உணவுக்கும், பக்திக்கும், அழகுக்கும் பெயர்போன "உடுப்பி" - கர்நாடக கரையோரம் ஒரு பயணம்!

கர்நாடகத்தின் அமைதியான கரையோரத்தில் ஒளிந்திருக்கிற ஒரு அழகிய நகரம் உடுப்பி.;

Update:2025-04-15 00:00 IST
Click the Play button to listen to article

கர்நாடகத்தின் அமைதியான கரையோரத்தில் ஒளிந்திருக்கிற ஒரு அழகிய நகரம் உடுப்பி. ஆன்மிக பாரம்பரியம் மற்றும் கடலோர அழகு கொட்டிக் கிடக்கும் இந்த நகரத்தில் கோவில்கள், சுவையான உணவு மற்றும் ஆழமான பாரம்பரியங்கள் ஏராளமாக உள்ளன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வரும் இந்த நகரம் குறித்தும், இங்கு இருக்கும் சுற்றுலா தலங்கள் குறித்தும் விரிவாக காணலாம்.

ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்


உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், தெற்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தீர்த்தஸ்தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில், 13ஆம் நூற்றாண்டில், துவைத தத்துவத்தின் நிறுவனரான மஹான் ஸ்ரீ மாத்வாசாரியாரால் நிறுவப்பட்டது. என்னதான் உடுப்பியில் அனந்தேஸ்வரர் மற்றும் சந்திரமௌலீஸ்வரர் கோவில், கொல்லூர் மூகாம்பிகை கோவில், கார்கலா சதுர்முக பசதி ஆலயம் என எத்தனையோ பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்தாலும், இந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மிகவும் வித்தியாசமான அம்சம் கொண்ட ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. காரணம் இந்தக் கோவிலில் பக்தர்கள் நேரடியாக இறைவனை தரிசிக்க முடியாது. நவகிரக கிண்டி எனப்படும் ஒன்பது துளை உள்ள வெள்ளி ஜன்னலின் வழியேதான் பக்தர்கள் கிருஷ்ணரை தரிசிக்கின்றனர். இது மிக அபூர்வமான ஒன்று ஆகும். இங்குள்ள கிருஷ்ணர் சிலையின் தோற்றம் பற்றி ஒரு புராணக் கதையுண்டு. ஒருமுறை ஒரு கடல் வியாபாரி, துவாரகாவில் இருந்து ஒரு சந்தனக் கட்டையில் இந்த சிலையை கண்டுபிடித்ததாகவும், பின்னர் அதை ஸ்ரீ மாத்வாசாரியாரே பிரதிஷ்டை செய்ததாகவும் நம்பப்படுகிறது. இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சம் அஷ்டமடங்கள். ஸ்ரீ மாத்வாசாரியாரே நிறுவிய இந்த மடங்களை, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு மடம் என அதற்கான பூஜைகளை கோவில் நிர்வாகமே செய்து வருகிறது. இது “பர்யாய” எனப்படும் தனித்துவமான முறையாகும். மேலும் இந்த கோவில், உடுப்பி சைவ உணவுக்கழகத்தின் இதயமாகவும் திகழ்கிறது. பொதுவாகவே உணவுக்கு பெயர் போன உடுப்பியான இங்கு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அன்னதானம் மிகவும் பிரசித்தி பெற்றது. வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த உணவு, அதன் சுவை மற்றும் பக்தி உணர்வால் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

செயின்ட் மேரிஸ் தீவுகள்


 மால்பே கரையோரத்தில் காணப்படும் ஆறு மூலைக்கோண பசால்ட் கற்கள்

மால்பே கரையோரத்தில் இருந்து படகு மூலம் செல்லக்கூடிய இந்த தீவு, இயற்கை மற்றும் வரலாற்று சிறப்புகளின் தொகுப்பாக பார்க்கப்படுகிறது. இங்கு காணப்படும் அறிவியல் ரீதியான ஆறு மூலைக்கோண பசால்ட் கற்கள் (hexagonal basalt rocks) பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் உருவானவையாம். இதனால் இது இந்தியாவில் உள்ள மற்ற எந்த இடங்களிலும் இல்லாத தனித்துவமான பகுதியாக அறியப்படுகிறது. வாஸ்கோடகாமா, 1498ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலாக இறங்கிய இடம் இதுதான் என கூறப்படும் நிலையில், அவர் தன்னை வழிநடத்திய மேரி மாதாவை நினைவுகூர்ந்து இந்த இடத்திற்கு “செயின்ட் மேரி” என பெயரிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த தீவில் நீராட அனுமதி இல்லை என்றாலும் பாறைகளில் சுத்தி நடந்து இயற்கையின் அழகை ரசிக்கலாம். தென்னை மரங்களால் சூழப்பட்ட வெண்மணல் கடற்கரையான இங்கு அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரைதான் சிறந்த பருவமாம். இந்த நாட்களில் படகு சேவைகளும் இயங்குவதால் ஒரு அமைதியான அனுபவத்தை சுற்றுலா பயணிகள் பெறுகின்றனர்.

மால்பே கடற்கரை


சிறப்புகள் வாய்ந்த மால்பே கடற்கரை

என்னதான் உடுப்பி நகரம் மரவந்தே கடற்கரை, ஒட்டினேன் கடற்கரை, கபு கடற்கரை என பற்பல அழகிய கடல் சார் பகுதிகளை பெற்றிருந்தாலும், மால்பே கடற்கரைக்கு என தனி சிறப்பு உண்டு. உடுப்பியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த மால்பே கடற்கரை, சுத்தமான கடலோரம், வாட்டர் ஸ்போர்ட்ஸ் மற்றும் செயின்ட் மேரி தீவுக்கான நெருக்கமான பகுதி ஆகியவற்றால் சுற்றுலா பயணிகளை பெரியளவில் ஈர்த்து வருகிறது. பழைய வர்த்தக நாகரிகங்களுடன் தொடர்பு கொண்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க கடற்கரையான இங்கு, மாலைநேர சூரிய அஸ்தமனம் பார்க்க சிறந்த அம்சமாக இருக்கும். ஜெட் ஸ்கீ, பாராசெய்லிங், பனானா ரைடு, சர்ஃபிங் போன்ற பல சாகச விளையாட்டுகளுக்கு இது வசதியான இடமாகும். இந்த பகுதியில் மீன்பிடி துறைமுகம் ஒன்றும் உள்ளது. மீன் ஏலம் நடைபெறும் காலை நேரத்தில் அதனை பார்வையிடுவது ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமக்கு கொடுக்கும். அதேவேளையில், அங்குள்ள உள்ளூர் வாசிகளோடு இணைந்து பயணித்து உள்ளூர் கடல் உணவுகளை சுவைத்து மகிழும் வாய்ப்பையும் அது பெற்று கொடுக்கும்.

உணவு நகரம்


பிரபலமான உடுப்பி உணவான தோசை

உடுப்பி உணவு என்பது தென்னிந்திய உணவின் ஒரு பிரபலமான பாணி ஆகும். இதில் அரிசி, பருப்பு, தேங்காய், புளி, மிளகாய் போன்றவை அடிப்படையாகவும், வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை தவிர்க்கப்படும் உணவுகளாகவும் பார்க்கப்படுகிறது. மசாலா தோசை, இட்லி சாம்பார், பொங்கல், ரவை தோசை, ஹோலிகே போன்றவை இதில் பிரபலமான உணவுகள் ஆகும். குறிப்பாக சைவ உணவுப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த "உடுப்பி ஹோட்டல்கள்" உலக அளவில் பிரபலமானவை. குறிப்பாக இவை சுத்தம், சுவை, சேவை மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை பெரியளவில் ஈர்த்து வருகின்றன. மேலும் உடுப்பி உணவு பாணி இன்று இந்தியா முழுவதும் பரவி, பல நகரங்களில் “உடுப்பி ஹோட்டல்கள்” என்ற பெயரில் சைவ உணவகங்களாக செயல்பட்டு, சுத்த சைவ உணவின் நம்பிக்கை சின்னமாக உருவெடுத்து வெற்றிகரமாக பயணித்தும் வருகின்றன. இப்படி கர்நாடக மாநிலத்தின் கலாசாரக் கட்டமைப்பை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த உடுப்பி நகரம், பக்தியின், ஒழுக்கத்தின், உணவின் மற்றும் அழகின் இந்திய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

"உடுப்பி" கூகுள் வரைபடம்

Full View


Tags:    

மேலும் செய்திகள்