சர்ச்சைகளை தகர்த்து சாதிக்க வரும் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்!

எனது மகனுக்கு நடிகராவதில் துளியும் விருப்பம் இல்லை என்று கூறி பலரின் எதிர்பார்ப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் எஸ்.ஆர்.கே… தந்தையின் அந்த கூற்றை உண்மையக்கும் விதமாக ஆர்யன் கான் தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

Update:2024-12-03 00:00 IST
Click the Play button to listen to article

பொதுவாகவே திரைத்துறையை சேர்ந்தவர்களின் வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், வந்து தங்களுக்கான இருப்பிடத்தை தக்கவைத்து கொள்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. இருந்தும் அதையும் தாண்டி சாதித்து தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறவர்கள் ஏராளம். அதற்கு பாலிவுட் சினிமா ஒரு மிகச்சிறந்த உதாரணம். மற்ற மொழி சினிமாக்களை விட பாலிவுட்டில்தான் அதிகமான வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். அதனாலேயே நெப்போட்டிசம் அதிகம் நிறைந்த ஒரு துறையாக எப்போதும் பாலிவுட் சினிமாவை பலரும் கூறுவதுண்டு. அந்த வார்த்தையை உண்மையாக்கும் விதமாக அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் நடிகராகத்தான் களமிறங்குவார் என்று எல்லோரும் கூறிவந்த நேரத்தில், எனது மகனுக்கு நடிகராவதில் துளியும் விருப்பம் இல்லை என்று கூறி பலரின் எதிர்பார்ப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் எஸ்.ஆர்.கே. தந்தையின் அந்த கூற்றை உண்மையக்கும் விதமாக ஆர்யன் கான் தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். அதுகுறித்த செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.

யார் இந்த ஆர்யன் கான்?


தந்தை ஷாருக்கானுடன் ஆர்யன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் கௌரி கானின் மூத்த மகன் என்ற அடையாளத்துடன் நமக்கெல்லாம் பரிச்சயமான ஆர்யன் கான், 1997-ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தார். இவரின் பெற்றோர்களான ஷாருக்கான் மற்றும் கௌரி கான் இருவரும் இஸ்லாம் மற்றும் இந்து மதங்களை பின்பற்ற கூடியவர்கள். பிறந்தது சினிமா பின்புலம் உள்ள குடும்பமாக இருந்தாலும் படிப்பின் அவசியம் உணர்ந்த ஆர்யன் கான் தனது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியிலும், கென்ட்டில் உள்ள செவெனோக்ஸ் பள்ளியிலும் பயின்றார். 2020-ஆம் ஆண்டு தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள யுஎஸ்சி ஸ்கூல் ஆஃப் சினிமாடிக் ஆர்ட்ஸில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். இதற்கிடையில், தந்தையுடன் சேர்ந்து சிறுவயதில் சில படங்களில் நடித்தும், சில படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தும் அசத்தியுள்ளார். இதனால் ஆர்யனும் தந்தையை போன்று, அவரது வழியை பின்பற்றி சினிமாவில் ஹீரோவாகத்தான் அறிமுகமாவார் என்றே எல்லோரும் நினைத்திருந்தனர்.


மகனின் D'yavol Vodka என்ற மதுபான பிராண்ட்டுக்கு விளம்பர தூதுவரான ஷாருக்கான்

ஆனால், அவரோ கல்லூரி படிப்பை முடித்த கையோடு, ஒரு பிஸினஸ்மேனாக களமிறங்கினார். தன்னுடைய சக நண்பர்களான பன்டி சிங் மற்றும் லெட்டி பிளாகோவா ஆகியோருடன் இணைந்து ஸ்லாப் வென்ச்சர்ஸ் என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்றை 2022-ஆம் ஆண்டு தொடங்கி மிகச்சிறப்பாக நடத்தி வந்தனர். மேலும், தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் விதமாக உலகின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான AB InBev உடன் இணைந்து D'yavol Vodka என்ற பிரீமியம் மதுபான பிராண்டான வோட்காவை அறிமுகப்படுத்தினர். இதற்கு ஆர்யன் கான் தனது தந்தையும், நடிகருமான ஷாருக்கானையே விளம்பர தூதுவராகவும் நியமித்தார். அடுத்த ஆண்டே இதே பெயரில் D'yavol Inception என்ற கலப்பு மால்ட் ஸ்காட்ச் என்ற புதுவகை மதுபான பிராண்டையும் அறிமுகப்படுத்திய ஆர்யன் அதோடு நின்று விடாமல் D' yavol X என்ற பெயரில் புது ஆடை பிராண்டையும் தொடங்கினார். அதற்கு ஆர்யனின் தங்கையும், அப்பாவுமே விளம்பர தூதுவர்களாகவும் இருந்தனர். இப்படி தான் ஆரம்பித்த தொழிலில் அடுத்தடுத்த நிலைகளை நோக்கி நகர்ந்து உச்சத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தவருக்கு யார் கண்பட்டதோ அவரே எதிர்பார்க்காத வகையில், வழக்கு, ஜெயில் என்று பல நெருக்கடிகள் வந்தன.

ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு


போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கைது செய்யப்பட்ட தருணம் 

ஆர்யன் கான் தன் தொழிலில் வளர்ந்து வந்த நேரத்தில், அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிகளில் கலந்துகொள்வது அல்லது அவர்களுக்கு பார்ட்டி கொடுப்பது போன்றவற்றை செய்து வந்தார். அது ஒவ்வொரு பெரிய இடத்து பிள்ளைகளின் வாழ்க்கையிலும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்ட ஒன்றுதான். அதிலும், திரைப்பிரபலங்களின் வாரிசுகள் என்றால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02-ஆம் தேதி அன்று மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட பார்ட்டி ஒன்றில் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும், இன்னும் சில பாலிவுட் திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் போதைப் பொருட்கள் வழங்கப்படுவதாக மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட அவர்களும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய அந்த அதிரடி சோதனையில் ஆர்யன் கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கானின் இந்த கைது அன்று மிகவும் பரபரப்பான செய்தியாகவும் மாறியது. மேலும், மூன்று வாரங்கள் மும்பை சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த நிகழ்வு பாலிவுட் திரையுலகத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


போதைப்பொருள் வழக்கில் மகனுக்காக போராடிய நடிகர் ஷாருக்கான் 

இது எதைப்பற்றியும் கவலைப்படாமல், மகனுக்காக மிகவும் பக்கபலமாக நின்ற ஷாருக்கான் தன்னுடைய பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை எல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு “என் மகன் போதைப்பொருள் பயன்படுத்தவும் இல்லை; யாருக்கும் விநியோகிக்கவும் இல்லை” என்று முழு நம்பிக்கையோடு விடாமல் தன் சட்டப்போராட்டத்தை தொடர்ந்தார். மகனுக்காக அவர் நடத்திய சட்ட போராட்டத்திற்கு பலனாக 22 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் ஆர்யன். இருந்தும், இந்த வழக்கு தன் இமேஜை கெடுக்க, வேண்டுமென்றே தன் மகன் மீது புனையப்பட்ட வழக்காக கருதிய ஷாருக்கான் ஆர்யன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தொடர்ந்து வழக்கை நடத்தி அதில் வெற்றியும் கண்டார். ஆர்யன் ஜாமினில் இருந்து வெளிவந்த பிறகு வழக்கு இன்னும் பரபரப்பாக சென்றுகொண்டிருந்த போது மும்பை போதைப்பொருள் தடுப்பு படை அதாவது என்சிபி அதிகாரிகள் சிலர் ஆர்யன் கானை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப் பணம் கேட்டு மிரட்டியதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக, ஆர்யன் கானை கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரியான சமீர் வான்கடேவின் விசாரணையின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டதோடு, ஆர்யனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.25 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு, சிறப்பு விசாரணைக்குழுவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே வழக்கை நேர்மையாக விசாரித்த சிறப்பு விசாரணைக்குழு, ஆர்யன், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை; அவர் குற்றமற்றவர் என்ற நற்சான்றிதழை வழங்கி வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்தது.

ஆர்யனின் இயக்குநர் அவதாரம்


பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டுவந்த ஆர்யன் கான்

இளம் வயதிலேயே பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஆர்யன் கான். அதற்கு உதாரணமாக இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையான நிகழ்வு, 2021-ஆம் ஆண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு போன்ற நிகழ்வுகளை சொல்லலாம். இருப்பினும் ஒருமனிதனை நோக்கி வரும் நெகட்டிவான விமர்சனங்கள்தான் அவனை அடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்லும் என்பதன் அடிப்படையில் இப்போது ஆர்யன் கானும் தன்னை நோக்கி வந்த விமர்சனங்களை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு வேறு ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவில் நடிகராக இல்லாமல் இயக்குநராக தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார். அந்த வகையில், திரைத்துறையைப் பின்னணியாகக் கொண்ட புதிய வெப் தொடரை இயக்கி அதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஆர்யனின் முதல் படைப்பு இது. திரைத்துறையின் பிரபல குடும்பத்தில் பிறந்த ஆர்யன் கான், சினிமாவின் மீது கொண்ட அளப்பரிய ஆர்வத்தின் காரணமாக, இயக்குநராக அறிமுகமாகும் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். தந்தை ஷாருக்கானின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்டின் மூலமாக இந்தத் தொடர் தயாரிக்கப்படுகிறது. இந்த புதிய வெப் தொடர், உலகளாவிய ரீதியாக மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு இந்தத் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது மகன் ஆர்யன் கான் இயக்கும் இந்த புதிய தொடர் குறித்து ஷாருக்கான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நெட்ஃப்ளிக்ஸுடன் இணைந்து புதிய தொடரை உருவாக்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஆர்யன் கானின் தனித்துவமான கதை. இது முழுமையான பொழுதுபோக்கு தொடராக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.


இயக்குநராக களமிறங்கியுள்ள ஆர்யன் கான் 

'ஸ்டார்டம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரில், பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் உள்ள சில உண்மை நிகழ்வுகளை இந்த தொடருக்கு கொடுத்துள்ளனர். அதேபோன்று ஒரு புதிய நடிகை, திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடுவதையும், அதற்காக எதிர்கொள்ளும் சவால்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த தொடரின் நாயகியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதற்கு தகுந்த வகையில் தொடரின் நாயகியாக நடிகை மோனா சிங் என்பவர் நடிக்கிறார். இந்த தொடர், பாலிவுட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம், நண்பர்களாக இருந்த இரண்டு நடிகர்களுக்கு இடையே ஏற்படும் போட்டி, மறுபுறம், ஒரு புதிய நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பு மற்றும் அதை அவர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார் என்பது போன்ற பல கதைகள் இணைந்து ஒரே கதைக்களமாக உருவாக்கி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இயக்குநர் ஆர்யனின் இந்த முடிவுக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் தன் பாராட்டை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை கங்கனா, அந்த பதிவில் திரையுலக குடும்பங்களில் இருந்து மேக்கப் போடவும், உடல் எடையை குறைக்கவும், தாங்கள் நடிகர்கள் என்று கூறி கொள்ளவும் மட்டுமே ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஆர்யனின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன். கேமராவுக்கு பின்னால் இருந்து வேலை செய்ய அதிகமானவர்கள் தேவைப்படுகிறார்கள். எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் அவரது அறிமுகத்தை நான் எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆர்யனின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை கூறிவரும் நிலையில் அவரின் இந்த இயக்குநர் பயணம் இன்னும் பல வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்க நாமும் வாழ்த்துவோம்.

Tags:    

மேலும் செய்திகள்