மீண்டும் இணையும் ரஜினி, கமல்! - ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

ஆரம்பத்தில் அவருக்கு கமலைவிட ஐந்து மடங்கு சம்பளம் குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது. குறிப்பாக 1977ஆம் ஆண்டு வெளியான ‘பதினாறு வயதினிலே’ படத்தில் கமலுக்கு சம்பளம் ரூ.25,000, ஆனால் ரஜினியின் சம்பளமோ ரூ.5000தான்.

Update:2024-09-17 00:00 IST
Click the Play button to listen to article

அது 80களின் காலகட்டம். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரப்பப்போவது யார்? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் கிடைத்த இரு ஜாம்பவான்கள்தான் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். கமல் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, படிப்படியாக ஹீரோவாக உயர்ந்தவர். ஆனால் சினிமாவில் நடித்தால் மட்டும் போதும், ஹீரோவாகவேண்டும் என்றெல்லாம் இல்லை என்ற எண்ணத்துடன் இருந்த ரஜினியை ஹீரோ வாய்ப்பு தேடிவந்தது. எப்படியோ ஒருவழியாக தமிழ் சினிமாவில் கதாநாயகன் வெற்றிடத்தை நிரப்ப கமலும் ரஜினியும் கிடைத்துவிட்டனர். பொதுவாகவே நடிகர்கள் என்று சொன்னாலே யாருக்கு மக்கள் மத்தியில் அந்தஸ்து அதிகம்? என்ற போட்டி இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த இரு நட்சத்திரங்களிடையேயான உறவு அப்படி இருக்கவில்லை. கமலா? ரஜினியா? என்பதை விட கமலும் -ரஜினியும் என்பதைத்தான் ரசிகர்கள் அதிகம் விரும்பினர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும்விதமாக மொத்தம் 13 படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அவற்றில் 6 படங்கள் ப்ளாக் பஸ்டர்களாக அமைந்தன. பின்னர் இவர்கள்மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்ட இருவரும் இனிமேல் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதன்பின் இருவருமே தங்களுக்கே உரித்தான பாணியில் வளர்ந்து இன்று இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் என புகழின் உச்சத்தில் இருக்கின்றனர். மூன்று தசாப்தங்களை தாண்டி இன்றும் அவர்களுடைய ஆத்மார்த்தமான நட்பு தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படி தமிழ் சினிமாவை ஆண்டுவரும் இருவரும் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்க முடிவெடுத்திருக்கின்றனர். அதற்கான காரணம் ரசிகர்களை மிகவும் வியப்படைய வைத்திருக்கிறது. இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த இருவரும் ஒன்றாக பயணித்த தருணங்களை ரசிகர்களால் இந்த நேரத்தில் நினைத்து பார்க்காமல் இருக்கமுடியாது.

இரு துருவங்களை இணைத்த பாலம்!

பிளாக் & வொயிட் காலத்திலிருந்தே பல வெற்றிப்படங்களை கொடுத்துவந்த கே.பாலசந்தர், 80களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருந்தார். அவருடைய இயக்கத்தில் நடிக்க அப்போதிருந்த நடிகர்கள் பலரும் தவம் கிடக்க, 1975ஆம் ஆண்டு கமலுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடன இயக்குநர், உதவி இயக்குநர், கதை ஆசிரியர் என படிப்படியாக சினிமா உலகில் முன்னேறி கதாநாயகன் என்ற அந்தஸ்தை அடைந்த கமலும் ஸ்ரீவித்யாவும் முக்கிய வேடங்களில் நடித்து உருவானது ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம். இந்த படத்தில் நடித்தபோதுதான் கமலும், ஸ்ரீவித்யாவும் ஒருவர்மீது ஒருவர் காதலில் விழுந்தனர். அப்போதே காதல் இளவரசன் என பெயர் பெற்றிருந்த கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க பலரும் ஆசைப்பட்ட சமயத்தில், எதிர்பாராமல் ஒரு புதுமுகத்துக்கு வாய்ப்பு கிடைத்தது.


இயக்குநர் கே. பாலசந்தரின் படத்தில் கமல் மற்றும் ரஜினி

சிறிய வேடம் என்றாலும் பார்ப்பதற்கும் நடிப்பும் வித்தியாசமாக இருக்கிறதே! என முதல் படத்திலேயே மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்விதமான வேடத்தை ஏற்றிருந்தார் அந்த நபர். கன்னட வரவான அவரை பார்த்ததுமே, உன்னுடைய ஸ்டைல் நன்றாக இருக்கிறது என கூறி அருகில் உட்காரவைத்து பேசிய பாலசந்தர், ‘நீ தமிழ் மட்டும் கத்துக்கோ! உன்னை எங்க கொண்டுபோய் உட்கார வெக்குறேன் பாரு!’ என அவரிடம் சொல்லியிருக்கிறார். அதேபோல், பின்னாளில் அவரே எதிர்பார்த்திராத மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் அந்த நபர். அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின்னாளில் ரஜினியின் வளர்ச்சி சூப்பர் ஸ்டார் அளவுக்கு இருக்கும் என பாலசந்தரே அப்போது நினைக்கவில்லையாம். ‘என்னை பார்த்ததுமே தமிழ் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொண்ட மகான் அவர்’ என ரஜினி தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் பற்றி பல மேடைகளில் பகிர்ந்திருக்கிறார். அதேபோல், 90களின் தொடக்கத்தில் ரஜினியின் அசுரவளர்ச்சியை பார்த்து வியந்த பாலசந்தரும், ‘நான் அறிமுகப்படுத்திய ரஜினி இது இல்லை. இப்படி ஒரு மாஸ் ஹீரோவாக அவரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நான் நினைக்கவில்லை. நான் இந்த ரஜினியை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டேன்’ என்று கூறி வருத்தப்படுவாராம். அதே அளவிற்கு ரஜினிக்கும் கே.பாலசந்தர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இன்றுவரை இருக்கிறது. அதேபோல், அப்போதைய இளம்பெண்களின் கனவு நாயகனாக இருந்த கமலையும் திரையில் சிறப்பாக பயன்படுத்தினார் கே.பி. என்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்படுகிற பாலசந்தர்.


தங்கள் குருவான கே. பாலசந்தருடன் கமல் - ரஜினி

ரஜினி - கமல் காம்போ

முதல் படத்திலேயே ரஜினி - கமல் காம்பினேஷன் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அடுத்தடுத்த படங்களிலும் இருவரையும் ஒன்றாகவே திரையில் பார்க்க ஆசைப்பட்டனர். தனித்தனியாக தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வந்தாலும் வில்லன் - ஹீரோ, ஹீரோ - கெஸ்ட் ரோல் என இருவரும் சேர்ந்து ‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘அவள் அப்படித்தான்’, ‘பதினாறு வயதினிலே’, ‘அவர்கள்’, ‘ஆடுபுலி ஆட்டம்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘நட்சத்திரம்’, ‘தில்லு முல்லு’, ‘அக்னி சாட்சி’, ‘தப்பு தாளங்கள்’, ‘தாயில்லாமல் நானில்லை’ மற்றும் ‘நினைத்தாலே இனிக்கும்’ என 13 படங்கள் நடித்தனர். இவற்றில் ‘பதினாறு வயதினிலே’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உட்பட 7 படங்கள் ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. அதிலும் குறிப்பாக, ‘பதினாறு வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற சப்பாணி, பரட்டை வேடங்களை யாராலும் இன்றுவரை மறக்கமுடியாது. இருப்பினும் சிறுவயதிலிருந்தே நடித்துவந்த கமலைவிட ரஜினிக்கு சினிமாத்துறை அனுபவம் குறைவு என்பதால் ஆரம்பத்தில் அவருக்கு கமலைவிட ஐந்து மடங்கு சம்பளம் குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது. குறிப்பாக 1977ஆம் ஆண்டு வெளியான ‘பதினாறு வயதினிலே’ படத்தில் கமலுக்கு சம்பளம் ரூ.25,000, ஆனால் ரஜினியின் சம்பளமோ ரூ.5000தான். இந்த படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவியைவிட ரஜினிக்கு சம்பளம் குறைவு என எழுதின அப்போதைய பத்திரிகைகள்.


ஆரம்ப காலத்தில் கமல் மற்றும் ரஜினி 

ரஜினி - கமல் என்ற இரு நடிகர்களுக்கும் குறிப்பாக, ரஜினிக்கு ஹீரோ அந்தஸ்து கிடைக்க தன்னை வில்லனாக்கி அழகுபார்த்த மற்றொரு நடிகரையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். ஆரம்பத்தில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு வந்திருந்தாலும் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதை பார்த்து அந்த இடத்தில் தன்னை பொருத்திக்கொண்டவர் சத்யராஜ். 70களின் இறுதியில் வளர்ந்துவரும் ஹீரோக்களாக இருந்த ரஜினிக்கும், கமலுக்கும் ஏற்ற சரியான போட்டியாக அமைந்தார் சத்யராஜ். முதலில் ஹீரோவாக மட்டும் நடித்துக்கொண்டிருந்த இவர், ரஜினிக்காக, ‘மிஸ்டர் பாரத்’ படத்திலும், கமலுக்காக ‘விக்ரம்’ படத்திலும் வில்லனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து பல ரஜினி படங்களில் வில்லனாகவே தோன்றி நடிப்பில் டஃப் கொடுத்தார். மேலும் ஹீரோ என்றால் கலராக ஸ்மார்ட்டாகத்தான் இருப்பார்கள், வில்லன் என்றால் கொஞ்சம் கொடூரமாக இருப்பார்கள் என்ற 60களின் பாணியையும் உடைத்து காட்டியது இந்த ஜோடி.

ரஜினியும் கமலும் பிரிந்தது ஏன்? - கமல் விளக்கம்

சபாஷ்! சரியான போட்டி! இந்த இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடிக்கிறார்களே! தமிழ் சினிமாவில் ரஜினியும் கமலும் மறுமலர்ச்சி செய்துவிட்டனர் என அனைவரும் புகழ்ந்த காலத்தில் ரஜினியை தனது சகோதரர் என்று மேடைகளில் பேசும்போது கமல் கூறுவதுண்டு. மேலும் ஒவ்வொரு மேடையிலும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்வதுண்டு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு மேடையில் பேசிய கமல், “இப்போது என்னை எல்லாரும் நல்ல நடிகன் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வளர்ச்சியில் கே.பாலசந்தரின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவிற்கு ரஜினிக்கும் இருக்கிறது. நான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலத்திலேயே மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு இப்படி புகழ்ந்திருந்தால் நான் இந்நேரம் வீட்டில் இருந்திருப்பேன். ஆனால் அப்போது ரஜினி எனக்கு ஒரு பலமான, அசாத்தியமான, ஆரோக்கியமான போட்டியாக வந்தார்.


திரைப்பட நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டபோது

நான் நடந்துகொண்டிருந்தபோது, "இதோ பார்! ஒரு அற்புதமான நடிகர் வந்துகொண்டிருக்கிறார். நீ ஓடவேண்டுமென்று எனக்கு நானே ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்திய ஒரு நடிகர் ரஜினி. அவர் என்னுடைய சக ஓட்டக்காரர். இதில் யார் ஜெயிக்கிறோம் என்ற கவலை எங்களுக்கு இல்லை. நாங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறோம் என்பதிலேயே எங்களுக்கு சந்தோஷம்” என்று பகிர்ந்திருந்தார். அதேபோல், ரஜினியும், “கமலின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து ஒவ்வொரு முறையும் நான் வியக்கிறேன். ‘ஹே ராம்’ படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் நேராக அவர் வீட்டிற்கு சென்று கதவை தட்டி பாராட்டினேன். வயதில் சிறியவராக மட்டும் இல்லாவிட்டால் காலில் விழுந்திருப்பேன்” என்று கூறினார். இப்படி இருவரும் ஒருவரையொருவர் பார்த்து வியந்து ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் இருவரின் மார்க்கெட்டும் உயரத் தொடங்கியது. அதே சமயத்தில் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவை ஆளத் தொடங்கினர். இப்படி இருவருடைய பாணியும் வேறு வேறு என்பதை புரிந்துகொண்டு ஒரு கட்டத்தில் இருவரும் இனிமேல் சேர்ந்து நடிக்கவேண்டாம் என முடிவெடுத்து பிரிந்தனர். இதுகுறித்து சமீபத்தில் பகிர்ந்த கமல், “திரைத்துறையில் போட்டி நிலவுவது சகஜம்தான் என்றாலும் நாங்கள் இருவரும் போட்டியாளர்கள் கிடையாது. எந்த துறையாக இருந்தாலும் போட்டிகள் நிலவுவது சகஜம்தான். ஆனால் அவருடைய பாதை வேறு, என்னுடைய பாதை வேறு. இந்த முடிவை எங்களுடைய இளம்வயதிலேயே நாங்கள் எடுத்துவிட்டோம்” என்று பெருமிதமாக கூறினார். எப்படியாயினும், இன்றுவரை இருவருமே பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.


3 தசாப்தங்களாக தொடரும் ரஜினி - கமல் நட்பு

மீண்டும் இணையும் ரஜினி - கமல்!

70களிலிருந்தே ரஜினி - கமல் சேர்ந்து நடிக்கும் படமென்றால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். இப்போது சூப்பர்ஸ்டார் மற்றும் உலக நாயகனாக உயர்ந்து நிற்கும் இருவரையும் இனிமேல் ஒரே படத்தில் பார்க்கவே முடியாது என ஏங்கித்தவித்த 80களின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர் நடிகர் சங்கத்தினர். சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க கட்டடத்துக்காக நடிகர் விஜய் ஒரு கோடி நிதி கொடுத்திருப்பதாக கூறியதுடன், விலைவாசி உயர்வால் கட்டுமான பணிச்சுமை அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். விஜய்யைத் தொடர்ந்து உதயநிதியும் 6 கோடி கொடுத்திருக்கிறார். மேலும், கட்டுமானத்திற்காக கடன்பெற 50% வைப்புநிதி தேவை என வங்கியில் கூறியதால் அந்த நிதியை திரட்ட 4 மாதங்கள் ஆனதாக கூறினார். மேலும் நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க போதிய வருமானம் இல்லாததால் அதற்காக ஒரு கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும், அதில் ரஜினியும் - கமலும் இணைந்து நடிப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த கலை நிகழ்ச்சியானது ஒரு திரைப்படம் போல் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்