கங்கனாவிற்கு செக் வைத்த சீக்கியர்கள்! 'எமர்ஜென்சி' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு!

2006 ஆம் ஆண்டு 'கேங்ஸ்டர்' திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் ஒரு நடிகையாக தன் பயணத்தை தொடங்கிய கங்கனா தற்போது முழுநேர அரசியல்வாதியாகவும் மாறியிருகிறார்.

Update: 2024-09-09 18:30 GMT
Click the Play button to listen to article

கங்கனா என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் கங்கனா… என எப்போதும் சர்ச்சைக்கு பெயர்போன இவர், சர்ச்சை நாயகி என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 2006ஆம் ஆண்டு 'கேங்ஸ்டர்' திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் ஒரு நடிகையாக தன் பயணத்தை தொடங்கிய இவர், தற்போது முழுநேர அரசியல்வாதியாகவும் மாறியிருகிறார். இருப்பினும் திரைப்படங்களிலும் தொடர்ந்து தன் பங்களிப்பை கொடுத்துவரும் கங்கனா, நடிகை என்பதை தாண்டி இயக்குநராகவும் தன் முத்திரையை பதித்து வருகிறார். அதிலும் குறிப்பாக மிக முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தும் கங்கனா, ராணி லட்சுமி பாய், மறைந்த செல்வி.ஜெயலலிதா ஆகியோரின் பயோபிக் படங்களில் நடித்தும், இயக்கியும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில், 1975ஆம் ஆண்டில் மறைந்த பிரதமர் இந்திராகாந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது மக்கள் அனுபவித்த நிகழ்வுகளை மையமாக வைத்து அவர் நடித்து, இயக்கியுள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படம் வெளியிட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கங்கானாவின் இந்த படம் ஏன் வெளியிட முடியாமல் தள்ளிப்போனது? இதற்கு முன்பாக அவர் எந்த மாதிரியான சர்ச்சைகளில் எல்லாம் சிக்கி இருக்கிறார்... இப்படம் எப்போது வெளிவரும்? போன்ற பல தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

சர்ச்சைக்கு பெயர் போன கங்கனா

நெப்போடிசம் அதிகம் நிறைந்திருக்கும் பாலிவுட் திரையுலகில், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் அங்கு கால்பதித்து தனக்கான ஒரு இடத்தை தனித்துவமாக எட்டிப்பிடித்த கங்கனா ரனாவத் மிகவும் தைரியமிக்க பெண்மணியாக பார்க்கப்படுகிறார். இருந்தும் சமீபகாலமாக அவரின் துணிச்சல் மிக்க பேச்சுகள் பலரையும் காயப்படுத்தி சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதிலும் சமூக வலைதளங்களில் அவர் கூறிவரும் கருத்துக்கள் அனைத்துமே பெரிய அளவில் தாக்கத்தையும், சிக்கல்களையும் உண்டாக்கினாலும் அவர் தன் நிலைப்பாட்டை இதுவரை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் இங்கு உள்ளன. குறிப்பாக பாலிவுட்டில் பிரபல இயக்குநரான கரண் ஜோஹர் நெப்போடிசத்திற்கு அதாவது வாரிசு ஆதிக்கத்திற்கு கொடி தூக்குகிறார் என பகிரங்கமாக குற்றம்சாட்டி பாலிவுட் திரையுலகையே கலங்கடித்தார் கங்கனா. இதோடு நின்றுவிடாமல் நடிகை ஊர்மிளா மற்றும் நடிகர் ஹிரித்திக் ரோஷன் குறித்தும் சர்ச்சையாக பேசினார். அதில் 'நடிகை ஊர்மிளாவை எனக்கு ஒரு கவர்ச்சி நடிகையாகதான் தெரியும்' என கடந்த 2020-ஆம் ஆண்டு குறிப்பிட்டு அதிர வைத்தார். அதேபோன்று, 'கிறிஸ் 3' படப்பிடிப்பின்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் தன்னுடன் உறவில் இருந்ததாக கங்கனா தெரிவித்த விஷயம், பின்னர் பூதாகரமாக கிளம்பி பாலிவுட்டின் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. சமீபத்தில் கூட, பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ராமாயணம்’ படம் பற்றியும், அப்படத்தில் நடித்துள்ள ரன்பீர், ஆலியாபட் பற்றியும் கிண்டலாக பேசி கலவரத்தை உண்டாக்கினார். தனக்கு எதிராக கருத்து சொல்லும் எந்த சினிமா பிரபலங்களையும், அவர் விட்டு வைப்பது கிடையாது என்பதற்கு இவையெல்லாம் ஒரு மிகச்சிறந்த உதாரணங்களாகவும் சொல்லப்பட்டன.


ஹிருத்திக் ரோஷன், ரன்பீர், ஆலியாபட் பற்றி சர்ச்சையாக பேசி பாலிவுட்டில் கலவரத்தை உண்டாக்கிய கங்கனா 

அதோடு நிறுத்திக் கொண்டாரா? என்றால் இல்லை. சினிமாவை தாண்டி, அரசியல் பக்கமும் சென்றவர் பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்த கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட கங்கனா, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அக்கட்சியின் எம்.பியாகவும் மாறினார். ஆனால், அதற்கு முன்பாகவே அரசியல் ரீதியாகவும், இந்தியாவில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் பற்றியும் அவர் தெரிவித்திருந்த கருத்துகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. அதில் ஒன்றுதான் இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது குறித்த பேச்சு. அதில் 1947-ஆம் ஆண்டு இந்தியா, ஆங்கிலேயர்களிடம் பெற்ற சுதந்திரம், சுதந்திரம் என்றே சொல்ல முடியாது. அது அவர்கள் நமக்கு போட்ட 'பிச்சை', 2014-ஆம் ஆண்டு இந்தியா அடைந்த சுதந்திரம்தான் உண்மையான சுதந்திரம் என நரேந்திர மோடியின் ஆட்சிகாலத்தை மேற்கொள்காட்டி பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. அதேபோன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்பாக கங்கனா போட்ட ட்விட்டர் பதிவு, 'வெறுப்பு பிரச்சாரத்தை' தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு, அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு வழிவகுத்தது. பிறகு ட்விட்டரை எலான் மஸ்க் முழுமையாக கைப்பற்றிய பிறகு அவரின் ட்விட்டர் கணக்கும் திரும்பி வழங்கப்பட்டது. மேலும் சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழி என்றும், இந்தியா என்பது அடிமைகளின் பெயர். அதனை 'பாரதம்' என்று மாற்ற வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.


மம்தா தொடர்பாக சர்ச்சையாக பேசி , 'வெறுப்பு பிரச்சாரத்தை' தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட கங்கனா 

இப்படி எப்போதும் சர்ச்சையான கருத்துகளை மட்டுமே பேசி வரும் கங்கனா, விவசாயிகள் போராட்டம் குறித்தும் பேசாமல் இல்லை. டெல்லியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து தனது கருத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துக்கொண்ட போது, அதில் விவசாயிகளை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என குறிப்பிட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதுதவிர, அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் வெறும் 100 ரூபாய்க்காக விவசாயி போன்று வேடமிட்டு வந்து நடிக்கிறார்கள் என விமர்சித்த கங்கனாவின் இந்த கருத்து, மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது. விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய கங்கனா ரனாவத்தை, கடந்த ஜூன் 6-ஆம் தேதி சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அடித்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. எது எப்படியோ பாலிவுட்டிலும் சரி, மத்திய அரசியல் களத்திலும் சரி கடந்த சில வருடங்களாக விடாமல் தொடரும் இதுபோன்ற பல சர்ச்சைகளுக்கு பின்னால் தொடந்து இருந்துவரும் கங்கனா ரனாவத், தற்போது 'எமர்ஜென்சி' படத்தை எடுத்து அடுத்த சிக்கலில் மாட்டியுள்ளார்.

இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத்


இந்திரா காந்தியாக "எமர்ஜென்சி"  திரைப்படத்தில் வரும் கங்கனா 

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், அவர் அறிவித்த அவசர நிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு கங்கனா ரனாவத் இயக்கி, நடித்துள்ள திரைப்படம்தான் ‘எமர்ஜென்சி'. இந்திரா காந்தியாக கங்கனா நடித்துள்ள இப்படத்தில் அனுபம் கெர் , ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன் மற்றும் சதீஷ் கௌஷிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ என்டெர்டெயின்மென்ட், மணிகர்ணிகா பிலிம்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து கங்கனாவே தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், அதே ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு முதலில் அறிவித்தது. பிறகு வேறுசில காரணங்களால் பட வெளியீட்டு தேதி தள்ளிப்போய் மீண்டும் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சமயம் கங்கனா நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஹிமாச்சல பிரதேச மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், செப்டம்பர் 6ஆம் தேதி படம் வெளியாகும் என புதிய ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டு படக்குழு சமீபத்தில் அறிவித்தது. அந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது என்றே சொல்லலாம். அந்த ட்ரெய்லரில் ஜவஹர்லால் நேரு மறைவுக்கு பிறகு இந்திய நாட்டின் பிரதமராக 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பொறுப்பேற்றதில் தொடங்கி 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர் மற்றும் அவசர நிலை குறித்துபேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் எமர்ஜென்சி என்பது இந்தியாவின் இருண்ட ஒரு அத்தியாயம் என கூறும்படியான காட்சிகள் இடம் பெற்றிருந்ததோடு, பல நிகழ்வுகளை காட்டிய பிறகு இறுதியாக ‘இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா’ என்று இந்திரா காந்தியாக வரும் கங்கனா வசனம் பேசுவதுடன் ட்ரெய்லர் முடிக்கப்பட்டிருக்கும். படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கும் விதமாக வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது.

வலுக்கும் எதிர்ப்பு குரல்


எமர்ஜென்சி படத்திற்கு எதிராக சீக்கிய அமைப்புகள் சார்பில் ஹரியானா நீதிமன்றத்தில் வழக்கு

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார், அவசர நிலை பிரகடனத்தையும் விமர்சிக்கிறார் என்றவுடன் இது மத்திய அளவில் அரசியல் ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், இது வேறு சிக்கலை உருவாக்கியது. 'எமர்ஜென்சி' படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்து, அப்படத்தில் சீக்கியர்களை தவறாக சித்தரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறி சிரோன்மணி பிரபந்த குருத்வாரா கமிட்டியினர் கண்டனம் தெரிவித்ததுடன், படத்தை வெளியிட தடை கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், மத்திய தணிக்கைக்குழு ஆகியவற்றிக்கு கடிதம் அனுப்பினர். அதேபோன்று சிரோன்மணி அகாலிதளம் என்ற கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் மத்திய சென்சார் போர்டுக்கும், ‘எமர்ஜென்சி’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான மணிகர்ணிகா பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தினார். இது தவிர படவெளியீட்டை தடை செய்யக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டதோடு, 'எமர்ஜென்சி' படத்தை தவறான கண்ணோட்டத்துடன் எடுத்து நடித்துள்ளதால் கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும், தேவையில்லாத காட்சிகளை நீக்க வேண்டும் என்று இப்படத்திற்கு எதிராக பல சீக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து பட ரிலீசுக்கு வேட்டு வைத்தனர்.

'எமர்ஜென்சி' படத்துக்கு வந்த எமர்ஜென்சி


எமர்ஜென்சி திரைப்படத்திற்கு U/A சான்றிதழை வழங்கிய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்(CBFC). 

எந்த ஒரு இக்கட்டான சூழலையும் சுமூகமாக கையாண்டு வெற்றி நாயகியாக வலம்வரும் கங்கனா ரனாவத்தின் சமீபகால திரைப்படங்கள் தொடர் தோல்வியையே சந்தித்து வருகின்றன. அதிலிருந்து மீண்டுவர 'எமர்ஜென்சி' திரைப்படம் கைகொடுக்கும் என எதிர்பார்த்த கங்கனாவிற்கு சீக்கிய அமைப்புகள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையின்படி படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டால் படம் படமாக இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் கலக்கத்தில் கங்கனா ஒருபுறம் இருக்க, சீக்கிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மத்தியப்பிரதேச உயா்நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை விசாரித்தது. அப்போது, படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, சீக்கியா்களின் ஆட்சேபத்தை பரிசீலித்து வரும் 18-ஆம் தேதிக்குள் சான்றிதழை அளிக்குமாறு மத்தியப்பிரதேச உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் கங்கனா ரனாவத் தரப்பில் இருந்தும் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படம் வெளியாகாதது பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கங்கனா. அந்த பதிவில், நான் இயக்கி செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக இருந்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் பல எதிர்ப்புகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ''என் படத்துக்கும் எமர்ஜென்சி விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளேன். தணிக்கை குழுவின் சான்றிதழுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஒருசில மாற்றங்களுடன் படத்திற்கு U/A சான்றிதழை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் ( CBFC ) வழங்கியுள்ளது. இதையடுத்து இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதன் எதிர்வினையே இந்த எதிர்ப்பு என சிலர் கூறினாலும், எப்படிப்பட்ட‘எமர்ஜென்சி’ சூழலையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட கங்கனா, இதையும் கடந்து செல்வார் என நம்புவோம். 

Tags:    

மேலும் செய்திகள்