இதை செய்தால் எந்த குழந்தையும் சாதனையாளர்தான்! ரகசியம் உடைக்கும் ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி!
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழி தமிழ்நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்று ஆகும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழி தமிழ்நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இதில் மாதா, பிதா இருவரும் தெய்வத்திற்கு முன்பாக குறிப்பிடப்படுவதில் ஆச்சரியம் இல்லை என்றாலும், குருவையும் கடவுளை மிஞ்சிய நபராக கூறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. ஏனெனில் தாய், தந்தை என்பவர்கள் ஒரு குழந்தையின் உடலோடும், உயிரோடும் கலந்தவர்கள் என்பதால் அவர்கள் காணும் வெற்றியை மகிழ்வோடு கொண்டாடுவதில் வியப்பில்லை. ஆனால் குருவோ இவர்களையும் மிஞ்சிய வண்ணம் எந்த ஒரு ரத்த பந்தமும் இல்லாத போதும், தான் கற்று தந்த கல்வியால் ஒரு குழந்தை உயர்வை அடையும் பட்சத்தில், எந்த ஒரு எதிர்பார்ப்பும், பொறாமையும் கொள்ளாத நபராக மகிழ்கிறார்கள். இதனாலேயே தமிழ் கண்ட முதுமொழி புவி எங்கும் அதே வரிசையில் உச்சரிக்கப்படுகிறது. அந்த வகையில் கடவுளின் சிறப்பு குழந்தைகளாக கருதப்படும் ஸ்பெஷல் சில்ட்ரன் என அழைக்கப்படும் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு புகட்டி, அவர்கள் காணும் உயரத்தில் உள்ளார்ந்து மகிழ்ந்து ஆசிரியர் பணியாற்றி வரும் திருமதி. அகிலாண்டேஸ்வரி நம்முடன் பகிர்ந்துக் கொண்ட தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
உங்களுக்கு எப்படி இத்தகைய சிறப்பு குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது?
சொல்லப்போனால் நான் ஆசிரியர் பணிக்காக பி.எட். சேரும் போது ஸ்பெஷல் எஜுகேஷன் பிரிவை தேர்வு செய்யும்வரை சிறப்பு குழந்தைகளுக்குக்கான உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற சிந்தனை துளியும் இல்லாதவளாகத்தான் இருந்தேன். பிறகு அவர்களின் பாடத்திட்டம் மற்றும் கல்வி முறையை பயின்ற சமயத்தில்தான் முழுமையாக அவர்களின் வாழ்க்கைமுறை குறித்த தெளிவு எனக்கு கிடைத்தது. பின்னர் அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற சிந்தனையை ஊக்குவிக்க அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணித்தேன். நான் பி.எட். படிக்கும்போது பார்வையற்ற குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் கல்வி முறையைதான் கற்றிருந்தேன். அதன் அடிப்படையில் என் படிப்பு முடிந்த கையோடு சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி நிலையம் துவங்கினேன். துவக்கத்தில் எங்கள் கல்வி நிலையம் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சில சிரமங்கள் இருந்தபோதும், எங்களது செயல்பாடுகள் பலருக்கும் பிடித்திடவே சில நாட்களிலேயே பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை எங்கள் கல்வி மையத்திற்கு அழைத்து வர ஆரம்பித்தனர். இவ்வாறுதான் எனது ஆசிரியர் பணி துவங்கியது.
வகுப்பறையில் ஆசிரியை அகிலாண்டேஸ்வரி மற்றும் மாணவர்கள்
பொதுவாகவே பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம், ஆனால் மனரீதியாக சிக்கல் உள்ள குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது?
3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி படிநிலைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு தாயும், குழந்தைகளின் செயல்பாடுகள் அந்தந்த வயதிற்கு ஏற்றார் போல் உள்ளதா? தவழ்கிறார்களா? பேச முயல்கிறார்களா? போன்றவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிச்சயம் நிகழ்ந்திட வேண்டும். இதில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். ஆனால் சில குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் முந்தைய தலைமுறையினரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டு குழந்தைகளுக்கு வரும் சிக்கல்களை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இத்தகைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக பயிற்சித் தந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கும். ஒருவேளை 3 வயது, 5 வயது கடந்து வந்தால் அவர்களின் கல்வி கற்கும் முறையில் தாமதம் ஏற்பட்டு பின்தங்கியவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது.
உங்களிடம் எப்படிப்பட்ட குழந்தைகள் வருகிறார்கள்? அவர்களுக்கான பயிற்சி முறை எப்படியாக இருக்கிறது?
எங்களது பயிற்சி மையத்திற்கு ஸ்பெஷல் சில்ட்ரன் மட்டுமல்லாமல் சாதாரண குழந்தைகளும் வருகிறார்கள். நாங்கள் முழுக்க முழுக்க அவர்களின் தனி திறமையை கண்டறிந்து பயிற்சி தரும் விஷயத்தைதான் செய்து வருகிறோம். குறைபாடு உள்ள குழந்தைகள் எங்களை அணுகினால் அவர்களது மனநலத்தை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்களுக்கான சரியான பயிற்சி மையத்திற்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம். அது அரசு சார்ந்ததாகவும் இருக்கலாம், தனியாராகவும் இருக்கலாம்.
வாய் பேச முடியாத குழந்தைகள் உங்களை அணுகும்போது எந்த மாதிரியான பயிற்சிகளை நீங்கள் அளிக்கிறீர்கள்?
பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை அகிலாண்டேஸ்வரி
வாய் பேச முடியாத குழந்தைகள் எனும்போது அவர்கள் பிறவியிலேயே பேச முடியாமல் இருக்கிறார்களா? அல்லது சமூக சூழல் காரணமாக பேச முடியாத நிலைக்கு அவர்கள் சென்றுள்ளார்களா என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும். முன்பெல்லாம் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருப்பார்கள் அல்லது பக்கத்துக்கு வீட்டு குழந்தைகளோடாவது சேர்ந்து விளையாடுவார்கள். அந்த சமயத்தில் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பு இயற்கையாகவே குழந்தைகளுக்கு அமைந்தது. ஆனால் இப்பொழுது தாய், தந்தை இருவருமே வேலைக்கு சென்று விடுகிறார்கள், ஒரே ஒரு குழந்தையைத்தான் பெற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். இதனால் இன்றைய குழந்தைகள் அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் மொபைல் போன்களையே அவர்களது உலகமாக மாற்றி வாழ ஆரம்பிக்கிறார்கள். இதனால் அதிகளவில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல், பேச்சு திறனில் குறைபாடு ஏற்படுகிறது. அத்தகைய குழந்தைகளை சரி செய்வது எளிமையான ஒன்றுதான். மொபைலை தவிர்த்து பிற குழந்தைகளோடு பேச பழக வைத்தாலே சரி ஆகி விடுவார்கள். ஆனால் பிறவியிலேயே பேச முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு முறையான பயிற்சி கொடுத்தால் மட்டுமே சரி செய்ய முடியும். அத்தகைய குழந்தைகளை கண்டறிந்து மதிப்பீடு செய்து சரியான பயிற்சி மையத்திற்கு அனுப்புவதையே நாங்கள் செய்து வருகிறோம். ஏனெனில் எங்களிடம் அதற்கான வசதிகள் இல்லை.
மிட் ப்ரெயின் எக்சர்சைஸ் என்றால் என்ன? இத்தகைய பயிற்சி முறை எந்த குழந்தையையும் சாதனையாளராக மாற்றுமா?
கண்டிப்பாக முடியும், உலகத்தில் பிறந்த அத்தனை குழந்தைகளுமே சாதிக்க பிறந்தவர்கள்தான். அவர்களுக்கான சரியான வழித்தடத்தை கண்டறிந்தால் அதனை சாத்தியமாக்க முடியும். இதில் அந்தந்த குழந்தையின் ஆர்வத்தை பொறுத்தே அவர்களின் வெற்றிக்கான காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விஷயத்தை எளிதாக்க மிட் ப்ரெயின் எக்சர்சைஸ் பெரிதும் கைகொடுக்கிறது. இந்த பயிற்சி நம்முடைய மூளையை தூண்டிவிடுவதோடு, வலது மற்றும் இடது மூளையை சரி விகிதத்தில் ஆக்டிவாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. இதற்கு அடிப்படை தத்துவமே நம்முடைய உடலை எப்போதுமே ஆக்டிவாக வைத்துக் கொள்வதுதான். இதில் மாயமோ, மந்திரமோ எதுவும் இல்லை, எல்லோராலுமே இதனை செய்ய முடியும். இருப்பினும் குழந்தைகளின் வளர்ச்சி காலத்தில் இந்த மிட் ப்ரெயின் எக்சர்சைஸ் பயிற்சி முறையாக கொடுக்கும்போது நல்ல மாற்றத்தை நாம் கண்கூடாக பார்க்க முடியும். காரணம் புது புது செல்கள் மூளையில் வளர்ச்சி அடையும் பருவம் என்பதால் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு நல்ல மாற்றத்தை இது பெற்றுத்தரும்.
எப்படிப்பட்ட பயிற்சிகள் மிட் ப்ரெயின் எக்சர்சைஸின்போது கொடுக்கப்படுகிறது?
கண்ணைக் கட்டிக்கொண்டு எதையும் கண்டுபிடிக்கும் சிறுமி சம்ருதிகா
இதற்கு என்று சிறப்பு பயிற்சிகள் எல்லாம் எதுவும் இல்லை. முதலில் உடலை தயார் செய்வதற்கான உடற்பயிற்சிகளை தலை முதல் கால் வரை செய்ய சொல்வோம். பிறகு கைகளுக்கு, கண்களுக்கு என தனித்தனி பயிற்சி. யோகா, தியானம், தங்களை உத்வேகப்படுத்திக்கொள்ள நடனம் என பல யுக்திகளை கையாண்டு மூளையை புத்துணர்வாக வைத்துக் கொள்வதே மிட் ப்ரெயின் எக்சர்சைஸ் என சொல்லப்படுகிறது. இதற்கான நல்ல மாற்றத்தை 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளிடமும் நம்மால் பார்க்க முடியும். இந்த பயிற்சியை பெற சரியான வயது என்று பார்த்தால், 6 முதல் 9 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை சொல்லலாம். ஏனெனில் அவர்கள்தான் நாம் சொல்வதை கேட்டு சரியாக இந்த பயிற்சியை செய்வார்கள். பிறரிடம் கொஞ்சம் கவனச் சிதறல் இருக்கலாம்.
உங்களுடைய மாணவி சம்ருதிகா ஒரு சாதனையாளர், அவர் கண்ணைக்கட்டிக் கொண்டு எதையும் கண்டுபிடிக்கிறார். வர்ணங்கள் துவங்கி எண்கள் வரை அசால்ட்டாக எல்லாவற்றையும் சொல்கிறார் இது எப்படி சாத்தியம்?
நம்முடைய மூளைக்கும் பார்வை திறன் உண்டு. அதை வைத்துதான் இவை எல்லாவற்றையும் அவர் கண்டுபிடிக்கிறார். இதற்கு மிட் ப்ரெயின் எக்சர்சைஸ் பெரிதும் உதவினாலும், அடிப்படையில் இந்த பயிற்சி ஒவ்வொருவரின் கல்வி திறனை அதிகப்படுத்தவே கொடுக்கப்படுகிறது. பல குழந்தைகள் நியாபக மறதி, மொபைல் போன் மீது நாட்டம், பிற குழந்தைகளுடன் இணைந்து பழகாத தன்மை போன்ற விஷயங்களில் சிக்கி தவித்து வருகிறர்கள். அத்தகைய சிக்கல்களை தீர்ப்பதற்காகவே இந்த மிட் ப்ரெயின் எக்சர்சைஸ் முறையை சொல்லித்தர ஆரம்பித்தேன். முதலில் 5 குழந்தைகளோடு இலவசமாக துவங்கிய இந்த பயிற்சி முறை இன்று பலருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களது கல்வி திறனிலும் பல மாற்றங்கள் காண முடிகிறது. இந்த பயிற்சியின் முக்கியமான விஷயமே, டி.வி., மொபைல் போன்களை தவிர்ப்பதுதான். அதனை நிறுத்திவிட்டாலே அவர்களது திறமை தானாக வெளியே வர ஆரம்பிக்கும். பிறகு அதுவே அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி சிறந்த மாணவர்களாக பிரகாசிக்க வழியும் வகுக்கும்.