ஏன் இவ்வளவு வெறுப்பு? - நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் திருமணமும்! ட்ரோல்களுக்கு பதிலடியும்!

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஒருசில படங்கள் வெற்றிபெற்றாலும் பல படங்கள் தோல்வியைத் தழுவின. இந்நிலையில் சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ‘ஹீராமண்டி’ சீரிஸில் ரெஹானா மற்றும் ஃபரீதன் என இரண்டு வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார் சோனாக்‌ஷி.

Update: 2024-07-01 18:30 GMT
Click the Play button to listen to article

கடந்த ஆண்டு இறுதியிலிருந்தே இந்தியாவின் முன்னணி நடிகைகள் பலர் அடுத்தடுத்து தங்களுடைய காதல் திருமணங்களை அரங்கேற்றி வருகின்றனர். எப்போதும் நடிகர்கள் திருமணம் என்றாலே சோஷியல் மீடியாக்கள் களைகட்டும். ஆனால் ஒரு நடிகையின் திருமணத்திற்கு மட்டும் வாழ்த்துகளைவிட பல்வேறு தரப்பிலிருந்தும் வெறுப்புகளும் மிரட்டல்களுக்கும் வந்தவண்ணம் இருக்கின்றன. அவர் வேறு யாருமல்ல; சமீபத்தில் தனது காதலனை கரம்பிடித்த பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாதான். ‘சாடி கே ஃபால் ஸா’ என்ற பாடல்மூலம் இந்தி மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க பிரபலமாகி, தமிழில் ரஜினி உட்பட பாலிவுட்டின் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் சோனாக்‌ஷி. இடையில் இவருடைய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் திரையுலகிலிருந்து சற்று விலகியிருந்தார். அதன்பின்னர் சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘ஹீராமண்டி’ தொடரானது பலமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தற்போது மீண்டும் முன்னணி இயக்குநர்களின் சாய்ஸாக இருக்கும் இவருடைய குடும்ப பின்னணி குறித்தும், திரை வளர்ச்சி குறித்தும், திருமணத்திற்கு இவ்வளவு வெறுப்பு எழுவது ஏன்? என்பது குறித்தும் சற்று பார்க்கலாம்.

சோனாக்‌ஷியின் பின்னணியும் சினிமா என்ட்ரியும்

பீகாரைச் சேர்ந்த நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா மற்றும் நடிகை பூனம் சின்ஹா தம்பதியின் கடைசி மகள் சோனாக்‌ஷி சின்ஹா. ஃபேஷன் டிசைனிங் படித்துள்ள இவர் 2005ஆம் ஆண்டு வெளியான ‘மேரா தில் லேகே தேக்கோ’ என்ற திரைப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தான் ஃபேஷன் டிசைனிங் துறையை தேர்ந்தெடுத்தது பற்றி ஒரு நேர்க்காணலில் சோனாக்‌ஷி பகிர்ந்தபோது, “உயர்நிலை கல்விவரை படிக்கும்போது நான் சயின்ஸ் தொடர்பான மேற்படிப்பைத்தான் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு கணக்குப்பாடம் நன்றாக வராததால் வணிகத்துறையை எடுக்கவேண்டியதாயிற்று. எனக்கு வரையவும், தைக்கவும் மிகவும் பிடிக்கும் என்பதால் ஃபேஷன் டிசைனிங் படிக்கலாமென்று முடிவெடுத்தேன். அதனால்தான் இப்போதுவரை டிசைனர்களுடன் இணைந்து எனது ஆடைகளை வடிவமைப்பதற்கு ஐடியாக்களை கொடுக்கிறேன். ஃபேஷன் டிசைனர் ஆகாவிட்டால் விளையாட்டுத்துறையில் இறங்கலாம் என்று நினைத்திருந்தேன். பள்ளியில் படிக்கும்போதிருந்தே டென்னிஸ் நன்றாக விளையாடுவேன். அதனால் பெரிய டெனிஸ் ப்ளேயர் ஆகலாமென்று நினைத்தேன். ஆனால் என்னுடைய எடை மிகவும் கூடிவிட்டதால் என்னால் விளையாட முடியவில்லை” என்று கூறியிருந்தார். தனது பெற்றோர்கள் நடிப்புத்துறையில் இருந்தபோதிலும் ஆரம்பத்தில் தனக்கு நடிகையாகும் எண்ணம் இல்லை என்று கூறும் அவர், 2010ஆம் ஆண்டு வெளியான ‘தபாங்’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.


‘தபாங்’ திரைப்படத்தில் சல்மான் கானுடன் சோனாக்‌ஷி

ஃபேஷன் டிசைனர் டூ ஹீரோயின்

தனது சினிமா என்ட்ரி அனுபவம் குறித்து அவர் பேசுகையில், “பள்ளி காலத்திலிருந்தே என்னுடைய டயட்டே பீட்சாவாகத்தான் இருந்தது. அதனாலேயே நான் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டேன். அந்த நேரத்தில் யாருமே என்னிடம் நடிக்கிறாயா என்று கேட்டதே இல்லை. கல்லூரிக்குப் பிறகு எல்லாரும் ஜிம்முக்கு போகிறார்களே என்று நானும் போனேன். அங்கு ட்ரெட்மில்லில் ஓட முயற்சித்தபோது என்னால் ஒரு நிமிடம்கூட முழுமையாக ஓட முடியவில்லை. அப்போதுதான் எப்படியாவது எடையை குறைத்துவிடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக உருவானது. இரண்டரை வருடங்களுக்குள் கிட்டத்தட்ட 30 கிலோ எடையை குறைத்தேன். இருந்தாலும் நான் foodie என்பதால் பலவகையான டயட் முறைகளை பின்பற்ற முயற்சித்தும் என்னால் முடியவில்லை. அதனால் தீவிரமாக உடற்பயிற்சியை மட்டும் செய்துவந்தேன். இருப்பினும் நடிப்புத்துறைக்கு வரவேண்டும் என்ற எண்ணம் அப்போதும் துளிகூட இல்லை. அந்த சமயத்தில்தான் எங்களுடைய குடும்ப நண்பரான சல்மான் கான் என்னை பார்த்துவிட்டு, ‘நீ ஏன் நடிக்கக்கூடாது?’ என்று கேட்டார். நானும் ஃபேஷன் டிசைனிங்கிலிருந்து தள்ளி இருக்கலாம் என்று முடிவெடுத்த சமயத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்னேன். எனக்கும் நடிகையாகும் எண்ணம் ஆரம்பத்திலேயே இருந்திருந்தால் சிறுவயதிலிருந்தே மற்ற நடிகைகளைப்போல ஃபிட்டாக இருந்திருப்பேன். நான் எடையை குறைத்தபிறகு ஃபேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றேன். அங்கு என்னை பார்த்த அர்பாஸ் கான், ‘சீக்கிரத்தில் உன்னிடம் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றார்.


சோனாக்‌ஷியின் பெஸ்ட் ஆன் ஸ்க்ரீன் ஜோடி அக்‌ஷய் குமாருடன்

அதன்பிறகுதான் ‘தபாங்’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடிவந்தது என்று கூறியிருக்கிறார். ‘தபாங்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் அறிமுகப்படத்திற்கே பல்வேறு விருதுகளை வென்ற சோனாக்‌ஷி, அதன்பிறகு பிரபுதேவா இயக்கத்தில் ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் நடித்தார். 2012ஆம் ஆண்டு இந்த படம் உட்பட சோனாக்‌ஷியின் 4 படங்கள் வெளியாகின. ‘ரவுடி ரத்தோர்’ வெளியான முதல் நாளே ரூ.15 கோடி வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு ஒருசில படங்கள் தோல்வியைத் தழுவினாலும் ‘சன் ஆஃப் சர்தார்’, ‘ஆர் ராஜ்குமார்’ போன்ற படங்கள் வசூல் சாதனை படைத்தன. குறிப்பாக ஷாஹித் கபூருடன் இவர் ஆடிய ‘சாடி கே ஃபால் ஸா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இப்பாடல் இந்தியில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே சோனாக்‌ஷிக்கு ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது. நடிப்புத் தவிர தெளிவாக இந்தி பேசும் நடிகைகளில் ஒருவரான இவர், பல்வேறு வேற்றுமொழி படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.


‘ஹீராமண்டி’ சீரிஸில் வில்லி கதாபாத்திரத்தில் சோனாக்‌ஷி

2014ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘Holiday: A Soldier Is Never Off Duty’ என்ற படத்தில் அக்‌ஷய்குமார் ஜோடியாக நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்து ரஜினி ஜோடியாக தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடித்தார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிறகு 2019ஆம் ஆண்டு வித்யா பாலன் மற்றும் டாப்ஸியுடன் இவர் சேர்ந்து நடித்த ‘மிஷன் மங்கள்’ திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றது. இப்படம் வெறும் 30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகும். இதேபோல் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஒருசில படங்கள் வெற்றிபெற்றாலும் பல படங்கள் தோல்வியைத் தழுவின. இந்நிலையில் சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ‘ஹீராமண்டி’ சீரிஸில் ரெஹானா மற்றும் ஃபரீதன் என இரண்டு வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார் சோனாக்‌ஷி. இத்தொடர் மாபெரும் வெற்றிபெற்று சோனாக்‌ஷியின் மார்க்கெட்டை சற்று உயர்த்தின. இந்நிலையில்தான், தனது நீண்டநாள் காதலனான ஜாகீர் இக்பாலை திருமணம் செய்திருக்கிறார்.


காதல் திருமணம் செய்துகொண்ட சோனாக்‌ஷி - இக்பால் ஜோடி

சோனாக்‌ஷி திருமணமும் சோஷியல் மீடியாக்களில் கொட்டப்படும் வெறுப்புகளும்

சோனாக்‌ஷி சின்ஹாவும் ஜாகீர் இக்பாலும் ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். மும்பையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதையடுத்து ரிஷப்ஷன் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்பு சந்தித்த இருவரும் பேசி பழக ஆரம்பித்தனர். இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததையடுத்து, ‘டபுள் எக்ஸ் எல்’ திரைப்படத்தில் சோனாக்‌ஷியும் ஜாகீரும் இணைந்து நடித்தனர். தனது 37வது வயதில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டாலும் திரைப்பிரபலங்கள் அனைவரும் ரிசப்ஷனில் கலந்துகொண்டு புதுமண தம்பதியரை வாழ்த்தினர். இவர்களுடைய திருமணம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியதிலிருந்தே சமூக ஊடகங்களில் மோசமான கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. காரணம், இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும், மதமாற்றம் செய்யாமலேயே திருமணம் செய்வதாலும் தங்களுடைய புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாக பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் திருமண புகைப்படங்களை பதிவிட்டு சோனாக்‌ஷியின் இன்ஸ்டா பக்கத்தில் கோபத்தையும் வெறுப்பையும் வெளிக்காட்டும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த கமெண்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “அன்பு என்பது உலகளாவிய மதம்” என்று குறிப்பிட்டு இருவருடைய புகைப்படத்தையும் கார்ட்டூன் ஓவியமாக வரைந்து பகிர்ந்திருக்கிறார் பிரபல ஓவியர் பிரசாத் பரத். இந்த ஓவியத்துக்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவாக கமெண்டுகள் வந்தவண்ணம் உள்ளன. ஒருபக்கம் வெறுப்புகள் வந்தாலும் மறுபக்கம் தனது காதல் மனைவிக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்திருக்கிறார் ஜாகீர்.

Tags:    

மேலும் செய்திகள்