கார்த்திக் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகிறது ‘ஜப்பான்’ திரைப்படம்!
‘பொன்னியின் செல்வன்’, ‘கைதி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கின் மாறுபட்ட கெட்டப்பில் உருவாகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
‘பொன்னியின் செல்வன்’, ‘கைதி’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கின் மாறுபட்ட கெட்டப்பில் உருவாகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘தோழா’, ‘பிரியாணி’, ‘பருத்தி வீரன்’, ‘பையா’ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்தான் கார்த்திக். அதுவும் அவர் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பருத்திவீரன்’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கைதி’ திரைப்படங்கள் வழக்கத்தைக் காட்டிலும் அதிக பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தன. இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசம் காட்டும் கார்த்திக் ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் ‘ஜப்பான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் அனு இம்மானுவெல், ஜித்தன் ரமேஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டு நகைக்கடை ஒன்றில் ₹200 கோடி மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்ற பிரபல திருடனாக ஜப்பான் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்திருக்க, திருடனை போலீஸ் எப்படி துரத்தி பிடிக்கப் போகிறார்கள் என்பது போல கதைக்களம் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ‘ஜப்பான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதே போல் கார்த்தியின் பிறந்தநாளான மே 25 அன்று இந்த படத்தின் முதல் பார்வை டீசர் வெளியிடப்பட்டது.
ஜப்பான் திரைப்படக் கூட்டணி
இதைத் தொடர்ந்து நேற்று (18.10.2023) மாலை 5 மணியளவில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக்கின் மாறுபட்ட கெட்டப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் இந்த ஆண்டின் தீபாவளி ட்ரீட்டாக வெளிவரவுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளிவரவுள்ளது.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சகுனி’, ‘கொம்பன்’, ‘சர்தார்’ படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக கார்த்தியுடன் இணைந்து இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் கார்த்திக் இந்த படத்தில் எவ்வித புதுமையான நடிப்பை தந்துள்ளார், இதுவும் நகைச்சுவை அல்லது ஆக்ஷன் திரைப்படமா அல்லது இரண்டும் கலந்த ஆக்ஷன் நகைச்சுவை திரைப்படமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.