நீண்ட நாட்களுக்கு பின் ரஜினிகாந்தின் கேமியோ?

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் மிகமுக்கியமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Update:2024-02-20 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் மிகமுக்கியமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவை உலகளவில் அறியவைத்தவர். இவருடைய படங்கள் உலகளவில் அதிக வசூலை பெரும். அதற்கு பின்புதான் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் வருகிறார்கள். கதாநாயகனாக,  வில்லனாக என்று பல படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் "லால் சலாம் " என்கிற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 171 படங்கள் நடித்துள்ள ரஜினிகாந்த், 5 தமிழ் படங்களிலும், 6 மற்ற மொழி படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த தொகுப்பில், அவர் நடித்த சிறப்பு தோற்ற வெற்றி படங்கள் என்னென்ன? அவை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றனவா? என்பதை காணலாம்.

தாயில்லாமல் நானில்லை - பிச்சுவா பக்கிரி

1979 ஆம் ஆண்டு தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் "தாயில்லாமல் நானில்லை". இந்த படத்தில் பிச்சுவா பக்கிரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். ஏழை குடும்பத்தில் பிறந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் நாடக கம்பெனியில் சேருகிறார் ராஜா (கமல்ஹாசன்). ஒரு நாள் ஜமீன்தார் வீட்டிற்கு நாடகம் நடத்தும் பொழுது அங்கு ஜமீன்தாரின் மகள் புவனா (ஸ்ரீதேவி) மீது காதல் வருகிறது. பின்னர் ராஜாவும், புவனாவும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதி கதை. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினி, கைக்கூலி ரௌடியாக 4 நிமிடமே வந்திருப்பார். அதில் கமலுடன் சண்டை செய்திருப்பார். சிறிது நேரமே வந்தாலும் தனது ஸ்டைலில் மிரட்டியிருப்பார். இந்தப் படம் திரையரங்கில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' என்றும், இந்தியில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

உருவங்கள் மாறலாம் - கடவுள்


'உருவங்கள் மாறலாம்' படத்தில் ரஜினிகாந்த்

1983 ஆம் ஆண்டு S.V. ரமணன் தயாரித்து இயக்கிய படம்தான் "உருவங்கள் மாறலாம்". Y.G. மஹேந்திரன், சுஹாசினி ஆகியோர் நடித்திருந்தனர். ஏன் மனிதன் முன்னாள் கடவுள் தோன்றுவதில்லை என்பதே படத்தின் கரு. காமெடி படமாக வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ஜெய் ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என்று பல பேர் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தனர். நால்வரும் வெவ்வேறு கடவுளாக படத்தில் தோன்றுவர். இதில் ரஜினி வரும் காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கும். குறிப்பாக தொழிற்சாலையில் சண்டை போடும் காட்சி மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. மக்கள் திரையரங்கை விட்டு வெளியே வரும் பொழுது ரஜினி காட்சிகள் இன்னும் இருந்திருக்கலாம் என்று முணுமுணுத்தபடியே வந்தனராம். 

வள்ளி - வீரைய்யா வள்ளியப்பன்


'வள்ளி' படத்தில் வீரைய்யா வள்ளியப்பனாக வரும் ரஜினி 

1993 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தயாரித்து எழுதி கே.நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரியாராமன் மற்றும் வடிவேலு நடித்து வெளிவந்த திரைப்படம்தான் "வள்ளி". வீரையா வள்ளியப்பன் என்கிற கதாபாத்திரத்தில் வரும் ரஜினிகாந்த் அதகளப்படுத்தியிருப்பார். ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு வரும் காட்சிகள் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றன. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் பிரியாராமனுடன் இணைந்து போராடும் காட்சிகள் அனல் பறக்கும். இத்திரைப்படம் ரஜினிக்கு இன்னொரு மைல்கல்லாக அமைந்தது. எப்படி முள்ளும் மலரும், 16 வயதினிலே போன்ற திரைப்படங்கள், ரஜினிக்கு பெயர் வாங்கி தந்ததோ அதேபோல இத்திரைப்படமும் ரஜினிக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. இத்திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெள்ளிவிழா கண்டது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் "விஜயா" என்கிற பெயரில் வெளிவந்தது.

குசேலன் - அசோக் குமார்


'குசேலன்' திரைப்படத்தில் இருவேறு தோற்றங்களில் நடிகர் ரஜினிகாந்த் 

2008 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பசுபதி, மீனா மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் "குசேலன்". அசோக் குமாராக நடித்திருந்தார் ரஜினி. முடி திருத்தும் வேலை செய்யும் பாலு (பசுபதி), பெரிய நடிகராக இருக்கும் தனது நெருங்கிய நண்பன் அசோக் குமாரை சந்தித்தாரா? இருவரும் இணைந்தனரா என்பதே படத்தின் கதை. கதபறயும்போல் என்னும் மலையாளம் படத்தின் ரீமேக்தான் குசேலன். 2008 ஆம் ஆண்டுவரை வெளிவந்த படங்களில் முதல்நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்கிற பெருமையை குசேலன் பெற்றது. படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. ரஜினிக்காக மட்டுமே இந்த படம் திரையரங்கில் வெற்றி பெற்றது.

நியாயம் மீரே செப்பாலி - தெலுங்கு - அத்மராம்

1985 ஆம் ஆண்டு ராம்மோகன் ராவ் இயக்கத்தில் சுமன், ஜெயசுதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் "நியாயம் மீரே செப்பாலி". கோர்ட் டிராமா திரைப்படமாக வெளிவந்த இப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக "அத்மராம்" என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இத்திரைப்படம்தான் ரஜினியை தெலுங்கு சினிமாவில் பிரபலப்படுத்தியது. இந்த படம் "ஆஜ் கி அவாஸ்" என்கிற திரைப்படத்தின் ரீமேக். அதுமட்டுமில்லாமல் இதே படத்தை தமிழில் "நான் சிகப்பு மனிதன்" என்று S.A சந்திரசேகர் இயக்கினார். இதில் கதாநாயகனாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார். மூன்று மொழிகளிலுமே இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பல சாதனைகளை படைத்தது.

ஜெராப்தார் - ஹிந்தி - இன்ஸ்பெக்டர் ஹுசைன்


'ஜெராப்தார்' திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன், இன்ஸ்பெக்டர் ஹுசைனாக வரும் ரஜினி 

1985 ஆம் ஆண்டு S.ராமநாதன் தயாரிப்பில் ப்ரயாக் ராஜ் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் நடித்து வெளிவந்த படம்தான் "ஜெராப்தார்". இந்திய சினிமாவின் மூன்று சூப்பர்ஸ்டார்களும் இணைந்த படம் இதுவே. இன்ஸ்பெக்டர் ஹுசைனாக வரும் ரஜினிகாந்த் தனது சிகரெட் ஸ்டைலில் ஹிந்தி ரசிகர்களை வியக்கவைத்தார். சிகரெட்டை மேலே தூக்கி போட்டு துப்பாக்கியில் சுட்டு அதை வாயில் பிடிப்பார். அது அப்பொழுது மிகப்பெரிய ட்ரெண்டானது. 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய படங்களில் அதிக வசூலை பெற்ற படம் என்கிற சிறப்பை கிராப்தார் பெற்றது.

லால் சலாம் - மொய்தீன் பாய்


மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் படம் லால் சலாம். முதல் நாளில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றுள்ளது. முதல் நாளில் சுமார் 70 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு வரும் மொத்த கூட்டமும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள்தான். கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் அரசியலை பேசியிருக்கும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் வந்த பிறகுதான் திரைக்கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கும். அதுமட்டுமில்லாமல் "பம்பாயில பாய் வேற" என்கிற வசனத்தில் திரையரங்கமே அதிர்கிறது. லால் சலாமின் வெற்றியை தொடர்ந்து இன்னும் அதிகமான சிறப்பு தோற்றங்களில் ரஜினி நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்