ஜென்டில்வுமன் இருக்கக்கூடாதா? "ஜெய்பீம்" லிஜோமோல் அதிரடி!
இவர் சினிமாவிலிருந்து விலகிவிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், வித்தியாசமான அதேசமயம் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி தன்னை குறித்து வெளியாகிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தான் சொன்னதுபோலவே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
சினிமா என்றாலே ஹீரோ ஹீரோயின்களின் பெயரை வைத்து ஓட்டிவிடலாம் என்பதைத் தாண்டி, இப்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை பார்க்க தொடங்கிவிட்டனர். அதனாலேயே அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களும், சிறிய பட்ஜெட் படங்களும்கூட ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. திரையுலகை பொருத்தவரை எந்த மாதிரியான கதை, எந்த சமயத்தில் எப்படி ஹிட்டடிக்கும் என்பது இன்றுவரை கணிக்கமுடியாத ஒன்று. ஆனால் ஒருசில நடிகர், நடிகைகளுக்கு மட்டும் என்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் ஹிட்டடித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் லிஜோமோல் ஜோஸ். இவர் கதைகளை பார்த்து பார்த்து செலக்ட் செய்வதைவிட தனது கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது, அதில் தனக்கு ஸ்கோப் இருக்கிறதா என்று பார்த்துதான் நடிக்கவே ஒத்துக்கொள்வாராம். அதற்கு சிறந்த சான்றுகள்தான், ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்கள். நடிப்புத்துறைக்கு சற்று தாமதமாக வந்திருந்தாலும் இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் இவரை மக்கள் மனதில் இடம்பிடிக்க செய்திருக்கின்றன. சமீபத்தில் லிஜோமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அடுத்து ‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. லிஜோமோலுக்கு சினிமா ஆர்வம் எங்கிருந்து வந்தது? இவருடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்ஸ் என்னென்ன? பார்க்கலாம்.
லிஜோமோலின் வித்தியாசமான கதாபாத்திரங்கள்!
இந்திய சினிமாவில் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஜெய்பீம்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு இணையான கதாபாத்திரம் செங்கேணி. இந்த கேரக்டரில் நடித்து அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார் லிஜோமோல். அதற்கு முன்பே சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும், ஜிவி பிரகாஷுக்கு அக்காவாகவும் தோன்றி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்த படமே உண்மை சம்பவமான ஜெய்பீம். இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார். இப்படி இந்திய அளவில் அறியப்படும் நடிகையான லிஜோமோல், அறிமுகமானது ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளப்படத்தில்தான். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பீருமேடு என்ற மலைப்பகுதியைச் சேர்ந்தவர் இவர். லிஜோமோலின் அப்பா ஒரு தொழிலதிபர், அம்மா கேரள வனத்துறையில் பணிபுரிந்துவருகிறார். புதுச்சேரியில் முதுகலை படிப்பு படித்துக்கொண்டிருந்த லிஜோமோல், இடுக்கி மாவட்டத்தில் நடக்கும் கதையான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ஆடிஷனை சோஷியல் மீடியாக்களில் பார்த்து அதில் கலந்துகொண்டுள்ளார்.
‘பிரேமசூத்ரம்’ என்ற மலையாளப்படத்தில் லிஜோமோல்
இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலேயே அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர், அந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை கொடுத்த காரணத்தால் அடுத்தடுத்த வாய்ப்புகள் மலையாளத்தில் கிடைத்தன. அதில் ‘ஹனி பீ 2.5’, ‘பிரேமசூத்ரம்’ போன்ற படங்கள் லிஜோமோலுக்கு பெயர்சொல்லும் படங்களாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து தமிழில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. வளர்ந்துவரும் மற்ற நடிகைகள்போல தொடர்ந்து சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக ஜெய்பீமில் நடித்துமுடித்த கையோடு அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் இவர் சினிமாவிலிருந்து விலகிவிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், வித்தியாசமான அதேசமயம் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி தன்னை குறித்து வெளியாகிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தான் சொன்னதுபோலவே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
திருமணத்திற்கு பின்...
‘ஜெய் பீம்’ படத்தில் ஆழமான மற்றும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்த இவர், அடுத்து ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ஓடிடி படத்தில் நடித்தார். அதனையடுத்து மலையாளத்தில் நகைச்சுவை, குடும்ப பாசம் மற்றும் நட்பு போன்ற பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ‘விசுதா மேஜோ’ என்ற கதையில் நடித்தார். இப்படி படத்திற்கு படம் வித்தியாசமான, அதேசமயம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் லிஜோமோலிடம், ‘எப்படி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, “நான் கதையை தேர்ந்தெடுப்பது இல்லை. ஒவ்வொரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது? அதில் என்னுடைய நடிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்பேன்” என்று கூறினார்.
‘ஜெய்பீம்’ படத்தில் செங்கேணியாக...
எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாவிட்டாலும் லிஜோமோலுக்கு சினிமா ஆர்வம் எங்கிருந்து வந்தது என்று அவருக்கே தெரியவில்லை என்றாலும் கைதேர்ந்த நடிகர், நடிகைகள்கூட அழவேண்டிய காட்சிகளுக்கு கிளிசரின் பயன்படுத்தும் நிலையில், இவர் அப்படி செயற்கை கண்ணீரை வரவைத்தது கிடையாதாம். என்னமாதிரியான காட்சிகளாக இருந்தாலும் தனது எதார்த்தமான, அதேசமயம் அந்த ரோலிற்கு தேவையான நடிப்பை கச்சிதமாக வழங்குவதில் இவர் கெட்டிக்காரி என இயக்குநர்களின் பாராட்டை பெற்று வருகிறார். இப்படி தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவரும் லிஜோமோலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது ‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம்.
காதல் என்பது பொதுவுடைமை ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
லிஜோமோல் ஜோஸ், ரோகிணி, வினீத், அனுஷா பிரபு, கலேஷ் ராமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நமது சமூகத்தால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்படாத தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருக்கிறார் லிஜோமோல். கணவர் வினீத்தை பிரிந்துவாழும் ரோகிணி தனது மகள் காதலிப்பதாக சொல்லியதும், அதை புரிந்துகொண்டு, இந்த வயதில் காதல் வரத்தானே செய்யும், அவரை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வா என்கிறார். ஆனால் தன்னுடைய மகள் காதலிப்பது ஒரு ஆணையல்ல, ஒரு பெண்ணை என்பது தெரிந்ததும் கொதித்தெழுந்து, இந்த பிரச்சினையை தனது கணவர் வினீத்திடம் கொண்டுசெல்கிறார். அவரும் தனது மகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்க, அவற்றுக்கெல்லாம் தடாலடி பதிலைக் கொடுத்து வாயை அடைத்துவிடுகிறார் லிஜோமோல். தன்னை காதலிக்கும் ஆணை விட்டுவிட்டு, ஒரு பெண்ணை காதலிக்க காரணம் என்ன? ஒரினச்சேர்க்கையாளர்களின் உணர்வுகள் மற்றும் அதன்மீதான சமூகத்தின் பார்வை எப்படியிருக்கிறது? என்பது குறித்து பேசுகிறது இப்படம். இந்த படம் குறித்து ரோகிணி கூறுகையில், ஓரினச் சேர்க்கை ஏன் கூடாது? என்பதுதான் இப்படத்தின் முக்கிய கதையாக இருக்கிறது. தனக்குள் காதல் உணர்வு ஏற்படும் இளைஞர்கள் அதுகுறித்த உரையாடலை முதலில் குடும்பத்திலிருந்து தொடங்கவேண்டும் என்பதை அற்புதமாக எழுதியிருக்கிறார் இயக்குநர். தனது மகள் ஒரு பெண்ணையே காதலிக்கிறாள் என்பது தெரிந்ததும் ஒரு தாயின் மனது எப்படி பரிதவிக்கிறது? என்பதை திரையில் பார்க்கமுடியும்?” என்றார்.
‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக லிஜோமோல்
சமூகத்தில் இதுவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தை பொதுவுடைமை என்ற பெயரில் படத்தில் காட்டியிருப்பதே ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்கின்றனர் விமர்சகர்கள். இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கமுடியாது எனவும், இளம்சமுதாயத்தினர் தவறான வழியை தேர்ந்தெடுக்க இப்படம் வழிகாட்டுகிறது எனவும் கூறுகின்றனர். பொதுவுடைமை என்பது எல்லாருக்கும் எல்லாமும் சமம் என்பதை காட்டினாலும் காதல் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உருவாவதுதான் இயல்பு என்று கூறியுள்ளனர். இந்த கதை விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்றாலும் தன்பாலின உறவில் இருப்பவர்களின் மனநிலையை பிரதிபலிக்கும்விதமாக தனது கதாபாத்திரம் இருப்பதாலேயே இதில் தான் நடித்திருப்பதாக கூறியிருக்கிறார் லிஜோமோல். ‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்த படமும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதையை மையமாகக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சசிகுமாருடன் ‘ஃப்ரீடம்’ என்ற படத்தில் நடிக்கிறார். அதனையடுத்து 1992ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்முறை சம்பவத்தை மையமாகக்கொண்டு உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை நடிகை ரோகிணி இயக்குகிறார். இப்படி தொடர்ந்து பெண்களை மையப்படுத்திய அதேசமயம், மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் லிஜோமோல்.