படத்தில் மட்டுமா? நிஜத்திலும் வாலிபன் நான்! மோகன்லால் பிறந்தநாள் ஸ்பெஷல்

மலையாளத் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத ஜாம்பவானாக ஒருவர் வெற்றிகரமாக வலம் வருகிறார் என்றால் அது லாலேட்டன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மோகன்லாலாக மட்டும்தான்.

Update:2024-05-21 00:00 IST
Click the Play button to listen to article

மலையாளத் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத ஜாம்பவானாக ஒருவர் வெற்றிகரமாக வலம் வருகிறார் என்றால் அது லாலேட்டன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மோகன்லாலாக மட்டும்தான் இருக்க முடியும். மலையாள திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் அறியப்படும் இவர் கொடுக்காத வெற்றிப்படங்களும் இல்லை. தொட்டு பார்க்காத புகழ் வெளிச்சங்களும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு திரையுலகில் இன்றும் அதே இளமையோடு ராஜநடை போட்டுக்கொண்டிருக்கும் மோகன்லால், நடிகர் என்பதை தாண்டி, இசையிலும் அதீத ஆர்வம் கொண்டவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அந்த இசை ஆர்வம்தான் ‘லாலிசம் - தி லால் எஃபெக்ட்’ என்ற இசைக்குழுவை சொந்தமாக தொடங்க வைத்தது. இதுதவிர மாமனாரின் வழியை பின்பற்றி தயாரிப்பு தொழிலும் இறங்கிய மோகன்லால் இன்று 4 தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி படங்களை தயாரித்து வருகிறார். இதுதவிர திரையுலகில் போர்க்களப் பின்னணியில் வெளியான ‘கீர்த்தி சக்ரா’ மற்றும் ‘குருக்ஷேத்ரா’ ஆகிய படங்களில் ராணுவ வீரராக மிகச்சிறப்பாக நடித்ததற்காக இந்திய டெரிடோரியல் ராணுவத்தால் ‘லெப்டினன்ட் கர்னல்’ என்ற மதிப்புமிக்க பட்டத்தினை பெற்ற நாட்டிலேயே முதல் நடிகர் என்ற பெருமையும் மோகன்லாலுக்கு உண்டு. இப்படி பன்முகங்களை கொண்ட சிறந்த கலைஞனான மோகன்லால் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில், திரையுலகில் மோகன்லால் கடந்து வந்த பாதை குறித்தும், அவர் அடைந்துள்ள வெற்றிகள் குறித்தும், அவரின் குடும்ப பின்னணி என்ன என்பது குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

மோகன்லாலின் ஆரம்பகால வாழ்க்கை

குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், தன் நிறைவான நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுபோன நடிகர் மோகன்லால், 1960 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி, கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில், எலந்தூர் என்ற கிராமத்தில் விஸ்வநாதன் நாயர் மற்றும் சாந்தகுமாரி தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் இளைய மகனாக பிறந்தார். இவரது தந்தை விஸ்வநாதன் நாயர் கேரள அரசின் சட்டச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மூத்த சகோதரர் பியாரேலால் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகுந்த கண்டிப்பும், அக்கறையும் கொண்ட விஸ்வநாதன் தன் மகன் மோகன்லாலை முதலில் முடவன்மக்கள் எல்பி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். பின்னர் மகனை திருவனந்தபுரத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் விட்டு வளர்த்ததால், அந்த பகுதியிலேயே செயல்பட்டு வந்த அரசு மாதிரிப் பள்ளியிலும், அதனை தொடர்ந்து அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தும் படிக்க வைத்தார்.


நடிகர் மோகன்லால் திரையுலகில் அறிமுகமான துவக்கக்காலத்தில்

பின்னர் கல்லூரி படிப்பை அதே பகுதியில் இயங்கி வந்த மகாத்மா காந்தி கல்லூரியில் பயின்றவர், அங்கு வணிகவியல் பாடப்பிரிவில் இளங்களைப் பட்டத்தினை பெற்றார். இயல்பிலேயே கலைகள் மீது அதீத ஆர்வம் கொண்ட மோகன்லால், தான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தனது பள்ளியில் நடத்தப்பட்ட ‘கம்ப்யூட்டர் பாய்’ என்ற மேடை நாடகத்தில் தொண்ணூறு வயது முதியவராக நடித்து அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றாராம். இப்படி சிறு வயதிலேயே நடிப்பு தொடர்பான கலைகளில் ஆர்வம் கொண்டவராக மட்டும் இல்லாமல், கல்லூரி படிப்பை முடித்த பிறகு மல்யுத்தம், டேக்வாண்டோ போன்ற தற்காப்பு கலைகளில் கவனம் செலுத்தி முறைப்படி அந்த கலைகளை கற்றுகொண்டு பரிசுகளை வென்று வருவாராம். அப்படி 1977 மற்றும் 78-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற ரஷ்யன் என்னும் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் சாம்பியன் பட்டத்தினை வென்றார். இதனை தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற தேசிய மல்யுத்த போட்டியில் கலந்துகொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டவர், அப்போட்டியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார். காரணம் அப்போது அவருக்கு வந்த படவாய்ப்பு.

35 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அறிமுகப்படம்

தேசிய மல்யுத்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மோகன்லாலை நோக்கி திரைப்பட வாய்ப்பும் வர முதலில் எதனை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டு, பிறகு தனக்கு திரை வாய்ப்புதான் முக்கியம் என்று அப்பட வாய்ப்பை ஏற்று நடிக்க சென்றுவிட்டார். அப்படி தனது 18-வது வயதில் திரைத்துறையில் நுழைந்தவருக்கு முதல் வாய்ப்பாக வந்து அமைந்ததுதான் 1978-ஆம் ஆண்டு வெளியான ‘தீரநோட்டம்’ என்ற மலையாளப் படம். இப்படத்தில் மனநலம் குன்றிய குட்டப்பனாக நடித்திருந்த மோகன்லாலுக்கு முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று பார்த்தால் ஏனோ தெரியவில்லை படம் வெளியாகாமல் நின்று போனது. இருந்தும் 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் 2013-ஆம் ஆண்டு மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாக வெளியிடப்பட்டது. எது எப்படியிருந்தாலும் மோகன்லாலின் முதல் அறிமுகப்படமாக அமைந்தது என்னவோ இயக்குநர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' திரைப்படம்தான். 1980-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் நரேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மோகன்லாலுக்கு இப்படம் கேரள அரசின் 6 மாநில விருதுகளை பெரும் அளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியால் அடுத்த ஆண்டே 8 படங்களில் நடிக்கும் அளவுக்கு மிகவும் பிஸியான நடிகராக மாறினார்.


அழகான பார்வையுடன் மோகன்லால் 

அதிலும் 1982-ல் தொடங்கி 1988 வரை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை மோகன்லாலின் படங்கள் வெளியாகும் அளவுக்கு புகழின் உச்சத்தை தொட்டார். இதில் 1986-ஆம் ஆண்டு வெளியான T.P.பாலகோபாலன் M.A.-இல் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் கேரள மாநில அரசின் விருதைப் பெற்ற மோகன்லால், 2005-ஆம் ஆண்டு ‘உதயநானு தாரம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார். துணை கதாபாத்திரங்கள் துவங்கி, சோலோ ஹீரோ, வில்லன், நகைச்சுவை நாயகன் என்று பல பரிமாணங்களில் மிளிர்ந்து கேரள ரசிகர்களை கட்டிப்போட்ட மோகன்லால், 1989-ஆம் ஆண்டு ‘கிரீடம்’ என்ற படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். இதுதவிர பல படங்களையும் சொந்தமாக தயாரித்து சிறந்த தயாரிப்பாளராகவும் அடையாளம் பெற்றார். அப்படி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "பிரணவம் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல்" மூலம் 2013-ஆம் ஆண்டு ‘த்ரிஷ்யம்’ மற்றும் 2016 புலிமுருகன் உட்பட பல படங்களை தயாரித்து வெற்றி கொடுத்துள்ளார். இதற்கிடையில் 2012-ஆம் ஆண்டு தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற டேக்வாண்டோவில் கலந்து கொண்ட மோகன்லாலுக்கு கவுரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. இதனை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மற்றும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமை மோகன்லாலுக்கு கிடைத்தது.

தமிழ் அறிமுகம் நடந்தது எப்படி?


அழகிய புன்னகையுடன் வெவ்வேறு தோற்றங்களில் மோகன்லால் 

விருதுகள், பாராட்டுகள் என்று மலையாளத் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த மோகன்லாலை தமிழில் அறிமுகம் செய்து வைத்த பெருமை இயக்குநர் பிரியதர்ஷனையே சேரும். மலையாளத்தில் மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருந்ததன் அடிப்படையில் தமிழில் 1991-ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில், கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கோபுர வாசலிலே படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வரும் ‘கேளடி என் பாவையே’ பாடலில் ஒரு காட்சியில் அக்கார்டியன் எனும் இசைக்கருவியை வாசித்தவாறு கேமியோ ரோலில் வந்து போவார். இருந்தும் தமிழில் ஒரு சோலோ ஹீரோவாக அறிமுகமானது மணிரத்தினத்தின் ‘இருவர்’ திரைப்படத்தில்தான். அதற்கு முன்னதாக 1996-ஆம் ஆண்டு மோகன்லாலின் பிரணவம் ஆட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஷோகும் பிலிம்ஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் மீண்டும் இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் ‘காலாபானி’ என்ற மலையாள திரைப்படத்தில் இளைய திலகம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டின் விடுதலைக்காக அகிம்சை முறையில் போராடியவர்களை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை அப்போது ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையில் அடைத்து பல சித்ரவதைகளை செய்து வந்தது. அதன் அடிப்படையில் புனைவு கதையாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் டாக்டர் கோவர்த்தன் மேனன் என்னும் கதாபாத்திரத்தில் வந்து நடிப்பில் அதகளம் செய்திருப்பார். சிறையில் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக குரல் கொடுத்து பேசும் ஒவ்வொரு இடங்களிலும் தன் உணர்ச்சி பொங்கும் நடிப்பால் வெடித்து தள்ளியிருப்பார். அதிலும் படத்தில் முகுந்தன் ஐயங்காராக வரும் நடிகர் பிரபு தமிழனோட ரத்தம் என்று சொல்லும் போது இந்தியனோட ரத்தம்னு சொல்லு என பேசும் வசனங்களாகட்டும், சிறைத்துறை அதிகாரியாக வரும் அம்ரிஷ் புரியின் ஷூவை நாக்கால் துடைக்கும் காட்சியாகட்டும் அனைத்து காட்சிகளிலும் நடிப்பு ராட்சசன் என்பதனை நிரூபித்து காட்டியிருப்பார். வரலாற்று சிறப்புமிக்க கிளாசிக்கல் படமாக வெளிவந்த இப்படம் தமிழில் 'சிறைச்சாலை' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனாலேயே தமிழின் முதல் ஹீரோ படமாக 'சிறைச்சாலை' அமைந்துபோனது.


'சிறைச்சாலை' படத்தில் மோகன்லாலின் நடிப்பு

இதனை தொடர்ந்துதான் எம்ஜிஆர் மற்றும் கலைஞரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை போன்ற சாயலை கொண்டு ‘இருவர்’ படம் வெளியானது. இதில் எம்.ஜி.ஆர் போன்ற தோற்றத்தில் ஆனந்தன் எனும் கதாபாத்திரத்தில் வரும் மோகன்லால் தன் வழக்கமான நடிப்பால் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டு போயிருப்பார். இதற்கு பிறகு முழுக்க முழுக்க மலையாள சினிமாக்களில் மட்டும் கவனம் செலுத்தியதால் தமிழ் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. இருந்தும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு 2003-ஆம் ஆண்டு சிம்ரனுடன் இணைந்து ‘பாப் கார்ன்’, 2009-ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் படங்கள் வாயிலாக மட்டுமின்றி மலையாளப் படங்கள் வாயிலாகவும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்த மோகன்லால், 2014-ஆம் ஆண்டு விஜய்யுடன் இணைந்து ‘ஜில்லா’ படத்தில் நடிக்கிறார் என்றதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அலை உருவானது. விஜய்யை மிகவும் பிடிக்கும் எனபதால் அவரே விரும்பி நடித்த இப்படத்தில், விஜய்க்கு அப்பாவாக சிவன் கதாபத்திரத்தில் நடித்த மோகன்லாலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இங்கு கிடைத்தது. இதன் பிறகு சூர்யாவுடன் ‘காப்பான்’, ரஜினியுடன் ‘ஜெயிலர்’ ஆகிய படங்களிலும் கேமியோ மற்றும் முழு வேடங்களிலும் நடித்து அசத்தினார். இதில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் வெறும் இரண்டு காட்சிகளில் மட்டும் வந்து போயிருந்தாலும் ரசிகர்கள் கைத்தட்டல்களையும், விசில் சத்தங்களையும் அள்ளி கொடுத்து மோகன்லாலை மொழி கடந்து கொண்டாடி தீர்த்தனர்.


'இருவர்' படத்தில் நடிகை கௌதமியுடன் மோகன்லால் 

மலையாள சினிமாவே பார்த்து பொறாமைப்படும் 'லாலேட்டன்'

மலையாள சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் மோகன்லால் 63 வயதிலும் இளமை மாறாமல் அதே துள்ளலோடு 25 வயது இளைஞனை போன்று இன்றைய தலைமுறை நடிகர்களும் ஏற்று நடிக்க யோசிக்கும் சவாலான வேடங்களையும் அனாசியமாக ஏற்று நடித்து புருவங்களை உயர்த்த வைக்கிறார். மலையாள சினிமாவில் மூத்த நடிகர்களின் வாரிசுகள், புது முகங்கள் என்று பலரும் நடித்துவரும் நிலையில், அவர்களுக்கு நிகராக போட்டி போட்டு இவரது சமகாலத்து நடிகரும் நண்பருமான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இன்றும் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் கூட மலையாளத்தில் மோகன்லாலின் நடிப்பில் வெளிவந்த ‘நேரு’, ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்ததுடன் மலையாள பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் சாதனையையும் நிகழ்த்தின. இதுதவிர மலையாள சினிமாவில் லாலேட்டனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்று பலரும் பொறாமைப்பட்டு சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து ஆக்‌ஷன், த்ரில்லர், 3டி, வரலாற்றுப் படம் என எல்லா ஜானரிலும் களத்தில் இறங்கி பட்டையை கிளப்ப தொடங்கியுள்ள மோகன்லால் தற்போது வரிசையாக ‘பர்ரோஸ்', 'எல்2: எம்புரான்', 'கண்ணப்பா', 'ரம்பான்', 'ராம்', 'த்ரிஷ்யம் 3' என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் அவரின் கனவுப் படமான 'பர்ரோஸ்' 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இப்படம் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ள இப்படத்தில் அவரே கதையின் நாயகனாகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


மோகன்லாலின் ‘பர்ரோஸ்' திரைப்பட போஸ்டர் 

அதேபோன்று, மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான ஜோஷி மற்றும் மோகன் லால் கூட்டணியில் பல படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றிருந்ததாலும், தற்போது ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் 'ரம்பான்' படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று ஜித்து ஜோசப் - மோகன் லால் கூட்டணியில் ஐந்தாவது படமாக உருவாகிவரும் 'ராம்' திரைப்படத்தில் முதல் முறையாக த்ரிஷா நடிக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகள் 2020-ம் ஆண்டே தொடங்கப்பட்டன. ஆனால், கொரோனா முடக்கத்தால் நிறுத்திவைக்கப்பட்ட படத்தின் பணிகள் தற்போது மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுதவிர, ஃபேன் பாய் மொமெண்ட் என்பது தமிழ் சினிமவில் மட்டுமல்ல, மலையாள சினிமாவிலும் உண்டு. அதற்கு உதாரணம்தான் நடிகர் பிரித்விராஜ். அவருக்கு லாலேட்டன் மோகன்லாலை மிகவும் பிடிக்கும் என்பதால், தான் இயக்குநராக அறிமுகமானால் தன் ஏட்டனை வைத்துத்தான் முதலில் இயக்க வேண்டும் என்று களத்தில் இறங்கி நினைத்தை சாதித்து காட்டிய படம்தான் மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு வெளிவந்த 'லூசிஃபர்' திரைப்படம். மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் 'எல்2: எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. குரேஷி ஆப்ராம் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துவரும் இப்படத்தினையும் பிரித்விராஜே இயக்கி வருகிறார். எது எப்படி இருந்தாலும் 64 வயது இளைஞனாக இன்றும் தன் திரைப்பயணத்தில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டு வெற்றி நடைபோட்டுவரும் லாலேட்டன் தன் இலக்கை நிறுத்திவிடாமல் தொடர் வெற்றிகளை பதிய வைத்துக் கொண்டே இருக்க வாழ்த்துவோம்.

Tags:    

மேலும் செய்திகள்