AI உதவியுடன் பவதாரிணியின் குரலுக்கு மீண்டும் உயிர் கொடுத்த யுவன் சங்கர் ராஜா!
‘ஒளியிலே தெரிவது தேவதையா’ அழகி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் ஒரே முகம் பவதாரிணி தான்.
‘அழகி’ படத்தில் இடம்பெற்ற ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் ஒரே முகம் பவதாரிணிதான். ஆனால் அவர் இன்றோ இப்பாடலில் வரும் வரிகளை போலவே ஒளியில் தெரிந்த தேவதையாக நமக்கெல்லாம் காட்சியளித்துவிட்டு காற்றோடு கலந்து போய்விட்டார். இனி தனித்துவமான அந்த தேவதையின் குரல் எங்கு புதிதாக பாடப்போகிறது, நாம் எங்கு கேட்கப்போகிறோம் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், இதோ என் சகோதரி மீண்டும் பாடுவாள் என்று பலரும் ஆச்சரியப்படும் விதமாக, அவர் தம்பி யுவன் தனது இசையில் தன்னுடைய அக்காவை பாட வைத்து அழகு பார்த்துள்ளார். அதுவும் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பாட வைத்திருப்பது பலருக்கு சந்தோஷத்தையும், இது எப்படி சாத்தியம்? என்று பலரும் வியந்து போகும் அளவுக்கும் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க செய்துள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் யுவனின் இசையில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலில் தான் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த மேஜிக் நிகழ்ந்துள்ளது. இந்த யோசனையை கொடுத்தது யார்? யுவனின் இந்த ஆசையை நிறைவேற்ற உந்துதலாக இருந்த சம்பவம் என்ன? எந்த AI நிறுவனம் இந்த கனவை சாத்தியப்படுத்தியது? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
ஏ.ஆர். ரகுமானின் புதிய முயற்சி
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா, ஷாகுல் ஹமீது
கடந்த பிப்ரவரி மாதம் 09-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘லால் சலாம்’. லைகா நிறுவனம் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவரின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த “திமிறி எழுடா” பாடலை மறைந்த பாடகரும், தனது நெருங்கிய நண்பருமான ஷாகுல் ஹமீது மற்றும் மறைந்த பம்பா பாக்கிய ஆகியோரை வைத்து பாட வைத்திருந்தார் ரகுமான். இப்பாடல் வெளியான சமயத்தில் ஓராண்டுக்கு முன் மறைந்த பம்பா பாக்யாவும், 27 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஷாகுல் ஹமீதும் எவ்வாறு இந்த பாடலை பாடி இருக்க முடியும்? எப்படி இது சாத்தியம் ஆனது? என்பது அப்போது பலருக்கும் மிகப்பெரிய கேள்வியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அதன் பிறகுதான் தெரிந்தது AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் “திமிறி எழுடா” பாடலை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கியுள்ளார் என்கிற விவரம். அந்த சமயம் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த பதிவில், “பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரது குரல் வழிமுறைகளைப் பயன்படுத்த அவர்களது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று தகுந்த ஊதியத்தை கொடுத்துதான் இந்த பாடலை உருவாக்கினோம். தொழில்நுட்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால் அது நமக்கு நன்மையை தருமே தவிர, எந்தவித அச்சுறுத்தலையும், பயத்தையும் ஏற்படுத்தாது" என தெரிவித்திருந்தார். மேலும் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குரல்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அதற்காக பாடுபடும் இசைத்தளமான Timeless Voices என்ற AI ஆப்பைப் பயன்படுத்தி, இவ்விரு பாடகர்களின் குரல்களுக்கு உயிர் கொடுத்ததாகவும் ரகுமான் கூறியிருந்தார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இந்த முயற்சிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்ததோடு அவரின் ரசிகர்களும் அந்த பாடலை கொண்டாடி தீர்த்தனர். மேலும் நட்புக்கு இலக்கணமாக ரகுமான் செய்திருக்கும் இந்த செயல் பாராட்டுக்குரியது என்றும் கூறி மகிழ்ச்சியடைந்தனர். ரகுமானின் இந்த புதிய முயற்சிதான் இன்று யுவனையும் கவர்ந்திழுத்துள்ளது.
யார் இந்த 'Timeless Voices AI'?
Timeless Voices என்ற AI நிறுவனத்தை நிர்வகித்து வரும் கிருஷ்ண சேத்தன்
இன்றைய தமிழ் சினிமாவில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்த பிரபலங்களை உயிர்ப்பித்து நடிக்க வைப்பது, பாட வைப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இறந்த பாடகர்களின் குரல்களை மறு உருவாக்கம் செய்யும் பணிகளை Timeless Voices என்ற AI நிறுவனம் தற்போது கையில் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை தொடங்கி நிர்வகித்து வருபவர் கிருஷ்ண சேத்தன். இவர் இந்நிறுவனத்தின் தொழிநுட்ப ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் மிக்ஸிங் இன்ஜினியராக, அதாவது இசைக்கோர்வை பொறியாளராக பல படங்களில் பணியாற்றியவர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் சிறந்த இசைக்கோர்வையாளர் என்பதனால்தானோ என்னவோ திரைப்படப் பாடல்களில் மறைந்த பாடகர்களின் குரல்களை மறு உருவாக்கம் செய்யும் பணியை கையில் எடுத்துள்ளார். அதற்காக அவர் நடத்திவரும் AI நிறுவனத்தின் மூலம் மறைந்த பாடகர்கள் ஏற்கனவே பாடியிருக்கும் பாடல்களின் துல்லியமான குரல் பதிவுகளை உரியவர்களிடம் இருந்து பெற்று, ஒருவரை பாட வைத்து அந்த குரலை மறைந்தவரின் குரலாக மாற்றும் பணியை வெற்றிகரமாக செய்து வருகிறார். மேலும் உரிமை மீறல் போன்ற எந்த பிரச்சினைகளும் வந்து விடக்கூடாது என்பதற்காக மறைந்த பாடகர்களின் குடும்பத்தினரின் அனுமதியை பெறுவதுடன், அவர்களுக்கான சன்மானத்தையும் வழங்கி இதைச் சட்டப்படி செய்து வருகின்றார். அதன் அடிப்படையில்தான் கிருஷ்ண சேத்தன் உதவியுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்தில் “திமிறி எழுடா” எனற பாடலை மறைந்த பாடகர்களான ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோர் பாடுவது போல் மறு உருவாக்கம் செய்து பலரையும் அசர வைத்திருந்தார். தற்போது இந்த பாணியை பின்பற்றித்தான் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை ‘கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள “சின்ன சின்ன கண்கள்” பாடலில் மறுஉருவாக்கம் செய்துள்ளது படக்குழு. இதுதவிர, அடுத்ததாக ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் மறைந்த நடிகர்களான மனோபாலா, விவேக் ஆகியோரின் குரல்களை மறு உருவாக்கம் செய்யும் பணியையும் கையில் எடுத்துள்ளார் கிருஷ்ண சேத்தன்.
பவதாரிணியின் குரலுக்கு உயிர் தந்த யுவன்
"சின்ன சின்ன கண்கள்" பாடல் காட்சியில் குழந்தையுடன் விஜய் மற்றும் சினேகா - மறைந்த பவதாரிணியுடன் யுவன் சங்கர் ராஜா
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யுடன் இணைந்து டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், படத்தில் விஜய் பாடியிருந்த முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி விஜய்யின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு யுவனின் இசையில் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் வெளிவந்தது. கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இப்பாடலை விஜய்யும், பவதாரிணியும் இணைந்து பாடியிருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. 4.41 நிமிடங்களுக்கு ஓடும் இப்பாடலின் முதல் பாதியை பவதாரிணியும், இரண்டாம் பாதியை விஜய்யும் பாடியுள்ளனர். அதிநவீன செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டுள்ள மறைந்த பவதாரிணியின் குரலை கேட்ட அனைவருக்கும் ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் - பவதாரிணி குரலில் இதுபோன்ற ஒரு பாடலை கேட்பது 90 கால கட்டங்களுக்கே அழைத்துச் செல்வது போன்று உள்ளதாக ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் பாடல் பதிவின்போது விஜய்யுடன் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா
"சின்ன சின்ன கண்கள்” பாடலை பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என்று அவர் உயிரோடிருக்கும் போதே யுவன் நினைத்ததால், எப்படியாவது இந்த பாடலில் அவரின் குரலை கொண்டு வந்து விட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக கிருஷ்ண சேத்தனின் உதவியை நாடியுள்ளார். யுவனின் வேண்டுகோளை மிகவும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட அவரும் பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவனின் அலுவலகத்தில் இருந்து பெற்று மூன்று நாட்கள் தனது குழுவினருடன் தீவிரமாக இணைந்து பணியாற்றி செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் யுவனின் ஆசையை சாத்தியப்படுத்தியுள்ளார். இப்பாடல் உருவாக்கம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த யுவன் சங்கர் ராஜா, அதில், “சின்ன சின்ன கண்கள் பாடலை பெங்களூருவில் இசையமைத்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த பாடலை பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என்று எனக்கும், வெங்கட் பிரபுவுக்கும் தோன்றியது. அதனால், பவதாரிணி சிகிச்சை முடிந்து வந்த பிறகு இந்த பாடலை ரெக்கார்டு செய்துகொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், நாங்கள் அப்படி நினைத்த ஒருமணி நேரத்திற்குள்ளாக அவர் மறைந்து விட்டார் என்ற செய்திதான் எங்களுக்கு வந்து சேர்ந்தது. அப்போது எங்களுக்கு தெரியாது இந்த பாடலுக்கு AI மூலமாகத்தான் பவதாரிணியின் குரலை பயன்படுத்துவோம் என்று. இதை சாத்தியப்படுத்த உதவியாக இருந்த இசைக்கலைஞர்களுக்கு நன்றி" என கூறியிருந்தார். எது எப்படியிருந்தாலும் 47 வயதில் மறைந்த மெல்லிசை குரலின் ராணியான பவதாரிணி இன்று காற்றோடு கரைந்து மறைந்துவிட்டார். இந்த கான குயில் இன்று நம்மோடு இல்லாவிட்டாலும், அவரது நினைவை தொடர்ந்து நம் மனம் சுமந்திட யுவன் சங்கராஜா எடுத்துள்ள இந்த முயற்சிக்கு அன்பு கலந்த வாழ்த்துகளை நாமும் தெரிவிக்கலாம்.
The second single from #TheGreatestOfAllTime is very special for me. Words cannot do justice to describe this feeling. When we were composing this song in Bangalore, @vp_offl & I felt this song is for my sister and at that time I thought to myself once she’s better and out of the…
— Raja yuvan (@thisisysr) June 22, 2024