தளபதி விஜய்யின் கடைசி படத்தில் நான்! - நெகிழ்ச்சியில் மமிதா பைஜூ
மலையாளத் திரையுலகில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்து வரும் நடிகையாய் மாறியுள்ளவர் மமிதா பைஜு.
மலையாளத் திரையுலகில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்து வரும் நடிகையாய் மாறியுள்ளவர் மமிதா பைஜூ. 'பிரேமலு' என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் பிரபலமான இவர், தற்போது தமிழ் திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, தளபதி விஜய்யுடன் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியுள்ளது. சமீபத்திய பேட்டியில் விஜய்யை சந்தித்த தருணங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள மமிதா, இதுவரை அடைந்த வெற்றிகள், அவர் கண்ட கனவுகள் மற்றும் எதிர்கால பயணம் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
உள்ளம் கவர்ந்த அழகு நாயகி
ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த அழகு நாயகி மமிதா பைஜூ
மமிதா பைஜூ, மலையாளத் திரையுலகில் தன் மின்னும் அழகாலும், வசீகரமான நடிப்பாலும், துடிப்பான தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அழகு நடிகை. 2001 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் பிறந்த 23 வயதேயான இந்த இளம் நடிகை, தற்போது உளவியல் படித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு, ‘சர்வோபரி பாலக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய மமிதா, இந்த படத்தில் அனூப் மேனன், அபர்ணா பாலமுரளி, அனு சித்தாரா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கான ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, ‘ஹனி பீ 2: செலிப்ரேஷன்ஸ்’, ‘டாகினி’, ‘வரதன்’, ‘கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்’ போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த மமிதா , ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இப்படிப்பட்ட நேரத்தில்தான் மமிதாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களாக ‘ஆபரேஷன் ஜாவா’ , ‘கோ கோ’ மற்றும் ‘சூப்பர் சரண்யா’ ஆகிய படங்கள் அமைந்தன. இதில் குறிப்பாக, ‘சூப்பர் சரண்யா’ திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த "சோனா தாமஸ்" கதாபாத்திரம் இவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது. 2022 ஆம் ஆண்டு, இயக்குநர் கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியான இப்படம், மமிதாவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததோடு, அவரது இயல்பான நடிப்பும் கதாபாத்திரத்துடன் ஒன்றிய உணர்வும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'பிரேமலு' திரைப்படத்தில் ஹீரோ நஸ்லெனுடன் மமிதா
அதன் பிறகு, ‘பிரணய விலாசம்’, ‘ராமச்சந்திரா போஸ் & கோ’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும், 2024ஆம் ஆண்டு கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படமே மமிதா பைஜூவின் திரைத்துறை பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இத்திரைப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிரிஷ் ஏ.டி. மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதிய இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஒரு இளம் காதல் ஜோடியைச் சுற்றியுள்ள சம்பவங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும், உலகளவில் 130 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பெரிய சாதனை படைத்தது. குறிப்பாக இத்திரைப்படத்தின் கதை ஹைதராபாத்தில் நிகழ்வதைப் போல அமைந்திருந்ததால், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதனால், தெலுங்கிலும் இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியை பெற்றதோடு, தெலுங்குக்கு அப்பாற்பட்டும் இது 2K கிட்ஸ் தலைமுறையின் காதல் கதையாக, நகைச்சுவை கலந்து உருவாகியிருந்ததால், தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இப்படத்தின் மூலம் மமிதா பைஜூ தமிழ் திரையுலக ரசிகர்களின் அபிமான நடிகையாக மாறிப்போனார்.
கை நழுவிய கனவு வாய்ப்பு
‘VV21’ படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக மமிதா பைஜூ
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்த 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மமிதா பைஜூவுக்கு, அதன்பிறகு பட வாய்ப்புகள் பல மொழிகளில் இருந்தும் குவிய தொடங்கின. குறிப்பாக கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் மமிதா பைஜூவை தங்களின் படங்களில் புக் செய்ய ஆர்வம் காட்ட துவங்கினர். அதன்படி, தமிழில் அவரின் முதல் படமாக ‘ரெபல்’ வெளியானது. இதில் அவர், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு மமிதா பைஜூ பரிச்சயமான நடிகையாக மாறினார். இதைத்தொடர்ந்து ராட்சஸன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘VV21’ படத்திலும் மமிதா பைஜூ நாயகியாக நடிக்க துவங்கினார். இது தவிர சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக இருந்த கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு திரைப்படம், இட்லி கடை, சிவகார்த்திகேயனின் 25 வது படங்களை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வாவுடன் ஒரு படம், தெலுங்கிலும் ‘ஜெர்சி’ பட புகழ் இயக்குநர் கௌதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டானார். இருப்பினும் இதற்கு எல்லாம் முன்னர் அவர் நடித்த ஒரு கனவு படம் கைகூடாமல் போனது அவருக்கு மிகவும் வருத்தத்தை தந்திருந்தது. அதுதான் ‘வணங்கான்’ திரைப்படம்.
‘வணங்கான்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாமல் போன மமிதா
பாலா இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’ திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், கதாநாயகியாக மமிதா பைஜூ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பொதுவாகவே கேரளாவை பொருத்தவரை, தமிழ் நடிகர்களான விஜய், சூர்யா ஆகிய இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அங்கு இருந்து வருகிறது. அந்த வரிசையில், மமிதா பைஜூவும் இந்த இருவரின் மிக தீவிர ரசிகையாம். அதன்படி ஒரு நேர்காணலின் போது மமிதாவிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விஜய்யை தனது அபிமான நடிகர் எனக் கூறிய அவர், தான் ‘கில்லி’ படத்தில் இருந்தே அவரது தீவிர ரசிகை என தெரிவித்திருந்தார். அதே போல், சூர்யாவை பற்றியும் மற்றொரு பேட்டியில் பேசும்போது, சூர்யாவை முதன் முதலில் சந்தித்த அனுபவத்தையும், ஜோதிகாவை நேரில் பார்த்த மகிழ்ச்சியையும் மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவருக்கு சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. காரணம் ‘வணங்கான்’ படம் பாதி ஷூட்டிங் முடிக்கப்பட்ட நிலையில், இனி இந்த படத்தில் தான் நடிக்க முடியாது என்று அறிவித்து சூர்யா வெளியேறினார். இதைத்தொடர்ந்து மமிதாவும் சில நாட்களிலேயே அந்த படத்தில் இருந்து விலகினார். இதற்கு காரணமாக சொல்லப்பட்டது என்னவென்றால் படத்தின் இயக்குநர் பாலா ஷூட்டிங் சமயத்தில் மமிதாவை கடுமையாக திட்டியதோடு, அவரை தாக்கியதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரவின. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்தாலும், மமிதா மற்றும் பாலா இருவரும் இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.
கனவை நிஜமாக்கிய விஜய்
‘ஜனநாயகன்’ பட பூஜையின் போது தளபதி விஜய்யுடன்...
மமிதா பைஜூ, ‘வணங்கான்’ படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும், தனது கனவு நாயகனான தளபதி விஜய்யுடன் உடனே இணையும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அரசியல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வரும் விஜய், தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார் ஹெச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்ற இப்படத்தில் விஜய்க்கு இணையாக பாபி தியோல், கெளதம் வாசுதேவ மேனன், பூஜா ஹெக்டே, பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில், மமிதா பைஜூவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற படத்தின் பூஜை விழாவில் கூட அவர் கலந்துகொண்டார். அப்போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், விஜய்யை முதன்முறையாக நேரில் சந்தித்த தருணத்தை மமிதா பைஜூ பகிர்ந்திருக்கிறார். அதில் “விஜய் சாரை நேரில் பார்த்தவுடன், நான் மிகவும் பதற்றமடைந்துவிட்டேன். ‘ஹாய் சார்’ என்று கூறினேன், அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. கைகள் நடுங்கியது. எனது நிலையை கவனித்த விஜய் சார், என்னை நோக்கி நடந்து வந்து, அமைதியாக ‘ஹாய் மா’ என்று சொல்லிக் கொண்டு கை கொடுத்து அரவணைத்தார். அந்த தருணம் என்னைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் சாதாரண ஹாய் கூட மிகவும் நேர்மையானதாக இருந்தது. ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஹாய் சொல்லும் பழக்கம் அவருக்குண்டு, அந்த வகையில் எனக்கும் கூறியது பெரிய மகிழ்ச்சியை தந்தது” என அவர் பேசி இருந்தார். இந்த படத்தில் மமிதா பைஜூ, விஜய்யின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பரவி வரும் நிலையில், தமிழ் திரையுலகில் தற்போதைய முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவர் உருவெடுத்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் கமிட்டாகி வரும் அவர், இப்படங்கள் வெற்றியடைந்தால், தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.