ராணியின் ராஜபார்வை - அகப்பட்டார் கே.பாலச்சந்தர்…!

கே. பாலசந்தர் கதை வசனம் எழுதி, டைரக்டு செய்த படம், "அபூர்வ ராகங்கள்". ரஜினிகாந்த் முதல் முதல் தலை காட்டியது இந்தப் படத்தில்தான்.

Update:2025-02-25 00:00 IST
Click the Play button to listen to article

(03.05.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

கே. பாலசந்தர் கதை வசனம் எழுதி, டைரக்டு செய்த படம், "அபூர்வ ராகங்கள்". ரஜினிகாந்த் முதன்முதலில் தலை காட்டியது இந்தப் படத்தில்தான்.

"அபூர்வ ராகங்கள்" கதை திருட்டுக் கதை என்று சென்ற வாரம் சென்னை ஐகோர்ட் தீர்ப்புக் கூறியது. “என் கதையைத் திருடி விட்டார்" என்று கே.பாலசந்தர் மீது எழுத்தாளர் என். ஆர். தாசன் வழக்குத் தொடர்ந்தார்.

சென்னையை சேர்ந்தவர், என். ஆர். தாசன். இவர் 1969-ல் "வெறுமண்" என்ற ஓரங்க நாடகத்தை எழுதினார். இது "கண்ணதாசன்" என்ற பத்திரிகையில் வெளிவந்தது.

இந்த திருட்டுக் குற்றச்சாட்டை கே. பாலசந்தர் மறுத்தார். "விக்கிரமாதித்தன் கதையில் உள்ள "முறை தெரியாத கதை” என்ற கதையின் கருத்தைக் கொண்டு "அபூர்வ ராகங்கள்" கதையை எழுதினேன்" என்று கே. பாலசந்தர் கூறினார்.


உலக நாயகன் கமல் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இயக்குநர் கே.பாலச்சந்தர் 

"வெறுமண்" கதையை நீதிபதி படித்தார். "அபூர்வ ராகங்கள் படத்தையும் பார்த்தார். அதன்பின் நீதிபதி சண்முகம் தீர்ப்பு அளித்தார். "வெறுமண்" கதையைத் தழுவித்தான் "அபூர்வ ராகங்கள்" படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது!" என்று.

பிழைக்கத் தெரியாத நடிகை!

நிர்மலாவை அதிர்ஷ்டம் கெட்ட நடிகை என்று சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், அழகு இருந்தும், இளமை இருந்தும், பூங்கொடி போல உடல் இருந்தும், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் குணம் இருந்தும், "மஞ்சள் கடுதாசி" (ஐ.பி.) கொடுப்பாரா?

நேற்று வந்த நடிகைகள் எல்லாம் கார்-பங்களா என்று ஊர்வலம் வரும்பொழுது, கலைமாமணி பட்டம் பெற்ற நிர்மலாவுக்கு ஏன் இந்தக் கதி? காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொள்ளத் தெரியவில்லையா? “பிழைக்கத் தெரியாத நடிகை” என்று சொல்லுவோரும் உண்டு.


“வெண்ணிற ஆடை” மூலமாக அறிமுகமான நிர்மலா 

விமானப் பணிப்பெண்ணாகப் பறந்து கொண்டு இருந்த நிர்மலா. “வெண்ணிற ஆடை”யில் நடிகை ஆனார். 16 ஆண்டாக கதாநாயகியாகவும், துணைப்பாத்திரங்களிலும் நடித்தார். நடனமும் ஆடினார். “அவளுக்கு நிகர் அவளே” என்று சொந்தப் படம் எடுத்தார். பலத்த அடி. ஒரு டைரக்டருடன் சேர்த்து "கிசுகிசு"க்கப்பட்டார். அதிலும் தோல்வி. பத்திரிகைகளில் சிறுகதை எழுதினார். அந்தத் துணிச்சலில், தானே ஒரு கதை எழுதி, டைரக்டு செய்து, மீண்டும் ஒரு படம் எடுக்க முயற்சித்தார். முடியவில்லை. இறுதியில், ரூ. 6 இலட்சம் கடனை அடைக்க முடியாமல், “திவால்” ஆகி விட்டார்.

"இனி என்ன செய்யப் போகிறீர்கள்?" நிர்மலாவிடம் “ராணி" நிருபர் கேட்டார்.

“நடனப் பள்ளிக்கூடம் ஒன்று நடத்தப் போகிறேன்" என்றார், நிர்மலா.

“படங்களில் நடிப்பீர்களா?"

"அதற்கு வாய்ப்பு இல்லாமல்தானே ஓட்டாண்டி ஆகிவிட்டேன்."


நாட்டிய தாரகையாக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா 

"சினிமா வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"பிழைக்கத் தெரிய வேண்டும் என்கிறார்கள். அது என்னவென்றே எனக்கு இன்னும் புரியவில்லை."

பாவம். இத்தனை நாளாக எப்படித்தான். குப்பை கொட்டிக்கொண்டு இருந்தாரோ!

Tags:    

மேலும் செய்திகள்