வெளியே போக சொன்ன எஸ்.ஏ.சி? நண்பராகிய விஜய்! - இயக்குநர் விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளராக தன் திரைப்பயணத்தை துவங்கி இன்று ஒரு வெற்றிகரமான இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர்தான் விஜய் மில்டன்.

Update:2024-11-05 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் வெகு சில ஒளிப்பதிவாளர்கள்தான் இயக்குநராகவும் சாதித்து அதிலும் முத்திரை பதித்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், ஒரு ஒளிப்பதிவாளராக தன் திரைப்பயணத்தை துவங்கி இன்று ஒரு வெற்றிகரமான இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர்தான் விஜய் மில்டன். இவர் திரைத்துறையில் ஒளிப்பதிவின் தனித்த அடையாளங்களாக இன்றும் சிலாகித்து சொல்லப்படும் பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் போன்ற ஜாம்பவான்களின் வெகுமானத்தை பெற்ற சிறப்புக்குரியவர். எப்போதும் நான் பேசமாட்டேன். என் வேலை என்னைப்பற்றி பேச வைக்கும் என்ற தெளிவுடன் பணியாற்றுவதால்தானோ என்னவோ ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டிலுமே பாராட்டுதலுக்குரியவராக இருக்கிறார். அதற்கு உதாரணமாக ஒளிப்பதிவாளராக அவர் பணியாற்றிய ‘ஆட்டோகிராஃப்’, ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களையும், இயக்குநராக தனித்த அடையாளம் கொடுத்த ‘கோலி சோடா’ போன்ற படங்களை சொல்லலாம். இறுதியாக இவர் விஜய் ஆண்டனியை வைத்து ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை இயக்கி சிறு ஏமாற்றங்களை சந்தித்திருந்தாலும் எப்போதும் அதை பற்றியே யோசிக்காமல் அடுத்த இலக்கை நோக்கி பயணப்பட வேண்டும் என்ற கொள்கையுடன் ‘கோலி சோடா ரைசிங்’ என்ற வெப் தொடரை இயக்கி முடித்துவிட்டு அடுத்தடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் ராணி நேயர்களுக்காக மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்ட தன் திரை அனுபவங்கள் குறித்த நேர்காணலின் தொகுப்பை இங்கே காணலாம்.

முதல் கேள்வியே உங்களின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கக்கூடிய ‘கோலிசோடா’ பற்றியதுதான். இந்த வார்த்தையை எப்படி பிடித்தீர்கள்?

படத்திற்கு பொருத்தமாக என்று சொல்வதை விட, நாங்கள் அதை சரியாக பொருத்திக் கொண்டோம் என்பதுதான் உண்மை. முதலில் இந்த படத்திற்கு ‘அடையாளம்’ என்றுதான் டைட்டில் வைத்திருந்தேன். பிறகு அதில் திருப்தி ஏற்படாமல் கோயம்பேடு என்று மாற்றினேன். அந்த நேரம், கோயம்பேடு பேருந்து நிறுத்தம் என்று ஒரு படம் வந்தது. அதனால், அதையும் தவிர்த்துவிட்டு பிறகு படப்பிடிப்பு பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தினேன். எனக்கு எப்போதும் மனதில் தோன்றும் டைட்டில்களை உடனே நோட்டில் எழுதி வைப்பது வழக்கம். அப்படி ஒருநாள் அந்த நோட்டை எடுத்து பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அதில் கோலிசோடா என்ற பெயர் இருந்தது. இது கூட நன்றாக இருக்கிறதே. பழைய நினைவுகளை நியாபகப்படுத்தும் விஷயமாகவும் இருக்கும். கொஞ்சம் மார்டனாகவும் இருக்கும் என்று தோன்றியது. பிறகு அந்த கதையில் எப்படி பொருத்துவது என்று யோசித்து, உண்மையிலேயே கோலிசோடாவின் இயல்பு எப்படியெல்லாம் இருக்கும் என்பதை பார்த்து இந்த பெயரை நான் தேர்ந்தெடுத்தேன். அந்த பெயரை அறிவிக்கும்போது ஒரு வசனத்தோடு சேர்த்து அறிமுகம் செய்தோம். அது அப்படியே பொருந்தி போய்விட்டது.


கோலிசோடா பாகம் ஒன்றில் வரும் குட்டிமணி, சேட்டு, புல்லி, சித்தப்பா கதாபாத்திரங்கள் 

‘கோலிசோடா’ படத்தின் கதாபாத்திர தேர்வு எப்படி நடந்தது?

ஒரு படத்திற்கான கதாபாத்திர தேர்வுவை இரண்டு விதமாக செய்வோம். ஒன்று கதை எழுதிவிட்டு அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போன்று ஆட்களை எடுப்பது. இன்னொன்று நமக்கு ஏற்ற மாதிரியான ஆட்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தகுந்தாற்போன்று கதையை மாற்றியமைத்து எழுதுவது. ஆனால், இயக்குநர் பாலாஜி சக்திவேல் அப்படியெல்லாம் கிடையாது. கதையை முழுமையாக எழுதி முடித்துவிட்டு அந்த கதைக்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்து போடுவார். அப்படிப்பட்டவரிடம் நான் பணியாற்றியதாலோ என்னவோ எனக்கும் அதே மனநிலை ஒட்டிக்கொண்டது. அப்படிதான் இந்த கதைக்கான ஆட்களையும் தேட ஆரம்பித்தேன். முதலில் உண்மையிலேயே கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் நான்கு பசங்களை நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வைத்திருந்தேன். நான் படம் ஆரம்பிப்பதற்கான பணிகளை எல்லாம் முழுமையாக முடிக்க ஒரு ஆறு மாதம் ஆகிவிட்டது.


கோலிசோடாவில் ஏடிஎம்-மாக சீதா, புரூஸ்லியாக கிஷோர் மற்றும் யாமினியாக சாந்தினி 

பிறகு நான் தேர்வு செய்த பசங்களை நேரில் சென்று பார்க்கும் பொழுது அவர்களை காணோம். விசாரித்தால் ஏதாவது விடுமுறைக்கு இங்கு வந்து தங்கி வேலை பார்த்துவிட்டு போய்விடுவார்கள் என்று கேள்விப்பட்டேன். அதனால் அவர்கள் யார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு பிறகுதான் என்னுடைய நண்பரான இயக்குநர் பாண்டியராஜனை நேரில் சந்தித்து விவரத்தை கூறினேன். அப்போதுதான் என்னுடைய பசங்க படத்தில் நடித்த நான்கு பேரும் இப்போதுள்ள உங்கள் கதைக்கு பொருத்தமாக இருப்பார்கள். அவர்களை இதில் போடுங்கள் என்று சொன்னது மட்டுமல்லாமல் உடனே அவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு சென்னைக்கு வரவழைத்தார். பிறகு அவரது அலுவலத்தில் பழைய ட்ரங் பெட்டிக்குள் இருந்த துணிகளை எடுத்து அங்கேயே வைத்து புகைப்படம் எடுத்து பார்த்தபோது எல்லோருமே சரியாக இருந்தார்கள். இப்படித்தான் இந்த கதாபாத்திர தேர்வு நடைபெற்றது.

‘கோலிசோடா’ படம் எப்படி வெற்றியடைந்ததோ… அதற்கு நிகரான வரவேற்பு கடந்த மாதம் வெளியான ‘கோலிசோடா ரைசிங்’ வெப் தொடருக்கும் கிடைத்திருக்கிறது. அந்த தொடர் பற்றி சொல்லுங்கள், தொடர்ந்து 8 எபிஸோட் எடுத்துள்ளீர்கள், இந்த ஐடியா எப்படி வந்தது?

‘கோலிசோடா 1.05’ என்றுதான் முதலில் டைட்டில் வைத்திருந்தேன். ‘கோலிசோடா’ பாகம் ஒன்று மற்றும் இரண்டு அதாவது இரண்டிற்கும் நடுவில் என்ன நடந்தது என்பதை ஒரு பெரிய கதையாக எழுதி வைத்திருந்தேன். அது ஒரு பெரிய வேலையும் கூட. ஏனென்றால் பாகம் ஒன்றில் நான்கு பசங்க, ஆச்சி, இரண்டு பெண்கள் அவரவருக்கு என்று தனி உணர்வுகள், போராட்டங்கள் என்று கதை இருக்கும். பாகம் இரண்டிலும் மூன்று பசங்க; அவரவர் பிரச்சினை என்று இருந்தது. போதாக்குறைக்கு இந்த வெப் தொடரில் இயக்குநர் சேரன், ஷாம், புகழ் என அவங்க எல்லாருக்கும் தனித்தனி வேடம். பெரிய கதையாக எழுதிவிட்டேன். எனவே இதை படமாக எடுப்பதை விட வெப் சீரிஸாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தில் வேலை பார்ப்பதைவிட மிகவும் சுதந்திரமாக பணியாற்ற முடிகிறது.


கோயம்பேடு மார்க்கெட்டில் எடுக்கப்பட்ட கோலிசோடா படக்காட்சி

நான் சொல்ல நினைப்பதைவிட பார்வையாளர்கள் தரப்பில் இருந்து இந்த கதையை எப்படி சொல்வது என்பது என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதற்காக படத்தில் பணியாற்றுவதில் சுதந்திரம் இல்லை என்று நான் சொல்லவில்லை. நூறு நாள் தியேட்டர்ல ஓடிவிட வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருக்கும். அவ்வளவுதான். அப்படித்தான் இந்த யோசனை எனக்கு வந்தது. என் கதையை சேனலிலும் கேட்டுவிட்டு உடனே ஓகே சொல்லிவிட்டார்கள். அப்போது கதையை கேட்ட அந்த சேனலின் தலைவர் கூறியது நான் இதுவரை ஒரு ஆயிரம் கதையை கேட்டிருப்பேன். வெப் தொடருக்கு என்று எழுதப்பட்ட கதையாக நான் இதை பார்க்கிறேன். உண்மையில் கதை நன்றாக இருக்கிறது, படப்பிடிப்புக்கு போகலாம் என்று சொன்னார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் இரண்டாவது சீசனுக்கும் கதை எழுதி வைத்து இருக்கிறேன்.

பிரியமுடன், நெஞ்சினிலே போன்ற விஜய்யின் முக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறீர்கள்? அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள். தளபதி விஜய்க்கும் உங்களுக்குமான நட்பு எப்படிப்பட்டது?

‘காத்திருந்த காதல்’ திரைப்படம்தான் எனக்கு கை கொடுத்தது. அந்த படம் சரியாக போகவில்லை. பார்வையாளர்களையும் சென்றடையவில்லை. இயக்குநர் வின்செட் செல்வாவும் நானும் திரைப்பட கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். என்னுடைய படம் வெளிவந்து ஆறு மாதங்களுக்கு பிறகு அவனிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது நடிகர் விஜய்யிடம் சென்று கதை சொல்லியிருக்கிறேன். கதை ஓகே ஆகிவிட்டது. அந்த படத்திற்கு உன்னைத்தான் கேமராமேனாக சொல்லியிருக்கிறேன். நாளைக்கு போகலாம் வா என்று மறுநாள் என்னை நேரில் பார்க்க அழைத்துச் சென்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை அறிமுகம் செய்து வைத்தான். எப்போதுமே விஜய் படங்களுக்கு கேமராமேனை எஸ்.ஏ.சி சார் தான் தேர்வு செய்து கொடுப்பார். அவரிடம் செல்வா என்னை பற்றி கூறிய போது எனக்கு திரைப்பட கல்லூரி மாணவர்களே வேண்டாம். நான் சொல்லும் ஆளை போடுங்கள் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். பிறகு செல்வா எப்படியோ விஜய்யிடம் பேசி சம்மதம் வாங்கித்தான் என்னை பார்க்கக் அழைத்துச்சென்றார். எஸ்.ஏ.சி சார் என்னை பார்த்ததும் நீ யார் என்று விசாரிக்கும் போதே அதெல்லாம் வேண்டாம் நீ போ போ என்று கூறினார். என்னிடம் அவன் ஆர்தர் வில்சன் என்று கூறியது போல் இருந்தது. நான் அவர் என்று நினைத்துதான் வர சொன்னேன். சாரி சாரி நீ போ என்று கூறிவிட்டார்.


விஜய் மில்டனுக்கு 'பிரியமுடன்' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக வாய்ப்பு தந்த எஸ்.ஏ.சி 

மறுபடியும் செல்வா சென்று இவன் ஒருபடம் எடுத்து இருக்கிறான் என்று சொன்ன பிறகு அந்த படத்தின் ஒரு ரீலை கொண்டு வந்து எனக்கு போட்டு காட்டுங்கள், பிறகு யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட ஒரு படத்தின் ரீலை எங்கு போய் கண்டுபிடிப்பது என்று தேடி அலைந்தபோதுதான் மதுரையில் ஒரு விநியோகஸ்தரிடம் மட்டும் இருந்தது. பிறகு அதை பணம் அனுப்பி வாங்கி வந்து எஸ்.ஏ.சி அவர்களுக்கு போட்டு காண்பித்தோம். அந்தப்படத்தை தேவி ஸ்ரீ ப்ரீவியூ தியேட்டரில் அவருக்கு போட்டு காண்பித்தோம். அதற்கு முன்பு என்னுடைய படத்தை பார்த்த என்னுடைய நண்பர்கள் அனைவரும் கதைக்கு சம்மந்தம் இல்லாமல் போட்டோகிராஃபி செய்து இருப்பதாக திட்டியிருந்தார்கள். எனது முதல் படம் என்பதால் எனக்கு தெரிந்த மொத்த வித்தைகளையும் அதில் காட்டியிருந்தேன். ஆனால் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த எஸ்.ஏ.சி “தம்பி உன் போட்டோகிராஃபி நல்லா இருக்கு; ஆனால், அதற்கு தகுந்த கதை இல்லைப்பா” என்று கூறியதோடு இல்லாமல், சூப்பர் நீதான் இந்த படத்துக்கு கேமராமேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இப்படித்தான், காத்திருந்த காதல் படம் எனக்கு கை கொடுத்தது. அந்த படத்தில் நான் வேலை பார்க்கும் சமயத்தில் எல்லாம் விஜய் மிகவும் சென்சேஷனல் ஹீரோவாக மாறிவிட்டார். கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக இருந்தார். ஒரே ஏஜ் குரூப் என்பதால் எங்களுடன் விஜய் மிகவும் நெருக்கமாகிவிட்டார். இயக்குநர், கேமராமேன் என்றில்லாமல் எல்லோரும் எல்லா வேலையும் கலந்துதான் செய்வோம்.


விஜய் - வின்சென்ட் செல்வா மற்றும் விஜய் மில்டன் 

உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் வின்சென்ட் செல்வா ஒளிப்பதிவு கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் திரைப்பட கல்லூரியில் சேர்ந்தார். நான் இயக்குநராக வேண்டும் என்றுதான் அங்கு சேர்ந்தேன். ஆனால் எங்களுடைய படிப்பு இருவரையும் மாறி மாறி பயணிக்க வைத்துவிட்டது. அதனால் ‘பிரியமுடன்’ படப்பிடிப்பு தளத்தில் நான் வசன பேப்பரை வைத்துக்கொண்டு இயக்குநர் வேலை பார்ப்பேன். செல்வா கேமரா பணிகளை செய்துகொண்டு இருப்பார். பார்ப்பதற்கு ஒரே காமெடியாக இருக்கும். நாங்கள் இப்படி பணியாற்றுவது விஜய்க்கும் மிகவும் பிடித்துவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்