ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்! மறைக்க வேண்டியதை ஓப்பனா சொல்லியதன் பின்னணி என்ன?

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையையே திரையில் வாழ்ந்துகாட்டியதாக வெகுவாக பாராட்டப்பட்டார் கீர்த்தி சுரேஷ். மேலும் இந்த படம் கீர்த்திக்கு தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுக்கொடுத்தது. கூடவே பல மொழிகளிலும் படவாய்ப்புக்களையும் தேடிக்கொடுத்தது.

Update:2024-07-30 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோயினாக வலம்வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் ஹீரோயினாக உருவெடுத்த இவர், தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமானார். கதாநாயகியாக அறிமுகமான ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறார். குறிப்பாக, நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழக்கை வரலாற்று படமான ‘மகாநடி’ திரைப்படத்தின்மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட கீர்த்திக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். இருப்பினும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் ட்ரோல்களுக்கு ஆளாகிவரும் இவர் சமீபத்தில் ஒரு மேடை பேச்சு மூலம் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறார். கீர்த்தி சுரேஷின் அசுர வளர்ச்சி, ட்ரோல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

படிக்கல்லாக அமைந்த ‘மகாநடி’

மலையாள இயக்குநர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சிறுவயதிலேயே மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அடுத்தடுத்த ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்த கீர்த்தி, 2015ஆம் ஆண்டு ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின்மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் முதல் படம் அவருக்கு கைகொடுக்காவிட்டாலும், சிவகார்த்திகேயனுடன் இவர் ஜோடிசேர்ந்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் இவரை கைதூக்கிவிட்டது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்திக்கு, ‘நீனு லோக்கல்’ படம்மூலம் தெலுங்கு அறிமுகமும் கிடைத்தது.


 ‘மகாநடி’ திரைப்படத்தில் மறைந்த நடிகை சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ்

தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிசேர்ந்தாலும் கீர்த்தியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் வலுவான கதாபாத்திரங்கள் அமையாமல் இருந்தது. பெரும்பாலும் காமெடி கலந்த கதாபாத்திரங்களில்தான் நடித்துவந்தார். அந்த சமயத்தில்தான் நாக் அஸ்வின் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு ‘மகாநடி’ என்ற பெயரில் தெலுங்கில் உருவான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தியை தேடிவந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிதாக பாராட்டப்பட்டது. குறிப்பாக, மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையையே திரையில் வாழ்ந்துகாட்டியதாக வெகுவாக பாராட்டப்பட்டார் கீர்த்தி சுரேஷ். மேலும் இந்த படம் கீர்த்திக்கு தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுக்கொடுத்தது. கூடவே பல மொழிகளிலும் படவாய்ப்புக்களையும் தேடிக்கொடுத்தது. அதன்பிறகு தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டினார் கீர்த்தி.

எடை கட்டுப்பாடு குறித்து கீர்த்தியின் கருத்து

இருப்பினும் உடல் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி குறிப்பிட்ட சில வாய்ப்புகள் கைநழுவி போனதால், ‘மகாநடி’ படத்திற்காக கூட்டிய எடையை குறைக்காவிட்டால், இருக்கும் வாய்ப்புகளும்கூட போய்விடும் என்பதை புரிந்துகொண்ட கீர்த்தி, எடை குறைப்பு பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டார். அதன் பலனாக எடை குறைந்து மிகவும் மெலிந்தும்போனார். குண்டாக இருப்பதற்காக விமர்சிக்கப்பட்ட இவர், ஒருசில மாதங்களில், ஒல்லியானதற்காகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் அவர் ஆபரேஷன் மூலம்தான் எடையை குறைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவிய நிலையில் தனது எடை குறைப்பு பற்றி பேட்டியளித்தார் கீர்த்தி. அதில், “நான் முதலில் ஒரு வொர்க் -அவுட் செய்யும் ஆள் கிடையாது. என்னை பொருத்தவரைக்கும் தினமும் நடிக்கப்போகிறேன், வருகிறேன், சாப்பிடுகிறேன், தூங்குகிறேன் என்று மட்டும்தான் இருந்தேன்.


ஜிம் மற்றும் யோகா செய்து எடையை குறைத்து மெலிந்த கீர்த்தி

நடிப்பைத்தாண்டி முடி, ஸ்கின் போன்றவற்றை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. ஆனால் அது தவறு என்றும், ஒரு நடிகையாக ஏற்கனவே அவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் பின்புதான் புரிந்துகொண்டேன். அதனால் ‘மகாநடி’ திரைப்படத்திற்கு பிறகுதான் ‘வொர்க் - அவுட் செய்யவே ஆரம்பித்தேன். 8 - 9 மாதத்திற்குள் கிட்டத்தட்ட 10 கிலோ எடையை குறைத்தேன். ‘ஆபரேஷன் ஏதாவது செய்திருக்கிறீர்களா’ என நிறையப்பேர் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. முதன்முதலாக உடற்பயிற்சி செய்ததால் நிறைய எடை குறைந்துவிட்டது. அதுகுறித்து என்னிடம் பலர் கேட்டபிறகுதான் யோகா செய்ய ஆரம்பித்தேன். இப்போது யோகா, ஜிம் என மாறி மாறி செய்துவருகிறேன்” என்று கூறியிருந்தார்.

தொடர் வாய்ப்புகளால் பிஸி!

இப்படி ஒருவழியாக எடையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கீர்த்திக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, ‘பெங்குயின்’, ‘மிஸ் இந்தியா’, ‘சாணி காயிதம்’ போன்ற பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அவற்றில் ஒருசில படங்கள் வெற்றிபெற்றாலும் பலவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்ட கீர்த்திக்கு கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘தசரா’ திரைப்படம் ரூ. 100 கோடிக்கும்மேல் வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு தமிழில் வெளியான ‘மாமன்னன்’ படமும் சற்று கைகொடுத்தது. இப்படி திரைப்படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்தாலும் திருமணம் குறித்த சர்ச்சைகளும் கீர்த்தியை துரத்திக்கொண்டே இருந்தன. நடிகர், பிசினஸ்மேன், பாடகர் என அவ்வப்போது யாரோ ஒருவரை கீர்த்தி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுவதுண்டு. மேலும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் அதிகம் ட்ரோல் செய்யப்படும் நடிகைகளில் கீர்த்தியும் ஒருவர்.


‘தசரா’ மற்றும் ‘மாமன்னன்’ திரைப்படங்களில் கீர்த்தியின் கதாபாத்திரங்கள்

இப்படி தன்னைப்பற்றி எழும் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து கீர்த்தி சொல்லும்போது, “ஆரம்பத்திலிருந்தே நிறைய நெகட்டிவிட்டியை பார்த்திருக்கிறேன். இது எனக்கு பழகிவிட்டது. அதனால் எதையும் ஆழமாக மனதுக்குள் எடுத்துக்கொள்ள மாட்டேன். நிறைய நேரங்களில் தவறான கருத்துகள் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் சில நேரங்களில் ஏற்படுத்தும். ஆனால் அந்த நேரத்தில் அதற்கு ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருப்பேன். பிறகு பதில் கொடுக்கவேண்டிய நேரத்தில் சரியாக பதில் கொடுப்பேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு மேடையில் பேசிய பேச்சுதான் இப்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

சஸ்பென்ஸே போச்சு!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கீர்த்தி சுரேஷ், “மிகவும் சந்தோஷமான தருணம் இது. இயக்குநர் சுமன் என்னிடம் கதை சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முழுக்கதையையும் கேட்டுவிட்டு நிறைய பேசினோம். இதற்கு முன்னாள் இப்படி ஒரு கதையை நான் கேட்டதே இல்லை. ஆனால் என்னால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கமுடியுமா என்ற தயக்கம் இருந்தது. அந்த தயக்கத்தை சுமனும், விஜய்யும் நீக்கியதுடன் நடிப்பதற்கான தைரியத்தையும் எனக்கு கொடுத்தார்கள். நீங்கள் நினைப்பதை போன்று ‘ரகு தாத்தா’ திரைப்படம் இந்தி திணிப்புக்கு மட்டும் எதிராக சொல்லப்படவில்லை. பெண்கள் மீதான எல்லாவிதமான திணிப்பையும் பற்றிய படம்தான் இது. இந்த படம் ஒரு காமெடி டிராமா. இதன்மூலம் ஒரு சிறிய செய்தியை சொல்லத்தான் முயற்சித்திருக்கிறோம். படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். இந்த படத்தில் அரசியல்ரீதியான விமர்சனங்கள் எதுவுமே இருக்காது” என்று கூறியிருந்தார். இந்த பேச்சுதான் தற்போது இவரை பல்வேறு ட்ரோல்களுக்கு ஆளாக்கி இருக்கிறது.


‘ரகு தாத்தா’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி

‘இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தாலும் கீர்த்திக்கு ஒரு சஸ்பென்ஸை காப்பாற்ற தெரியலையே’ என விமர்சித்து வருகின்றனர். காரணம், படத்தின் டீசரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின்மீதான எதிர்பார்ப்பானது எக்கச்சக்கமாக இருந்தது. குறிப்பாக, அடுத்து பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் நிலையில், ‘இந்தி தெரியாது போயா’ என்பது போன்ற டயலாக்குகள் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பெரிதும் பேசப்பட்டது. ஆனால் இது இந்தி திணிப்பு பற்றியது அல்ல என அவர் கூறியபிறகு, ‘அடுத்து இந்தியில் அறிமுகமாவதால்தான் அங்கு மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள படத்தின் சஸ்பென்ஸையே உடைத்துவிட்டார் என்கின்றனர் நெட்டிசன்கள். எது எப்படியாயினும், ஆக்ஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் எம்.எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்றோர் நடித்திருக்கின்றனர். ‘தி ஃபேலிமி மேன்’, ‘பார்ஸி’ போன்ற வெப் தொடர்களுக்கு கதை எழுதிய சுமன் குமார் இந்த படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ என தமிழில் இரண்டு படங்களும், ‘பேபி ஜான்’ என்ற இந்தி படமும் கீர்த்தி நடிப்பில் உருவாகி வருகிறது. இடையில் சற்று சறுக்கலை சந்தித்த கீர்த்திக்கு அடுத்தடுத்த படங்கள் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்