"சாய் பல்லவி vs நித்யா மேனன்" - தேசிய விருதுக்கு தகுதியானவர் யார்?

நித்யா மேனனை குறைசொல்லவில்லை, ஆனால் சாய் பல்லவின் நடிப்பு எந்த விதத்திலும் குறைவல்ல என்றும், தேசிய விருது ஏமாற்றமளிப்பதாகவும் நித்யா மேனனை விட சாய் பல்லவிதான் தேசிய விருதுக்கு தகுதியானவர் என்றும் சாய் பல்லவியின் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Update:2024-08-27 00:00 IST
Click the Play button to listen to article

திரைத்துறையினரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் ஒன்று தேசிய திரைப்பட விருது. அதன்படி, 2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் பல்வேறு மொழியில் வெளியான சிறந்த படங்கள், நடிகர், நடிகை, இசை, ஒளிப்பதிவு என பல பிரிவுகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் கோலிவுட்டில், ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கு மொத்தமாக 6 விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதானது 'திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக நித்யா மேனனுக்கும், ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக மானசி பரேக்கிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நித்யா மேனனுக்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சிதான் என்றாலும் அதைவிட சிறந்த நடிப்பை ‘கார்கி’ படத்தில் சாய் பல்லவி கொடுத்திருக்கிறார் என்றும், அவருக்கு ஏன் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்றும் அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ‘கார்கி’ படத்தின் திரைக்கதை மற்றும் நடிப்பு என அனைத்துமே தேசிய விருதுக்கு தகுதியானதுதான் என்றும் சமூக ஊடகங்களில் வாதிட்டு வருகின்றனர். நித்யா மேனன், சாய் பல்லவி இருவருமே, தென்னிந்திய மொழிகளில் பரிச்சயமான நடிகைகள். இருவருமே தங்களது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுப்பது, கிளாமரைவிட நடிப்புத்திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகளை உருவாக்குவது என பல விஷயங்களில் ஒத்துப்போகக்கூடியவர்கள்தான். இருப்பினும் நித்யா மேனனைவிட சாய் பல்லவி இந்த விருதுக்கு தகுதியானவர் என்று ரசிகர்கள் கூறினாலும், ஷோபனா கதாபாத்திரத்திற்காக தனது உழைப்பு பற்றி மனம் திறந்திருக்கிறார் நித்யா மேனன்.

ஷோபனா vs கார்கி

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹீரோ (தனுஷ்) திருச்சிற்றம்பலத்துடைய தோழி ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நித்யா மேனன். பல கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும் ஷோபனா கதாபாத்திரம் படம் வெளியானபோது பெருமளவில் பேசப்பட்டது. காரணம், உள்ளுக்குள் உணர்ச்சிகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் ஜாலியான பக்கத்துவீட்டு பெண்ணாக, ஹீரோவுடைய அனைத்து தருணங்களிலும் உடன் நிற்கும் தோழியாக தனது எதார்த்தமான நடிப்பை கதைக்கு ஏற்றவகையில் கச்சிதமாக கொடுத்திருப்பார் நித்யா மேனன்.


‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா மேனன்

‘என்னுடைய வாழ்க்கையில் ஒரு ஷோபனா இல்லையே!’ என அப்போது சோஷியல் மீடியாவில் வெளியான மீம்ஸ்களை நம்மால் மறக்கமுடியாது. இன்றுவரை பலரும் அதுபோன்ற ஒரு தோழிக்காகத்தான் ஏங்கிவருகின்றனர். பார்ப்பதற்கு ஜாலியான கதாபாத்திரமாக தெரிந்தாலும் எளிமையான மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த, ஐடி-யில் வேலை செய்தாலும் ஹோம்லியாகவே இருக்கிற ஒரு பெண் எப்படியிருப்பார்? சகஜமாக அனைவருடனும் பேசிப் பழகும் அவருக்குள்ளும் காதல் எப்படி மறைந்திருக்கிறது? என்பதையெல்லாம் அழகாக நம் கண்முன் நிறுத்தியிருப்பார் நித்யா மேனன். அதனால்தான் தனுஷின் நடிப்பையும்தாண்டி நித்யா மேனன் வெகுவாக பாராட்டப்பட்டார்.

அப்படியே ‘கார்கி’ பக்கம் திரும்பினால், சூழ்நிலை காரணமாக ஒரு குற்றத்தில் சிக்கிக்கொள்ளும் தனது தந்தையை நிரபராதி என நம்பி, அதிலிருந்து அவரை சட்டரீதியாக மீட்க போராடும் ஒரு மகளின் கதை. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறுமி வழக்கில், தனது தந்தையும் குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார். ஆனால் சிறுவயதிலிருந்தே தனக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்த தந்தை அதுபோன்ற ஒரு குற்றத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார் என நம்பும் அப்பெண், அப்பாவை வெளியே கொண்டுவர பலரிடம் உதவிகளை நாடுகிறார்.


‘கார்கி’ படத்தில் சாய் பல்லவி

படம் முழுக்க காட்டன் புடவை, ஒரு ஸ்லிங் பேக், பின்னிய தலைமுடி என சோகம் படர்ந்த முகத்துடனும், கனத்த இதயத்துடனும் வரும் கார்கி, கடைசியில் தனது அப்பா குற்றவாளி என தெரியும்போது எப்படி உடைந்துபோகிறாள்? எப்படியாவது தனது அப்பாவை நிரபராதி என நிரூபிக்க போராடும்போது ஒரு மகளின் பாசப்போராட்டத்தையும் அவர்மீதுள்ள தவறு தெரியவரும் சமயத்தில் அவரை ஒரு அப்பாவாக பார்க்காமல், ஒரு ஆணாக மட்டும் பார்க்கும்போது மனதில் ஏற்படும் வெறுப்பையும் தனது அழுத்தமான நடிப்பால் வெளிக்காட்டியிருப்பார் சாய் பல்லவி. இதுவரை சாய் பல்லவி நடித்த கதாபாத்திரங்களிலேயே கார்கிதான் சிறப்பானது என பெரிய பெரிய பத்திரிகைகளால் பாராட்டப்பட்டார். அதனாலேயே இப்படத்திற்கு சாய் பல்லவி விருதுகளை அள்ளிக்குவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையுலகில் முக்கிய விருதாக பார்க்கப்படும் தேசிய விருது இந்த கதாபாத்திரத்திற்காக சாய் பல்லவிக்கு கிடைக்காதது பெரிதும் ஏமாற்றமளித்திருக்கிறது.

சாய் பல்லவிக்காக குமுறும் ரசிகர்கள்!

2022ஆம் ஆண்டுதான் ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘கார்கி’ ஆகிய இரண்டு படங்களுமே வெளியாகின. இந்த இரண்டையும் ஒப்பிடுகையில் ‘திருச்சிற்றம்பலம்’ வசூல்ரீதியாக வெற்றிபெற்றாலும், விமர்சனரீதியான வெற்றி என்பது ‘கார்கி’க்குத்தான். இந்நிலையில் ஷோபனா கதாபாத்திரத்துடன் ஒப்பிடுகையில் கார்கி கதாபாத்திரத்தில், சாய் பல்லவி ஆழமான மற்றும் அழுத்தமான உணர்ச்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார் என்பதுதான் இப்போது ரசிகர்களின் வாதமாக இருக்கிறது. குறிப்பாக, சாய் பல்லவிக்கு கிடைக்கவேண்டிய விருது தட்டி பறிக்கப்பட்டிருப்பதாகவும், நித்யா மேனனை குறைசொல்லவில்லை, ஆனால் சாய் பல்லவியின் நடிப்பு எந்த விதத்திலும் குறைவல்ல என்றும், தேசிய விருது ஏமாற்றமளிப்பதாகவும் நித்யா மேனனை விட சாய் பல்லவிதான் தேசிய விருதுக்கு தகுதியானவர் என்றும் சாய் பல்லவியின் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.


தேசிய விருதுக்கு தகுதியானவர் சாய் பல்லவியா? நித்யா மேனனா? - ரசிகர்கள் கருத்து மோதல்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் திரைத்துறையில் இருக்கும் நித்யா மேனனுக்கு பல விருதுகள் கிடைத்திருந்தாலும் இதுதான் முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ஒருவருக்கொருவர் டஃப் கொடுத்து நடித்தபோதிலும் தேசிய விருது நித்யா மேனனுக்கு கிடைத்திருப்பது, தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என பாராட்டியிருக்கிறார் தனுஷ். என்னதான் சாய் பல்லவிக்காக அவருடைய ரசிகர்கள் பேசினாலும், நித்யா மேனனின் நடிப்பை தரக்குறைவாகவோ, தாழ்த்தியோ பேசவில்லை என்பது நித்யா மேனனும் இந்த விருதுக்கு தகுதியானவர்தான் என்பதை காட்டுகிறது.

சர்ச்சைகளுக்கு நித்யா மேனன் பதிலடி!

தேசிய விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை பார்க்கும்போது எனது நடிப்பு சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு பின்னாலிருக்கும் எனது உழைப்பை புரிந்துகொண்ட தேர்வுக்குழுவுக்கு நன்றி. எடையை குறைப்பதோ அல்லது அதிகரிப்பதோ அல்லது செயற்கையாக உடலை மாற்றிக்கொள்வதோ ஒரு சிறந்த நடிகையை உருவாக்கிவிடாது. அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதிதான். அதுவே முழுமையான நடிப்பாகிவிடாது. இந்த கதாபாத்திரத்திற்காக நான் எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

மேலும் இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், தனுஷ் உட்பட எங்கள் நால்வருக்கும் அடங்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி தனது நடிப்பைப்பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நித்யா மேனன். கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க சாய் பல்லவியை அணுகியபோது அவர் நோ சொல்லிவிட்டதால், இப்போது அந்த கதாபாத்திரத்திற்கு நித்யா மேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு. இதனால் சாய் பல்லவி, நித்யா மேனன் இருவருமே எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பு என வந்துவிட்டால் சமமான நடிப்பைத்தான் வெளிப்படுத்துவார்கள் என மாறிமாறி ஆறுதல்கூறி வருகின்றனர் இருவரின் ரசிகர்களும்.

Tags:    

மேலும் செய்திகள்