபோல் இந்த ஆண்டும் நிறைய ஆஃபர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மொபைல் ஃபோன்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 3ஆம் தேதிமுதல் தனது சலுகை விற்பனையை தொடங்கியிருக்கிறது. இதில் ஐ-ஃபோன்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ஸ்கள், ஏர்பாட்ஸ் போன்ற அனைத்துக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வருடந்தோறும் தள்ளுபடி அறிவிக்கும் பிரபல ஆடை நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் இந்த ஆண்டு கைத்தறி ஆடைகள் சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடியை தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல் அனைத்து துணிக்கடைகளிலும் ஆஃபர்கள் போடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, லெஹங்கா, ஷராரா, சோலி மாடல்களில் அப்டேட் வர்ஷன்கள் இந்த ஆண்டு தீபாவளியில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. இதுபோன்ற ஆடம்பரமான ஆடைகளை விரும்பாதவர்களுக்கு கலர் கலர் குர்திகளுடன் ஜீன்ஸ் அல்லது அப்டேட் செய்யப்பட்ட பளாசோ செட்கள் இருக்கின்றன. இவை பார்ப்பதற்கு சிம்பிளாகவும், எலகண்டாகவும் இருக்கும். இதுபோக, கஃப்தான் வகை உடைகளும் இந்த ஆண்டு ட்ரெண்டிங் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாகவே தீபாவளிக்கு ஆண்களும் கொஞ்சம் பாரம்பரிய உடையை அணியத்தான் விரும்புவார்கள். அவர்களுக்கென்றே பிரத்யேகமாய் இண்டோ- வெஸ்டர்ன் ஆடைகளில் மேம்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதுபோக, எப்போதும்போல ஸ்டோன் வொர்க், எம்பிராய்டரி, அனார்கலி டைப்ஸ் உடைகளும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. ஆடைகளுக்கு அழகு சேர்க்கும் ஆபரணங்களிலும் ஆஃபர்கள் இருக்கின்றன. பெரிய உடைகளுக்கு ஏற்றவாறு ஸ்டேட்மெண்ட் இயர்ரிங்ஸ், ஹூக்ஸ் மற்றும் ஜிமிக்கிஸ் இந்த ஆண்டு அதிகம் விற்பனையாகி வருகின்றன.
மொபைல் மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள்
தீபாவளி சமயத்தில் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புதிய வாகனத்தை வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும்விதமாக 1.5% முதல் 3.5% வரை தள்ளுபடிகளை வழங்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவெடுத்திருக்கின்றன. அதன்படி, ஒரு காருக்கு கிட்டதட்ட ரூ.25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். எக்ஸ்சேஜ் முறையில் பழைய கார்களை கொடுத்துவிட்டு, புதிய கார் வாங்குவோருக்கு இன்னும் தள்ளுபடிகள் தர இருப்பதாக பல நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்தியாவை பொருத்தவரை காற்று மாசுபாடு அதிகரித்துக்கொண்டே போவதால் பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பெரும் முயற்சியால்தான் கார் நிறுவனங்கள் இந்த சலுகைகளை அறிவித்திருக்கின்றன. குறிப்பாக, மஹிந்திரா கார் நிறுவனம் தார் மாடல்களுக்கு ரூ. 1.6 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.
மத்திய அரசின் முயற்சியால் ஆச்சர்யமூட்டும் விலையில் விற்பனைக்கு தயாராகும் கார்கள்
கடந்த சில மாதங்களாக விற்பனை மந்தமாக இருப்பதாக சொல்லிவந்த ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தீபாவளி பண்டிகையை தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளது. ‘பாஸ்’ என்ற பெயரில் கவர்ச்சிகரமான சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. பேட்டரி டூவிலர்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்துவரும் இந்நேரத்தில் ஓலா நிறுவனம் தீபாவளி பண்டிகையை சாதகமாக்கி விற்பனையை அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு, கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் மதிப்புடைய ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.50 ஆயிரம் என அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இதுபோக, இன்னும் பல ஆஃபர்களும் இதில் இருக்கின்றன. வாகனங்கள் தவிர, ஐசிஐசிஐ, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் ஹோம் லோன்கள், ஃபிக்ஸ்டு டெபாசிட் போன்றவற்றில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளிலும் EMI ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்த சலுகைகள் சீனியர் சிட்டிசன்கள் மற்றும் வீடு கட்டுபவர்கள் பயனடையும் வகையிலும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிரடி ஆஃபர்ஸ்
தீபாவளி என்றாலே தங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் சேர்வதை குறிப்பதால், நகைகளாகவோ முதலீடாகவோ வாங்கப்படுகிறது. பொதுவாகவே தீபாவளி சமயத்தில் தங்கம் விலை உயரும். ஆனால் ஏற்கனவே இந்த ஆண்டு தங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதால் பெரிய பெரிய நகைக்கடைகள் சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இருப்பினும் தீபாவளி நெருங்க நெருங்க தங்கம் விலை சற்று உயர வாய்ப்புகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலான நகைக்கடைகள் ஓராண்டு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. அதன்படி, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி அடுத்த ஆண்டு தீபாவளியின்போது அந்த தொகைக்கு ஏற்ப நகையை வாங்கிக்கொள்ளலாம். ஒருசில நகைக்கடைகள் இந்த திட்டங்கள்மூலம் முதலீடு செய்வோருக்கு செய்கூலி மற்றும் சேதாரத்தில் சலுகைகளை வழங்குகின்றன. இந்த திட்டங்களை சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை தவிர, விமானங்கள், ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் விழாக்கால சலுகைகளாக கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் முன்கூட்டிய பயண பதிவுகளுக்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
தீபாவளி ட்ரெண்டிங்கில் உள்ள நகைகள் - விழாக்கால விமான போக்குவரத்து சலுகை
ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகள்
நேரில் கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்வது ஒருபுறம் என்றால் அதைவிட ஆன்லைன் ஷாப்பிங் மோகம் இன்று அதிகமாகவே இருக்கிறது. அதிலும் ஆண்டுதோறும் ஆன்லைன் ஷாப்பிங்குகளில் வழங்கப்படும் சலுகைகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவருகின்றன. வீட்டிற்குள் இருந்தபடியே பிடித்த பொருட்களை ஆர்டர் போடுவது, எளிமையான ரிட்டர்ன் வசதி மற்றும் ரீஃபண்டு போன்ற காரணிகளால் ஆன்லைன் ஷாப்பிங்கை நிறையப்பேர் தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் பண்டிகை நாட்களில் சொல்லவே தேவையில்லை. எக்கச்சக்கமான சலுகைகள் அனைத்து பொருட்களுக்குமே ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷின் மெஷின் போன்ற பல வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஃபேஷன், வீடு மற்றும் கிச்சன் ஐட்டங்கள், கேட்ஜெட்ஸ், ஸ்மார்ட்போன்கள் என அனைத்துக்குமே அதிரடியான ஆஃபர்களை அறிவித்துவருகின்றன. மேலும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வோருக்கு வங்கிகளே சலுகைகளை வழங்குவதால் இங்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, ரீடெய்ல் கடைகளுடன் ஒப்பிடுகையில் பொருட்களின் விலையின்மீது 75% வரை ஆன்லைனில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
பட்டாசைகூட ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அதிகரிப்பு
இப்படி ஆஃபர்களில் பொருட்களை வாங்கினாலும் இதில் சில பிரச்சினைகளும் இருப்பதை மறுக்கமுடியாது. ஒருபொருளை ஆன்லைனில் அறிமுகம் செய்யும்போது இருக்கும் விலையானது இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஏற்றப்பட்டு, இதுபோன்ற பண்டிகை நாட்களில் அதன் ஆரம்ப விலையையே தள்ளுபடி விலையாக அறிவிப்பது ஆன்லைன் ஷாப்பிங் மோசடி என்று கூறப்படுகிறது. மேலும் சில பிராண்டுகள் போலி பொருட்களை விற்பனை செய்வதும் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதுபோக ஆர்டர் செய்யும்நேரத்தில் நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட்டால் அக்கவுண்டிலிருந்து பணம்போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நிறைய நேரங்களில் பொருட்கள் டெலிவரி செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதுபோக, விபத்துக்களை தவிர்க்கும்பொருட்டு, ஆன்லைனில் பட்டாசு விற்பதற்கு அரசு தடை விதித்திருக்கும்நிலையில், சிலர் சமூக வலைதள பக்கங்கள்மூலம் பட்டாசுகளை பார்சல்களில் அனுப்புவதாக புகார்கள் எழுந்துவருகின்றன. எனவே பண்டிகை சமயங்கள் மட்டுமில்லாமல் எப்போது கடைகளில் சென்று வாங்கினாலும், ஆஃபர்களில் பொருட்களை பார்க்கும்போது அதுபற்றி நன்கு தெரிந்துகொண்டே பணத்தை அதன்மீது செலவழிப்பது நல்லது.