சிறந்த குழந்தை நட்சத்திரமான ஷோபா - தாயார் பிரேமா

ஷோபா எங்களுக்கு ஒரே மகள் என்பதால், அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த் தோம்.

Update:2024-10-15 00:00 IST
Click the Play button to listen to article

(24.08.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஷோபா எங்களுக்கு ஒரே மகள் என்பதால், அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தோம். அவள் கேட்ட பொருளை எல்லாம் வாங்கிக் கொடுத்தோம். விரும்பிய இடத்துக்கு அழைத்துச் சென்றோம். நானாவது சில நேரம் அவளைக் கண்டிப்பேன். அவள் அப்பா அதுவும் செய்யமாட்டார். கேட்டதற்கு எல்லாம் தலை ஆட்டுவார். ஷோபா வளர வளர, சில நாளில், சிறு குழந்தை போலவே நடந்து கொள்வாள்.

குழந்தைத்தனம்

பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பியதும், அவளுக்கு பால் கொடுப்பேன். "மம்மி! இன்றைக்கு எனக்கு நீங்க பாட்டிலில் ஃபீட் பண்ணுங்க என்பாள். என்ன இது இந்த வயதில்? என்று சத்தம் போடுவேன், நான். நான் உங்களுக்கு ஒரே குழந்தைதானே! ஃபீட் பண்ணினா என்னவாம் என்று அவள் சிணுங்குவாள்! பாலைக் குடிக்கப்போவது, அவள். எதில் குடித்தால் உனக்கு என்ன? அவள் கேட்பது போல கொடுத்துவிட வேண்டியதுதானே!" என்று அவர் மகளுக்கு வக்காலத்து வாங்கி, என்னை அதட்டுவார். எக்கேடும் கெட்டுப் போ! என்று ஃபீடிங் பாட்டலில் பாலை ஊற்றி, அவள் கையில் கொடுப்பேன். பாட்டிலோடு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, சின்ன குழந்தை போல பாலை சப்பி சப்பி குடிப்பாள், ஷோபா!"

திடீர் என்று, டாடா! நான் தொட்டிலில் தூங்க வேண்டும் என்பாள், அவர் உடனே, என் சேலையில் இரண்டை எடுத்து மகளுக்கு தொட்டில் கட்டத் தொடங்கிவிடுவார். பெண் பிள்ளையை கெடுத்து விடாதீர்கள் என்று நான் அவரை கண்டிப்பேன். குழந்தை ஆசைப்படுகிறது. தூங்கிவிட்டுப் போகட்டுமே! என்று தொட்டிலைக்கட்டி, மகளை தூக்கிக்கிடத்தி, ஆட்டி விடுவார், அவர். நல்ல வேளை, அவருக்கு பாடத் தெரியாது. தெரிந்தால் தாலாட்டும் பாடச் சொல்லியிருப்பாள், ஷோபா. படப்பிடிப்புக்கு வெளியே செல்லும் பொழுதும், ஷோபாவிடம் இந்த குழந்தைத்தனம் வந்துவிடும். அவளுக்காக, எப்பொழுதும் "அமுல் டின்" கையில் வைத்துக்கொண்டு இருப்போம்!.


சிறிய வயதிலேயே பெரிய பெண்மணியாக நடித்த ஷோபா

அப்போதெல்லாம் ஜெயபாரதியும், டி. ஆர். ஓமனாவும், அக்கா! பெண்பிள்ளைக்கு இப்படி அளவுக்கு மீறி செல்லம் கொடுக்காதீர்கள். அது பின்னால் ஆபத்தாக முடியும் என்று என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். அது, எங்கள் காதில் விழவில்லை. "ஒரே குழந்தை ....ஒரே குழந்தை...!” என்று ஷோபாவை கொஞ்சிக்கொண்டே இருந்தோம்.

சிறந்த நடிகை

அடுத்து, “சிந்தூரச் செப்பு” என்ற படத்தில் ஷோபா நடித்தாள். மதுவும், ஜெயபாரதியும் ஜோடியாக நடித்த இந்த படத்தில், சின்ன ஜெயபாரதி வேடம், ஷோபாவுக்கு. நான் ஷோபாவுக்கு அம்மா ஆக நடித்தேன். ஷோபாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம், "சிந்தூரச் செப்பு." இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, 1971-ம் ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்து எடுத்து, ஷோபாவுக்குக் கேரள அரசு பரிசு வழங்கியது!. ஷோபாவுக்கு பரிசு கிடைத்து இருக்கும் செய்தியை, "தினத்தந்தி" பத்திரிகைதான் முதலில் வெளியிட்டு இருந்தது!. அந்த செய்தியைப் பார்த்து, நாங்கள் சந்தோஷப்பட்ட அளவுக்கு ஷோபா மகிழ்ச்சி அடையவில்லை.

விஜயன்

காரணம், அந்தப் படத்தில் விஜயன் என்று ஒரு பையன் நடித்து இருந்தான். அவன் உண்மையிலேயே ஓர் அனாதை. பிழைப்பு தேடி வந்த அவன், எங்கள் வீட்டில் சிறு வேலைகள் செய்துகொண்டு தங்கியிருந்தான். எங்கள் மூலமாகத்தான், அவனுக்கு சிந்தூரச் செப்பு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்த விஜயனுக்கும் பரிசு கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவன் பெயர் "தினத்தந்தி" செய்தியில் இல்லாததைக் கண்டு ஷோபா வருத்தம் அடைந்தாள். மம்மி! எனக்கு பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. விஜயனுக்குக் கொடுத்து இருக்கலாம். பாவம் விஜயன்; அம்மா, அப்பா இல்லாத அனாதை என்று ஷோபா என்னிடம் சொன்னாள். இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்றேன், நான்.

ஆனாலும், அவள் திருப்தி அடையவில்லை. இதற்கு இடையில் ஷோபாவை சந்தித்த விஜயன், "உனக்கு அம்மா- அப்பா இருக்கிறார்கள். பரிசு கொடுத்து இருக்காங்க. நான் அனாதை. எனக்கு யார் பரிசு கொடுப்பாங்க" என்று சாதாரணமாக சொல்லியிருக்கிறான்." இது, ஷோபாவுக்கு மேலும் வேதனையை கொடுத்துவிட்டது!. பத்திரிகையில் செய்தி பார்த்த எல்லோரும் அவளை பாராட்டினார்கள். ஆனால், அவள் கலகலப்பாக இல்லை.


1971-ம் ஆண்டு கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்ற ஷோபா

மகிழ்ச்சி

ஆனால், அன்று மாலையில் வெளிவந்த ஒரு பத்திரிகையில், பரிசு பெற்றவர்வர்களின் பட்டியலில் விஜயன் பெயரும் இருப்பதாக சிலர் சொன்னார்கள். ஷோபா ஓடிச்சென்று, அந்தப் பத்திரிகையை வாங்கி வந்தாள். நடிகர்களில், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான பரிசு, விஜயனுக்குக் கிடைத்து இருந்தது. அந்தச் செய்தியைப் பார்த்த பிறகுதான், ஷோபா முழுமையான மகிழ்ச்சியை அடைந்தாள். உடனே ஷோபாவும் விஜயனும் மிட்டாய் வாங்கி வந்து, எல்லோருக்கும் வழங்கினார்கள்.

விமானப் பயணம்

பரிசளிப்பு விழாவுக்கு, எனக்கும் ஷோபாவுக்கும் விமானத்தில் டிக்கெட்டு எடுத்து அனுப்பியிருந்தார்கள். விஜயனுக்கு ரயில் டிக்கெட்டு வந்தது!பார்த்தாயா, உனக்கு விமான டிக்கெட்டு. அனாதையான எனக்கு ரயில் டிக்கெட்டு என்று ஷோபாவிடம் விஜயன் சொல்லியிருக்கிறான். ஷோபாவால் தாங்க முடியவில்லை. மம்மி! நாமும் விஜயனோடு ரயிலில் போகலாமா? என்று கேட்டாள். எனக்கு ஒண்ணும் தெரியாது, சேதுமாதவன் சாரிடம் (டைரக்டர்) போய்க் கேள் என்று நான் சொன்னேன். இந்த நேரத்தில், நாங்கள் அபிபுல்லா ரோட்டில், சாரதி தெரிவில், குடியிருந்தோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் டைரக்டர் சேதுமாதவன் வீடு இருந்தது!. ஷோபா நேராக சேதுமாதவன் சாரிடம் சென்று, அங்கிள், நானும் அம்மாவும் விஜயனோடு ரயிலில் வரட்டுமா? என்று கேட்டாள். அதெல்லாம் கூடாது. உனக்கு கொடுத்து இருக்கிற சிறு கவுரவத்தை நீ ஏன் குறைத்துக் கொள்கிறாய்? என்று சேதுமாதவன் கூறி விட்டார்.

எம். ஆர்: ராதா

நாங்கள் விமான நிலையத்துக்கு சென்றபோது, அங்கே நடிகர் எம்.ஆ. ராதா நின்று கொண்டு இருந்தார். ஷோபா எம்.ஆர். ராதாவை நேரில் பார்த்தது இல்லை. "ஷோபா! அதோ நிற்கிறாரே, அவர்தான் எம்.ஆர்.ராதா" என்று, நான் ஷோபாவுக்கு எம்.ஆர். ராதாவை சுட்டிக்காட்டினேன். ஷோபா "உர்" என்று எம்.ஆர். ராதாவை உற்றுப் பார்த்தாள். அதை ராதா கவனித்து விட்டார் போலும். "என்ன பாப்பா! அப்படி பார்க்கிற! என்னைப் பார்த்தா பயமாக இருக்கிறதா?" என்று கேட்டுக் கொண்டே ஷோபாவை நெருங்கி வந்தார், ராதா.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்….

Tags:    

மேலும் செய்திகள்