குறைகளை நிறைகளாக்கிக் கொள்ளும் பாடகி அருணா!

சூப்பர் சிங்கர் சீனியர் பிரிவில் இதுவரை நடைபெற்ற சீசன்களிலேயே ஒரு பெண் முதல் முறையாக முதல் பரிசை தட்டிச் சென்றார் என்றால் அது அருணாதான்.

Update: 2023-11-13 18:30 GMT
Click the Play button to listen to article

சினிமாவில் திரைப்படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ அதை விட அதிக அளவில் சின்னத்திரை சீரியல்களுக்கும், தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் வரவேற்பு இருக்கிறது. இதில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பெரும்பாலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பலருக்குள் புதைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் மேடையாக இருக்கிறது. அத்தகைய மேடைகளில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சொல்லலாம். விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சீனியர் பிரிவில் இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இத்தனை சீசன்களை இந்த நிகழ்ச்சி கடந்து வந்திருந்தாலும் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பெண்களால் முதல் பரிசு பெறப்படாத ஒரு மேடை என்ற முத்திரையை சூப்பர் சிங்கர் சீனியர் 9 வது பிரிவில் உடைத்தெறிந்து முதல் பரிசை தட்டிச் சென்ற முதல் பெண்மணி என்ற சாதனையும் பெருமையும் அருணாவையே சேரும். அவருடன் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த சில சுவாரஸ்யமான பதில்களை இந்த தொகுப்பில் காணலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்சூப்பர் சிங்கர் சீனியர் பிரிவில் இதுவரை நடைபெற்ற சீசன்களிலேயே ஒரு பெண் முதல் முறையாக முதல் பரிசை தட்டிச் சென்றார் என்றால் அது அருணாதான்.இவர் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் ஆவார். அருணாவும், அவரது தங்கை அகிலாவும் இரட்டை சகோதரிகள். சிறுவயது முதலே இருவரும் இசையின் மேல் அளவில்லா நேசம் கொண்டுள்ளனர். இந்த நேசத்தை மிகப்பெரிய அளவில் வெளியுலகத்திற்கு கொண்டு வந்து பெருமை சேர்த்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் மேடைதான். எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு சாதாரண போட்டியாளராக களமிறங்கிய அருணா சிறுவயது முதலே பல கோவில்களில் பாடி வந்தாலும் முதல் முறையாக மேடையில் பாடும் போது ஒருவித பதற்றத்துடனையே பல நேரங்களில் காணப்பட்டுள்ளார். பின்னர் நாளாக நாளாக தன்னை மெருகேற்றிக் கொண்டு ஒரு நல்ல பாடகியாக அடையாளம் பெற ஆரம்பித்தார். இப்படி திறமைமிக்க இவர் ஆரம்பகாலங்களில் கோவில்களில் பாடும் போதே தனது சாதி பின்னணியை வைத்து கேலி செய்யப்பட்டுள்ளார். திறமைக்கு சாதி, மதம் தேவையில்லை என்பதை உணர்த்தும்விதமாக தனது விடா முயற்சியாலும், விஸ்வரூப வெற்றியாலும் முதல் இடம் பிடித்து 60 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 10 லட்சம் காசோலையையும் பரிசாக பெற்றிருக்கிறார் அருணா.


சூப்பர் சிங்கர் பாடகி அருணா மற்றும் அவரது தங்கை அகிலா 

வெற்றியடைந்த ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக்கு பின்னால் ஒருவர் இருப்பார்கள் என்று கூறுவார்கள். அப்படி இந்த அருணாவின் சாதனைக்கு பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அவரது பாட்டி என்று சொல்லலாம். ஏனென்றால் அருணாவின் இசை பயணமே அவருடைய பாட்டியால் தான் தொடங்கியுள்ளது. அருணாவும், அகிலாவும் அவர்களுடைய இசை பயணம் குறித்து பேசுகையில், “மூன்றரை வயதில் ஆஞ்சநேயர் கோவிலில் என் பாட்டி மூலம் சங்கீத பயணம் தொடங்கியது. சிறு வயதில் நாங்கள் பாட்டியுடன் பள்ளிக்கு நடந்து செல்லும் போது அங்கிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் பாட்டு சத்தம் கேட்கும். அந்த பாட்டு சத்தத்தை கேட்டு எங்கள் பாட்டி நாங்கள் பாட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்று சேர்த்துவிட்டார். அங்கு என்னுடைய குருவாக இருந்தவர் ஸ்ரீதரன். இவரிடம் சரளி, ஜண்டம், வர்ணம் என்று கிளாசிகல் மியூசிக்கின் பேசிக் முறைகளை 6 வருடங்களாக கற்று கொண்டோம். 6ஆம் வகுப்பு முதல் பள்ளியிலே சந்திரசேகர் ஐயாவிடம் பண்ணிசை கற்றுக்கொண்டோம். 2 வருட இடைவெளிக்கு பிறகு பாலசந்தர் உத்பவாரையாவிடம் இன்று வரை பண்ணிசையை கற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று தங்களின் இசை பயணத்தை பகிர்ந்துகொண்டனர்.

இசையை இவர்களுக்கு அறிமுகம் செய்த ஆசானாக அவர்களுடைய பாட்டி இருந்தாலும் இசைத்துறையில் வந்தபின் ஏராளமான இசைக்கலைஞர்களையும், குருக்களையும், ஆசான்களையும் சந்தித்திருப்பார்கள். அந்த வகையில், இந்த இசை துறையில் தங்களின் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் யார்? என்று கேட்டபோது எங்களுக்கு இன்ஸ்பிரஷன் என்று யாருமில்லை என்று கூறிவிட்டார்கள். மேலும் அவர்கள் இருவரும் யாரை போன்றும் இல்லாமல் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாம். காரணம் அப்போதுதான் ஒவ்வொருவரிடமும் உள்ள இசையின் ஆழமான நுணுக்கங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதால்தானாம்.


சூப்பர் சிங்கர் மேடையில் தங்கை அகிலாவுடன் தோன்றிய அருணா ரவீந்திரன் 

இசையில் திரையிசை, மெல்லிசை என பல பிரிவுகள் உள்ளன. இதில் பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்கள் இவ்விருவருக்கும் ஏற்ற பாடல் வகையாக அமைந்துள்ளது. இதில் மிக முக்கியமாக தெய்வீக பாடல்களுக்கு உரியவர் இவ்விருவர் என்று சொல்லும் அளவிற்கு பல மேடைகளிலும் பல கோவில்களிலும் பல திருவிழாக்களிலும் தங்களின் தெய்வீக குரலால் பல தெய்வீக பாடல்களை பாடியிருக்கிறார்கள். ஆனால் தெய்வீக பாடல் மட்டுமே இவர்களுக்குரியது என்பதனையும் இவ்விருவரும் தகர்த்துள்ளனர். வெறும் தெய்வீக பாடல்களுக்கு மட்டுமே தங்கள் குரல்களை குறுகி வைத்துக் கொண்ட இவர்கள் தங்களின் நண்பர்களாலும், மற்றவர்களின் விமர்சனங்களாலும்தான் வெவ்வேறு வகை பாடல்களை பாட தொடங்கினார்களாம்.

பொதுவாகவே விமர்சனங்கள் என்றாலே தலை தெறிக்க ஓடுபவர்களும் செவி சாய்க்காமல் இருப்பவர்களும் தான் அதிகம். ஆனால் இவர்களோ வித்தியாசமாக தங்களுக்கு வரும் அனைத்து விமர்சனங்களையும் தேடி தேடி அதை கருத்தில் கொண்டு அதில் கூறப்பட்ட சிலவற்றை செயல்படுத்தி பார்ப்பார்கள் என்று கூறினார்கள். அப்படி வந்த விமர்சனங்களில் ஒன்று தான் தெய்வீக பாடல்கள் தவிர்த்து மற்ற பாடல்களையும் பாட தொடங்கினார்கள் என்று கூறியுள்ளனர்.

அப்படி சமீபத்தில் அருணாவுக்கு எழுந்த ஒரு விமர்சனம் தான் தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கூறிய விமர்சனமாகும். இவர் அருணா சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் பாடின பாடலை கேட்டு இவர் தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்கவில்லை. இப்படி தமிழ் வார்த்தைகளை கொன்றுதான் பாடல் பாடி வெல்ல வேண்டுமா. நாட்டுப்புற பாடகர்கள் தொடர்ந்து சரியாக உச்சரிக்காமல் இருப்பதை நாம் அப்படியே விட்டுவிட முடியாது என்று அவர் செய்த பிழையை சுட்டிக்காட்டி தனது ஆதங்கத்தையும் தமிழ் மொழி மேல் இருந்த பற்றையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விமர்சனத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, “எனக்கு தமிழ் என்றாலே மிகவும் பிடிக்கும். நான் அதிக தமிழ் பற்று மிக்கவள். சிறு வயது முதலே தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பேன். ஆனால் பற்களில் இந்த பிரேசஸ் பொருத்தியது முதல் வார்த்தைகளானது சற்று குளறுகிறது. அதனால் எனது உச்சரிப்பும் மற்றவர்களுக்கு சரியாக கேட்பதில்லை. அவர் கூறியதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை” என்று தனது பார்வையை பகிர்ந்துகொண்டார்.


இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் பாடகி அருணா ரவீந்திரன் 

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஒவ்வொரு பிழையும் நமக்கு ஒரு பாடமே. ஒருவர் அதை எடுத்துக் கூறுவதன் மூலமே நமக்கு அது பிழை என்றே தெரிகிறது. நான் ஒவ்வொருவரையும் என் குருவாகத்தான் பார்க்கிறேன். அதேபோல் யார் என்ன சொன்னாலும் அதை குறையாக பார்க்காமல் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதையே நான் உன்னிப்பாக கவனிப்பேன். யாரும் இந்த உலகத்தில் இறைவனை விட பெரியவர்கள் அல்ல. அதேபோல குருநாதரை விட எந்த சிஷ்யரும் பெரியவர்கள் கிடையாது. எல்லா குருக்களுக்கும் தங்கள் சிஷ்யர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதுபோல் தான் என் எண்ணம் எல்லாம் என்னுடைய குருக்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தரவேண்டும் என்பதேயாகும்” என்று கூறினார். இது அவருடைய கற்றல் திறனையும் அவர் விமர்சனங்களை கையாளும் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

இவர் சூப்பர் சிங்கரில் படைத்த சாதனையை தொடர்ந்து, சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையில் தனது முதல் சினிமா பாடலை பாடியிருக்கிறார். இதை தொடர்ந்து வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அருள்ராஜ் இசையிலும் பாடியுள்ளார். இவர் பாடிய இப்பாடல்கள் திரையில் மிக விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் அருணா பாடல்களை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிக்கவும் செய்வேன் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இன்னும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வரவில்லை என்றும் பாடல்கள் பாடுவதற்கு தான் வாய்ப்புகள் வருகிறது என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.


ஹிப் ஹாப் ஆதி மற்றும் அருள்ராஜ் இசையில் ரெக்கார்டிங் தியேட்டரில் அருணா பாடிய தருணம் 

இப்படி பல தருணங்களை பகிர்ந்து கொண்ட இவர்களிடம் சில இசையமைப்பாளர்களின் பெயர்களைக் கூறி எந்த பாடல் பிடிக்கும் என்று ஜி.வி பிரகாஷ் பெயரை கேட்டபோது அவர் இசையமைத்த முதல் பாடலான ‘வெயிலோடு விளையாடி…’ என்ற பாடலை கூறி தங்களின் அழகான கான குரலால் அந்த பாடலின் இரண்டு வரிகளை பாடி காண்பித்தனர். அடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி என்று கேட்டபோது அவர் நடித்த காளி படத்தில் இடம்பெற்ற ‘அரும்பே அரும்பே…’ என்ற பாடலை பாடினார்கள். இப்படி பானை தொழில் செய்யும் சாதாரண குடும்பத்தில் பிறந்து இதுவரை அந்நிகழ்ச்சியில் யாரும் பெறாத பட்டத்தை பெற்று ஒரு அழகிய கான குரல் இந்த இசை உலகிற்கு அறிமுகமானது இசை உலகிற்கும் இசை பிரியர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்