தோல்வி அடைந்த "ஜெயா"க்கள்!

"சினிமா வாய்ப்பு" தேடிய புதுமுகங்களுக்கு 'ஜெயா' என்ற சொல் மீது புது மோகம் ஏற்பட்டது. வந்தவர்கள் எல்லோரும் தங்கள் பெயரோடு 'ஜெயா'-வை சேர்த்துக் கொண்டார்கள்.

Update: 2024-05-27 18:30 GMT
Click the Play button to listen to article

(07.08.1977 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஜெயம் என்றால் வெற்றி! அதற்காக 'ஜெயா' என்ற சொல்லை பெயரோடு சேர்த்துக் கொண்டால் வெற்றி கிட்டிவிடுமா? சமீப காலத்தில் "சினிமா வாய்ப்பு" தேடிய புதுமுகங்களுக்கு அந்த 'ஜெயா' என்ற சொல் மீது புது மோகம் ஏற்பட்டது. வந்தவர்கள் எல்லோரும் தங்கள் பெயரோடு 'ஜெயா'-வை சேர்த்துக் கொண்டார்கள்.

ஜெயலலிதா

ஜெயலலிதாதான் அந்தப் பட்டியலில் முதலில் வந்தவர். 'அம்மு... அம்மு...' என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்பட்ட ஜெயலலிதா, "வெண்ணிற ஆடை” என்ற படத்தில் நடிக்கத் தொடங்கியதும், "ஜெயலலிதா"வாக மாறினார். "ஜெயலலிதாவைப் போல குறுகிய காலத்தில் 'ஓகோ' என்று உயர்ந்தவரும் இல்லை; அந்த வேகத்தில் வீழ்ந்தவரும் இல்லை" என்று சொல்லும்படியாகிவிட்டது, ஜெயலலிதாவின் நிலை.

ஜெயசித்ரா

ஜெயசித்ரா, "குறத்தி மகன்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1972-ல் “குறத்தி மகன்” வெளிவந்தது. அதில் இருந்து ஆண்டுக்கு 10 படம் வீதம் நான்கு ஆண்டில் 40 படத்தில் நடித்தார். இடையில் தெலுங்குத் திரை உலகம் பக்கம் நுழைந்தார். இந்த ஆண்டு சொந்த வீடு கட்டி, "கிரகப்பிரவேசம்" நடத்தினார். இப்பொழுது, ஜெயசித்ரா எத்தனை தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்? ஒன்று…. இரண்டு…. மூன்று...... என்று விரலை மடக்கினால், அதற்கு மேல் மடங்க மறுக்கிறது.


நடிகைகள் ஜெயலலிதா மற்றும் ஜெயசித்ரா 

ஜெயா

ஜெயாவின் சொந்தப் பெயர் 'ஷீலா'. 'சுடரும் சூறாவளியும்' என்ற படத்தின் மூலம் 'ஷீலா' ''ஜெயா''-வாக மாறினார். ஜெயாவின் வளர்ச்சியில் வேகமும் இல்லை; வீழ்ச்சியும் இல்லை. என்னிடம் என்ன குறை இருக்கிறது. சில தயாரிப்பாளர்களின் கண்களுக்கு நான் இருப்பதே தெரிவதில்லை. கதாநாயகிப் பஞ்சம் என்று மட்டும் சொல்லி விடுகிறார்கள் என்று இப்போதும் மன வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார், ஜெயா.

ஜெயசுதா

சுஜாதா என்ற பெயரை "ஜெயசுதா" என்று மாற்றிக் கொண்டு சினிமாவில் நுழைந்தவர், ஜெயசுதா. "பெத்த மனம் பித்து" என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜெயசுதா, "தென்னாட்டு ஜீனத் அமன்" என்று எல்லாம் வருணிக்கப்பட்டார். இந்த ஜெயசுதாவுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்குப் படங்களில் கொடிகட்டிப் பறந்தார்.

ஜெயபிரபா

இவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள்தான் “படாபட்” ஜெயலட்சுமி, ஜெயபிரபா, ஜெயபிரியா, ஜெயகீதா. "துணிவே துணை” மூலம் அறிமுகமான ஜெய பிரபாவுக்கு, 'ஜெய' மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இப்போது தனது பெயரை 'பிரபா' என்று மாற்றிக் கொண்டு விட்டார்.


நடிகைகள் ஜெயசுதா மற்றும் “படாபட்” ஜெயலட்சுமி

ஜெயகீதா

“சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற படத்தில் அறிமுகமானவர், ஜெயகீதா. இவரது உண்மையான பெயர் லலிதா. ஜெயகீதாவுக்கு "ஜெயம்" கை கொடுத்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இவர் நடித்த முதல் படம் 100 நாள் ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்