நானும் தமன்னாவும் நல்ல ஃப்ரண்ட்ஸ்! - நடிகை ராஷி கண்ணா ஹேப்பி டாக்!

தமிழ் மற்றும் தெலுங்கு என மாறிமாறி கவனம் செலுத்திவந்த ராஷிக்கு ‘அரண்மனை - 3’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்கள் தமிழில் திருப்புமுனையாக அமைந்தன. சமீபத்தில் சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் ‘அரண்மனை - 4’கிலும் தமன்னாவுடன் சேர்ந்து இவர் அளித்திருக்கும் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Update:2024-05-14 00:00 IST
Click the Play button to listen to article

70ஸ், 80ஸ் வரை தென்னிந்திய ஹீரோயின்கள் என்றாலே கொஞ்சம் சப்பியாக இருப்பார்கள். ஆனால் அந்த கருத்து 90ஸ் மற்றும் ஆரம்பகால 20களில் முற்றிலும் மாறி, நடிகைகள் என்றாலே ஸ்லிம்மாக இருந்தால்தான் ஃபிட்டாகவும் அழகாகவும் இருப்பார்கள் என்ற கருத்து உருவானது. அதனை மாற்றும்விதமாக சமீப காலமாக சில நடிகைகள் அவ்வப்போது திரைத்துறையில் இறங்குகிறார்கள். இப்போது காலம் மாற மாற திறமைக்கான அங்கீகாரம் என்பது அதிகளவில் கொடுக்கப்படுகிறது. அப்படி ஆரம்பத்தில் பாலிவுட்டில் வாய்ப்பு தேடி கிடைக்காவிட்டாலும் தென்னிந்திய ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் ராஷி கண்ணா. தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என வலம்வந்து கொண்டிருக்கும் ராஷி கண்ணா முதலில் ஐஏஎஸ் ஆகத்தான் விரும்பினாராம். ஆனால் தற்போது நடிகை ஆகிவிட்டாலும் இந்த தொழில் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக ஹேப்பியாக கூறுகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான ‘அரண்மனை - 4’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் ராஷி கண்ணாவின் மாடலிங் டு சினிமா கேரியர், தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உருவானது எப்படி? எதிர்கால திட்டம் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக பார்க்கலாம்.

ஆரம்பத்தில் நடிகையாகும் எண்ணமில்லை!

பஞ்சாபை பூர்விகமாக கொண்டிருந்தாலும் டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். சிறுவயதிலிருந்தே படிப்பின்மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தால் ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவோடு நன்றாக படித்தார். சிறுவயதில் தான் அழகாக இல்லை என்ற எண்ணம் ராஷிக்கு அதிகமாக இருந்தாலும், கல்லூரியில் சேர்ந்தபோது முதலில் ஹேண்ட் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அப்படி ஒரு நிறுவனத்திற்கு முதன்முதலாக ஹேண்ட் மாடலிங் செய்ததற்கு ரூ. 5000 சம்பளம் வாங்கினாராம். இருப்பினும் படிப்பில் ஒரு டாப்பராக இருந்ததால் ஆரம்பத்தில் மாடலிங்குக்கு வந்த வாய்ப்புகளை நிராகரித்துவிட்டார். பிறகு காலேஜ் நேரத்தில் மாடலிங்கில் ஈடுபட முடியாது எனவும், கைச்செலவுக்காக வார விடுமுறை நாட்களில் மட்டும் மாடலிங் செய்தார். தனது மாடலிங் அனுபவம் குறித்து ராஷி பகிர்கையில், “முதலில் மாடலிங்குக்கு கேட்டபோது நான் நோ சொல்லிவிட்டேன். அதன்பிறகு ஒரு வருடத்திற்கு யாரும் என்னை அழைக்கவில்லை.


குழந்தைப்பருவத்தில் ராஷி கண்ணா

திடீரென ஒருநாள் மாலுக்கு சென்றபோது அங்கு வாசலில் பூத் வைத்திருந்தார்கள். அங்கு நின்று போட்டோ எடுத்தால் ஃபெமினா பத்திரிகையின் அட்டைப்படத்தில்கூட இடம்பெறலாம் என கூறினார்கள். நானும் போட்டோ எடுத்துவிட்டு வந்துவிட்டேன். ஒரே வாரத்தில் எனது போட்டோ அட்டைப்படமாக வந்தது. அங்கிருந்துதான் டிவி விளம்பரங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடித்தபிறகு எனது தோழி ஒருவர் சினிமா வாய்ப்பு தேடி மும்பைக்கு போகலாம் என அழைத்தார். எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் எனது பெற்றோர் போகச்சொன்னார்கள். ஒரு சினிமா ஆடிஷனில் கலந்துகொண்டு அதில் செலக்ட்டும் ஆனேன். அப்படித்தான் ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அப்போது நடிப்பதற்கு மிகவும் கூச்சப்பட்டேன்” என்றார். ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில் சிறிய ரோலில் நடித்த ராஷிக்கு அதன்பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் நடிப்பு பட்டறைக்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். அங்கும் தான் மிகவும் கூச்ச சுபாவம் உடையவளாகத்தான் இருந்ததாக கூறியிருக்கிறார் ராஷி. அதன்பிறகு தெலுங்கில் ‘Oohalu Gusagusalade’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பே ‘மனம்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு அடுத்தடுத்த தெலுங்கு வாய்ப்புகள் தேடிவர குடும்பத்துடன் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தார் ராஷி. 2014 முதல் 2017 வரை தொடர்ச்சியாக தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிசேர்ந்த ராஷிக்கு ‘வில்லன்’ திரைப்படம் மூலம் மோலிவுட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகுதான் 2018ஆம் ஆண்டு ‘இமைக்கா நொடிகள்’ படம்மூலம் அதர்வா ஜோடியாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’ என அடுத்தடுத்து தமிழ்ப்படங்களில் கமிட்டானார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என மாறிமாறி கவனம் செலுத்திவந்த ராஷிக்கு ‘அரண்மனை - 3’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்கள் தமிழில் திருப்புமுனையாக அமைந்தன. சமீபத்தில் சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் ‘அரண்மனை - 4’கிலும் தமன்னாவுடன் சேர்ந்து இவர் அளித்திருக்கும் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.


பல்வேறு மொழி திரைப்படங்களில் ராஷி கண்ணாவை பிரபலமாக்கிய கதாபாத்திரங்கள்

அரண்மனை படம் குறித்து ராஷி கண்ணா!

தொடர்ந்து ‘அரண்மனை - 3’ மற்றும் ‘அரண்மனை - 4’இல் நடித்திருக்கும் ராஷி கண்ணா தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த பேட்டியில் “சுந்தர் சி சார் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அவர் ஸ்க்ரிப்டை அவ்வளவு தெளிவாக எழுதியிருப்பார். அவரை ஒரு இயக்குநராக மிகவும் பிடிக்கும். முதலில் இந்த படத்தில் ஒப்பந்தமானபோது தமன்னாவும் இதில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. நானும் தமன்னாவும் இதற்கு முன்பே ஒரு தெலுங்கு படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறோம். அப்போதிருந்தே அவரை எனக்கு தெரியும். என்னைப்போலவே அவருக்கும் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். ‘அரண்மனை - 4’ படத்தில் எங்கள் இரண்டு பேருக்குமான கதாபாத்திரத்தை இயக்குநர் நன்றாக எழுதி இருக்கிறார். தமன்னாவும் நானும் சேர்ந்து இந்த படத்தில் ‘அச்சோ அச்சோ’ என்ற பாடலுக்கு ஒன்றாக ஆடியிருக்கிறோம். அது மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஹாரர் படங்கள் என்றால் அதிகமாக டயலாக் பேசி நடிக்க தேவையில்லை. முக பாவனைகளை துல்லியமாக காட்டினாலே போதுமானது” என்று கூறியிருந்தார்.

காதல் குறித்து...

நடிகர்கள் என்றாலே காதல் கிசுகிசுக்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் அனைவருக்கும் பிடித்த நடிகையாக இருந்தாலும் 10 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் இருக்கும் ராஷி கண்ணா நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் பெரிதளவில் சிக்கவில்லை. அதற்கு காரணம், பலமுறை அவரே தனது காதல் பற்றி பகிர்ந்திருக்கிறார். ராஷி அளித்த பேட்டியில் தனது காதல் குறித்து பகிர்ந்தபோது, “பள்ளி காலத்தில் நான் ஒரு tom boy-யாக இருந்தேன். அப்போதெல்லாம் யாரையும் கண்டுகொள்ள மாட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கும் பாய் ஃப்ரண்ட் கிடைத்துவிட்டார். அதன்பிறகு யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. பல வருடங்கள் அந்த நபருடன் காதலில் இருந்தேன். பெண்கள் கல்லூரிக்கு சென்றபோது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். சினிமாவுக்கு வந்தபிறகு நிறையப்பேரின் கவனம் என்மீது இருந்ததால் அதுவே பிரச்சினையாக மாறிவிட்டது. அதன்பிறகு இன்றுவரை நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன்” என்றார். இதனிடையே கல்லூரி காலத்தில் ஒரு இளைஞர் தன்னை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்ததாகவும், அந்த நபர் தன்னிடம் ‘ஐ லவ் யூ’ என்று நேரடியாக சொன்னபோது அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியிருக்கிறார்.


‘அரண்மனை - 4’ திரைப்படத்தில் தமன்னா மற்றும் சுந்தர் சி-யுடன் ராஷி 

சினிமா அனுபவம் குறித்து...

ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என்றாலும் நடிப்புதான் தனது வாழ்க்கை என தேர்ந்தெடுத்தபிறகு முழு ஈடுபாட்டுடனும், மகிழ்ச்சியாகவும் நடிப்பதாக கூறுகிறார் ராஷி. என்னதான் இந்தியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே கிடைக்கும் வரவேற்பு குறித்து ராஷி பகிர்கையில், “தெலுங்கு ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பை கொடுத்திருக்கிறார்கள். அங்கு பணிபுரிந்தபோது அவர்களுடைய மொழியையும் கற்றுக்கொண்டேன். தமிழ் திரைக்கு சென்றபோது தமிழை டியூட்டர் மூலம் கற்றுக்கொண்டேன். ஆனால் என்னால் மலையாளத்தை கற்றுக்கொள்ள முடியவில்லை. சற்று கடினமாக இருக்கிறது. ஒவ்வொருவரின் மொழியை அறிந்து பிறகு நடிக்கும்போது அந்த ஊர், மக்கள், அந்த இடத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துடன் ஒன்றி நடிக்கமுடியும். மொழியை கற்றுக்கொண்டதுடன் அங்கு சில பாடல்களையும் பாடியிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே எனக்கு பாடகி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறிவிட்டது. நிறையப்பேர் என்னை தெலுங்கு பெண்ணா? என்று கேட்கும் அளவிற்கு ஹைதராபாத்திலேயே இருக்கிறேன்” என்றார். மேலும் பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்குமான வித்தியாசம் குறித்து கேட்டபோது, “தென்னிந்தியாவை பொருத்தவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு திரையுலகங்கள் இருக்கின்றன. நான் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். உடை, உணவு, வாழ்க்கைமுறை என ஓவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு கலாசாரம் இருக்கும். அதை முழுவதும் தெரிந்துகொண்டால்தான் நடிப்பில் ஈடுபாடு காட்டமுடியும். இவற்றுடன் ஒப்பிடும்போது பாலிவுட் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது” என்றார்.


சர்ச்சை பேச்சால் ட்விட்டரில் இருந்து விலகிய ராஷி 

சர்ச்சையில் சிக்கிய ராஷி

ஆரம்பத்தில் எப்போதும் பாலிவுட் தனக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை. ஆனால் டோலிவுட்தான் தன்னை ஒரு நடிகையாக அங்கீகரித்திருக்கிறது என கூறிவந்த ராஷிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தி வாய்ப்புகள் தேடிவந்தன. அப்போது, “தென்னிந்தியாவில் ஹீரோயின்களை மில்க் பியூட்டி, லாஸ் என்றெல்லாம் அழைப்பார்கள். ஒன்று கிளாமராக இருக்கவேண்டும் அல்லது நன்றாக நடிக்கவேண்டும். ஆனால் ஒருவரிடம் இது இரண்டுமே இருக்காது என அங்கிருப்பவர்கள் நினைக்கிறார்கள். மேலும் நான் அழகாக இருப்பதாக கூறியும் எனக்கு பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளனர்” என்றார். ராஷியின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பவே ட்விட்டரில் அவரை பலரும் திட்டி தீர்த்தனர். இதனால் ட்விட்டரில் இருந்து விலகிய ராஷி, இன்ஸ்டாகிராமில் மட்டுமே இனிமேல் ஆக்டிவாக இருப்பேன் என்று கூறிவிட்டார். மேலும் தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை எனவும், அவர் பேசியதை தவறாக புரிந்துகொண்டதாகவும், தான் பல மொழிப்படங்களில் நடித்திருப்பதால் படங்கள்மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், பாலிவுட் மோகம் அதிகரித்துவிட்டதாலேயே தென்னிந்திய சினிமாவை ராஷி தரக்குறைவாக பேசுவதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். அதன்பிறகு சற்று இந்தி பக்கம் சென்ற ராஷி இப்போது மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். ‘அரண்மனை -4’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அடுத்தடுத்து தென்னிந்திய திரையுலகம் பக்கம் வலம்வருவார் என்று ராிஷயை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்