முத்தம் தவிர்க்க முடியாதது - நடிகை அம்பிகா

"காட்சிக்கு அவசியமானால் முத்தம் கொடுத்து நடிப்பது தவறு அல்ல" என்று சொன்னார், அம்பிகா.

Update:2024-04-30 00:00 IST
Click the Play button to listen to article

(18.01.1987 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

"காட்சிக்கு அவசியமானால் முத்தம் கொடுத்து நடிப்பது தவறு அல்ல" என்று சொன்னார், அம்பிகா.

"புன்னகை மன்னன்" படத்தில் ரேகா முத்தம் கொடுத்து நடித்து இருக்கிறார். அது போன்று, ஒரு வாய்ப்பு வந்தால் நீங்கள் முத்தம் கொடுத்து நடிப்பீர்களா?" என்று கேட்டதற்கே, அம்பிகா மேற்கண்டவாறு சொன்னார்.

"சினிமா உலகம் மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில், முத்தம் கொடுத்து நடிப்பது சரியா தவறா என்ற ஆராய்ச்சியே அவசியம் அற்றது" என்றும் அம்பிகா கூறினார்.


நடிக்க வந்த துவக்க காலத்தில் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் நடிகை அம்பிகா 

"உங்கள் தங்கை ராதாவுக்கு கிடைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைப்பது இல்லை. இதற்காக நீங்கள் வருத்தப்படுவது உண்டா?" என்று நிருபர் கேட்டார்.

பொறாமை உண்டு

வருத்தம் என்ன பொறாமையே ஏற்படுகிறது. ராதாவுக்கு நல்ல வேடங்கள் கிடைக்கின்றன. அது போன்ற வேடங்கள் எனக்கும் கிடைக்காதா என்று நான் ஏங்குவது உண்டு. இதில் தவறு என்ன இருக்கிறது? ராதா பெறும் பெருமைகளைப் பார்த்து, பெருமை கொள்ளும் நான், அவளைப் போலவே நானும் நல்ல வேடங்களில் நடித்து பேரும் புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது தவறா? நானும் ராதாவும் வாய்ப்புகளுக்காக போட்டியோ, பொறாமையோ அடைவது இல்லை. திறமையைக் காட்டுவதில் போட்டி போடுகிறோம். நடிப்பில் போட்டி இருந்தால்தான் இருவரும் வளர முடியும்" என்றார், அம்பிகா.


தங்கை ராதாவுடன் நடிகை அம்பிகா 

 கிழவி ஆனாலும்…

"நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் நடித்துக் கொண்டு இருப்பீர்கள்?" என்று கேட்டதும்

"சொன்னால் பொறாமைப்பட மாட்டீர்களே! 70, 80 வயது ஆனாலும் நடித்துக் கொண்டு இருப்பேன். எந்தக் காலத்திலும், சினிமா உலகை விட்டு விலகும் எண்ணம் எனக்குக் கிடையாது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன். அப்படி, சினிமா வாய்ப்பு இல்லாமல் போனாலும், சினிமா உலகை விட்டு ஒதுங்க மாட்டேன். தயாரிப்பாளராகவோ, டைரக்டராகவோ இருப்பேன்" என்று சொன்னார், அம்பிகா.

"அப்படியானால், உங்களைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதிக்கும் ஒருத்தரைத்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள், அப்படித்தானே!" என்று நிருபர் கேட்டார்.

"இதில் என்ன சந்தேகம். எனக்கு கணவராக வருபவர் நிச்சயம் கலை ஆர்வம் மிக்கவராக இருப்பார். எனது நடிப்புத் தொழிலுக்குக் குறுக்கே நிற்க மாட்டார்" என்றார் அம்பிகா.

சென்னை நடிப்புக் கல்லூரி மாணவர்கள் தயாரிக்கும் "உன்னை அறிந்தால்" என்ற படத்தில், இந்தி நடிகர் சத்ருகன் சின்காவுக்கு ஜோடியாக அம்பிகா நடிக்கிறார். அதைப்பற்றி, நிருபர் கேட்கவும் அம்பிகா சொன்னார்.


அழகான புன்னகையுடன் காட்சியளிக்கும் அம்பிகா 

“ஊமை விழிகள்" பார்த்த பிறகு, எனக்கு நடிப்புக் கல்லூரி மாணவர்களின் திறமை மீது அபார நம்பிக்கை ஏற்பட்டது. அதனால், "உன்னை அறிந்தால்..." படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். மாணவர்கள் தயாரிக்கும் அந்தப் படத்தில் சத்ருகன் சின்காவே நடிக்க ஒப்புக்கொண்டார் என்றால், நான் ஒப்புக் கொண்டதில் என்ன வியப்பு இருக்கிறது. சத்ருகன் சின்கா நடிக்கும் முதல் தமிழ்ப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்து இருப்பது எனக்கு பெருமையே" என்று கூறினார் அம்பிகா.

"அரசியலில் ஈடுபடப் போவதாக கூறியிருந்தீர்களே அது என்ன ஆயிற்று?" என்று நிருபர் வினவினார்.

"அது அப்படியேதான் இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும்போது, இ.காங்கிரஸ் கூட்டங்களில் பேசுவேன். எல்லோருக்கும் ஏதாவது ஒரு கட்சியில் ஈடுபாடு இருக்கிறது. எனக்கு இ.காங்கிரஸ் மீது ஒரு பற்று இருக்கிறது" என்றார், அம்பிகா.

Tags:    

மேலும் செய்திகள்