தொடர்ந்து பிரியும் காதல் ஜோடிகள்! - சினிமா உலகில் என்ன நடக்கிறது?

இதுகுறித்து விளக்கமளித்த கார்த்திக், ஓரின சேர்க்கை ஒன்றும் தவறானது அல்ல என்றும், பட்டியலினத்தவர்களைப் பற்றி தான் தவறாக எதுவும் பேசவில்லை எனவும், அது தன்னுடைய குரலே இல்லை எனவும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டார்.

Update:2024-05-21 00:00 IST
Click the Play button to listen to article

சினிமா என்றாலே எண்டர்டெய்ன்மென்ட்தான் என்பதையும் தாண்டி, நடிகர்களின் வாழ்க்கையில் பல எதிர்மறையான சம்பவங்களும் பொதுவெளியில் பேசுபொருளாவது சற்று வருத்தம்தான். ஆனால் திரை வாழ்க்கை என்று வந்துவிட்டாலே தனிப்பட்ட வாழ்க்கை என்பது நடிகர்களுக்கு கேள்விக்குறியாகவே மாறிவிடுகிறது. காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் பிரிவது என்பது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. அப்படி இந்த வார talk of the town குறித்து ஒரு க்ளான்ஸ் பார்க்கலாம் வாங்க!

சூர்யாவுக்கு இவர் ஜோடியா?

‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் கடைசியாக இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் கமெர்ஷியல் வெற்றிபெற்றதையடுத்து, ‘சூர்யா 44’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இப்படம் குறித்து அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிவரும் நிலையில், சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

தமிழில் கடைசியாக விஜய் ஜோடியாக நடித்திருந்த பூஜா அதன்பிறகு இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ‘சூர்யா 44’ படப்பிடிப்பானது விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகி சுசித்ரா - கார்த்திகுமார் விவகாரம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர் கார்த்திக் குமாரும் - பாடகி சுசித்ராவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். இதனிடையே கார்த்திக் குமார் அம்ருதா சீனிவாசன் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என கூறியதுடன், அவர் பட்டியலினத்தவர்களை பற்றி தவறாக பேசியதாக கூறினார். மேலும் அது தொடர்பாக ஆடியோ ஒன்றையும் சுசித்ரா பகிர்ந்திருந்தார்.


நடிகர் கார்த்திக் குமார் - பாடகி சுசித்ரா விவகாரம்

இதுகுறித்து விளக்கமளித்த கார்த்திக், ஓரின சேர்க்கை ஒன்றும் தவறானது அல்ல என்றும், பட்டியலினத்தவர்களைப் பற்றி தான் தவறாக எதுவும் பேசவில்லை எனவும், அது தன்னுடைய குரலே இல்லை எனவும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டார். இருப்பினும் அதுகுறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மயிலாப்பூர் துணை ஆணையரிடம் கார்த்திக் குமார் புகார் மனு அளித்திருக்கிறார். அந்த ஆடியோவில் இருக்கும் குரல் யாருடையது என கண்டிபிடிக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹீரோவாகும் வாரிசு - பிரபலங்கள் வாழ்த்து

‘பூவே உனக்காக’, ‘சூர்ய வம்சம்’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ மற்றும் ‘வானத்தை போல’ போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். இவருடைய மகன் விஜய் கனிஷ்கா தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். கே.எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தில் தற்போது நடித்திருக்கிறார். இப்படத்தை சூர்ய கதிர் இயக்க, சரத்குமார், சித்தாரா, சமுத்திரகனி, கௌதம் மேனன் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.


‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் ஆடியோ லாஞ்ச்சில் கலந்துகொண்ட இயக்குநர் பட்டாளம் 

சமீபத்தில் சென்னையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, பார்த்திபன், சந்தான பாரதி, பாக்யராஜ், ரமேஷ் கண்ணா போன்ற நடிகர்ளும், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், பொன்ராம், தேசிங்கு பெரியசாமி, சுப்ரமணியம் சிவா, மிஷ்கின், வசந்த பாலன், ஆர்.வி உதயகுமார், பி. வாசு உட்பட மேலும் பல பெரிய இயக்குநர் பட்டாளமே கலந்துகொண்டது. படப்பிடிப்பு தளத்தில் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் ஹீரோ விஜய் கனிஷ்கா ஆகியோரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

ஒன்லி இங்லீஷ்தான்!

அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து குறுகிய காலத்தில் நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுவிட்டார் நடிகர் கவின். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், தற்போது வெற்றிமாறனுடன் அடுத்த படத்தில் கைகோர்த்திருக்கிறார். இதனிடையே தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் ‘கிஸ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு அடுத்து வெற்றிமாறன் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.


 ‘ஸ்டார்’ படத்தை அடுத்து கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படத்தை தயாரிக்கும் வெற்றிமாறன் 

அந்த படத்திற்கு ‘மாஸ்க்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியாவும் இணைந்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தை ‘காக்காமுட்டை’, ‘விசாரணை’, ‘கொடி’ மற்றும் ‘வடசென்னை’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் பிளாக் மெட்ராஸ் இணைந்து தயாரிக்கிறது. ‘லிப்ட்’, ‘டாடா’, ‘ஸ்டார்’, ‘கிஸ்’, ‘மாஸ்க்’ என தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பட டைட்டில்களை கவின் தேர்ந்தெடுக்கிறார் என கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அடுத்த வெற்றிக்கு தயாராகும் ஃபகத்!

கடந்த ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த ‘ரோமாஞ்சம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஆவேஷம்’. ஃபகத் ஃபாசில் நடிப்புக்காகவே இப்படம் பரவலாக பேசப்பட்டதுடன் உலகளவில் கிட்டத்தட்ட ரூ.150 கோடி வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறார் ஃபகத்.


முதல்முறையாக இணையும் ஃபகத் ஃபாசில் - ஜீத்து ஜோசப் கூட்டணி

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ‘த்ரிஷ்யம் 2’ மற்றும் ‘லியோ’ போன்ற படங்களில் பணியாற்றிய சாந்தி மாயதேவி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இ4 எண்டர்டெய்ன்ட்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. ஃபகத் - ஜீத்து கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுவென்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பானது அதிகரித்திருக்கிறது.

பிரிகிறதா பிரபல பாலிவுட் ஜோடி?

சினிமா பிரபலங்கள் திருமணம் செய்வதும் பிரிவதும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் பாலிவுட்டில் அதிகமாக பார்க்கப்பட்ட விவாகரத்து பிரச்சினையானது இப்போது தென்னிந்திய திரையுலக பக்கமும் திரும்பியிருக்கிறது. சமீபத்தில்தான் ஜி.வி பிரகாஷ்குமார் - சைந்தவி தங்கள் பிரிவு குறித்து அறிவித்திருந்த நிலையில், அடுத்து ஒரு பாலிவுட் ஜோடி பிரியவிருப்பதாக செய்திகள் பரவிவருகின்றன. ஏற்கனவே அம்ரிதா சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சைஃப் அலிகான், அவரை விவாகரத்து செய்துவிட்டு கரீனா கபூரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.


பாலிவுட் ஜோடியான சைஃப் அலிகான் - கரீனா கபூர் குறித்து பரவும் வதந்தி 

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சைஃப் அலிகான் தனது கையில் டாட்டூ குத்தியிருந்த கரீனா கபூரின் பெயரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சூலம் போன்ற டிசைனை இப்போது டாட்டூவாக குத்தியிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் விரைவில் பிரிய இருப்பதாகவும் தகவல் பரவிவருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்