சில்லென வீச வரும் காதல்! 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா, ஜோதிகா!

வசந்தின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் சந்திப்பிலேயே தங்களின் அன்பு என்னும் மூன்றெழுத்து மந்திரத்தால் வசீகரிக்கப்பட்ட சூர்யா - ஜோதிகா தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏழு படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளனர்.

Update:2024-04-30 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் இரண்டு நட்சத்திரங்கள் உச்சத்தில் இருக்கும் போதே ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது சாதாரணமான ஒன்றுதான் என்றாலும், அந்த சமயம் பலராலும் வைக்கப்படும் விமர்சனம் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல் இவர்களும் எத்தனை நாட்களுக்கு ஒன்றாக சேர்ந்து வாழப் போகிறார்கள் என்பதுதான். அப்படியான வார்த்தை, செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த இந்த ஜோடிகள் மீதும் பலராலும் வைக்கப்பட்டது. இருந்தும் அவற்றையெல்லாம் பொய்யாக்கி இருவரின் காதலும் ஒரு துளி கூட குறையாமல், பலரும் பார்த்து பொறாமைப்படும் வகையில் இன்றும் அழகானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேறு யாரும் இல்லை மூன்றெழுத்து எனும் மந்திரத்தை தங்களது பெயரிலேயே கொண்ட சூர்யா - ஜோதிகா ஜோடிதான். வசந்தின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் சந்திப்பிலேயே தங்களின் அன்பு என்னும் மூன்றெழுத்து மந்திரத்தால் வசீகரிக்கப்பட்ட இவர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏழு படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளனர். அதில் பல படங்களில் காதலில் உருகி நடித்து, தங்களது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தனர். அதற்கு உதாரணமாக ‘காக்க காக்க’, ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ போன்ற படங்களை கூட சொல்லலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் இணைந்த இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு எப்போது மீண்டும் திரையில் இணைவார்கள், இவர்கள் இணைந்து நடிப்பார்களா? மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு இருவரின் ரசிகளிடமும் இருந்து வந்தது. அதனை பலமுறை நேரடியாக இருவரிடமும் பலரும் கேட்கவும் தயங்கவில்லை. இப்படியான நிலையில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த சில சுவாரஸ்யமான செய்தி தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

காதலில் உருகிய ஜோடி


 ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் சூர்யா - ஜோதிகா 

சரவணனாக தமிழ் சினிமாவில் நுழைந்து, பின்னர் சூர்யாவாக திரையில் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்தவரை நோக்கி இந்த பையன் மிகவும் அழகாக இருக்கிறான். ஆனால், நடிப்போ, நடனமோ சுத்தமாக வரவில்லை. ரொம்ப நாள் எல்லாம் சினிமாவில் தாக்கு பிடிக்க மாட்டான் என்று ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் எழ தொடங்கியிருந்த 1999 கால கட்டங்களில்தான் இயக்குநர் வசந்தின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படமும் வெளிவந்தது. சூர்யாவின் 5-வது படமாக வெளிவந்த இப்படத்தில்தான் ஜோதிகாவும், சோலோ ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் சூர்யா - ஜோதிகா ஜோடி முதல் முதலாக இணைந்த போது, இயக்குனர் வசந்த் சூர்யாவிடம், சரவணா இதுதான் ஜோ. நான் எடுப்பது காதல் படம். அதனால் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிக்கோங்க என்று சொல்லி ஜோதிகாவை அறிமுகம் செய்து வைத்தாராம். இப்படி ஏற்பட்ட அறிமுகம் நாளாக நாளாக ஒருவர் மற்றவரது கெரியரில் அதாவது திரை வாழ்க்கையில் அக்கறை எடுத்து வாய்ப்புகள் வாங்கி கொடுத்து முன்னேற்றும் அளவுக்கு நல்ல நண்பர்களாக மாற்றியது. அந்த நட்பின் காரணமாகத்தான் நாம் முன்னேறிக்கொண்டு போகிறோம், சூர்யா இன்னும் மேலே வர சிரமப்படுகிறாரே என்று யோசித்த ஜோதிகா ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்தபோது அதில் சூர்யாவே நடிக்கட்டும், அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பேச வைத்து, அவரும் அந்த வாய்ப்பை சூர்யாவிற்கு கொடுத்துள்ளார். அப்படி மீண்டும் மூன்றாவது முறையாக அந்த படத்தில் ஜோடி சேர்ந்த இருவருக்கும் அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் படத்தில் இருவரின் காதல் காட்சிகளும் அப்படியே நிஜ காதல் ஜோடிகள் போன்று ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கும். அந்த அளவுக்கு காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டி நடித்திருந்த இந்த ஜோடி நிஜமாகவே காதலிக்க ஆரம்பித்திருந்தனர். இருந்தும் தங்களது தொழிலில் மிகவும் கவனமாக இருந்த இருவரும் தங்களது படங்களில் முழு கவனம் செலுத்தி முன்னேற ஆரம்பித்தனர்.


'காக்க காக்க' திரைப்படத்தில் "உயிரின் உயிரே" பாடல் காட்சியில் சூர்யா - ஜோதிகா

அந்த வகையில், தொடர்ந்து அவரவர் பாதையில் பயணித்து வெற்றிப்படங்களை கொடுத்து நடித்தாலும் இடையிடையே ஒன்றாக இணைந்து நடிக்கவும் தவறவில்லை. அப்படி 'உயிரிலே கலந்தது', 'காக்க காக்க' ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சசி சங்கர் என்பவரது இயக்கத்தில் 'பேரழகன்' என்ற படத்திலும் இணைந்து இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தனர். இதில் சூர்யா, பிரேம் குமார் (சின்னா), கார்த்திக் என்ற இரண்டு வேடங்களிலும், ஜோதிகா, செண்பகம் மற்றும் பிரியா நாயர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்த நிலையில், இதில் சின்னா மற்றும் செண்பகம் ஆகிய கதாபாத்திரங்களில் வரும் சூர்யா-ஜோதிகா, காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து தளங்களிலும் நடிப்பில் அசரவைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த ஜோடி இணைந்தால் அது வெற்றிதான் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு புகழ்பெற்ற இவர்கள், அடுத்ததாக ‘மாயாவி’, ‘ஜூன் 6’, ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ போன்ற படங்களிலும் நடித்தனர். இதில் 2006-ஆம் ஆண்டு கிருஷ்ணா என்பவரது இயக்கத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்த ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ திரைப்படம் மட்டும் ஒட்டுமொத்த காதலர்களும் கொண்டாடும் படமாக அமைந்து அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது. இப்படத்தில் கௌதமாக வரும் சூர்யா, ஐஷுவாக வரும் பூமிகாவை காதலித்து இருந்தாலும், அந்த காதல் முறிந்து வேண்டா வெறுப்பாக குந்தவையாக வரும் ஜோதிகாவை திருமணம் செய்துகொள்வார். உண்மையிலேயே விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஜோடி, திருமணத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எவ்வளவு அழகான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அந்த பாத்திரமாகவே மாறி சூர்யாவும், ஜோதிகாவும் வாழ்ந்து காட்டியிருந்த விதம் பலரையும் பொறாமைப்பட வைத்தது. திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக உருகி உருகி காதலிப்பது போல் நடித்த இந்த ஜோடி ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்திற்கு பிறகு பல எதிர்ப்புகளையும் மீறி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு இன்று பலரும் பார்த்து பொறாமைப்படும் படியாக நிஜ வாழ்க்கையிலும் இளமை மாறாமல் உருகி உருகி காதலித்து அழகானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

நடிப்பில் புதிய பரிமாணம்


'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நெடுமாறனாக வரும் சூர்யா

ஜோதிகா மும்பையில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு தமிழ் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு குடும்பம் குழந்தைகள் என்று இருந்துவிட சூர்யா மட்டும் திரைத்துறையில் தொடர்ந்து பயணித்தார். திருமணத்திற்கு பிறகு சூர்யா நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது மட்டுமின்றி முன்பிருந்ததை விட இன்னும் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தார். அப்படி அவர் நடித்த ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’, ‘சிங்கம்’, ‘7-ஆம் அறிவு’, ‘சிங்கம் 2’, ‘24’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘காப்பான்’, ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’, ‘விக்ரம்’ என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி சூர்யா கொடுத்த வெற்றி படங்களின் பட்டியல் என்பது மிக நீளம். இதில் ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’, ‘சிங்கம்’ போன்ற படங்கள் மாஸ் ஹிட் படங்களாக அமைந்திருந்தாலும், 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்று தரும் அளவுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதில் நெடுமாறனாக வரும் சூர்யா நடிப்பில் புதிய பரிமாணம் காட்டி நடித்து மிரட்டியிருப்பார். 5 தேசிய விருதுகளை பெற்ற இப்படம் வெள்ளித்திரையில் மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ள அதே வேளையில், சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் சூர்யாவுடன், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தனித்தனி பாதையில் கலக்கல்


'36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' ஆகிய திரைப்படங்களில் ஜோதிகாவின் தோற்றம்

இப்படி சூர்யா தன் திரைப்பயணத்தில் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்த அதே வேளையில் திடீரென்று தனது மனைவி ஜோதிகாவிடம் மீண்டும் உனக்கு நடிக்க விருப்பமா என கேட்க, ஜோதிகாவும் ஆர்வமாகி ஓகே சொல்லியுள்ளார். அதன்படி 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கணவர் மற்றும் குடும்பத்தினரின் அனுமதியுடன் ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பெண்களை முன்னிலைப்படுத்தும் கதையில் நடித்து திரையில் தோன்றிய ஜோதிகாவை பார்த்த அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதையும் பெற்றார் ஜோதிகா. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் பாராட்டுகளை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்த ஜோதிகா ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘காற்றின் மொழி’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘தம்பி’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘உடன் பிறப்பே’ என வித்தியாசமான பரிமாணங்கள் காட்டி நடித்து அனைத்து படங்களையும் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். தற்போது தமிழ் தாண்டி, மலையாளம், ஹிந்தி என்று கணவரின் ஒத்துழைப்புடன் தன் வெற்றி முத்திரைகளை பதிக்க தொடங்கியிருக்கும் ஜோதிகாவை போன்றே, சூர்யாவும் மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று அனைவரின் விஷயங்களையும் கவனித்துக்கொண்டே சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி தனி தனி பாதையில் பயணித்து தங்களின் வெற்றிகளை பதிவு செய்து வரும் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் சூர்யா, ஜோதிகா

அக்‌ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக ஹிந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஜோதிகா தென்னிந்தியத் திரையுலகில் நுழைந்த பிறகு, இந்தி படங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. 26 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி திரையுலகில் பயணித்தவர் அண்மையில் அஜய் தேவ்கான், மாதவன் ஆகியோருடன் இணைந்து ‘சைத்தான்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி அன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியில் இயக்குனர் துஷார் ஹிராநந்தானி என்பவரது இயக்கத்தில் ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்தான் ஜோதிகா முதலில் இந்தியில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். ஆனால் அதற்கு முன்பாகவே 'சைத்தான்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இருந்தும் தற்போது ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பணிகள் தொடங்கி பெரும்பாலும் முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக வரும் ராஜ்குமார் ராவ்வுக்கு ஆசிரியராக ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க இயக்குனர் துஷார் ஹிராநந்தானி ஜோதிகாவை அணுகியபோது முதலில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால், கதையை படித்து பார்த்த கணவர் சூர்யா இதனை நீ மிஸ் பண்ணக் கூடாது, உடனே இயக்குனருக்கு தொடர்பு கொண்டு நடிக்க சம்மதம் சொல் என்று கூறிய பிறகே நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதனை இயக்குனர் துஷார் ஹிராநந்தானியே அண்மையில் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


அழகிய புன்னகையுடன் சூர்யா - ஜோதிகா ஜோடி

இப்படி கணவன் - மனைவி இருவரும் ஒருவர் மற்றொருவரது விஷயத்தில் அக்கறை கொண்டு பயணித்து வரும் இந்த வேளையில், இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அப்படத்தினை இயக்கப்போவது யார்? படத்தின் பெயர் என்ன? போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அதற்கு முன்பாக காதல் கதையாக உருவாக உள்ள இந்தப் படத்தை ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தினை இயக்கிய இயக்குனர் ஹலிதா அல்லது ‘பெங்களூர் டேஸ்’ என்ற படத்தினை இயக்கிய இயக்குனர் அஞ்சலி மேனன் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் “நல்ல காதல் கதை அமைந்தால் நானும், கணவர் சூர்யாவும் இணைந்து நடிக்கத் தயார்” என்று ஜோதிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதுபோலவே இப்படத்தின் கதையும் அமைந்திருப்பதால் மீண்டும் இந்த ஜோடி மற்றுமொரு காதல் சரித்திரத்தை படைக்க தயாராகி வர, அவர்களது ரசிகர்கள் இப்போதே தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்