இசையின் மகாராணி பி. சுசீலா! பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

தமிழ் சினிமாவின் இனிமையான குரல், இசையின் தேவதை என்று போற்றப்படும் பாடகி பி. சுசிலா, நாளை தனது 89-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

Update: 2024-11-11 18:30 GMT
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவின் இனிமையான குரல், இசையின் தேவதை என்று போற்றப்படும் பாடகி பி. சுசிலா, நாளை (நவம்பர் 13) தனது 89-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். தென்னிந்திய திரையுலகின் லதா மங்கேஷ்கர் என்று அன்போடு அழைக்கப்படும் இவர், தன் இனிமையான குரலால் தென்னிந்திய சினிமாவிற்கு அளித்த பங்களிப்பு என்பது மிகப்பெரியது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலமாக இந்திய திரையிசையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வரும் பி.சுசிலா அவர்களின் திரைப்பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இசை பயண துவக்கம்

ஆந்திராவில் விஜயநகரம் என்ற அழகிய ஊரில், புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம் என்ற குடும்பத்தில், 13 நவம்பர் 1935 அன்று ஒரு குயில் குரல் எழுந்தது. அந்தக் குயில்தான் நம் இசைக்குயில் பி. சுசீலா. இவருடன் பிறந்தது ஐந்து சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் ஆவர். இவரது தந்தை ஒரு வக்கீல். சிறு வயதிலிருந்தே இசையின் மீது கொண்டிருந்த ஈர்ப்பால், கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட இவர், விஜயநகரம் இசைக்கல்லூரியில் சேர்ந்து இசைக்கான டிப்ளமோ பட்டத்தையும் முதல் வகுப்பில் முடித்துள்ளார். இதுதவிர வெங்கடசாமி நாயுடு போன்ற புகழ்பெற்ற இசை மேதையிடம் பல இசை நுணுக்கங்களை கற்றுக்கொண்ட சுசீலா, தன் இளம் வயதிலேயே பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். இசைக்கல்லூரியில் படிக்கும்போதே அகில இந்திய வானொலியில் பாடும் வாய்ப்பு சுசீலாவுக்கு கிடைத்தது. அந்த அறிமுகத்தின் அடிப்படையில் 1950-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை வானொலியில் தொடர்ந்து பணியாற்றிய சுசீலா, அங்கு பாப்பா மலர் என்கிற நிகழ்ச்சியில் பங்கெடுத்து பல பாடல்களை பாடி வந்துள்ளார். அந்த சமயம் இவரது இனிமையான குரல், வானொலி கேட்பவர்களை மயக்கியது. அந்த நேரத்தில் தெலுங்கு சினிமாவின் முக்கிய இசையமைப்பாளரான பெண்டியாலா நாகேஸ்வரராவ் தன் படத்திற்கு, புதிய குரலை தேடி வானொலியை அணுகினார். அப்போது சுசீலாவின் குரல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனை தொடர்ந்து, தான் அடுத்து இசையமைக்க இருந்த படத்தில் அவரை அறிமுகம் செய்ய முடிவெடுத்தவர், இந்த தகவலை இயக்குநர் கே.எஸ். பிரகாஷ் ராவிடம் தெரிவித்துள்ளார். அதன்படி 1952-ம் ஆண்டு வெளிவந்த 'பெற்ற தாய்' படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் சுசீலா. இப்படத்தில் ஏ.எம். ராஜாவுடன் இவர் இணைந்து பாடிய 'எதுக்கு அழைத்தாய்' என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


1952-ம் ஆண்டு 'பெற்ற தாய்' திரைப்படத்தின் மூலம் பாடகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமான பி.சுசீலா

திரைத்துறையில் உச்சம்

1952ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பாடிவந்த சுசீலாவுக்கு ஓரளவு பெயர் கிடைத்திருந்தாலும், தமிழ் உச்சரிப்பில் சில சிக்கல் இருந்தது. பின்னர் ஏவிஎம் நிறுவனத்தில் சேர்ந்து பல படங்களில் பாடிய சுசீலா, தமிழ் உச்சரிப்பை சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ள தமிழாசிரியர் ஒருவரை வைத்து பயிற்சி எடுத்தார். இப்படி தன்னை தகுதி படுத்திக்கொள்ள சுசீலா பல முயற்சிகள் மேற்கொண்டுவந்த நேரத்தில்தான் 1955-ல் வெளிவந்த 'கணவனே கண் கண்ட தெய்வம்' திரைப்படம் அவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றதை தந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது', 'உன்னைக் கண் தேடுதே' போன்ற பாடல்கள் சுசீலாவிற்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன. இதன் பிறகு அதே வருடம் திரைக்கு வந்த 'மிஸ்ஸியம்மா' படத்தில் வரும் 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’, 'அறியா பருவமடா' போன்ற பாடல்கள் சுசீலாவிற்கு மேலும் புகழை சேர்த்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகியாக மாற்றியது. இத்தனைக்கும் இவர் அறிமுகமான சமயத்தில்தான் ஜிக்கி, பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி போன்ற பாடகிகள் இங்கு கொடிக்கட்டி பறந்து கொண்டு இருந்தனர். இருந்தும் அவர்கள் மத்தியில் சுசீலா தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி அடுத்தடுத்து உயர ஆரம்பித்தார். இதனால் தொடர்ந்து ஓய்வே எடுக்க முடியாதபடி பல படங்களில் பாடிய சுசீலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் இசை ரசிகர்களை தன் குரலால் கட்டிப்போட்டார்.


'சவாலே சமாளி' படத்தில் 'சிட்டுக்குருவிக்கென்ன' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்ற சுசீலா

1960-70 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் சுசீலாவின் குரல் ஒலிக்காத படமே இருந்திருக்காது. குறிப்பாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்ற பழைய இசையமைப்பாளர்களின் இசையில் மட்டுமல்லாமல், 80, 90-களுக்கு பிறகு இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இன்றைய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய பெருமை சுசீலாவிற்கு உண்டு. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், தன் காந்தக் குரலால் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார். இதில் குறிப்பாக 'மயங்குகிறாள் ஒரு மாது', 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே', 'சொன்னது நீதானா' போன்ற பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத கானங்கள் எனலாம். 1969-ல் வெளிவந்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வரும் 'நாளை இந்த வேளை பார்த்து' பாடலுக்காக தமிழில் முதல் தேசிய விருது பெற்ற சுசீலா, இதன் மூலம் இந்திய அளவிலும் கவனம் பெற்றார். பிறகு மீண்டும் சிவாஜிகணேசன், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தில் வரும் 'சிட்டுக்குருவிக்கென்ன' என்ற பாடலுக்காக தேசிய விருதினை வாங்கிய இவர், இதுவரை 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். இது தவிர தமிழக அரசின் கலைமாமணி பட்டம், அகில இந்திய அளவில் சிறந்த பாடகிக்கான பரிசு, 3 முறை தமிழக அரசின் விருது, 7 முறை ஆந்திர அரசின் விருது, 2 முறை கேரள அரசின் விருது என பல விருதுகளை பெற்றுள்ள சுசீலா, 2008-ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதினையும் பெற்று மத்திய அரசால் கெளரவிக்கப்பட்டார்.

இசையில் சாதனை

தெலுங்கில் நாகேஸ்வரராவ், கண்டசாலா, தமிழில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள பி.சுசீலா, தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம் மற்றும் சிங்களம் என பல மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியுள்ளார். இதில் குறிப்பாக பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜனோடு இணைந்து மட்டும் 700க்கும் அதிகமான டூயட் பாடல்களை பாடியுள்ளார். இது தவிர தனியாக 17,695 பாடல்களைப் பாடிய ஒரே பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இவர், இதோடு நின்றுவிடாமல், 6,000-க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் பாடி நம்மை பரவசப்படுத்தியவர் ஆவார். பொதுவாகவே இன்றைய சூழலில் ஒரு பின்னணி பாடகரின் காலம் என்பது 10 ஆண்டுகளை தாண்டுவதே பெரிய விஷயமாக உள்ளது. ஆனால் சுசீலாவோ பாட வந்து 70 ஆண்டுகள் கடந்தும் எந்தவித தடையையும் சந்திக்காமல், இன்றும் நிலையாக பிரகாசிப்பதற்கு மிக முக்கிய காரணமே காலத்திற்கு ஏற்றார்போல் தன் இசை திறமையை தகவமைத்து, பாடலின் உணர்விற்கு தகுந்த குரல் மொழியையும் வெளிப்படுத்தியதுதான்.


70 ஆண்டுகள் கடந்தும் இசையுலகில் கம்பீரமாக நிற்கும் பி.சுசீலா

இதற்கு உதாரணமாக சில பாடல்களை குறிப்பிடலாம். ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என்ன என்ன வார்த்தைகளோ’ பாடலில் பெண்மையின் காதல் சந்தோஷத்தை வெளிப்படுத்திய சுசீலாதான், விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் உருவான ‘ஆனந்த ஜோதி’ படத்தில் வரும் ‘நினைக்க தெரிந்த மனமே’ பாடலில் பெண்மையின் காதல் வேதனையை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார். அதே போல் ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்’ பாடலில் மனதால் சோர்ந்து போனவர்களுக்கு ஊக்கமளித்த சுசீலா, நாட்டிய பேரொளி பத்மினியின் அற்புதமான நடன அசைவுகளோடு காதலனிடம் நலம் விசாரித்த ‘நலம் தானா’ பாடலில் காயத்தால் சோர்ந்து போன உள்ளத்திற்கு மருந்தாகவும் மாறினார். மேலும் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் இவர் பாடிய தாலாட்டு பாடல்களான வாலியின் வரிகளில் ‘அத்தை மடி மெத்தையடி’, சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் வரும் ‘லாலி லாலி’ பாடல், கேளடி கண்மணி திரைப்படத்தில் வரும் ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடல் போன்றவை படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு ஒலித்து நம்மை தாலாட்டியதோடு, சில இடங்களில் நம் கண்களையும் கலங்க வைத்து நம் தாய்மார்களின் இதயத்தையும் தொட்டது. இவர் பாடிய பாடல்களில் மேற்கூறியவை ஒரு துளியே என்றாலும், இவரது திறமையின் தேன் சுவையாய் அதை நீங்கள் உணரலாம்.


டி.எம். சவுந்தரராஜனோடு சுசீலா & 'கேளடி கண்மணி' திரைப்படக் காட்சி 

திருமணமும், சேவையும்

இசைக்குயில், இசையரசி, கான கோகிலா, கான குயில், கான சரஸ்வதி, மெல்லிசை அரசி என பல பட்டங்களால் அழைக்கப்படும் பி. சுசீலா 1957-ல் டாக்டர் மோகன்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயக்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். இவருக்கும் திருமணமாகி தற்போது 2 மகள்கள் இருக்கிறார்கள். தன் குடும்ப வாழ்க்கையையும் இசை வாழ்க்கையையும் சமமாக கவனித்து எப்போதும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் சுசீலா, தன் சாந்தமான சுபாவத்தால் இசையை கடந்து பலரையும் கவர்ந்தவர் ஆவார். இசை பணியிலேயே அடுத்தகட்டமாக 2008-ம் ஆண்டு தனது பெயரில் ஒரு டிரஸ்ட்டை தொடங்கிய இவர், அதில் நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கி வருகிறார். இது தவிர அந்த டிரஸ்ட் சார்பில் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு விருதுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


தனது பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு உதவிவரும் சுசீலா 

இப்படி பல சாதனைகள் புரிந்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சுசீலாவின் இசைப்பயணம் ஒரு சாதாரண பெண்ணின் இசை கனவு நனவான கதை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் இசை ரசனையை வடிவமைத்த கதை. அவரது இசை, நம்மை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், நம் உள்ளத்தில் நீங்காத இடத்தையும் பிடித்துள்ளது. இதனை முழுக்க முழுக்க அவருக்கு இசையின் மீதிருந்த அபாரமான ஆர்வம், கடின உழைப்பு மற்றும் திறமைக்கு கிடைத்த பரிசாகவே நாம் பார்க்க வேண்டும். சுசிலாவின் இசை ஒரு தெய்வீக அனுபவம். அவரது குரல் இதயத்தைத் தொட்டு மனதை உருக்கும். அவரது பாடல்கள் நம்மை காலத்தை மறந்து போக வைக்கும். அப்படிப்பட்ட இசையின் மகாராணி பி.சுசிலா அம்மையாருக்கு நாளை (நவம்பர் 13) பிறந்தநாள். அவரது இசைப் பயணம் என்றும் நிலைத்து நிற்க வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறது ராணி!

Tags:    

மேலும் செய்திகள்