ஷோபாக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க பிடிக்கும்! - தாயார் பிரேமா

ஷோபாவின் காலுக்கு டாக்டர் மருந்து வைத்துக் கட்டினார்.

Update:2024-08-27 00:00 IST
Click the Play button to listen to article

(29.06.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஷோபாவின் காலுக்கு டாக்டர் மருந்து வைத்துக் கட்டினார். 'செப்டிக்" ஆகாமல் இருக்க ஓர் ஊசியும் போட்டார். அப்போதும் ஷோபா, அழவில்லை. டாக்டருக்கு ஒரே வியப்பு. நான் "வலிக்குதா கண்ணு!" என்று கேட்டேன். ''கொஞ்சம் வலிக்குது” என்றாள்.

இரக்க குணம்

ஷோபாவுக்கு, அவள் விஷயத்தில்தான் இந்தக் கல்நெஞ்சம்! மற்றவர்கள் கண் கலங்கினால் தாங்கமாட்டாள். அவள் எல்லோருடைய வீட்டிலும் உள்ளது போல, எங்கள் வீட்டிலும் நானும் அவரும் (என் கணவரும்) சில நாட்களில் சண்டை போட்டுக் கொள்வோம். அவர் ஆத்திரமாக வெளியே போய்விடுவார். நான் "உம்" என்று உட்கார்ந்து இருப்பேன். ஷோபா மெதுவாக என்னிடம் வருவாள். "அழாத மம்மி! டாடா (அப்பா) வரட்டும்...!" என்று என் முந்தானையை எடுத்து கண்ணீரை துடைத்துவிடுவாள். நான் சிரித்துப் பேசிய பிறகுதான், என்னைவிட்டு, விளையாடப்போவாள்.

தொல்லை இல்லை

ஷோபாவிடம் இன்னொரு நல்ல குணம் இருந்தது! "பசிக்குது” என்று ஒருநாளும் அழமாட்டாள். கொடுத்தால்தான் சாப்பிடுவாள். சமையல் ஆக நேரம் ஆகும் என்றால், ஷோபாவிடம் ஒரு கத்திரியும், துண்டு பேப்பரும் கொடுத்தால் போதும். ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விளையாடத் தொடங்கிவிடுவாள். குழந்தைப் பருவத்தில், ஷோபாவால் எனக்கு எந்தத் தொல்லையும் ஏற்பட்டது இல்லை. அவள் தவழ்ந்து, தத்தித் தத்தி நடக்கத் தொடங்கியதும், எப்பொழுதும் விடுவிடு என்று வெளியே போய்விடுவாள். அதனால் வேலை இருக்கும் நாளில், நீண்ட கயிறில் அவளைக் கட்டிப் போட்டுவிட்டு, வேலையில் ஈடுபடுவேன். கட்டிப் போட்ட நாய்க்குட்டி போல வீட்டுக்குள் சுற்றி சுற்றி வருவாள், ஷோபா.


எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஷோபாவுக்கு ரொம்ப பிடிக்கும் - அம்மா பிரேமா 

கெஞ்சல்

ஏதாவது சின்ன வேலையாக நான் வெளியே புறப்பட்டால், "மம்மி நானும்" என்பாள். "நீ வீட்டில் இரு. உன்னைத் தூக்கிக்கொண்டு என்னால் நடக்க முடியாது என்பேன்" நான். (உண்மையிலேயே அவளைத் தூக்கிக் கொண்டு என்னால் வேகமாக நடக்க முடியாது. அவ்வளவு "குண்டு" ஆக இருப்பாள் ) "மம்மி! நான் நல்லா நக்கும் (நடக்கும்)" என்று கெஞ்சுவாள். "சரி, நட!'' என்பேன் நான். ஷோபா,பொத்து பொத்தென்று சிறிது தூரம் நடப்பாள். பிறகு நின்று கொள்ளுவாள். "என்ன தூக்கு மம்மி!" என்பாள். "தூக்க மாட்டேன், நட" என்று அதட்டுவேன் நான். "நான் உன் கண்ணுல்ல, ராஜாத்தில்ல" என்று பாவம் போல கெஞ்சுவாள். பிறகு, அவளை தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது!. வீட்டில் எதுவும் இல்லாதபோது பேசாமல் இருக்கும் ஷோபா, கையில் பணத்தைப் பார்த்துவிட்டால், "அதை வாங்க வேண்டும்; இதை வாங்க வேண்டும்" என்று ஆசைப்படுவாள்.

மகிழ்ச்சி

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது, அவளுக்கு ரொம்ப பிடிக்கும். “சினிமாவுக்குப் போகணும் என்பாள். தியேட்டரில் தேசிய கீதம் பாடத் தொடங்கியதும், "மம்மி! பீச்சுக்குப் போகலாம்; ஓட்டலுக்குப் போய் தோசை சாப்பிடலாம்" என்பாள். அவள் கேட்டது எல்லாம் உடனே நடக்கும்!. அவள் என் ஒரே மகள் ஆயிற்றே!.


 கண்களிலேயே நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை ஷோபா 

இந்த நேரத்தில், நாங்கள் நடத்தி வந்த வியாபாரத்தில் மாற்றம் ஏற்பட்டது!. மவுண்டுரோடு உட்ஸ் சாலையில், என் கணவரின் மூத்த மனைவியின் மகன் ராஜன் பெயரில் நாங்கள் நடத்தி வந்த "ராஜ் இண்டஸ்ட்ரீஸ்” என்ற கார், ஸ்கூட்டர் உதிரிப்பொருள் வியாபாரம் படுத்துவிட்டது. எனவே, அசோக் லேலண்டு கம்பெனிக்கு உதிரிப்பொருள் சப்ளை செய்யும் வியாபாரத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, என் கணவர் வேறு தொழிலில் இறங்கினார்.

லாயட்ஸ் ரோட்டில், எனது பெயரிலும், ஷோபா பெயரிலும் "பிரேம்-ஷோப் ஏஜென்சி" என்ற "பர்னிச்சர்" (மேசை-நாற்காலி) வியாபாரத்தைத் தொடங்கினார். இதுவும் சரியாக நடக்கவில்லை. இதையடுத்து, உஸ்மான் சாலையில் "ஷோபா ஏஜென்சி" என்று ஒன்றைத் தொடங்கி, முந்திரிப் பருப்பு ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தினோம். இதற்கு இடையில், என் கணவரின் முதல் மனைவியும், குழந்தைகளும் மீண்டும் சென்னையில் இருந்து கோவைக்குக் குடிபோக வேண்டியதாகிவிட்டது.

"குட்ஷெப்பர்டு"

எனக்கு பெண் குழந்தை பிறந்தால், அவளை "குட்ஷெப்பர்டு கான்வென்ட்" பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என்பது, எனது நெடுநாளைய ஆசை!. அதன்படி, ஷோபாவை "குட்ஷெப்பர்டு கான்வென்ட்" பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவு செய்தேன். ஷோபாவின் படிப்புக்கு வசதியாக, தேனாம்பேட்டையில் இருந்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உ ள்ள திருமதி. நாகேஸ்வரி அம்மாளின் வீட்டில் ("கன்பட்" ஹோட்டல் எதிரே) குடியேறினோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில், பேரறிஞர் அண்ணா இருந்தார்கள்: அண்ணாவின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, ஷோபாவை மிகவும் பிடிக்கும்.


சோகத்தை வெளிப்படுத்தும் காட்சியில் நடிகை ஷேபா 

ஷோபா, எப்பொழுதும் அண்ணா வீட்டில்தான் இருப்பாள். அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம், ஷோபாவைத் தூக்கி வைத்து விளையாடுவார். அண்ணாவின் மனைவி ராணி அம்மாள், ஷோபாவை தன் சொந்த பேத்தி போல வைத்துக் கொள்வார்கள். அண்ணா கூட சில நேரங்களில் ஷோபாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ளுவார். அப்போது ஷோபாவுக்கு இரண்டரை வயது! ஷோபாவை பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் முயற்சியில் இறங்கினோம்.

மறுப்பு

ஆனால், நாங்கள் எதிர்பாராதவிதமாக, ஷோபாவை "குட்ஷெப்பர்டு” கான்வென்ட் பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டார்கள்! "ஷோபாவுக்கு வயது போதாது” என்று காரணம் சொன்னார்கள். அவர்கள் சொன்ன காரணம் சரி என்றாலும், எனக்கு அந்த ஆண்டே அவளை பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என்ற துடிப்பு!. ஷோபாவை, "குட்ஷெப்பர்டு கான்வென்ட்” சீருடையில் காண வேண்டும் என்ற ஆசை!. நல்லவேளையாக, எங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் சிபாரிசால் ஷோபாவுக்கு பள்ளிக்கூடத்தில் இடம் கிடைத்தது! எனது ஆசைக் கனவு நிறைவேறியது!. ஷோபா பள்ளிக்கூடம் போகத் தொடங்கினாள்!

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம். (தொடரும்)

Tags:    

மேலும் செய்திகள்