கை குலுக்கலுக்கு நோ! கட்டிபிடித்து முத்தம் கொடுக்க ஓகே! நித்யா மேனனா இப்படி?

படப்பிடிப்புகளில்கூட சாதாரணமாக நடித்திருக்கும் பெரிய ஹீரோவுக்கு மொத்த செட்டே கைதட்டும். ஆனால் சூப்பராக நடித்திருந்தாலும் ஹீரோயின்களுக்கு கைதட்ட மாட்டார்கள். அப்படியிருக்கும்போது இந்த படத்தில் என்னுடைய பெயரை முதலில் போட்டிருப்பது மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

Update:2025-01-21 00:00 IST
Click the Play button to listen to article

‘என்னால் நான் நானாக இருக்க முடியவில்லை. மற்றவர்களைப்போல சாதாரணமாக வெளியே சுற்ற முடிவதில்லை. எனக்கு சினிமாவில் நடிக்கவே விருப்பமில்லை’ - இது சமீபத்தில் நித்யா மேனன் அளித்த நேர்காணல். சினிமாவில் நடிக்கவே விருப்பமில்லை என்று சொல்லும் ஒரு நடிகைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் வாய்ப்புகள் எப்படி தொடர்ந்து கிடைக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறதல்லவா? அதற்கு காரணம் நடிக்கவே விருப்பமில்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை அப்படியே உள்வாங்கி இயக்குநரின் நாயகியாகவே திரையில் அவர் வாழ்வதுதான் என பல இயக்குநர்கள் நித்யாவை பாராட்டியுள்ளனர். 2025ஆம் ஆண்டு தொடங்கியவுடனே ‘காதலிக்க நேரமில்லை’ படம் வெளியாகி நித்யா மேனனுக்கு ஒரு ஏறுமுகமாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் இவர், சமீபத்தில் கலந்துகொண்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் பாகுபாடு காட்டுவதாக பல விமர்சனங்கள் இவர்மீது வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ‘நவீன தீண்டாமை - நித்யா’ என்ற வார்த்தை சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அப்படி நித்யா மேனன் செய்தது என்ன? சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் என்னென்ன? சற்று விரிவாக பார்க்கலாம்.

நவீன தீண்டாமை- விமர்சனங்களுக்கு ஆளாகும் நித்யா

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் நித்யா மேனன் - ஜெயம் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, வினய் ராய், யோகி பாபு மற்றும் லால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் நித்யா மேனன் நடந்துகொண்ட விதம் அவருடைய ரசிகர்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது. மேடையில் பேசுவதற்கு அழைத்த நித்யா மேனனுக்கு அப்படத்தின் மக்கள் தொடர்பாளர் கைகுலுக்க நீட்ட, “எனக்கு உடம்பு சரியில்லை. உங்களை தொட்டால் என்னிடமிருந்து கோவிட் ஒட்டிக்கொள்ளப்போகிறது” என சிரித்துக்கொண்டே கைகொடுக்காமல் சென்றுவிட்டார்.


‘நவீன தீண்டாமை’ என நித்யா மேனன் விமர்சிக்கப்பட காரணமா நிகழ்வு

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வினய் ராயை பார்த்தவுடன் கட்டிப்பிடித்தார். சிறிது நேரத்தில் இயக்குநர் மிஷ்கின் அங்கு வர, அவரை தானே அழைத்து கன்னத்தில் முத்தமிட, அவரும் பதிலுக்கு கையில் முத்தமிட்டார். அடுத்து வந்த ஜெயம் ரவியையும் அதேபோல் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி நித்யா மேனனை கடும் விமர்சனங்களுக்கு ஆளாக்கியுள்ளன. குறிப்பாக, கையை தொட்டால் கோவிட் வரும். ஆனால் கட்டிப்பிடித்தால் வராதா? சாதாரண நபர்களை ஒரு மாதிரியும், நடிகர் நடிகைகளை ஒரு மாதிரியும் நடத்துவது சரியா? எல்லாருக்கும் பிடித்த நடிகையாக அறியப்படும் ஒருவர் பொதுவெளியில் இப்படி செய்தது நியாயமா? இது நவீன தீண்டாமையை காட்டுகிறது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்தெல்லாம் கவலைப்படாத நித்யா, தொடர்ந்து நேர்காணல்களில் பங்கேற்று வருவதுடன், தன்னுடைய இந்த செயல் குறித்து வருத்தமோ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை என்பது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

சினிமாவில் ஏற்றதாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது!

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் டைட்டில் கார்டில் நித்யா மேனன் பெயருக்கு பிறகு ரவி மோகனின் (ஜெயம் ரவி) பெயர் போடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நித்யா மேனனிடம் கேட்கப்பட்டபோது, சினிமாவை பொருத்தவரை ஏற்றதாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்றும் ஆண்களுக்கு கீழ்தான் பெண்களை வைத்து பார்க்கின்றனர் என்று பகிரங்கமாக் கூறியிருக்கிறார். மேலும் ஒரு படத்தை எடுத்துக்கொண்டால் இயக்குநர், ஹீரோவுக்கு அடுத்த இடத்தில்தான் ஹீரோயினை வைத்திருப்பார்கள். அதேபோலத்தான் கேரவனும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆரத்தி எடுத்தால்கூட அந்த வரிசையில்தான் எடுப்பார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது குறுகிய மனப்பான்மையுடன் அனைவரும் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரவருக்கான அங்கீகாரத்தை கொடுக்கலாம்.


‘காதலிக்க நேரமில்லை’ திரைப்பட டைட்டில் கார்டில் முதலில் இடம்பெற்ற நித்யா மேனன் பெயர்

படப்பிடிப்புகளில்கூட சாதாரணமாக நடித்திருக்கும் பெரிய ஹீரோவுக்கு மொத்த செட்டே கைதட்டும். ஆனால் சூப்பராக நடித்திருந்தாலும் ஹீரோயின்களுக்கு கைதட்ட மாட்டார்கள். அப்படியிருக்கும்போது இந்த படத்தில் என்னுடைய பெயரை முதலில் போட்டிருப்பது மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது. இதற்கு ஜெயம் ரவியும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஜெயம் ரவி கூறுகையில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நித்யா மேனன் பெயரை முதலில் போட்டு இரண்டாவது எனது பெயரை போடச் சொன்னேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். நித்யா மேனன் இவ்வாறு கூறியதற்கு, நேரில் பார்க்கும்போது சாதாரண மக்களிடம் ஏற்றதாழ்வு காண்பிக்கும் நித்யா சினிமாவில் காட்டப்படும் ஏற்றதாழ்வுகள் குறித்து விமர்சிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

சினிமா பிடிக்கல!

திரைத்துறையில் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து பேசிய நித்யா மேனன் தொடர்ந்து தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சினிமா தனக்கு பிடிக்காததற்கு காரணம் குறித்தும் மனம்திறந்திருக்கிறார். வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் சிறுவயதிலிருந்தே அவர் தனியாகவே இருந்தாராம். அதுவே அவருக்கு ஒருவித மன அழுத்தத்தை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் தான் எடுக்கும் எந்த முடிவுகளிலும் பெற்றோர் தலையிட மாட்டார்கள் எனவும், சினிமா வாய்ப்புகூட தானாக தேடிவந்ததால் தொடர்ந்து நடித்துவருவதாகவும், இல்லாவிட்டால் வேறு துறையை தேர்ந்தெடுத்திருப்பேன் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து தனக்கு சினிமா பிடிக்கவில்லை என்றும், எல்லாரும் வாழ்வதுபோல ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ விரும்புவதாகவும், ஆனால் நடிகையாக இருப்பதால் தனக்கு அந்த வாழ்க்கை கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.


சினிமாவில் நடிப்பது குறித்து நித்யா மேனனின் பகிர்வு

மேலும் இப்படிச் சொன்னால் சினிமாவை அசிங்கப்படுத்துவது போன்று இருக்கும், ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்றுகூட கேட்பார்கள். ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு அமைதியாக சினிமாவை விட்டு போய்விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்போதுதான் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அப்போதுதான் சினிமா நம்மை விடாது என்று நினைத்து நடிப்பை தொடர்கிறேன். சின்ன வயதில் என்னை ஒரு டான்சராக்க அம்மா முயற்சித்தார்கள், ஆனால் எனக்கு ஸ்டேஜ் ஏறவும் கேமரா முன்னாடி நிற்கவும் பயம். இப்போது நான் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றால் அது கடவுள் எனக்கு கொடுத்த லஞ்சமாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். நித்யா மேனனின் இந்த பேச்சும் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

இட்லி கடை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ‘இட்லி கடை’ படத்தில் சேருகிறது தனுஷ் - நித்யா மேனன் ஜோடி. இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்துவருகிறார். ஏற்கனவே ராஜ்கிரண் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், பொங்கலை முன்னிட்டு நித்யா மேனன் - தனுஷ் இருக்கும் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை டான் பிக்சர்ஸ், வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


‘இட்லி கடை’ படத்தில் தனுஷ் - நித்யா மேனன்

‘இட்லி கடை’ படம் குறித்து நித்யா மேனன் கூறுகையில், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இடம்பெற்றிருக்கும் தனது கதாபாத்திரத்துக்கு நேரெதிராக ‘இட்லி கடை’ கதாபாத்திரம் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தை யாராலும் யூகிக்கவே முடியாது என்றும், இப்படமே மிகவும் எமோஷனலான படமென்றும், பார்ப்பவர்கள் கட்டாயம் அழுதுவிடுவார்கள் என்றும் கூறி படத்தின்மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார். ‘இட்லி கடை’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘டியர் எக்சஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ இரண்டாம் பாகத்திலும், விஜய் சேதுபதியுடன் ‘ட்ரெயின்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் நித்யா மேனனின் அடுத்தடுத்த படங்கள் வெளிவரவிருக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்