ஷோபாவுடன் அதுவே கடைசி சந்திப்பு! - தாயார் பிரேமா

உண்மையாகவே ஷோபா மீது மகள் என்ற பாசம் வைத்து இருந்தால், அவளது வாழ்க்கை சீராக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தால், என்ன செய்து இருக்க வேண்டும்?

Update:2025-01-21 00:00 IST
Click the Play button to listen to article

(29.03.1981 மற்றும் 05.04.1981 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

எங்கோ படப்பிடிப்பில் இருந்த பாலுமகேந்திராவை ஷோபா தேடிச்சென்று, "அங்கிள்! எனக்கு வீட்டில் அமைதி இல்லை, நிம்மதி இல்லை, எனக்கு இனிமேல் எல்லாம் நீங்கள் தான் என்று சொன்னதாகவும், அதன் பிறகே, ஷோபாவை திருமணம் செய்துகொள்ள பாலு முடிவு செய்ததாகவும்" கூறியிருக்கிறார். பாலு சொல்லுவதை ஒரு வாதத்துக்காக உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். நாங்கள் உயிராக வைத்திருந்த என் மகள் ஷோபாவை நாங்கள் கொடுமைபடுத்தினோம். அதைத் தாங்க முடியாமல் அவள், "மகள்... மகள்..." என்று பேச்சுக்கு ஒருமுறை கூறிய பாலுவிடம் சென்று "என்னை காப்பாற்றுங்கள்" என்று கெஞ்சினாள். பாலு மீது உயர்ந்த நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஷோபா அப்படி கெஞ்சி இருக்க முடியும்!

உண்மையாகவே ஷோபா மீது மகள் என்ற பாசம் வைத்து இருந்தால், அவளது வாழ்க்கை சீராக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தால், என்ன செய்து இருக்க வேண்டும்? நல்லவிதமாக எடுத்துச் சொல்லி, அவளது கோபத்தைத் தணித்து, பெற்றோரிடம் சேர்ந்து வாழும்படி புத்தி கூறியிருக்க வேண்டும் அல்லவா? ஷோபா பிடிவாதமாக இருந்து இருந்தால், "சரி, உனக்கு உன் பெற்றோருடன் வாழ விருப்பம் இல்லை என்றால் பரவாயில்லை, எனக்கும் நீ மகள் தானே! என் மகளாக, என் வீட்டிலேயே இரு. உனக்கு விருப்பம் வரும்பொழுது வீட்டுக்குப் போகலாம்" என்று தனது வீட்டில் வைத்து இருக்கலாம் அல்லவா? ஒரு சராசரி மனிதன் அப்படித்தானே செய்து இருப்பான்? அல்லது இன்னும் ஒரு படி மேலே போய், "நீ உன் வீட்டுக்கே போக வேண்டாம். நடிக்கவும் வேண்டாம். நான் உழைப்பதே போதும்! உன்னை ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பது எனது கடமை! (மகள் ஷோபா திருமணத்துக்காக, வங்கியில் தனியாகப் பணம் போட்டு வருவதாக முன்பு பாலு சொல்லிக் கொண்டு இருந்தார்) என்று நெஞ்சு உயர்த்திக் கூறியிருக்கலாம் அல்லவா? அப்படி பாலு செய்து இருந்தால் நாங்கள் கையெடுத்து கும்பிட்டு இருப்போம்.


கேமராவுடன் இயக்குநர் பாலுமகேந்திரா 

இரண்டாம் திருமணம்

ஆனால் "ஷோபா எனக்கு மூத்த மகள்" என்று மனைவி தாலி மீதும், கடவுள் படம் மீதும் சத்தியம் செய்த பாலு செய்தார்! களங்கம் இல்லாமல், குழந்தைத்தனமாக இருந்த என் மகள் ஷோபாவை ஏதோ ஒரு முறையில் தன் வசப்படுத்திக் கொண்டு, பலவந்தமாக திருமண அறிவிப்பைக் கொடுத்தார். அதோடு நிற்கவில்லை. அந்த முறை கெட்ட செயலுக்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்.

சினிமா உலகில் இரண்டாவது திருமணம் என்பது புதுமை இல்லை என்றுகூறி, அதற்கு உதாரணமாக ஒரு பட்டியலைக் கொடுத்து, "பிரேமாவும், மேனனுக்கு இரண்டாம் தாரம்தானே?" என்று வியாக்கியானம் செய்தார். சினிமா உலகில் மட்டும் அல்ல; எல்லா இடத்திலும் இரண்டாம் திருமணம் நடந்துதான் வருகிறது. ஆனால், யாராவது மகளை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு உண்டா? மகளை திருமணம் செய்துகொண்டேன் என்று ஒருவன் அறிவித்தால், அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்! அந்த மனிதனின் வாழ்க்கைக்கும், மிருக வாழ்க்கைக்கும், என்ன வித்தியாசம் இருக்க முடியும்? எதையோ செய்து, என் மகளை பேசா மடந்தையாக்கி, மாலை மாற்றி "போஸ்" கொடுத்து முடித்தார், பாலு.

எனக்கு (தாயார் பிரேமா) அழுது அழுது நெஞ்சுவலி வந்துவிட்டது. எங்கள் நிலையை அறிந்து கலங்கிய குடும்ப நண்பரான டார்த்தியும் அவர் கணவரும் மாலையில் சோழா ஓட்டலுக்குச் சென்றார்கள். "மூடுபனி" பட கம்பெனி அறையில் ஷோபாவும், அந்தப் படத்தில் நடித்த வேறு நடிகர்களும் இருந்தார்கள். பாலு இல்லை. அவர், அகிலாவை தேற்றப் போயிருந்தார். டார்த்தியோடு ஷோபா மிகவும் பாசத்தோடும் மரியாதையோடும் பழகுவாள். ஆன்டி... ஆன்டி... என்று கட்டிப்பிடித்துக் கொள்ளுவாள். அதனால்தான், "நான் போய் நிலைமையை அறிந்து வருகிறேன்" என்று டார்த்தி சொன்னாள். ''உன் அம்மா நெஞ்சு வலியால் அவதிப்படுகிறார்கள். உன்னால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும்" என்று டார்த்தி கூறியிருக்கிறார். "எனக்கும் அம்மா இல்லாமல் வாழமுடியாது. அம்மாவை நல்ல டாக்ரிடம் கவனிக்கச் சொல்லுங்கள். நான் அவர்களை விட்டு எங்கும் போக மாட்டேன்" என்று ஷோபா சொல்லியிருக்கிறாள்!


அமைதியான புன்னகையுடன் ஷோபா

"அவ்வளவு போதும்” என்று கூறிவிட்டு, டார்த்தியும் அவர் கணவரும் திரும்பிவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்துபோன சிறிது நேரத்தில் ஷோபாவிடம் இருந்து போன் வந்தது!, ஷோபாவின் குரலை போனில் கேட்டதும் நான் "ஓ" என்று அழுதுவிட்டேன். “அழாதீர்கள், மம்மி!" என்றாள் ஷோபா. அதோடு போன் "கட்" ஆகிவிட்டது!

கால் மேல் கால்

மறுநாள் (ஜனவரி 23) காலை 11 மணி அளவில், ஷோபா வீட்டுக்கு வந்தாள். பாலு வந்து முன் கூடத்தில் அமர்ந்தார். அதற்கு முன், பாலு வீட்டிற்குள் வந்தால், ஷோபாவிடம் பேசும் சத்தம் கூட கேட்காது! ஆனால் அன்று கால் மேல் கால் போட்டு, சீட்டி அடித்தபடி உட்கார்ந்து இருந்தார்! பெரும் வெற்றி பெற்றுவிட்ட பூரிப்பு, அவருக்கு! என் தம்பி ஜோதியையும், தங்கை ரமாவையும் ஓர் அறைக்குள் வைத்து தாழிட்டுவிட்டு, நானும் என் அம்மாவும் ஷோபாவைக் கட்டிப்பிடித்து அழுதோம். அவளும் அழுதாள். அழுதுகொண்டே, “எனக்கு அழுவது பிடிக்காது என்று மம்மிக்குத் தெரியும் அல்லவா?" என்று என் கண்ணீரைத் துடைத்து விட்டாள். "மம்மி! பெங்களூருக்குப் படப்பிடிப்புக்குப் போகிறேன்... டிரஸ்” வேண்டும்" என்றாள்.

அவளுக்குத் தேவையான துணிகளை நானே எடுத்து வைத்தேன். பிறகு, "அம்மா ஷோபா, நீ வீட்டுக்கு வந்தது எனக்கு எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது. வழக்கமாகச் செல்வது போல, நம்ம வீட்டில் இருந்தே படப்பிடிப்புக்குப் புறப்பட்டுப் போ” என்றேன், நான். "வேண்டாம் மம்மி! இன்னும் கொஞ்ச சாமான் வாங்க வேண்டி உள்ளது. நான் ஓட்டலுக்குப் போய்தான் புறப்பட வேண்டும்” என்றாள், ஷோபா. நாங்கள் அதுவரை ஷோபாவை துணைக்கு ஆள் இல்லாமல் படப்பிடிப்புக்கு அனுப்பியது இல்லை. அதோடு, 22-ந் தேதி கள்ளிக்கோட்டையில் இருந்து ஷோபாவும் அவள் அப்பாவும் திரும்பிய போது, “டாடி! பெங்களூருக்கு “மூடுபனி” படப்பிடிப்புக்குச் செல்லும் போது, நீங்கள்தான் துணைக்கு வரவேண்டும்” என்று சொல்லியிருந்தாள். ஆனால், பெங்களூருக்குப் போகத் தயாரானபோது, அவள் யாரையும் அழைக்கவில்லை. எனக்கு அது கஷ்டமாக இருந்தது! அதனால் “ஷோபா! துணைக்கு அப்பாவை அழைத்துப்போ" என்று நான் சொன்னேன்.


ஷோபாவின் தாயார் நடிகை பிரேமா

வறட்சி சிரிப்பு

ஷோபா வறட்சியாக சிரித்துவிட்டு, "அதுதான் துணைக்கு ஆள் இருக்கிறதே! அங்கிள் போதும்" என்றாள்! இப்படியாவது வந்து போய் இருக்கட்டும் என்பதற்காக, அதற்கு மேல் நான் பேசவில்லை. பாலுவின் உள் உருவம் எப்படியோ... ஆனால் என் மகளை ஆட்டிப்படைப்பவர் ஆகிவிட்டார்! பாலுவின் அழகிலோ, இளமையிலோ என் மகள் நிச்சயம் மயங்கியிருக்க முடியாது. எப்படியோ மண மாலையை ஏற்கும் அளவுக்கு மயக்கடிக்கப்பட்டாள்! ஆனால் அந்தத் திருமணத்தைக் கூட அவள் புனிதமாகத்தான் கருதினாள்! பாலுவின் மனைவியாகவே வாழவும் தன்னை தயார்படுத்திக் கொண்டாள்! ஆனால் பாலு அவளை வாழ விட்டாரா?

பாலுவை கணவனாக ஏற்றுக் கொண்டதற்காக, ஷோபா எங்களை ஒதுக்கத் தயாராக இல்லை. "எனக்கு உங்களைப் போலவே, அம்மாவும் அப்பாவும் வேண்டும்" என்று, ஷோபா கூறியிருக்கிறாள்! "அம்மா, அப்பா என்று போகக்கூடாது. அவர்களுக்கு பை கொடுக்கக் கூடாது" என்று பாலு சட்டம் போட்டு இருக்கிறார். ஷோபா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 18 ஆண்டு பாசத்தோடு வளர்த்த எங்களை, ஒரே நாளில் தாலியைக் கட்டி பிரிக்க நினைத்தார், பாலு. "என் அம்மா-அப்பாவுக்கு நான்தான் சொத்து. அவர்களை என்னால் ஒதுக்கித் தள்ள முடியாது" என்று போராடினாள் ஷோபா. இந்தப் போராட்டத்தின் முடிவு?


அம்மா - அப்பாவை பார்க்க பாலுமகேந்திராவிடம் போராடிய ஷோபா

திருமண அறிவிப்பை பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு, "மூடுபனி" படத்துக்காக ஷோபாவை பெங்களூருக்கு அழைத்துப் போனார், பாலுமகேந்திரா. பெங்களூருக்குப் போய் சேர்ந்ததும், ஷோபா எனக்கு போன் செய்தாள். “நெஞ்சுவலிக்கு டாக்டரிடம் மருந்து சாப்பிடுங்கள்" என்று கூறினாள். "நீ என்னோடு இருந்தாலே, எனக்கு வலி போய்விடும். தினமும் தவறாமல் போன் செய்து பேசு" என்று நான் (தாயார் பிரேமா) சொன்னேன். "இது என்ன மம்மி, புதுசா சொல்றீங்க. தினமும் உங்களுக்கு போன் செய்வது வழக்கமானது தானே!" என்றாள் ஷோபா. மூன்று நாள் ஷோபா தொடர்ந்து போன் செய்தாள். எங்களுக்கும் ஆறுதலாக இருந்தது. அதன் பிறகு ஷோபாவிடம் இருந்து போன் வரவில்லை. என் மகளுக்கு என்ன ஆனதோ என்று நான் துடித்துப்போனேன். ஷோபா, எங்களுக்குப் போன் செய்ததை பாலு தடுத்துவிட்ட செய்தி பின்னால்தான் எங்களுக்குத் தெரிய வந்தது.

வேலி தாண்டிய வெள்ளாடு

இதற்கு இடையில், "வேலி தாண்டிய வெள்ளாடு” என்ற படத்தில் நடிக்க ஷோபா, பெங்களூரில் இருந்து இரண்டு நாள் சென்னைக்கு வந்தாள். இரண்டு நாளும் எங்கள் வீட்டில்தான் தங்கினாள். முன்பெல்லாம் இரவு படுக்கும்பொழுது என்னோடு சேர்ந்து அணைத்த படி படுப்பாள். அந்த இரண்டு நாளும் வேறு பக்கம் திரும்பிப்படுத்தாள். அதோடு, தூக்கத்தில் தலையை உருட்டுவதும், தலை முடியை பிய்த்துக் கொள்வதும், தூக்கம் இல்லாது உருளுவதுமாக இருந்தாள். எனக்கு அவளைப் பார்க்கப் பயமாக இருந்தது. மறுநாள் ஒரு டாக்டரிடம் கேட்டேன். "போதை மருந்து பழக்கம் உள்ளவர்களுக்கு, அது இல்லாவிட்டால் அப்படி ஏற்படுவது உண்டு" என்று அவர் சொன்னார். அவள் இங்கே இருந்த இரண்டு நாளும், அதிகாலையில் பாலுவிடம் இருந்து போன் வந்தது! அவளால் பேச முடியவில்லை. “ ம்… ம்… ம்..." என்று மட்டும் பதில் சொன்னாள். ஒருமுறை மட்டும், "நான் ஞாபகம் வைத்து இருக்கிறேன். நீங்களும் சொன்னதை மறந்து விடாதீர்கள். அறைக்குள் யாரையும் அனுமதிக்காதீர்கள்" என்று சொன்னாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. கலவரமே இருந்தது.


சோக முகத்துடன் ஷோபா 

ஊட்டிக்கு

மீண்டும் பெங்களூருக்குப் போன ஷோபா, அங்கு இருந்து ஊட்டிக்கு படப்பிடிப்புக்குச் சென்றாள். இரண்டாவது வாரத்தில் வீட்டுக்கு வந்தாள். இடைவிடாது படப்பிடிப்பு இருந்தது. காலையில் பாலு வருவார். அதற்குள் ஷோபா படப்பிடிப்புக்குத் தயாராக இருப்பாள்! "மம்மி! போய்விட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, பாலுவோடு போவாள். காலையில் சிரித்து கொண்டு போகிறவள், இரவு அழுது கொண்டு படுக்க வருவாள். படப்பிடிப்பு முடிந்ததும், ஷோபாவை பாலு ஓய்வு எடுக்க விடுவது இல்லை. எங்காவது அழைத்துப் போய் விடுவார். இரவு அவள் வீட்டுக்கு வர விடியற்காலை 2 மணி, 3 மணி ஆகும். அதுவரை ஷோபா அப்பா வெளியே உட்கார்ந்து இருப்பார். நாங்கள் அறைக்குள் விழித்து இருப்போம். ஷோபா பூஜை அறைக்குள் சென்றதும், கார் டிரைவர் அன்று நடந்தது என்ன என்பதை என்னிடம் கூறிவிடுவார்.

வற்புறுத்தல்

தினசரி என் மகளை, பாலுவும் அவர் நண்பர் ஒருவரும் (இவர் ஒரு தயாரிப்பாளர்) கடற்கரைக்கு அழைத்துப் போய், “உன் வீட்டில் இருப்பது உனது கார்தானே; உன் நகை தானே! நகையைக் கேளு; காரை வாங்கு; போனை எடு; இரண்டு ஆண்டு வருமான கணக்கை கேளு” என்று இரண்டு பேரும் மாறி மாறி வற்புறுத்தி வந்து இருக்கிறார்கள். ஷோபா, "நான் கேட்க மாட்டேன்” என்று அழுவாளாம். வாங்கிப்போன டிபனைக்கூட சாப்பிடாமல் எழுந்து விடுவாளாம். எங்கள் டிரைவர், தினசரி செய்தி சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால் ஷோபா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவள் முகம் மட்டும் அழுது வீங்கியிருக்கும்! “இப்படி தூக்கம் இல்லாமல் இருந்தால், உடம்பு கெட்டுப் போகும். முகம் இப்படி வாடிப் போய்விட்டதே" என்பேன் நான். “கொஞ்சம் லேட்டா போச்சு” என்று சொல்லிவிட்டு போய் படுத்துக்கொள்வாள்.

மார்ச் 1-ந் தேதிவரை, ஷோபா எதுவும் கேட்கவில்லை. அன்று மாலையில் அவளுக்கு “வேலி தாண்டிய வெள்ளாடு" படத்துக்கு டப்பிங் இருந்தது. "டப்பிங்”குக்கு புறப்படும் முன்பு, "மம்மி! பணம் முழுவதும் தந்து விட்டார்களா?” என்று கேட்டாள். "கொஞ்சம் பாக்கியிருக்கிறது. தந்துவிடுவார்கள்" என்றேன், நான். "நீங்கள் எல்லோரையும் நம்புவீங்க! அவங்க நாமம் போடுவாங்க" (பல பேர் போட்டு இருக்காங்க) என்றாள், ஷோபா. அதனால், அவள் முன்னாள் வைத்தே, பட கம்பெனிக்குப் போன் செய்தேன். 2-ந் தேதி (மார்ச்) காலையில் பணம் தருவதாகச் சொன்னார்கள். அதை நான் ஷோபாவிடம் சொன்னதும் டப்பிங்குக்குச் சென்றாள்.


கோபக்கனலில் காட்சி தரும் ஷோபா 

திடீர் கேள்வி

1–ந் தேதி இப்படி நடந்து கொண்ட ஷோபாவிடம், 2-ந் தேதி பெரும் மாற்றம் ஏற்பட்டது! அன்று மாலையில் ஷோபா படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது, அவளோடு பாலுவும் அவருடைய நண்பரும் வந்தார்கள். ஷோபா முகத்தைக் கழுவிவிட்டு, சேலை மாற்ற அலமாரியைத் திறந்தாள். அவளுக்காக, என் அக்காள் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்த சேலைகள் அப்படியே இருந்தன. அதில் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அதை உடுத்திக் கொண்டு, "காதுக்குப் போட புதிதாக ஒன்று கொடுங்கள்" என்று கேட்டாள். ரோஜாப்பூ போன்ற ஒரு புது கம்மலை எடுத்துக் கொடுத்தேன். "தலைவாரிவிட்டு வாங்கிக் கொள்கிறேன்" என்று அதை வேலைக்காரப் பெண் வசந்தியிடம் கொடுத்தாள், ஷோபா.

பிறகு தலை வாருவதும், என்னைப் பார்ப்பதும், பேச வாயெடுப்பதும், பிறகு தலை குனிந்து கொள்வதுமாக இருந்தாள். அவள் எதையோ பேச திணறுவதைப் பார்த்து. "ஷோபா இந்த சேலை உனக்கு நன்றாக இருக்கிறது. கம்மலையும் போட்டுக் கொண்டால் இன்னும் அழகாக இருக்கும்" என்று நான் சிரிக்க முடியாமல் சிரித்தேன். "கைக்கு புது வளையல் தரட்டுமா?" என்றும் கேட்டேன். "வேண்டாம் மம்மி!” என்றாள் ஷோபா. பிறகு திடீர் என்று நிமிர்ந்தாள். “எனக்கு இரண்டு ஆண்டு கணக்கு வேண்டும். கணவன்-மனைவி என்ற முறையில், நான் இன்கம்டாக்சுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும்” என்று கேட்டாள்.

அவள் "கணவன்" என்று சொன்னதை கேட்காதது போல, “உனக்கு எதுக்கும்மா இந்தத் தலைவலி? அதுக்குத்தான் நான் இருக்கிறேனே" என்றேன். “இல்லை மம்மி! இப்ப எனக்குன்னு ஓர் ஆள் இருக்கிறார் இல்லையா? என்னுடைய பர்த்தாவு(கணவன்) எனது இரண்டு வருட கணக்கைக் கேட்கிறார்" என்று குனிந்து கொண்டு ஷோபா சொன்னால். எனக்கு கோபம் வந்தது. ''யாரடி உன் பர்த்தாவு? அவன் உன் பர்த்தாவு இல்லையடி. அகிலாவுடைய பர்த்தாவு" என்று நான் சத்தம் போட்டேன். அது பாலு காதிலும் விழ வேண்டும் என்பதற்காக.


பாலுமகேந்திராவுக்காக அம்மாவிடம் சண்டை போட்ட ஷோபா

18 வருட கணக்கு

"என்ன மம்மி! அப்படி சொல்றீங்க? என் கழுத்தில் தாலி கிடப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று, தாலியை தூக்கிக் காட்டினாள். (ஷோபா ஒரு வாரமாக அந்த சங்கிலியைப் போட்டு இருந்தாள்.) "இந்தத் தாலிக்கு என்னடி மதிப்பு இருக்கிறது? கண்டவன் சொல்றதை எல்லாம் கேட்டுவிட்டு என்னிடம் வந்து பேசாதே" என்று நான் அதட்டினேன். "மம்மி! என்னை எப்படியும் திட்டு. அங்கிளை திட்டாதே!" என்றாள், ஷோபா.

"நான் அப்படித்தான் திட்டுவேன். உன் புத்தியை கெடுத்தவனை அப்படித்தான் பேசுவேன். உன்னை இரண்டு வருட கணக்குக் கேட்கச் சொல்கிறானே. உன்னுடைய 18 வருட கணக்கை எனக்கு அவன் தருவானா? இப்பொழுது புரிகிறதா அவனுடைய பாசம்? அவனுக்கு உன்மீது பாசம் இல்லை. அவன் குறி எல்லாம் உன் பணத்தின் மீதுதான்" என்று என் மனதில் கிடந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தேன். "மம்மி! அங்கிளைத் திட்டாதீங்க" என்று மீண்டும் கத்தினாள், ஷோபா. "பேசினால் என்னடி செய்வாய்? உன்னை கணக்குக் கேட்கச் சொன்னவனை நான் நாலு கேள்வி கேட்கத்தான் செய்வேன். என் மகள் நீ என்னையே எதிர்த்துப் பேச துணிந்துவிட்டாயா?" என்று, நான் ஷோபாவை நெருங்கினேன்.

ஷோபா, “அங்கிள்!” என்று கத்திக்கொண்டு முன் அறைக்குச் சென்றாள். அங்கே உட்கார்ந்து இருந்த பாலு, “அம்மு! உனக்கு என்ன ஆனது என்று எழுந்து வந்து எனக்கும், ஷோபாவுக்கும் மத்தியில் நின்றார். "நீ என் மகள்! உன்னைப் பேசவும், அடிக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது. என்னை எவனும் தடுக்க முடியாது. நீ சினிமாவில்தான் கதாநாயகி. எனக்கு மகள்" என்று அப்போதும் கத்தினேன். ஷோபாவை பாலு அழைத்துப்போய் சோபாவில் உட்கார வைத்தார். "அவர் உண்மையாகவே உன்னை விரும்பியிருந்தால், கட்டிய புடவையோடு வரச் சொல்லியிருப்பார். அதற்கு வக்கு இல்லாமல், உன்னை நகை கேட்கச் சொல்லுகின்றார், கணக்குக் கேட்கத் தூது விடுகிறார். இப்பொழுதாவது அவரது திட்டம் உனக்குப் புரிகிறதா?" என்று கேட்டேன்.

நான் சொல்லுவதை அவள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, "அம்மு! நான் உன்னை சூப்பர் ஸ்டார் ஆக்குகிறேன். அழாதே!" என்றார், பாலு. "நீ என்ன அவளை சூப்பர் ஸ்டார் ஆக்குவது? நீ கேமராவை ஒழுங்காகப் பிடிப்பதற்கு முன்னாலேயே என் மகள் (1971ல்) சிறந்த நடிகை ஆனாள் தெரியுமா உனக்கு? என்று, நான் பாலுவிடம் கேட்டேன். "அங்கிள்! இதற்காகத்தான் நான் கணக்குக் கேட்க மாட்டேன் என்று சொன்னேன். நீங்கள் கேட்க வைத்துவிட்டீர்களே!" என்று அழுதாள் ஷோபா. பாலு, அவள் தலையை தடவத் தொடங்கினார். பிறகு சிறிது நேரத்தில் இருவரும் எழுந்து போனார்கள். ஷோபா, கோபம் தணிந்து மீண்டும் வருவாள் என்றுதான் நான் நினைத்தேன். அதுவே எங்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று அப்போது நானும் நினைக்கவில்லை. ஷோபாவும் நினைத்திருக்க மாட்டாள்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்…

Tags:    

மேலும் செய்திகள்