நான் வில்லன் இல்லை "மகாராஜா" - சொல்லி அடித்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் துணை நடிகராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய் சேதுபதி பாலிவுட் திரையுலகமே சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் அளவுக்கு தன் உயரத்தை உயர்த்திப்பிடித்துள்ளார் என்றால் அது அவரால் மட்டுமே சாத்தியமானது.

Update: 2024-06-24 18:30 GMT
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் துணை நடிகராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய் சேதுபதி, பாலிவுட் திரையுலகமே சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் அளவுக்கு தன் உயரத்தை உயர்த்திப்பிடித்துள்ளார் என்றால் அது அவரால் மட்டுமே சாத்தியமானது. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், யாருடைய உதவியும் இன்றி தனி ஒரு மனிதனாக தன் கடின உழைப்பையும், விடா முயற்சியையும் நம்பி களமிறங்கியவரை தமிழ் சினிமாவும் கைவிட்டுவிடவில்லை. ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற தேசிய விருது பெற்ற ஒரு படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் இன்று நடிகர் என்பதையும் தாண்டி வில்லன், வசனகர்த்தா, பாடலாசிரியர், சிறந்த தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளோடு வெற்றிகரமாக தன் பங்களிப்பை சினிமாவுக்கு வழங்கி வருகிறார். தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றிகளை கொடுத்துவந்த விஜய் சேதுபதி, திடீரென பயங்கரமான வில்லனாக அதுவும் நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக தொடர்ந்து களமிறங்கினார். இருந்தும் இடையிடையே ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், சமீபகாலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இந்த நிலையில், அவரின் 50-வது படமாக மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்துள்ள 'மகாராஜா' திரைப்படம் அசத்தலான திரைக்கதை, அற்புதமான மேக்கிங், மிரட்டலான நடிப்புக்காக ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு திரையில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் தனது 50-வது படத்தை வெற்றி திரைப்படமாக கொடுத்த நடிகர்களின் வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். இதுவரை, தமிழ் சினிமாவில் 50-வது படத்தை வெற்றிப்படங்களாக கொடுத்த நடிகர்கள் யார்? யார்? இனி ஹீரோவாக வெற்றிபெற மாட்டார் என்று விஜய் சேதுபதியை நோக்கி வந்த விமர்சனங்களை அவர் தவிடுபொடியாக்கிக் காட்டியது எப்படி..? 'மகாராஜா’'படத்தின் வசூல் சாதனை என்ன? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

50-ல் 100 அடித்தவர்களில் நான் வித்தியாசமானவன்

தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தொடங்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய் என ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட, ரசிக்கப்பட்ட ஒவ்வொரு ஹீரோக்களுமே தங்களது 50-வது படத்தை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்துதான் நடித்துள்ளனர். இதில் எம்ஜிஆர் நடித்து அவரின் 50-வது படமாக வெளிவந்த 'நல்லவன் வாழ்வான்' படம், அரசியல் கதைக்களத்தை கொண்டு வெளிவந்து சுமாரான வெற்றி பெற்றது. அதேபோன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1958-ஆம் ஆண்டு வெளிவந்த 'சாரங்கதரா' திரைப்படமோ சூப்பர் ஹிட் ஆனது. இவர்களை தொடர்ந்து வந்த அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்தின் 50-வது படமாக தெலுங்கில் என்.டி.ராமராவுடன் இணைந்து நடித்து வெளிவந்த 'டைகர்' படம் அமைந்தது. இப்படம் அங்கு பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்ற அதே வேளையில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 'மோகம் முப்பது வருஷம்' என்ற படத்தில் நடித்தார் உலக நாயகன் கமல்ஹாசன். இப்படம் கமலின் 50-வது படமாக மட்டுமின்றி வெற்றிப்படமாகவும் அமைந்து நல்லதொரு மாற்றத்தை கமல் வாழ்வில் ஏற்படுத்திக் கொடுத்தது. இவர்களை தொடர்ந்து பின்னர் வந்த இளைய திலகம் பிரபு, விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ், சரத்குமார், முரளி, அர்ஜுன் ஆகியோரும் தங்களது 50-வது படங்களை கவனமாக தேர்வு செய்து வெற்றிப்படங்களாகத்தான் கொடுத்திருந்தனர்.


ரஜினிகாந்தின் 'டைகர்' பட காட்சி மற்றும் 'மங்காத்தா' பட அஜித் 

இப்படி 1980 மற்றும் 90-களில் கலக்கிவந்த நடிகர்களை தொடர்ந்து சூப்பர் ஹீரோக்களாக, உச்ச நட்சத்திரங்களாக, வசூல் நாயகர்களாக இன்றும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் தங்களது 50-வது படத்தில் ஒரு வெற்றியையும், ஒரு தோல்வியையும் கொடுத்தனர். இதில் 2010-ஆம் ஆண்டு எஸ்.பி.ராஜ்குமார் என்பவரது இயக்கத்தில் விஜய் நடித்த 'சுறா' படம் தோல்வியை தழுவ, அஜித் நடித்து 2011-ஆம் ஆண்டு வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. இவர்களை போன்றே தமிழ் சினிமாவின் மற்றொரு உச்ச நட்சத்திரமான சியான் விக்ரமுக்கு அவரின் 50-வது படமான 'ஐ' திரைப்படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. இப்படி ஒவ்வொரு ஹீரோக்களும் தங்களது வெற்றியை மாறி மாறி பதிவு செய்து வந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து தனது 50-வது படத்தில் செஞ்சுரி அடித்துள்ளார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்த நடிகர்கள் அனைவருமே கூட்டத்தில் ஒருவராக நடித்து பிறகு வில்லனாக மாறி அதன் பின்னர் ஹீரோவாகித்தான் தங்களது 50வது படத்தை எட்டி பிடித்தனர். ஆனால் இதில் விஜய் சேதுபதி மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக துவக்கத்தில் ஹீரோவாக ஜொலித்து, பின் வில்லனாகவும் ஜெயித்து மீண்டும் ஹீரோவாக அவரால் சாதிக்க முடியுமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளியாக, தனது 50வது படத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

வில்லனை மீண்டும் ஹீரோவாக்கிய 'மகாராஜா'

'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. 'பீட்சா' படத்தில் ஆரம்பித்த ஹீரோவுக்கான இவரின் வெற்றிப்பயணம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'பண்ணையாரும் பத்மினியும்' என தொடர்ந்தன. இந்த படங்கள் அனைத்திலுமே இவரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவரவே அனைவரும் இவரை கொண்டாட ஆரம்பித்தனர். நகரத்து இளைஞன், கிராமத்து கதாநாயகன் என இருமாறுபட்ட தோற்றங்களில் இவரின் எதார்த்தமான நடிப்பு, உடல் மொழி ஆகியவை வெகுவாக ரசிக்கப்பட்டதுடன், அனைவராலும் கொண்டாடப்பட்டன. இதனால் புகழின் உச்சத்திற்கு சென்ற விஜய் சேதுபதி, மக்களின் விருப்பமான நாயகனாகவும், வசூல் சக்கரவர்த்தி ஆகவும் மாற ஆரம்பித்தார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த ஒருசில படங்கள் தோல்வியை சந்திக்க. இந்த நேரம் அவருக்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுத்தந்த படமாக விக்னேஷ் சிவனின் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் அமைந்தது. இதற்கு பிறகு ‘சேதுபதி’, ‘இறைவி’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கவண்’, ‘விக்ரம் வேதா’, ‘கருப்பன்’, ‘செக்க சிவந்த வானம்’ என நடித்தவருக்கு 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘96’ திரைப்படம் மற்றுமொரு மறக்க முடியாத வெற்றிப்படமாக, விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. 


விஜய் சேதுபதியின் 'தென்மேற்கு பருவக்காற்று' மற்றும் 'விக்ரம் வேதா' திரைப்பட காட்சிகள் 

இந்த நிலையில்தான், இடையிடையே ஒன்றிரண்டு படங்களில் நெகட்டிவான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு மிக முக்கிய படமாக 2017-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம் வேதா’ அமைந்தது. இதனால் ஒருபுறம் ஹீரோவாக நடித்துக்கொண்டே வில்லன் கதாபாத்திரங்களிலும் கலக்க ஆரம்பித்தார். இப்படி ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் ஜித்து சிங் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தவர், அடுத்த சில ஆண்டுகளிலேயே விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ படத்தில் கொடூரமான வில்லன் பவானியாக விஜய்யே பார்த்து அசந்து போகும் படியாக நடிப்பில் மிரட்டியிருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்த ஆண்டு அதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து 'விக்ரம்' படத்தில் நடித்தார். இப்படத்திலும் கமலுக்கு இணையாக, ஹீரோவாக இல்லாவிட்டாலும் பலரையும் ஓடவிடும் வில்லனாக சந்தானம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இப்படி தொடர்ந்து ஹீரோவை விட வில்லன் வேடங்கள் விஜய் சேதுபதிக்கு வரவேற்பை கொடுத்து புதிய உச்சத்தை ஏற்படுத்திக்கொடுக்க, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிறமொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி ஹிந்தி திரையுலகில் விஜய் சேதுபதி நடித்து வெளியான முதல் படமாக ‘மும்பைக்கார்’ திரைப்படம் அமைந்தது. தமிழில் லோகேஷ் இயக்குநராக அறிமுகமான ‘மாநகரம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை அங்கு பெற்றது. இதற்கு பிறகு ஷாருக்கான் நடித்து பான் இந்தியா படமாக வெளிவந்த ‘ஜவான்’ படத்தில் காளீ கைக்வாட் என்ற நெகட்டிவ் ரோலில் நடித்தவருக்கு இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இப்படி விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிபெற, ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தன. இதனால் விஜய் சேதுபதியை நோக்கி இனி அவ்வளவுதான். ஹீரோவாக இனி ஜெயிக்க வாய்ப்பே இல்லை. விஜய் சேதுபதிக்கு எல்லாம் கட் அவுட் வைத்துவிட்டால் படம் வெற்றி பெற்றுவிடுமா? போன்ற ஏராளமான விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. அப்போதுதான் ‘மகாராஜா’ என்ற தனது 50-வது படத்தில் கமிட் ஆனார் விஜய் சேதுபதி. இப்படமாவது இவருக்கு வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழ, அதனை பூர்த்தி செய்யும் விதமாக படமும் வெளிவந்து மாபெரும் சரித்திரத்தை படைத்துள்ளது.

வசூல் சாதனை படைத்து வரும் 'மகாராஜா'


'மகாராஜா' திரைப்படத்தில் லட்சுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சி

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ என்றொரு படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக கவனம் பெற்றவர் நித்திலன் சுவாமிநாதன். இவரின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே வெளிவந்த ட்ரெய்லர் மற்றும் டீசர் ஆகியவை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மனதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக படமும், படத்தினை இயக்குநர் கொண்டு சென்றிருந்த விதமும், விஜய் சேதுபதியின் அசால்டான நடிப்பும் படம் பார்த்த அனைவரையும் மிரள செய்தது. இதனால் விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளிவந்த ‘மகாராஜா’ மற்றுமொரு வெற்றி சரித்திரமாக மாறி இனி எழ மாட்டான் என்று நினைத்த விஜய் சேதுபதியை ராஜாவாக உச்சத்தில் ஏற்றி அழகு பார்க்க வைத்துள்ளது. அதனால்தானோ என்னவோ ரூ. 20 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், வெளியான முதல் 6 நாட்களில் மட்டும் ரூ.50 கோடியை கடந்து தொடர்ந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியாக சசிகுமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் படம் கூட நன்கு ஓடியதாக சொல்லப்பட்டாலும், இரண்டு வாரங்களில்தான் ரூ.50 கோடியை வசூலித்தது. தற்போது அதையே தூக்கி சாப்பிடும் விதமாக இதுவரை ‘மகாராஜா’ திரைப்படம் ரூ.82 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

ஜூன் 22-ஆம் தேதி அன்று தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ , 'மெர்சல்', 'மாஸ்டர் ' போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இவற்றை தவிர வேறு எந்த புதிய படங்களும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகவில்லை. அதனால் வரும் நாட்களிலும் ‘மகாராஜா’ படம் மட்டுமே திரையில் தொடர்ந்து ஓடி ரூ.100 கோடியை தாண்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இப்படத்தின் கதையை கேட்ட தருணம் எனக்கு மிகவும் நம்பிக்கையும், பிரமிப்பும் ஏற்பட்டது. நடிக்கும் போதும் சரி, நடித்த பிறகும் சரி நாம் சரியாகத்தான் செய்திருக்கிறோமா என்பதை சரியாக கணிக்க முடியாது. படம் வெளிவரும் வரை ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருக்கும். படம் வெளியாவதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சியில் படத்தை பார்த்துவிட்டு கூறிய விமர்சனங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. அதற்கு ஏற்றார்போல் மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது எனக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. மேலும் இதற்கு முன்பு வெளிவந்த என்னுடைய படங்களுக்கு கிடைத்த விமர்சனங்கள் கொஞ்சம் நெருடலை தந்திருந்தாலும், மிகப்பெரிய பாராட்டை பெற்ற படமாக எனது 50-வது படம் அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என கூறியிருந்தார். எது எப்படியிருந்தாலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் நாயகனாக மக்கள் மனதில் இடம்பிடித்து மற்றுமொரு சாதனை வெற்றியை பெற்றிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்