துணிவும், பொறுமையும் இருந்தால் யாரும் சாதிக்கலாம் - செஃப் மால்குடி கவிதா

ஒரு பெண்ணாக தன்னாலும் சாதிக்க முடியும், மிக சுவையான உணவை கொடுக்க முடியும் என நிரூபித்துக்காட்டியவர்தான் செஃப் மால்குடி கவிதா.

Update: 2024-03-11 18:30 GMT
Click the Play button to listen to article

பொதுவாகவே சமையலறை என்பது பெண்களுக்கான இடம் என்று காலம் காலமாகவே கட்டமைக்கப்பட்டு இந்த சமூகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அதுவே அந்த சமையல், ஒரு துறை சார்ந்தோ, தொழில் சார்ந்தோ வரும்பொழுது அதில் ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. அந்தவகையில் ஒரு பெண்ணாக தன்னாலும் இந்த துறையில் சாதிக்க முடியும், மிக சுவையான உணவை கொடுக்க முடியும் என நிரூபித்துக்காட்டியவர்தான் செஃப் மால்குடி கவிதா. அவருடன் நடத்தப்பட்ட சந்திப்பை இந்த தொகுப்பில் காணலாம்.

உணவை விரும்பி உண்பவர்களுக்கும், விரும்பி சமைப்பவர்களுக்கும் உங்களை நன்றாக தெரியும். இருப்பினும் சீஃப் செஃப் மால்குடி கவிதா என்பதை தாண்டி, கவிதா என்கிற பெண்ணாக உங்களை பற்றி சொல்லுங்களேன்?

நான் சமையல் கலைத்துறைக்குள் வந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே விருதாச்சலத்தில்தான். என் அப்பா உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தார். அவருக்கு சிறுமியாக இருந்த போதே பல வகைகளில் நான் உதவி செய்துள்ளேன். அதேபோல் எங்கள் பண்ணையில் உள்ள பசு மாடுகளை பராமரிப்பதிலும் அதிகம் அக்கறையுள்ள நபராக நான் வளர்ந்தேன். எனது சிறுவயது என்று பார்த்தால் வழக்கமான சிறுமிகளை போலவே பள்ளிக்கு செல்லும் மாணவியாகவே நான் இருந்தேன். இருப்பினும் மற்றவர்களை விட எப்போதுமே வேகம் நிறைந்தவளாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பேன். இந்த செயலினாலேயே எங்கும் தனித்து தெரியும் நான், நண்பர்கள் வட்டாரங்களையும் அதிகம் பெற்றிருந்தேன். குறிப்பாக எந்த ஒரு நிகழ்வின்போதும் பிரச்சினை நிகழ்ந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பது நானாகத்தான் இருப்பேன். இதனால் எனக்குள்ளாகவே தலைமை பண்பு வளர்ந்த அதேவேளையில் படிப்பில் மட்டும் பிரகாசமான மாணவியாக இருக்கவில்லை. இருந்தும் கடின உழைப்பு, எந்த ஒரு விஷயத்திற்கும் முதல் ஆளாக முன்னெடுப்பு போன்ற விஷயங்களே என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது.

டாக்டர், இன்ஜினியர் என எத்தனையோ வேலைகள் இருக்கும்போது, நீங்கள் ஏன் சமையல்கலைத் துறையை தேர்வு செய்தீர்கள்?


சமையல் கலைஞர் மால்குடி கவிதாவின் துவக்கக்கால புகைப்படங்கள் 

எல்லாம் விதிதான், எனக்கு பெரிதாக நோக்கம் என்று ஒன்றும் கிடையாது. சொல்லப்போனால் நான் விருப்பப்பட்டு இந்த துறைக்கு வரவில்லை. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எனக்கு பிடித்ததாக மாற்றிக்கொண்டேன். 10 ஆம் வகுப்பு முடித்த கையோடு போலீசில் சேரும் வாய்ப்பு கிடைத்தும் எனது அப்பா அதை தடுத்தார். காரணம் எங்கள் குடும்பம் எங்களது ஊரில் பெரிய தலைக்கட்டு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கூட என் அப்பாவிற்கு நெருங்கிய நண்பர்தான். மேலும் என் குடும்பத்தில் அனைவருமே படித்தவர்களும்கூட, இருந்தும் ஊர் சூழல் காரணமாக பெண்கள் 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது என்கிற கட்டுப்பாடு எங்கள் வீட்டில் இருந்தது. எனினும் நான் மட்டும் யார் சொல்பேச்சையும் கேட்கமாட்டேன். போலீசுக்கு முயற்சித்தேன், கப்பற்படையில் சேர முனைப்பானேன், ஊடகங்களில் நிருபராகவும் சிறிது காலம் பணிபுரிந்தேன். ஆனால் எந்த ஒரு வேலையுமே என் குடும்பத்திற்கு ஒத்துவரவில்லை. அந்த வரிசையில்தான் கடைசியாக சமையல் கலைத்துறைக்குள் நுழைந்தேன்.

உங்களின் இந்த சமையல்கலைத் துறை சார்ந்த பயணம் எப்போது துவங்கியது?

என்னுடைய தொழில் சார்ந்த பயணத்தை நான் துவங்கியது ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் மௌப்ரிஸ் ஹோட்டலில்தான். பிறகு கிரீம் சாலையில் உள்ள ஹோட்டல் அப்பல்லோ சிந்தூரி, வடபழனியில் உள்ள அம்பிகா எம்பையர், பின்னர் ஹோட்டல் சவேரா என தொடர்ந்த எனது பயணம் 2016 ஆம் ஆண்டுக்கு பின் காட்சி ஊடகங்களில் தோன்றும் அளவுக்கு விரிவடைந்தது. அதன் வாயிலாக பல தனியார் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்த நான், கிட்டத்தட்ட 1800க்கும் அதிகமான உணவுகளை சமைத்து வெகுஜன மக்களிடம் கவனம் பெற்றேன். தற்போதும் இந்த பயணம் இடைவிடாது தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

சமையல் துறையில் நீங்கள் 2 சாதனைகளை நிகழ்த்திக்காட்டி இருக்கிறீர்கள். ஒன்று கின்னஸ் சாதனை, மற்றொன்று 1000 பெண்களை வைத்து நீங்கள் நடத்திய உணவோடு விளையாடு என்கிற நிகழ்வு. இந்த இரு விஷயங்களும் எப்படி உங்களுக்கு சாத்தியமானது?

மனமிருந்தால் மார்க்கமுண்டு! இந்த வார்த்தைதான் இத்தகைய விஷயங்களை சாத்தியப்படுத்த பெரிதும் உதவியது. நாம் செய்ய முடியும் என்று நினைத்தால், எதையுமே நம்மால் சாதிக்க முடியும். இந்த உலகமே அதற்கான சூழ்நிலையை உருவாக்கி தரும், நாம் அதை தேடி சென்று சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெல்ல முடியும்.

பாரம்பரிய உணவு வகை, மேற்கத்திய உணவு வகை, இந்திய கலாச்சாரத்தோடு சேர்ந்த பல வகை உணவுகள் என இருக்கும் போது, இன்றைய இளைஞர்கள் துரித உணவுகளில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்களே அதை பற்றி உங்களது கருத்து?

உண்மைதான் இன்றைய இளைஞர்களும் சரி, சமூகத்தில் பிரபலமாக அடையாளம் காணக்கூடிய நபர்களும் சரி உணவு பழக்கமுறையை ஆரோக்கியமானதாக பின்பற்றுவது கிடையாது. இதனால் காலத்தின் வேகத்தை போலவே அவர்களது ஆயுட்காலமும் சுருங்கி விடுகிறது. நமது அடுத்த தலைமுறையை கல்வியறிவு பெற்ற சமூகமாக மாற்றுவது ஒருபுறம் முக்கியமாக இருந்தாலும், ஆரோக்கியமான சமூகமாக வளர்த்தெடுப்பது ஒவ்வொருவரின் கடமை என்று கூறுவேன். அந்த வகையில் சமீபகாலமாக ஆரோக்கியமான உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நானும், எனது குழுவை சேர்ந்தவர்களும் முனைப்பாக இருந்து வருகிறோம். கடந்த ஆண்டு கூட மில்லட் ஆண்டு அதாவது 'தினை ஆண்டு' என சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டதால், சிறுதானிய உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் நாங்களும் பங்கு பெற்று பல்வேறு மில்லட் உணவுகளை சமைத்து பரிமாறினோம். நூடுல்ஸ் துரித உணவுதான் ஆனால் அதிலும் மில்லட் போன்ற ஆரோக்கியமான கலவையை சேர்த்து பரிமாறும் முறை தற்போது அறிமுகமாகியுள்ளது. எனவே சரியான வழிமுறைகளை பின்பற்றி, நமக்கு பிடித்த உணவையும் ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளும் திறன் ஒவ்வொருவரிடத்திலும் நிச்சயம் இருக்க வேண்டும்.

தற்போது நீங்கள் எடுத்து செய்யும் நிகழ்வுகளில், எந்த மாதிரியான உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?


செஃப் உடையில் மால்குடி கவிதாவின் துவக்க காலம் மற்றும் தற்போதைய புகைப்படம் 

நாங்கள் இப்போது செய்து வருவது தொழில்துறை சார்ந்த கேட்டரிங் சேவை என்பதால், எங்களது வாடிக்கையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதையே உணவாக பரிமாறி வருகிறோம். இதில் இண்டோர் கேட்டரிங், அவுட்டோர் கேட்டரிங் என்கிற இரு வகைப்பாடோடு, கல்யாண விருந்து, பிறந்தநாள் விருந்து, புதுமனை புகுவிழாவின்போது செய்யப்படும் உணவு வகைகள் என பலவிதமான விழாக்களில் உணவு செய்து தருகிறோம். இதில் பஃபே உணவுமுறை, வாழை இலையில் பரிமாறப்பட்ட விருந்து என வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப எங்களது சேவை முறையிலும் மாறுபாடுகள் உள்ளது. இங்கு உணவுகளிலும், செயல்முறைகளிலும் அவரவர் பாரம்பரியத்திற்கு ஏற்றவாறு செய்து பல வெரைட்டிகளை நாங்கள் காட்டினாலும், தயாரித்துக் கொடுக்கப்படும் உணவின் தரத்தை ஒருபோதும் குறைத்து விட மாட்டோம். குறிப்பாக எங்களுக்கு என்று சில கொள்கைகள் உள்ளன. அதன்படி உடல் உபாதை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் எதுவும் சேர்க்காமல் ஆரோக்யத்தையே குறிக்கோளாகக் கொண்ட உணவாகவே எங்களது சமையல் சார்ந்த சேவை இன்றுவரை இருந்து வருகிறது. நாங்கள் உளமாற சமைக்கிறோம், ஆரோக்கியத்தையே குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். இதனால்தான் இன்று வரை எங்களது சேவை இந்த துறையில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

இங்கு செஃப் என்று சொன்னாலே ஆண்களின் முகங்களும், அவர்களுடைய திறமையும்தான் அதிகமா வெளிச்சத்துக்கு வருகிறது. உங்களை போல வெகு சில பெண்களே இத்துறையில் சாதித்தவர்களாக இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?

அதற்கு முதல் காரணம் குடும்ப ஒத்துழைப்புதான். ஒரு ராணுவ வீரன் எப்படி எல்லையை காக்க தன் குடும்பத்தை எல்லாம் விட்டு விட்டு நாட்டைக் காப்பதற்காக எந்நேரமும் தயார்நிலையில் இருக்கிறானோ, அதே போல்தான் இந்த துறையிலும் வாய்ப்பு கிடைக்கும்போது நேரம் காலம் எல்லாம் பார்க்காமல் முழு அர்ப்பணிப்போடு நாம் பணியாற்ற தயார்நிலையில் இருக்க வேண்டும். இதனால் பெண்கள் ஒரு குடும்பத்தில் இருக்கும்போது கணவன், குழந்தைகளை பார்க்கும் பொறுப்பு அவளிடம் இருப்பதால், சரியான நேரத்திற்கு பணி புரிந்துவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்கிற கட்டாய வாழ்க்கைக்குள் சிக்கி கொள்கிறாள். ஆனால் இந்த துறையை பொறுத்தவரை அத்தகைய சிந்தனையை செயல் வடிவம் ஆக்க முடியாது. இங்கு பொறுப்பு, துணிவு,பொறுமை, சகிப்புத்தன்மை, நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் குணம் போன்றவை மிக அவசியமாக தேவைப்படுகிறது. மேலும் தினம் தினம் புது புது விஷயங்களை கற்றுக்கொள்ளும் பழக்கத்தையும் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் பெண்கள் இங்கு சாதிப்பதில் சில சிக்கல் ஏற்படுகின்றன.

இந்த துறையில் ஒரு பெண்ணாக நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?

சவால்கள் என்பது சமையல் கலைத்துறையில் மட்டும் அல்ல, தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களிலுமே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சினிமா மற்றும் ஹோட்டல் இண்டஸ்ட்ரி போன்றவை பலரின் கவனத்தை மிக எளிதில் பெறக்கூடிய தொழில்கள் என்பதால் இதுகுறித்து அதிகம் பேசப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் முன்பு கூறிய பொறுமை, சகிப்புத் தன்மையோடு, நமக்கு இருக்கும் தனித்திறமையே இந்த துறையில் நம்மை நிலை நிறுத்தும்.

இந்த துறையில் முதல் முறையாக சமையல் செய்து உங்களுக்கு கிடைத்த பாராட்டு பற்றி கூறுங்கள்?

ஹோட்டல் அப்பல்லோ சிந்தூரியில் நான் பணியில் சேரும்போது, அங்கு மேலாளராக இருந்த திரு. நடராஜன் அவர்களிடம் கிடைத்த பாராட்டை கூறுவேன். ஃபுட் ட்ரெய்னராக அவருக்கு பரிமாறிய இட்லி,  ஃபிஷ் கறியை அவர் விரும்பி சாப்பிட்டார். இது தவிர சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விவேக் போன்ற திரைப்பிரபலங்களும் நான் சமைத்த உணவை சாப்பிட்டு பாராட்டியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முதல்வர் ஸ்டாலின், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற அரசியல் பிரபலங்களுக்காக நடத்தப்படும் விழாக்களிலும் மிக சிறப்பான உணவினை சமைத்து எங்கள் குழு பரிமாறியுள்ளது. இதற்காக பல இடங்களில் எங்களுக்கு பாராட்டும் கிடைத்துள்ளது. பெரும்பாலான நபர்கள் நாங்கள் சமைக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு... என் அம்மா சமைப்பது போல் உள்ளது என கூறுவார்கள். 

சமையலுக்காக வாங்கிய முதல் விருது பற்றி சொல்லுங்கள்?


 மால்குடி கவிதா கின்னஸ் சாதனை நிகழ்த்திய தருணம் 

என்னுடைய உலகசாதனை நிகழ்வான 35 மணி நேரம் 20 நொடிகள் இடைவிடாது சமைத்த குக்கிங் மாரத்தான் முயற்சியின்போது பல்வேறு பாராட்டுக்கள் கிடைத்தன. அப்போது நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பாகவே ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டு எனக்கு விருதும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுதான் நான் வாங்கிய முதல் விருது.

இந்த கால சூழலில் ஒரு செஃப்பாக வர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

இந்த துறையில் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக நான் உங்கள் முன் இருக்கிறேன். சாதிக்க நினைப்பவர்கள் இந்த துறை இல்லை, எந்த துறையில் வேண்டுமானாலும் சாதிக்கலாம். எல்லா துறைகளை விடவும் மிகவும் சிறந்த துறை என்றால் அது நமது சமையல் கலை துறைதான். மிகவும் பரிசுத்தமான ஒரு துறை இது. உயிருக்குள் ஊடுருவி எல்லா உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்களையெல்லாம் பிரித்து எடுக்கும் நிகழ்வில் நாம் சமைக்குற உணவும் ஒன்று. அப்பேற்பட்ட நாம் மருத்துவரை விட மகத்துவம் வாய்ந்தவர்கள் என்கிற தற்பெருமை எப்போதும் இருக்க வேண்டும். ஆண், பெண் பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முடிவு பண்ணிட்டா இந்த துறைக்கு தைரியமாக வாருங்கள். நாம தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை நாம் விருப்பப்பட்டபடி வாழ்வதில் தவறேதும் இல்லை.

உணவின் சுவையை கூட்ட சில டிப்ஸ் சொல்லுங்கள்?

நாம் சமைக்கும் உணவை மற்றவர்களும் இஷ்டப்பட்டு மகிழ்ச்சியோடு சாப்பிட வேண்டும். அவர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைத்து சமைத்தாலே போதும். மேலும் சமைக்கும்போது அதனை மிகவும் நேசித்து விரும்பி சமைத்தாலே அதுவே அதீத சுவையாக வரும்.

Tags:    

மேலும் செய்திகள்