வீதிக்கு வந்த குடும்ப சண்டை! வில்லங்கத்தில் சிக்கிய மோகன்பாபு

மூத்த நடிகரான மோகன்பாபுவின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சொத்து பிரச்சனை இன்று வீதிக்கு வந்து பத்திரிகையாளர்களை தாக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

Update: 2024-12-16 18:30 GMT
Click the Play button to listen to article

‘ஆறு வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ இந்த பழமொழி, குழந்தைப் பருவத்தில் இருந்தே உருவாகும் சகோதரர்களின் நட்பு மற்றும் பின்னர் வளர்ந்து வரும்போது அவர்களுக்குள் ஏற்படும் பகிர்வுணர்வு பற்றி நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிய வாக்கு. அப்படியான ஒரு சிக்கல்தான் தற்போது தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான மோகன்பாபுவின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ளது. சொத்து பிரச்சினை, அதிகாரம், ஆக்ரோஷமான மோதல் என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த பகையுணர்வு இன்று வீதிக்கு வந்து பத்திரிகையாளர்களை தாக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இதனால் மோகன்பாபுவிற்கும் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு குறித்த முழு தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.

மூத்த நடிகர் & ரஜினியின் நண்பர்

மோகன் பாபு இந்த பெயரை கேட்டவுடன் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்தான். காரணம் சூர்யா நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் சூர்யாவுக்கு மேலதிகாரியாக நடித்த மோகன் பாபு பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருப்பார். இருப்பினும் 1980 மற்றும் 90-களிலேயே டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இவர் வலம் வந்தவர் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான மோகன் பாபு துவக்கத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சென்னை திரைப்படக் கல்லூரியில் இணைந்து படித்தவர், அங்கு நடிப்பு சம்பந்தமான அனைத்து பயிற்சிகளையும் பெற்றார். 1974ஆம் ஆண்டு வெளியான ‘அல்லூரி சீத்தாராம ராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் அவருக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. தமிழிலும் 80-களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் துவங்கி ரஜினி, கமல் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள மோகன் பாபு, அப்போதே தமிழ் சினிமாவில் மிகவும் அறியப்படக் கூடிய நடிகராக திகழ்ந்தவர் ஆவார். இதில் ‘அண்ணன் ஒரு கோயில்’, ‘ தாய் மீது சத்தியம்’, ‘ரத்த பாசம்’, ‘கர்ஜனை’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘குரு’ போன்ற படங்கள் மிக முக்கியமானவை.


நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோகன்பாபு 

நடிப்பு தவிர இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பிற துறைகளிலும் இயங்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள மோகன்பாபு, அரசியலிலும் ஆர்வமுடையவர் ஆவார். தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பாஜக என ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து பயணித்து வந்த மோகன்பாபு, சில காலம் ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்துள்ளார். இதில் குறிப்பாக ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான இவர், சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே அவருடன் நட்பு பாராட்டி வந்துள்ளார். எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் ரஜினியுடன் பேசி ஆலோசித்து செயல்படுத்தும் பழக்கம் கொண்ட மோகன்பாபு, சினிமாவிலும் பல புதிய முயற்சிகளில் ரஜினியுடன் கைகோர்த்துள்ளார். இதற்கு உதாரணமாக ‘நாட்டாமை’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்று மோகன்பாபு படமெடுக்க முடிவெடுத்த போது, ரஜினிகாந்த் தான், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் பேசி படத்தை ரீமேக் செய்ய உதவினாராம். அதேபோல் மோகன் பாபு கேட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காக அந்த படத்தில் பாப்பாராயுடு என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலிலும் தோன்றி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அப்படி என்னதான் பிரச்சினை?


மகன் மனோஜ் மஞ்சுவுடன் மோகன்பாபு

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன் பாபு. இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநராக மட்டும் அல்லாமல் மிக சிறந்த தொழிலதிபராகவும் அங்கு இருந்து வருகிறார். பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் இவருக்கு விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு என்ற இரு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கின்றனர். இதில் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகிய இருவருமே நடிகர்கள். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர்களை வைத்து மோகன்பாபுவும் சில படங்களை தயாரித்துள்ளார். ஹைதராபாத்தின் ஜல்பள்ளி பகுதியில் உள்ள பிரம்மாண்டமான பங்களாவில் தன் மகன்கள் இருவருடனும் வசித்து வந்த மோகன்பாபு எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல்தான் பல காலமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் மோகன் பாபுவிற்கும் அவரது இளைய மகன் மனோஜ் மஞ்சுவிற்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பதியில் இயங்கி வரும் மோகன்பாபு பல்கலைக்கழகத்தை யார் நிர்வகிப்பது என்பதில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பத்தில்தான் இந்த பிரச்சினை வந்ததாக சொல்லப்படுகிறது. இது ஊடகங்களிலும் வெட்ட வெளிச்சத்திற்கு வர, பிரச்சினை தொடர்பான ஆடியோ ஒன்று சில தினங்களுக்கு முன் வெளிவந்து பரபரப்பானது.


திருப்பதியில் உள்ள நடிகர் மோகன்பாபுவின் பல்கலைக்கழகம்

அதில், உன்னை சிறுவயதில் இருந்து பார்த்து பார்த்து வளர்த்தவன் நான். குடும்பத்திற்குள் பிரச்சினை வருவது சகஜம்தான். இதற்காக நமது அப்பா மகன் உறவு அறுந்துவிடுமா? எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அதை தீர்க்கத்தான் நாம் முயல வேண்டும். திருப்பதியில் உள்ள மோகன்பாபு பல்கலைக்கழகம் கோயிலுக்கு சமமானது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலேயே மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் நம் பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, இதை நீ புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என மோகன் பாபு பேசி இருந்தார். முன்னதாக கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அன்று மோகன் பாபு தனது மகன் மனோஜ் மஞ்சுவிற்கு எதிராக ஹைதராபாத் பஹாடி ஷெரிஃப் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் 30திற்கும் மேற்பட்ட பவுன்சர்களுடன் தனது வீட்டில் மனோஜும் அவரது மனைவி மோனிகாவும் அத்துமீறி நுழைந்து தங்கள் ஊழியர்களை மிரட்டி சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்திருந்த மனோஜ் மஞ்சு, தனது தந்தையின் இந்த செயல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறி சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது, நான் சொத்துக்காக போராடவில்லை, சுயமரியாதைக்காக தான் போராடுகிறேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அடிதடி.. பரபரப்பு... வழக்கு...


மோகன் பாபுவின் புகாருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்த மனோஜ் மஞ்சு

மோகன் பாபுவின் புகாருக்கு எதிராக தன் பங்கிற்கு மனோஜ் மஞ்சுவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி மேலும் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியது. அதாவது சம்பவத்தன்று ஜல்பல்லியில் உள்ள மோகன் பாபு தன் வீட்டில் இருக்கும்போது மனோஜ் மஞ்சு மற்றும் அவரது மனைவி மோனிகா ஆகிய இருவரும் சில நபர்களுடன் அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் பாதுகாவலர்கள் கேட் கதவை திறக்க மறுக்கவே, மனோஜுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் அவர்களையும் மீறி கேட்டை தள்ளி மனோஜ் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டை விட்டு மோகன் பாபு வெளியே வந்துள்ளார். அவரை பார்த்ததும் கூட்டமாக செய்தியாளர்கள் மைக்கை நீட்டி கேள்வி கேட்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த சமயம் கடும் கோபத்தில் இருந்த மோகன்பாபு மைக்கை பிடுங்கி பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். இதில் காயமடைந்த 2 பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


பத்திரிகையாளர் சந்திப்பின்போது மோகன்பாபு 

இதனால் தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள பத்திரிகையாளர்கள் மோகன்பாபுவிற்கு எதிராக போராட்டத்தில் குதித்ததோடு, அவருக்கு எதிராகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக மோகன் பாபு மீது 118 பிஎன்எஸ் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதே வேளையில், மோகன் பாபுவின் செயலுக்கு எதிராக கடும் கண்டனங்களும் குவிந்து வந்தன. இதற்கிடையே ஹைதராபாத் போலீஸ் கமிஷனர், டிசம்பர் 11 அன்று மோகன் பாபுவையும் அவரது மகன் மனோஜ் மஞ்சுவையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன் பாபு அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் சட்டரீதியான சிக்கல் வந்தால் தப்பிப்பதற்காகவே மோகன் பாபு மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக சிலர் கூறிவரும் நிலையில், மனோஜ் மஞ்சுவுக்கு மோகன்பாபு அனுப்பிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தில் மோகன்பாபுவிற்கு பக்கபலமாக இருந்துவரும் மூத்த மகன் விஷ்ணு மஞ்சுவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது பத்திரிகையாளர்கள் கேட்டை தள்ளி கொண்டு வந்து மோகன்பாபுவின் முகத்தில் மைக்கை இடித்ததால்தான் அவ்வாறு அவர் நடந்துகொண்டதாக விளக்கம் அளித்தார். மேலும் காயமடைந்த பத்திரிகையாளருக்கு தேவையான மருத்துவ உதவிகளை, தான் செய்து வருவதாகவும் அப்போது அவர் கூறினார். பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். அதேபோல்தான் அங்கு இருக்கும் பல சினிமா பிரபலங்களும் பெரும்பாலும் கூட்டு குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்று யார் கண் பட்டதோ தெரியவில்லை நடிகர் மோகன் பாபுவின் குடும்ப பிரச்சினை வீதிக்கு வந்து சந்தி சிரித்து வருகிறது. இதில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல் கண்டிப்புக்கு உரியதே என்றாலும், மன்னித்து, மனம் மாறி குடும்ப உறவுகள் விரைவில் இணையும் என நம்புவோம்.

Tags:    

மேலும் செய்திகள்