ஒரே டேக்கில் ஓகே ஆனால் அதில் சிறப்பொன்றும் இல்லை - துணை நடிகர் காளி வெங்கட்

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்ளின் மனதில் இடம்பிடித்திருக்கும் காளி வெங்கட் தனது சுவாரசியமான அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்...

Update: 2023-10-16 18:30 GMT
Click the Play button to listen to article

சமீபத்தில் ‘அநீதி’ திரைப்படத்தில் ‘தங்கப்புள்ள’ கதாபாத்திரம் மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமானவர் நடிகர் காளி வெங்கட். இவர் ‘கார்கி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராஜா மந்திரி’, ‘மிருதன்’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘கொடி’, ‘மாரி’ போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்படி தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்ளின் மனதில் இடம்பிடித்திருக்கும் காளி வெங்கட் தனது சுவாரசியமான அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்...

உங்களை வைத்து செய்யப்படும் மீம்ஸ்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

விமர்சனங்களில் எப்படி நல்ல விமர்சனம் கெட்ட விமர்சனம் இருக்கிறதோ அதேபோலத்தான் இந்த மீம்ஸிலும் நல்லது கெட்டது என்று இருவகை இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் மீம்ஸ் உருவாக்குவது ஒரு கலை. இதற்கு வித்தியாசமாக யோசிக்கும் அறிவுத்திறன் வேண்டும். குறிப்பாக நகைச்சுவையான கருத்து இருந்தால் மட்டுமே அது மக்களை சென்றடையும். மீம்ஸ் உருவாக்குவது என்பது தற்போது தனித்துறையாகவே மாறிவிட்டது. பாராட்டை ஏற்பது போல இதுபோன்ற விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வதுதான் என் மனப்பக்குவம். இதை குறித்தெல்லாம் நான் கவலைப்படுவதில்லை.


வெவ்வேறு கதாபாத்திரங்களில் காளி வெங்கட்

‘மெர்சல்’ படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து ஒரு சில வார்த்தைகள்...

‘மெர்சல்’ படத்தைக் காட்டிலும் ‘தெறி’ படத்தில்தான் தளபதியுடன் 20 - 25 நாட்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் மிகவும் எளிமையான மனிதர். பெரிய நடிகன் என்பதுபோல அவர் யாரிடமும் நடந்து கொள்வதில்லை. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்கு வந்தவுடன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டுத்தான் அந்த நாளைத் தொடங்குவார். அவருடைய வேலையில் அவர் நேர்மையாகவும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் இருப்பார்.

சினிமாத் துறையில் உங்களுக்கு கிடைத்த நல்ல நண்பன் என்று யாராவது இருக்கிறார்களா?

ஒரு நண்பன் என்று தனித்து கூறமுடியாது. நாங்கள் சுமார் 20, 30 நண்பர்கள் சேர்ந்து ஒரு குழுவாகத்தான் எப்போதும் இருப்போம். சினிமாத்துறை மூலம் எனக்கு பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.


தளபதி விஜய் மற்றும் அட்லீயுடன்...

நீங்கள் நடிகர் ஆகாவிட்டால் வேறு என்ன தொழிலில் இருந்திருப்பீர்கள்?

நடிப்பில்தான் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. வேறு வேலை செய்துகொண்டிருந்தாலும் தொடர்ந்து நடிக்க முயற்சி செய்துகொண்டுதான் இருந்திருப்பேன். நடிகராகாவிட்டால் கொத்தனார் ஆகியிருப்பேன் அல்லது ஏற்கனவே இருக்கிற மளிகைக்கடை பிஸினஸைத் தொடர்ந்திருப்பேன் அல்லது அந்த மளிகைக்கடையையே ஒரு சூப்பர் மார்க்கெட்டாக மாற்றி அமைத்திருந்திருப்பேன். சிறுவயது முதலே நடிப்பில் அதிக ஈடுபாடு இருந்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாடக மேடைகளில் நடித்திருந்திருப்பேன்.

சூர்யாவுடன் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடித்த தருணங்கள் குறித்து பகிருங்கள்...

சூர்யாவை இந்த படப்பிடிப்பின்போதுதான் முதன்முதலில் நேரில் சந்தித்தேன். முதல் நாள் சற்று பயமாக இருந்தாலும் முதல் காட்சி நடித்தவுடனே அவருடன் நடிப்பதற்கு மிகவும் சௌகர்யமாக இருந்தது. எனக்கு அவரிடம் பிடித்ததே அவர் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வதுதான். அவரிடம் பழகுபவர்களை அவர் சௌகர்யமாக வைத்துக்கொள்வார். ‘மகாமுனி’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதை பார்த்துவிட்டு சூர்யா என்னை தொடர்பு கொண்டு சிறப்பாக நடித்துள்ளீர்கள் என்று பாராட்டினார். சார் இது சிறு பகுதிதான் என்று நான் கூறியபோது, சூர்யா அதற்கு “கொஞ்ச நேரமோ நீண்ட நேரமோ இந்த கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இயக்குநர் மனதில் எண்ண வைத்ததே பெரும் சிறப்பு” என்று கூறினார். 


நடிகர் சூர்யாவுடன் காளி வெங்கட்

அது முதல் சிறு கதாபாத்திரம் அல்லது முக்கிய கதாபாத்திரம் என்பதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பிற்காக மதுரை சென்றபோது அவர் டயட்டில் இருந்தாலும் எனக்கு விதவிதமான உணவுகளை வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து அழகு பார்த்தவர். குறிப்பாக அதிக அன்புமிக்கவர்.

நீங்கள் நடித்ததில் அதிக டேக் எடுத்த கதாபாத்திரம் எது?

இயக்குநர் திருப்தி ஆகும் வரை மீண்டும் மீண்டும் நடிக்க வேண்டியிருக்கும். ஒரே டேக்கில் நடிப்பதால் அது சிறப்பென்றும் அதிக டேக் எடுப்பதால் அது மோசமானது என்றும் கூறமுடியாது. அதிக டேக் எடுத்து நடிப்பதை உளவியல் ரீதியாக எடுத்து கொள்ளக்கூடாது. ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் கிட்டத்தட்ட ஒரு ஷாட்டிற்கு 13 டேக்ஸ் எடுத்திருக்கிறேன். குறிப்பாக நான் நடிக்கும்போது எவ்வளவு டேக் எடுக்கிறேன் என்று யோசிக்கமாட்டேன்.

நீங்கள் நடித்ததில் முதல் டேக்கில் வெற்றியான காட்சி எது?

பல காட்சிகளை முதல் டேக்கிலேயே இறுதி செய்துள்ளேன். சமீபத்தில் கூட அர்ஜுன் தாஸுடன் நடித்த படத்தில் பல முதல் டேக் காட்சிகள் இருக்கின்றன. நடிப்பதற்கு முன்பே ஒத்திகைகள் இருப்பதால் முதல் டேக் இறுதி ஆவது என்பது எளிதாக மாறிவிட்டது.


‘ராஜா மந்திரி’ திரைப்படத்தில் காளி வெங்கட்

நீங்கள் நடிதத்திலேயே உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது?

நான் நடிதத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ‘ராஜா மந்திரி’ பட கதாபாத்திரம்தான். இது என் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை எடுத்துரைக்கும் கதாபாத்திரமாக அமைந்திருந்தது. படப்பிடிப்பிற்காக கிராமங்களுக்கு சென்றபோதும் இத்திரைப்படத்தைப் பார்த்த கிராம மக்களும் சாதாரண மக்களும் என்னை இந்த கதாபாத்திரத்தில்தான் நினைவு வைத்திருக்கிறார்கள். அதனால் அது எனக்கு மிகவும் நெருக்கமானது. அதேபோல் சமீபத்தில் வெளியான ‘அநீதி’ படத்தின் கதாபாத்திரம் ‘மெர்சல்’, ‘சூரரைப்போற்று’, ‘இறுதிச்சுற்று’, ‘முண்டாசுப்பட்டி’, ‘தெகிடி’, ‘மாரி’, ‘கார்கி’ என்று பல கதாபாத்திரங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

Tags:    

மேலும் செய்திகள்