அன்னை தெரசா இல்லத்துக்கு போயிடுறேன்னு சொன்னாங்க என் மனைவி! - விஜய் மில்டன்

நான் நேரில் சென்று ஒரு டிரைவர் கதை இருக்கிறது என்று சொன்னேன். முதல் பாதி சொன்னதுமே அவர் எழுந்து உள்ளே போய்விட்டார். அடுத்த பாதி சொல்வதற்காக நான் வெயிட் செய்துகொண்டிருந்தேன். அப்போது அவருடைய மனைவி வந்து, ‘மில்டன் கதை நல்லாருக்காமே’ என்று சொன்னார்.

Update:2025-02-25 00:00 IST
Click the Play button to listen to article

திரைத்துறையில் யார் வெற்றிபெறுவார்கள், யார் தொடர்ந்து படம் பண்ணுகிறார்கள், யார் ஜெயிக்கிறார்கள் என்பதையெல்லாம் டீகோடு செய்யவே முடியாது என்கிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன். சிறுவயதிலிருந்தே சினிமாதான் வாழ்க்கை என்ற லட்சியத்தோடு படித்து, அதற்காக கடினமாக உழைத்து தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் இவர், தனது திரை அனுபவம் குறித்தும், தன்னுடைய படத்தில் நடித்த நடிகர்கள் குறித்தும், சினிமா மீதான காதல் குறித்தும் முந்தைய பகுதிகளில் பகிர்ந்தார். இந்த பகுதியில் இதுவரை பொதுவெளியில் பகிர்ந்திராத தனது குடும்பம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நம்முடன் உரையாடுகிறார்.

உங்களுடைய திரைப்படங்கள் பற்றி நிறையத் தெரியும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொள்ளமுடியுமா?

என்னுடைய அப்பா டைரக்டர். அவரை பார்த்துதான் சினிமாவுக்குள் வந்தேன். இன்றும் அப்பா என்னுடைய படத்தை பார்த்தால் ‘நீ ஒரு நல்ல டைரக்டர், ஒரு நல்ல கேமராமேன் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய கதையைப் போல உன்னுடைய கதை இல்லை, என்னுடைய கதையையே எடு’ என்று சொல்லுவார். இதுவரை அவர் கிட்டத்தட்ட 30 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மேலும் சினிமாவுக்காக வைத்திருந்த கதைகளையெல்லாம் நாவலாக எழுதிவிட்டார். அவற்றையெல்லாம் என்மூலமாக படமாக்கவேண்டும் என்பதுதான் அப்பாவின் ஆசை. நாங்கள் 3 சகோதரர்கள். ஒருவர் லண்டனில் இருக்கிறார். கடைசி தம்பி பரத் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். என்னுடைய மனைவி பெயர் மெர்ஸி. அவருக்கு திரைப்படங்கள்மீது பெரிய ஆர்வமில்லை. எங்களுக்கு ஆண்டன் மற்றும் ஆலன் என 2 மகன்கள். 2 பேருக்குமே படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் பார்க்காத படங்களைக்கூட பார்த்துவிட்டு இவரை தெரியாதா? அவரை தெரியாதா? என்று கேட்பார்கள். ஆனால் சினிமா எடுக்கவேண்டுமென்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. என்னுடைய அம்மா பெயர் டேனி. அவரை யோசித்தாலே சோக சித்திரம்தான் நினைவுக்கு வருகிறது. வாழ்நாள் முழுவதுமே அவர் கஷ்டப்பட்டிருக்கிறார். அப்பா நிறைய பேசினாலும் மனதளவில் பலவீனமானவர். அம்மா நிறையப் பேசமாட்டார். ஆனால் மிகவும் பலசாலி. அப்பாவுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்திருக்கிறார். அம்மா மிகவும் எளிமையானவர்.


மனைவி மற்றும் மகன்களுடன் இயக்குநர் விஜய் மில்டன்

உங்களுடைய அப்பா சில படங்கள் எடுத்திருந்தாலும் அவரால் பெரிய இயக்குநராக வர முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட்டதுண்டா?

ஆமாம். 100% வருத்தப்பட்டிருக்கிறேன். அப்பாவுக்கு கிடைக்கவேண்டிய இடத்தை வாங்கிவிட வேண்டுமென்பதற்காகத்தான் நான் சினிமாவுக்கே வந்தேன். அவர் எழுதின கதைகளை படமாக்க முடியவில்லை என்ற வருத்தம் மட்டும்தானே தவிர, என்னுடைய அப்பாவுக்கு சந்தோஷமே நான் சினிமாவில் ஜெயித்ததுதான்.

பெற்றோர் உங்களை பார்த்து பெருமைப்பட்ட தருணம் எது?

அப்படி குறிப்பிட்டு சொல்லமுடியாது. நான் ஒரு விருது வாங்கினாலோ அல்லது ஒரு படவிழாவிற்கு கூப்பிட்டாலோ அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நான் படிப்பை விட்டுவிட்டு அசிஸ்டன்ட்டாக சேர்ந்தபோதே அப்பா என்னை படிக்கும்படி சொன்னார். அப்போதிருந்தே அவர் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறார். நான் கேமராமேன் ஆனதுமுதல் இயக்குநரானதுவரை எல்லாமே அவர்களுக்கு தெரியும். என்னுடைய முதல் படத்திற்கு அப்பா டயலாக் எழுதினார். கூடவே வந்து வேலையும் செய்தார். இப்படி நாங்கள் அனைவருமே சேர்ந்துதான் கஷ்டப்பட்டிருக்கிறோம், வேலை செய்திருக்கிறோம், விருது வாங்கியிருக்கிறோம்.


‘கோலி சோடா’ படத்திற்கு விருது கிடைத்தது குறித்து விஜய் மில்டனின் கருத்து

உங்களுடையது காதல் திருமணமா?

என்னுடைய சொந்தக்கார பெண்தான் மெர்ஸி. நான் அவளிடம் எப்போதுமே, ‘உன்னிடம் இந்தந்த நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதற்கேற்றாற்போல் இது மாதிரியான மாப்பிள்ளை பார்த்தால் நன்றாயிருக்கும்’ என்று அட்வைஸ் பண்ணுவேன். அதேபோல் அவளும் என்னிடம் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பது குறித்தும், நான் என்னென்ன சரிசெய்யவேண்டும் என்பது குறித்தும் எனக்கு சொல்லுவாள். எனக்காக பெண்ணெல்லாம் பார்த்தாள். அவளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை. கொல்கத்தாவிலிருக்கும் அன்னை தெரசாவின் ஹோமிற்கு சென்று அங்கு சேவைசெய்ய வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டாள். ஆனால் எப்படி நாங்கள் இருவரும் காதலித்தோம், கல்யாணம் பண்ணினோம் என்று எங்களுக்கே தெரியவில்லை.

‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் எப்படி கமிட்டானீர்கள்? உங்களுக்கும் விக்ரமுக்கும் உள்ள பாண்டிங் எப்படி?

விக்ரம் சாருடனான பழக்கம் ஒரு பெரிய கதை. நான் இன்ஸ்டிடியூட்டில் படித்துக்கொண்டிருந்தபோது புராஜெக்ட் செய்வதற்காக 10 நிமிட கதை ஒன்றை எழுதி வைத்திருந்தேன். அப்போது விக்ரம் சார் ஒரு படம்தான் நடித்திருந்தார். அவரை வைத்துதான் அந்த கதையை எழுதியிருந்தேன். நான் படித்த ஸ்கூலுக்கு பக்கத்தில்தான் டிஸ்கோ சாந்தி அக்காவின் வீடு இருந்ததால் அவருடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அவருடைய தங்கை லலிதாவை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்மூலமாக விக்ரம் சாரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் இருவரும்தான் என்னுடைய டிப்ளமோ படத்தில் ஹீரோ, ஹீரோயின். ஆனால் அந்த நேரத்தில் என்னால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகு, ‘புதிய மன்னர்கள்’ படத்தில் அவர் நடித்தபோது, அதில் நான் அசிஸ்டண்ட் கேமராமேனாக பணிபுரிந்தேன். என்னை பார்த்ததுமே, அது நீங்கள்தானே என்று என்னை அடையாளம் கண்டுவிட்டார். அந்த படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகு அவர் பெரிய ஹீரோவாகி பீக்கில் சென்றுவிட்டார். ‘சாமுராய்’ படத்திற்காக மூங்கில் காடுகளே பாடல் ஷூட் செய்ய என்னை அணுகினார்கள். கே.வி ஆனந்த் சார் மூலமாக பாலாஜி சக்திவேல் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அந்த ஷூட்டிங்கிற்கு பிறகு விக்ரம் சார் மீண்டும் எனக்கு நெருக்கமாகிவிட்டார். அந்த சமயத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ என்று கதை சொல்ல தொடங்கினேன். ஆனால் அப்போது அவர் கதையை சரியாக கேட்கவில்லை. அப்போது நான் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் வேலையில் ஈடுபட்டிருந்தேன். என்னுடைய ‘கோலிசோடா’ பட ரிலீஸுக்கு பிறகு 2, 3 நாட்கள் கழித்து விக்ரம் சாரே எனக்கு போன் செய்து, ‘எனக்கு ஏதாவது கதை இருக்கிறதா மில்டன். கோலிசோடா பார்த்தேன். பயங்கரமாக இருக்கிறது. என்னுடைய மனைவியும் பாராட்டினார். மீட் பண்ணலாமா’ என்று கேட்டார். நான் நேரில் சென்று ஒரு டிரைவர் கதை இருக்கிறது என்று சொன்னேன். முதல் பாதி சொன்னதுமே அவர் எழுந்து உள்ளே போய்விட்டார். அடுத்த பாதி சொல்வதற்காக நான் வெயிட் செய்துகொண்டிருந்தேன். அப்போது அவருடைய மனைவி வந்து, ‘மில்டன் கதை நல்லாருக்காமே’ என்று சொன்னார். தொடர்ந்து ‘எப்போதுமே கதை கேட்டால் முதல் பாதியிலேயே பிடிக்கவில்லை என்றால் உள்ளே வந்து எப்படியாவது அவர்களை அனுப்புங்கள் என்று எங்களிடம் கேட்பார். ஆனால் இந்த கதையை கேட்டபிறகு, உள்ளே வந்து ஹேப்பியாக சொல்கிறார்’ என்று சொன்னார். அப்படி ஆரம்பித்து பெரிய அளவில் போய்விட்டது அந்த படம்.


நடிகர் விக்ரமுடனான நட்பு குறித்து பகிர்ந்த விஜய் மில்டன்

எந்த விருதாவது கிடைக்கவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட்டதுண்டா?

என்னை பொருத்தவரை பேப்பரில் கதை எழுதி, அதை படமாக்கி கடைசி டேக் முடியும்வரைதான் என்னுடைய பொறுப்பு என்று நினைப்பேன். அந்த படம் ஹிட்டா, நேஷனல் அவார்ட் கிடைக்கிறதா என்பது போன்றவை எனக்கு பெரிய விஷயமில்லை. விருது என்பது மக்களுக்கு என்மேல் இருக்கும் பார்வையை மாற்றுமே தவிர, எனக்குள் அது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

அருண் விஜய்யுடனான அனுபவம் எப்படி?

அவருடைய படத்தில்தான் முதன்முதலில் கேமராமேனாக பணியாற்றினேன். என்னுடைய முதல் இயக்கத்திலும் அவர்தான் ஹீரோ. நான் கேட்டவுடனே அவர் ஓகே சொல்லிவிட்டார். ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தில் அவருக்கு கெஸ்ட் ரோல் கிடையாது. முக்கியமான கதாபாத்திரம் அது. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே அவரை பார்லர் கூட்டிச்சென்று தலைமுடியை கர்ளிங் எல்லாம் செய்து லுக்கையே மாற்றினோம். அப்போதே அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அருண் விஜய், பரத் இருவருமே இப்போது இருக்கும் நிலையைவிட 10 மடங்கு மேலே இருக்கவேண்டியவர்கள். நல்ல திறமைசாலிகள். ஆனால் சினிமா யாருக்கு எந்த இடத்தை எதன் அடிப்படையில் கொடுக்கிறது என்பதை யாராலும் கணிக்கமுடியாது. யார் நன்றாக இருக்கிறார்கள், யார் தொடர்ந்து படம் பண்ணுகிறார்கள், யார் ஜெயிக்கிறார்கள் என்பதையெல்லாம் டீகோடு செய்யவே முடியாது. அது வேறு ஒரு கெமிஸ்ட்ரி.

Tags:    

மேலும் செய்திகள்